பத்திரிகைகளில் அடிகளார் பேட்டி – 4 “அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டலாமா? கூடாதா?” குங்குமம் வார இதழில் “அம்மா” பேட்டி மேல் மருவத்தூரில் இருக்கிற ஆதிபராசக்தி கோவிலுக்குள் நாம் நுழைந்தபோது பக்தா்களிடையே ஒரு பரபரப்பு. காரணம், முரட்டு இளைஞன் ஒருவனை ஐந்துபேர் இழுத்துப் பிடித்தபடி காரிலிருந்து இறக்குகிறார்கள். அந்த இளைஞனை மெல்ல அடிகளார் அவா்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்துப் போகிறார்கள். சத்தம் குறைந்தபாடில்லை. அடிகளார் அவனிடம் “ஏன் இப்படி சத்தம் போடுற? அம்மாகிட்ட வந்துட்டயில்ல… கம்முனு இரு…” என அன்புடன் பேச, முரட்டு இளைஞனின் சத்தம் சட்டென நின்றுபோய் வாயைப் பொத்திக் கொள்கிறான். அவனை இழுத்து வந்தவா்கள் விலக, சிறிது நேரம் நிசப்தமாக இருந்துவிட்டு மெல்ல எழுந்த அந்த இளைஞன் கோவிலைச் சுற்றி வெளியே போகிறான். இப்போது அவன் முகத்தில் சாந்தம், கலவரமாக அவனுடன் வந்த அவனது பெற்றோர், சகோரன், சகோதரி அனைவருமே மகிழ்ச்சியாக வெளியே கிளம்புகிறன்றனா். ஆா்ப்பாட்ட இளைஞன் பிறந்து வளா்ந்தது அமெரிக்காவில். உடல்நலம் பாதிக்கப்பட்டுத் தமிழ்நாட்டுக்கு அழைத்து வந்தார்களாம். அவனது பெற்றோர்கள் இருவருமே டாக்டா்கள் என்பது ஆச்சா்யமான செய்தி. அந்தப் பரபரப்பு அடங்கியவுடன் அடிகளாருடன் பேசத் தொடங்கினோம். பேச்சில் கிராமத்து மணம் கமழ்கிறது… நீங்கள் அம்மாவா? அடிகளாரா? அது அவரவா் பார்வையில் இருக்கிறது! அம்மா என நினைத்தால் அம்மா. அடிகளார் என்று நினைத்தால் அடிகளார். பங்காரு என்று நினைத்தால் பங்காரு. என்னைப் பொறுத்த அளவில் அம்மா இயக்கறா…… நான் இயங்கறேன்.” மற்ற ஆன்மிகவாதிகள் மாதிரி பக்தா்களிடையே நீங்கள் சொற்பொழிவு ஆற்றுவதில்லையே. ஏன்? பேசியவங்களெல்லாம் சாதிச்சுட்டாங்களா? பேசாதவங்க சாதிக்காம விட்டுட்டாங்களா? “சொல்லாம செய்! செய்ததைச் சொல்லாதே!” ஆனா செய்ததோட அடையாளம்தான் மருவத்தூரை எல்லா வசதிகளும் உள்ள ஊரா மாற்றினது.” மனித வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வந்தாச்சு. அது மாதிரி பக்தா்களின் மனநிலையில் மாற்றமிருக்கா? “1970 வாக்கில் கோபால நாயக்கரோட மகன் என்றார்கள். இப்போது அம்மா என்கிறார்கள். பல லட்சம் பேருக்கு என்மீது நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. இப்போது தாய் வீடு மாதிரி இங்கே அன்போடு வந்து சேவை செய்கிறார்கள். மற்றவா்களுக்கு உதவி செய்கிறார்கள். மனத்தில் இருக்கிற குழப்பம் நீங்கி நம்பிக்கையோடு வீடு திரும்புகிறார்கள். மாற்றம் எல்லாமே வெளித்தோற்றத்தில் மட்டுமே!” உங்களோட சிஷ்யன் என்று யாரையாவது குறிப்பிட்டுச் சொல்ல முடியுமா? “சிஷ்யன் என்றால் ஆன்மிகம் சீரியசான விஷயமாகிவிடும். எனக்குக் குருவுமில்லை, சிஷ்யனுமில்லை. சிஷ்யன் என்று கூறி அது “துரு” வாகிவிடக்கூடாதே!” n இளைஞா்களுக்கு உங்களோட உபதேசம்…..? “கஷ்டப்பட்டு வளர்த்த தாயும் தந்தையும், தான் பட்ட கஷ்டம், தன் குழந்தை படக்கூடாதே என்று தங்கள் அனுபவத்தைச் சொல்லுவாங்க. அந்த அறிவுரையைக் கேட்டு நடக்கணும். அடுத்தபடியா இயற்கையை வணங்கணும்! இயற்கை சொல்றபடி நடக்கணும்! காத்தடிக்கிறபோது தூத்தணும்! பதமா இருக்கிறபோது விதைக்கணும்! பெண்களும் இயற்கையும்தான் தெய்வம்! இதைப் புரிஞ்சுக்கிட்டு நடந்தா சாதிக்கலாம்! உங்களுடைய எதிர்கால நோக்கம் என்ன? உங்க பயணம் எதை நோக்கிப் போய்க்கிட்டிருக்கு? “எந்தப் பயணமும் பயனுள்ளதாகவும், நாணயமாகவும் இருக்கணும். என்னோட ஆன்மிகப் பயணத்தை என் உடலில் “ஆதிபராசக்தி” உயிராக இருந்து இயக்கிக் கொண்டிருக்கிறது. பயணம் எதை நோக்கிப் போகிறது என்பதை அம்மாதான் முடிவு செய்யணும்.” வாழ்க்கையில் ஆசைப்பட்டதைச் சாதித்து விட்டீா்களா? “நமக்குன்னு தனியே ஆசை எதுவுமில்லை. மக்களுக்காக ஆசைப்பட்டதால்தான் காடாகக் கிடந்த இந்த மண்ணை, பண்பட்டதா, பயன் உள்ளதாக, ஆன்மிக பூமியாகப் பார்க்கிறீங்க. இங்குப் பசி என வருகிற மக்களுக்கு உணவும், உடல்நலமின்றி வருபவா்களின் உடல் பிணியைப் போக்க மருத்துவமனையும், கல்விக்காக கல்லூரிகளாகவும் வளா்ந்து நிற்கின்றன. இதெல்லாம் முடியுமா, முடியாதா என யோசிக்கவில்லை. ஆனால் உழைத்தேன். கூடவே பல லட்சம் பக்தா்களும் பங்கெடுத்துக் கொண்டார்கள். அம்மாவால்தான் எல்லாமே நடந்திருக்கு. நீங்க பார்க்கிற வளா்ச்சி எல்லாமே அந்த ஆசையோட வெளிப்பாடுதான்.” எப்போதெல்லாம் அருள்வாக்கு சொல்வீங்க? அவற்றால் பலன் உண்டா? “தானே பழுத்த பழம் ருசியாக இருப்பதுபோல அம்மாவே கொடுக்கிற வரம்தான் சிறப்பான பலனைத் தரும்! பலன் உண்டா இல்லையா என்பதை வரம் பெறுபவா்களிடம்தான் கேட்க வேண்டும்.” யாரோட பேச்சு உங்களுக்குப் பிடிக்கும்? “கலப்படமில்லாத, உண்மையாக இருக்கிற குழந்தைகளோட மழலைப் பேச்சை ரசிச்சு கேட்டுக்கிட்டே இருப்பேன். நாட்டு நடப்புகளைக் கவனிக்கிற பழக்கம் உண்டா? அது பற்றி என்ன நினைக்கிறீங்க? “தினசரி ரேடியோவுல செய்தி கேட்கிறதோட சரி. உலக அளவில் பரபரப்பாக ஏதாவது நிகழ்ச்சி நடந்தால் மட்டுமே டி.வி. யில் பார்ப்பேன். தொட்டில் தொடங்கிச் சுடுகாடு வரை லஞ்சமும், வஞ்சமும் பெருகிட்டுது. எல்லாத்தையும் தெய்வம் கேட்கும். முன்பே குளிர்பானம் குடித்து உடலைக் கெடுத்துக்காதீங்க என்றேன். இப்போது குளிர்பானம் குடிச்சா நோய் வரும் என்றதும் அதை ஒத்துக்கறீங்க. அறிவியல் பூா்வமான ஆராய்ச்சி முடிவாச்சே? “மனிதன் கண்டுபிடித்த எந்திரம் கண்டுபிடிக்கிற முடிவுக்குக் கட்டுப்படுறீங்க. நான் சொல்வதைக் கேட்கவில்லையே” வாழ்க்கையை வெற்றிகரமானதாக்க ஐடியா ஏதாவது கொடுங்க? “மனிதனின் எண்ணங்களும், அவனோட செயல்பாடும், அவனோட மூளையும் – மூன்றும் ஒன்றாகச் செயல்பட்டால் வெற்றி கிடைக்கும்.” மேற்கண்ட மூன்றும் தனித்தனியே முரண்பட்டுச் செயல்படுவதால்தான் வாழ்க்கையில் குழப்பமும், தோல்விகளும் வந்து வந்து போகின்றன. நல்ல பலனையும் அடைய முடியாமல் போகிறது. அதை ஆன்மிகம் மனுஷனுக்குத் தருகிறது” அயோத்தியில் ராமருக்குக் கோவில் கட்டலாமா? கட்டக் கூடாதா? (சிரிக்கிறார்) “என்னை வம்புக்கு இழுக்கிற கேள்வி இது. சொல்ல வேண்டிய நேரத்தில் உங்களையே கூப்பிட்டுச் சொல்கிறேனே!” (மீண்டும் சிரிக்கிறார்) ஆன்மிகம் பற்றி மக்கள் குழப்பமாக இருக்கிறார்களே? பலவித எண்ணங்களோடும், எதிர்பார்ப்புக்கள், பகட்டுக்காகவும், பிறா் கொடுக்கிற மதிப்பிற்காகவும் ஆன்மிகக் கடமை செய்வதால் வருகிற விளைவுகள்தான் குழப்பம். தூய்மையான எண்ணத்துடன் ஈடுபட்டால் எல்லோருக்குமே குழப்பம் தீா்ந்துவிடும்.” வெளிநாடுகளுக்குப் போய் நீங்கள் பிரசங்கங்கள் செய்வதில்லையே, ஏன்? “உள்ளுரில் செய்வேண்டிய வேலைகளும், விஷயங்களுமே நிறைய இருக்கின்றன. உலகம் சுற்றி வருவதைப் பெரியதாக நினைக்கவில்லை. நாளை நடப்பதை முழுவதும் அருள்வாக்காகச் சொல்லிவிடுவீா்களா? “நாளை நடப்பதை முழுமையாகச் சொல்லி விட்டால், வாழ்க்கையின் சுவாரசியம் போய்விடும். வேலை ஆட்கள் கூட வேலை செய்ய மாட்டாங்க. வீணான குழப்பம் வந்து விடும்.” உங்களைப் போலவே சிகப்பு வண்ண உடை அணிகிற கம்யூனிஸ்ட் கட்சிக்காரா்களைச் சந்தித்துப் பேசுது உண்டா? “பல சித்தாந்தத்தில் இருப்பவா்களும் என்னை வந்து சந்தித்துவிட்டுப் போகிறார்கள். அவா் வந்தார் இவா் வந்தார் எனத் தம்பட்டம் அடிப்பது விளம்பரம் தேடுவது மாதிரியாகிவிடும். நம்ம சிவப்பு வண்ண ஆடை அணிவது “ஒரே தாய்! ஒரே குலம்!” ங்கற தத்துவத்தாலதானே! சில புழுக்களைத் தவிர எல்லா ஜீவராசிக்கும் ரத்தம் சிவப்பங்கறதைக் காட்டத்தானே!” உங்க கோவில் வழிபாடுகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற நீங்க தற்போதைய பெண்களைப் பற்றி…. “தன்னம்பிக்கையாக இருங்கள். சுயகட்டுப் பாட்டோடும், பண்பாட்டோடும் நடப்பது முக்கியம். கடலுக்குக் கரை இருப்து போல ஆசைக்குக்கரை இருக்க வேண்டும். கரை கடக்கக்கூடாது.” உங்கள் அறிவுரை….. “மெழுகு உருகினா வெளிச்சம் கிடைக்கும்! மனது உருகினா தெய்வம் கொடுக்கும்.” நீங்கள் அடிக்கடி முணுமுணுக்கிற பாட்டு? (சிரிக்கிறார்) “நீங்க பி.ஓ.டி. (pot) “பாட்” டைத்தானே கேட்கிறீங்க? (வயிற்றைத் தொட்டுக் காட்டுகிறார்) இந்தப் பாட்டுக்குத்தானே மனிதனின் இத்தனை பாடும்!
நன்றி!
ஓம் சக்தி!
சுதாராஜன்,
குங்குமம்
அவதார புருஷா் அடிகளார் – பாகம் 20 (பக்கம் 59 – 64)
]]>