நான் அருள்மிகு பழனியாண்டவர் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றிய போது தமிழ்த்துறையில் பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வந்தார். அவர் எனக்கு ஆசிரியராக இருந்தவர் . சித்தர் நெறியில் மிகுந்த ஈடுபாடு உடையவர். பொள்ளாச்சி அருகே புரவிப்பாளையம் சித்தர் ” தாத்தா சாமிகளிடம் ( கோடி சாமி) மிகுந்த ஈடுபாடு உடையவர். அவரை குருநாதராக ஏற்றுக் கொண்டவர்.
ஒரு நாள் பேராசிரியர் பரமசிவம் என்னிடம் வந்து ,” நாளை நான் புரவிப்பாளையம் போகிறேன். நீயும் என்னுடன் வருகிறாயா? என்று கேட்டார். நானும் வர சம்மதித்தேன்.
அன்று பௌர்ணமி நாளாகும். பக்தர்கள் வரிசையாகச் சென்று சுவாமிகளைத் தரிசித்தனர். நானும், திரு.பரமசிவத்துடன் சுவாமிகள் அருகே சென்றேன்.
சுவாமிகள் திரு.பரமசிவத்தைப் பார்த்து நீயும் அவனும் ( என்னைப்பார்த்து) இன்று இரவு இங்கே தங்க வேண்டும். அதோ! அந்த இடத்திலே உட்கார்ந்து கொள்ள வேண்டும்.இரவு முழுவதும் விழித்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எழுந்து போகக் கூடாது”, என உத்தரவிட்டார். நாங்கள் இந்த விபரத்தை ஜமீன் ஆட்களிடம் தெரிவித்தோம். இரவு நேரத்தில் இதுவரையில் யாரையும் தங்க வைத்துப் பழக்கமில்லை.இருப்பினும் சுவாமிகள் உத்தரவிட்டிருப்பதால் நாங்கள் இருவரும் மாடியிலேயே தங்கிக் கொள்ளுங்கள் என்றார்கள்.
இரவு 10 மணி வாக்கில் நானும் திரு. பரமசிவமும் சுவாமிகள் சொன்ன இடத்தில் போய் உட்கார்ந்து கொண்டோம். சுவாமிகள் ஈசிச் சேரில் அமர்ந்திருந்தார்.தன் உடம்பின் மேல் 10 கோட்டுகளைப் போட்டிருந்தார். காலில் பூட்ஸ் அணிந்திருந்தார். மாடியில் பௌர்ணமி நிலா வெளிச்சம் .ஒரே நிசப்தமாக இருந்தது. இரவு 11.45 மணியளவில் சுவாமிகள் எழுந்து நடக்க ஆரம்பித்தார். டக், டக் என்ற பூட்ஸ் காலடிச் சத்தம் நன்றாகக் கேட்கிறது. திடீரென பூட்ஸைக் கழற்றி விட்டார்.
*சுவாமிகளுக்கு முன்னால் ஒரு உருவம் சென்றது. சுவாமிகள் அதனைத் தொடர்ந்து சென்றார். அந்த உருவம் யாரெனக் கவனித்தோம். சிவப்பு வேஷ்டி அணிந்து, கையில் வேப்பிலையுடன் அருள்திரு அடிகளார் அவர்கள் முன்னே சென்று கொண்டிருந்தார்கள். அவர்களைத் தொடர்ந்து ஓம்சக்தி எனச் சொல்லிக் கொண்டு தாத்தா சாமிகள் பின்னே சென்றார். அவர்கள் குறுக்கும் நெடுக்குமாக நடந்து சென்று கொண்டே இருந்தார்கள்.
அவர்கள் மாடியின் ஒரு முனையிலிருந்து மற்றொரு முனைக்கு நடந்து சென்று திரும்பினர். இதனை எண்ணினேன். மொத்தம் 108 முறை அவர்களிருவரும் நடந்து சென்று திரும்பினர். 108 வது முறை முடிந்தவுடன் அருள்திரு அடிகளார் அவர்கள் மாடியின் நடுப்பகுதிக்குச் சென்று நிஷ்டையில் அமர்ந்தார்கள்.
ஒரு ஐந்து நிமிடத்திற்குப் பிறகு அங்கவலம் வருவதைப்போல மாடியின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்குச் சென்று திரும்பினார்கள். பின்பு நிஷ்டை இருந்த இடத்திற்கு வந்தார்கள். அப்பொழுது தான் அந்த அதிசியம் நிகழ்ந்தது.
அருள்திரு அடிகளார் அவர்கள் தரையில் படுத்துக் கிடந்தார்கள். தலை மட்டும் தனியாகப் பிரிந்து சென்றது. பின் உடலிலிருந்து இரண்டு கைகளும் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. பிறகு மார்பிலிருந்து வயிறு வரையில் தனியாகப் பிரிந்தது. பின் வயிற்றுக்கு கீழே இடுப்பு வரை ஒரு பகுதியாகப் பிரிந்தது. இரண்டு தொடைகளும் கணுக்கால் வரை இரண்டும் தனித்தனியாகப் பிரிந்து சென்றன. கணுக்காலிலிருந்து பாதம் வரை இரண்டு பகுதிகளும் தனித்தனியாகப் சென்றன.
ஆக,
தலை. –1
கைகள். — 2
மார்பு. –1
வயிறு. –1
தொடைகள் –2
கால்கள். –2
———–
மொத்தம் –9
————-
ஒன்பது துண்டங்களாக அருள்திரு அடிகளாரின் உடல் பிரிந்தது. *”குருநாதா! நவகண்ட யோகத்தைச் செய்றீயா?”* என்றார் தாத்தா சுவாமிகள். *நவ என்றால் ஒன்பது”* என்று பொருள்.
*”கண்ட என்றால் துண்டு”*என்று பொருள்.
*தன் உடலை ஒன்பது துண்டுகளாக்கி யோகம் செய்வது என்று பொருள்.”*
அந்த சமயத்தில் தாத்தா சுவாமிகள் உடலின் ஒன்பது பாகங்களுக்கும் விபூதி போட்டுப் பூஜை செய்தார். அப்பொழுது நிலவிலிருந்து சாதுக்கள் போல் சிலர் இறங்கி வந்தனர்.. மாடிக்கு அவர்கள் வந்தபிறகு தான் அவர்கள் 18 சித்தர்கள் எனப் புரிந்தது.
திரு.பரமசிவம் என்னிடம் பதிணென் சித்தர்கள் வந்துள்ளார்கள் எனக் கூறினார். அவர்கள் அனைவரும் நவகண்டமாகக் கிடக்கும் உடலைச் சுற்றி மூன்று முறை வலம் வந்தார்கள். பிறகு அனைவரும் வரிசையாகச் சென்று நின்று கொண்டனர். இப்போது 9 துண்டங்களாக இருந்த அருள்திரு அடிகளார் அவர்களின் உடல் ஒன்று சேர்ந்தது. சித்தர்கள் அனைவரும் கைகூப்பித் தொழுதனர். அடிகளார் அவர்கள் எழுந்து கொண்டார்கள். அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டார்கள்.
ஒவ்வொரு சித்தராக வந்து அங்கிருந்த பூக்களை எடுத்து அடிகளாரின் பாதத்தில் வைத்து பாதபூஜை செய்தனர். ஒவ்வொருவரும் தங்கள் பெயரைச் சொல்லி பூக்களைப் பாதங்களில் சமர்ப்பித்துப் பாதபூஜை செய்தனர்.
நான் இடைக்காயன் பூஜை செய்கிறேன் என்றார் ஒரு சித்தர்.
நான் கோரக்கர் பூஜை செய்கிறேன் என்றார் ஒரு சித்தர்.
நான் போகர் பாதம் பணிகிறேன் என்றார் அடுத்தவர்.
நான் மூலநாதன் பூஜை செய்கிறேன் என்றார். திருமூலர்.
திருமூலர் பூஜை செய்யும்போது இரண்டு ஓலைச் சுவடிகளில் தனித்தனியாக ஏதோ எழுதி அருள்திரு அடிகளார் அவர்களின் பாதங்களில் சமர்ப்பித்தார்.
கடைசியாக தாத்தா சுவாமிகளும் பாதபூஜை செய்து அருள்திரு அடிகளார் அவர்களின் பாதங்களை எடுத்து தன் தலைமேல் வைத்துக் கொண்டார்.
அப்போது அருள்திரு அடிகளார் அவர்களின் பாதத்திலிருந்து ஒளி வெள்ளம் புறப்பட்டு தாத்தா சுவாமிகள் உடல் முழுவதும் பாய்ந்தது. இந்த நிகழ்வுகளைப் பார்த்துக் கொண்டிருந்த நாங்கள் சேவல் கூவுவதைக் கேட்டோம். நேரம் அதிகாலை 3 மணி இருக்கலாம். அப்புறம் என்னவோ நாங்கள் இருவரும் எங்களை அறியாமல் தூங்கி விட்டோம்.
காலை 6 மணிக்கு ஜமீன் ஆட்கள் எங்களை எழுப்பினார்கள். தாத்தா சுவாமிகள் சாய்வு நாற்காலியில் படுத்திருந்தார். இரவு அருள்திரு அடிகளார் அவர்கள் அமர்ந்திருந்த நாற்காலியின் கீழே 2 ஓலைச் சுவடிகள் இருந்தன.திருமூலர் எழுதியது போலும். திரு. பரமசிவம் அந்த ஓலைச்சுவடிகளை கையில் எடுத்துக் கொண்டார். சுவாமிகள் பாதம் பணிந்துவிட்டு பழனிக்குத் திரும்பினோம்.
பேருந்தில் வரும்போது ஓலைச்சுவடியில் எழுதி இருப்பதைப் படிக்க முயன்றார். அதில் உள்ள எழுத்துக்கள் புரியவில்லை. தட்டுத் தடுமாறி படித்து அவர் என்னிடம் கூறியவை;
முதல் ஓலைச்சுவடியில்;
பங்காரு அன்னையே நவகண்ட பத்தியாம்.
பங்காரு அன்னையே நவகண்ட யோகமாம்.
பங்காரு அன்னையே நவகண்ட ஞானமாம்.
பங்காரு அன்னையே நவகண்ட யோகத்தின் மேலாம்.
இரண்டாவது ஓலைச்சுவடியில்;
மருவூரான் நவகண்ட பத்தனாம்.
கருவூரான் நவகண்ட பித்தனாம்.
திருவூரான் நவகண்ட முத்தனாம்.
தருவூரான் நவகண்ட சித்தனாம்.
அருள்திரு அடிகளார் அவர்கள் நவகண்ட யோகம் செய்ததையும், பதிணென் சித்தர்களும் அருள்திரு அடிகளார் அவர்களுக்குப் பாதபூஜை செய்த காட்சியையும் காணும் பேறு பெற்றோம்.
பேராசிரியர். ஆர்.கண்ணன்.M.A.,PH.D, திருபுவனம்.
சக்திஒளி
நவம்பர் 2012
பக் 5
*அடிகளாரின் எளிய உருவத்தை வைத்து ஏமாறக் கூடாது. அடிகளாரிடம் பழக பழகத்தான் அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியும். புத்தகத்தைப் படித்து அவரைப் பற்றித் தெரிந்து கொள்ள முடியாது. பட்டறிவை வைத்துத்தான் தெரிந்து கொள்ள முடியும்.*
*உங்கள் ஆன்ம பரிபக்குவத்துக்கு ஏற்றவாறே அடிகளாரின் ஆற்றலை வெளிப்படுத்துவேன்..*
என்பன அன்னையின் அருள்வாக்கு….
நமக்கு அந்த ஆன்ம பரிபக்குவம் வந்துவிட்டதா என்பதை நம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வோம்.