அந்த நாள் ஞாபகம்

0
3027

வசதியான வீட்டைச் சேர்ந்த சிலர் , படித்தவர்கள்; இவர்கள் சென்னையிலிருந்து ஆலயத்தைத் தரிசிக்க விரும்பிப் புறப்பட்டனர்.

மதுராந்தகம் கோயில் தரிசனம் முடித்துவிட்டு மருவத்தூர் வந்தார்கள். இங்கே கொஞ்ச நேரம் தங்கினார்கள்.

அப்போது நமது சித்தர்பீடம் மிகச் சாதாரணமாக இருந்தது.. கருவறை மண்டபம், மேலே ஒரு கொட்டகை; புற்று மண்டபம் மேலே ஒரு கொட்டகை அவ்வளவுதான்.

வந்த பெண்மணிகளுக்கு இங்கே நீண்ட நேரம் செலவழிக்க விருப்பமில்லை. வீணாக இங்கே நேரத்தை ஏன் செலவிடவேண்டும்? புறப்படலாம் எனத் திட்டமிட்ட வேளையில்…,.அடிகளார் அவர்கள் வந்துவிட்டார்கள்.
அருள்நிலையில் அன்னை வெளிப்பட்டாள்.என்னதான் நடக்கிறது பார்க்கலாம் என்று பெண்கள் வரிசையில் காத்திருந்தார்கள்.

அம்மா அப்போது கருவறை எதிரே மூன்று வேப்பிலைகளைக் கிள்ளித் தரையில் போட்டார்கள். எல்லோரும் பார்க்கிற போதே அந்த மூன்று வேப்பிலைகளும் மஞ்சள் நிறம் பெற்றன! அப்படியே சுருண்டன! எங்கிருந்தோ மூன்று மஞ்சள் கயிறுகள் வந்து அவற்றுடன் இணைந்து கொண்டன. இப்போது மூன்று தங்க மாங்கல்யங்கள்!

மூன்று வேப்பிலையிலிருந்து மூன்று தங்க மாங்கல்யங்கள் மாறியது கண்டு அனைவரும் ஓம்சக்தி! ஓம்சக்தி! என்று பரவசத்துடன் கூவினர்.

இவர்கள் கூவக் கூவ *அம்மாவின் கண்களிலிருந்து கண்ணீர் பெருக்கெடுத்தது.*

அப்போது ஒரு தொண்டர் கேட்டார்,

அம்மா! நீங்க ஏன் அழுவுறிங்க…?

அம்மா சொன்னாள்….

*கேவலம்…. இந்தத் தங்கத்தைப் பார்த்துத் தானே மகனே ! ஓம்சக்தி வருகிறது?*

*( தன் நெஞ்சைக் காட்டி) இங்கிருந்து ஓம்சக்தி வரவில்லையே….. என்றாள்.*

*உள்ளத்திலிருந்து ஓம்சக்தி வரவேண்டும் ; உதட்டிலிருந்து வந்தால் போதாது*என்பதை அன்று உணர்த்தினாள்.

சக்திஒளி ஜூலை 2000