்த அம்மாவுக்குத் தெரியும். அதன் அடுத்தகணக்கு என்ன என்பதும் தெரியும். யாருக்கு என்ன செய்து அனுப்ப வேண்டும் என்பதும் தெரியும். அவரவர் பரிபக்குவத்துக்குத் தக்கபடியே கேட்பதும் பெறுவதும் அமைகின்றன.
இவற்றின் தொடர்பாகக் கீதையில் கண்ணன் அர்ச்சுணனுக்குச் சொல்லிய உபதேசங்கள் நினைவுக்கு வருகின்றன….
போருக்குத் தயாராக நிற்கின்ற அர்ச்சுனன், எதிரே இருக்கும் தன் ஆசாரியார்களான பீஷ்மர், துரோணர், கிருபாசாரியார்களைப் பார்க்கிறான். நெருங்கிய சுற்றத்தாரைப் பார்க்கிறான். இவர்களையெல்லாம் கொன்று குவித்து அரசாட்சி பெற வேண்டுமா என்று நினைக்கிறான். பந்த பாசம் தடுக்கிறது.
அர்ச்சுணன் அவர்களை வெறும் உடலளவில் பார்க்கிறான். கண்ணனோ ஆன்மாவைப் பார்க்கிறான். இவர்களை நீ கொல்வதாகவும், இவர்கள் கொல்லப்படுவதாகவும் பார்க்காதே! ஆன்மா அழியாதது. அது கொல்வதும் இல்லை. கொல்லப் படுவதும், இல்லை! அது கர்மவினைக்குத் தக்க படி கூடுவிட்டுக்கூடு பாய்ந்தபடி பயணம் செய்து கொண்டே வருகிறது.
“அர்ச்சுனா! உனக்கும் எனக்கும் பிறவிகள் பல கழிந்து போயின. அவற்றையெல்லாம் நான் அறிவேன். நீ அறிய மாட்டாய்!” என்கிறான் கண்ணன்.
நான் பிறப்பற்றவன். அழிவற்றவன். உயிர்களுக்கெல்லாம் ஈசன். எனினும் என் பிரகிருதியை வசப்படுத்தி ஆத்ம மாயையினால் அவதரிக்கிறேன்.
யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ அவர்களுக்கு நான் அப்படியே அருள் புரிகிறேன். யோக மாயையால் பிறப்பெடுத்து வரும் என்னை மூடர்கள் அறிவதில்லை. இவையெல்லாம் அவதார புருஷர்களுக்கும் பொருந்தும். நம் ஆன்மிக குருவுக்கும்
பொருந்தும்.
“என்று நீ அன்று நான் உன்னடிமை அல்லவோ?” என்று பாடுகிறார் தாயுமானவர்.
ஒவ்வொரு ஆன்மாவும், தன் கருவியான மனத்தைக் கொண்டு நான் என்ற அகங்காரத்துடன் செய்யும் கர்மவினைக்குத் தக்கபடி உடம்பு எடுத்துக் கொண்டு, நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டு வருகிறது. இதை ஜீவாத்மா அறிவதில்லை. பரமாத்மா அறிகிறது.
அவ்வப்போது பரமாத்மா அவதார நோக்கம் கொண்டு வருகிறபோது, இந்த ஆன்ம தத்துவத்தை உணர்த்துகிறது.
இதைத்தான், “அர்ச்சுனா! உனக்கும் எனக்கும் பிறவிகள் பல கழிந்து போயின. அவற்றையெல்லாம் நான் அறிவேன். நீ அறியமாட்டாய்” என்றான் கண்ணன்.
அதே உண்மையை இந்த அவதார காலத்திலேயும் சிலருக்கு உணர்த்தினாள் நம் அன்னை!
உன்னை 10 வயதில் ஆட்கொண்டேனே! என்று ஒருவரிடம்,
உன் 16 வயதில் சிதம்பரம் நடராசர் கோயிலில் அந்தக் காட்சி கொடுத்து ஆட்கொண்டேனே! என்று ஒருவரிடம்,
உன் கணவன் பரம்பரையில் ஏழு தலைமுறைகளில் ஒரே ஒரு ஆண் வாரிசு அப்படித்தானே…. என்று ஒருவரிடம்,
வா! வந்துவிட்டாயா…. உன் பழம் பிறவி ஞானநாட்டம் அறிவேன்! நீ பண்ணிய ஆன்மீகச் சாதனங்கள் அறிவேன். உன் ஆன்மீகத்தாகம் அறிவேன்! பாவம், மாயை உன்னை அறியாமல் மறைத்திருக்கிறது. என்னிடம் வந்துவிட்டாய். இந்தா! என் திருவடி தீட்சை பெற்றுக் கொள் என்று ஒருவரிடம்.
இந்தப் பிறவியோடு உன் ஆன்மா என் திருவடியில் இளைப்பாறட்டும் எனச் சொல்லாமல் சொல்லி ஒருவரிடம்.
எல்லாம் அம்மா இந்த அவதார காலத்தில் எமக்குக் காட்டிய வேடிக்கைகள்.
ஆதிபராசக்திக்கு ஆயிரம் முகங்கள்.
தன் பக்தனுக்குக் காட்டும் முகம் ஒன்று!
பத்திரிகைக்காரர்களுக்குக் காட்டும் முகம் ஒன்று!
ஞான நாட்டம் கொண்டவனுக்குக் காட்டும் முகம் ஒன்று!
தன் நிர்வாகத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்குக் காட்டும் முகம் ஒன்று!
தியான மார்க்கத்தில் அம்மாவைப் பார்க்க விரும்பும் ஒருவருக்குக் காட்டும் முகம் ஒன்று!
அரசியல்வாதிகளுக்குக் காட்டும் முகம் ஒன்று!
சொந்த பந்தங்களுக்குக் காட்டும் முகம் ஒன்று!
“கண்னகன் கீதையும் போதிப்பான். குதிரைக்குக் கொள்ளும் வைப்பான்” என்கிறார்கள்.
நம் அம்மாவின் அவதாரமான அடிகளாருக்கு விவசாயமும் செய்யத் தெரியும்: அண்டங்களைச் சமப்படுத்தும் வேள்விகளும் செய்யத் தெரியும். அவனவன் கணக்கும் தெரியும். என்று முதல் பரம்பொருளான ஆதிபராசக்தி இருக்கிறாளோ, அன்று முதல் நாமும் இருக்கிறோம்.
நாம் நம் கர்மவினைக்குத் தக்கபடி ஆயிரமாயிரம் பிறவியெடுத்து உழன்று கொண்டு வருகிறோம். விளைவுக்குத் தக்கபடி பலன்களைக் கொடுத்தபடி நம் அம்மாவும் உடன் வருகிறாள்.
நமக்கு வெளியேயும் அவள் சாட்சியாக இருக்கிறாள். உள்ளேயும் ‘ஆன்மா’ என்ற வடிவில் சாட்சியாக இருக்கிறாள்.
அவதார காலங்களில் இந்த உண்மையை மனித குலத்துக்குப் புலப்படுத்துகிறாள். “என்று நீ அன்று நான்” என்று தாயுமானவர் இதனை உணர்ந்து பாடுகிறார்.
என்று முதல் நீ வந்தாயோ…. அன்று முதல் அம்மாவும் உன்னுடன் பயணம் வருகிறாள்.
உணர்வோர் உணர்க!
தெளிவோர் தெளிக!
மு.சுந்தரேசன். எம். ஏ., எம்.பில், சித்தர் பீடப் புலவர்
சக்தி ஒளி அக்டோபர் 2003 (கட்டுரையின் ஓர் பகுதி)
]]>