உயிர்களும்: பிறவிகளும்:
அறிவியல் முன்னேற்றங்கள் ஏற்பட்ட பிறகு, புதிய புதிய கண்டு பிடிப்புகள் பெருகிய பிறகு, இன்றையத் தலைமுறையினர் பழங்காலப் பெரியோர்களின் நம்பிக்கைகள் பலவற்றை ஏற்றுக் கொள்ள மறுக்கின்றனர். எதையும் அறிவு பூர்வமாகக் கண்டு சோதித்து காரண காரியத்துடன் ஆராய்ந்து பார்த்துத் தான் ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கருதுகின்றனர். ஆகவே, உயிர்கள் பிறக்கின்றன் இறக்கின்றன் இறந்த பிறகு தாம் சேர்த்துக்கொண்ட வினைகட்கு ஏற்ப மீண்டும் பிறந்து இன்ப துன்ப அனுபவங்களைப் பெறுகின்றன. என்ற முன்னோர்களின் நம்பிக்கை இன்றையத் தலைமுறைக்கு வேடிக்கையாக இருக்கின்றது; புதுமையாக இருக்கின்றது உயிர்களைப் பற்றி ஆராய்ந்த இந்தியத்தத்துவ ஞானிகள் உயிர்கட்கு முன் பிறவி மறுபிறவி உண்டு என்று உறுதியோடு கூறி வந்தனர்.
பிறவிகளில் நம்பிக்கை இல்லாமை:
அவனுக்குப் பிறவிகளில் நம்பிக்கை ஏற்படவில்லை. உடம்பைப் பிராணவாயு கொண்டு செலுத்துகின்றது. மூச்சுக்காற்று அடங்கி விட்டால் உடலின் இயக்கமும் நின்று போகின்றது; உயிர் நீங்கிவிடுகின்றது அவ்வளவே! இப்படி ஒரு காலத்தில் அவன் கருதியது உண்டு. தத்துவ நூல்களைப் படிக்காமல் புராணக் கதைகளை மட்டும் வைத்துக் கொண்டு அவன் கேலி பேசியது உண்டு. இன்றைக்கும் பகுத்தறிவு பேசுகின்ற நண்பர்கள் பலர் புராணக்கதைகளை அடிப்படையாக வைத்துக்கொண்டு தான் நாத்திகக் கொள்கைகளைப் பரப்பி வருகின்றார்களே தவிரத் தத்துவ நூல்களை அடிப்படையாகக் கொண்டு ஆத்திகக் கொள்கைகளை மறுப்பது இல்லை. எந்தப் புத்த மதத்தைப் பகுத்தறிவோடு கூடிய மதம் என்று பாராட்டுகின்றார்களோ அந்தப் புத்தமதம் கூட உயிர்கட்குப் பிறவிகள் பல உண்டு என்று சொல்கின்றது. புத்தமதக் கொள்கைகளை விளக்குகின்ற மணிமேகலை, பிறவிகள் உண்டென்பதையும் நல்வினை, தீவினைகட்கு ஏற்ப மறுபிறப்பில் உயிர்கள் இன்ப துன்பங்களை அனுபவிக்கின்றன என்பதனையும் எடுத்துச் சொல்கின்றது.
ஏதோ பிறந்தாகிவிட்டது; வாழ வேண்டும். இன்பமாக வாழ வேண்டும்; வாழ்க்கையில் அனுபவிக்க வேண்டியவற்றையெல்லாம் அனுபவிக்க வேண்டும். என்பது இன்றைய அறிவு ஜீவிகளின் கோட்பாடு. அவனும் அறியாமையால் அப்படித்தான் நினைத்தான்.
அம்மாவின் கருணை:
நாயேனையும் இங்கு ஒரு பொருளாக நயந்து வந்து நீயே நினைவின்றி ஆண்டு கொண்டாய் நின்னை உஉள்ள வண்ணம் பேயேன் அறியும் அறிவு தந்தாய்! என்ன பேறு பெற்றேன் தாயே! மலைமகளே! செங்கண்மரல் திருதங்கச்சியே! – என்று பாடுகின்றார் அபிராமிபட்டர்!
நமக்கு என்ன தகுதியிருக்கின்றது என்று அம்மா நம்மை ஏற்றுக்கொண்டான்? அம்மாவை முழுமையாக நம்பி முழுமையான சரணாகதி அடைந்து விட்டோமா? மிதமிஞ்சிய பக்தி நமக்கு வந்து விட்டதா? இல்லையே? இன்னது செய்தால் இன்ன பலன் கிடைக்கும் என்று பேரம் பேசிக் கொண்டுதானே இந்த மனம் பராசக்தியை அணுகுகின்றது! அம்மா அவருக்கு லட்சம் லட்சமாக அருளால் அள்ளிக்கொடுக்கின்றாளே! சிறிது கடைக்கண் காட்டினால் வசதி வாய்ப்புகளை அடையலாமே என்று தானே இந்த உள்மனம் நினைக்கின்றது! இப்படியெல்லாம் நினைக்கின்ற பக்குவப்படாத நம்மையும் ஒரு பொருளாக வைத்து ஆலயத் தொண்டில் ஈடுபட வைத்திருக்கின்றாளே! தன்கருணை வெள்ளத்தில் நனைத்தெடுத்து வைத்திருக்கின்றாளே என்று அவன் அடிக்கடி நினைப்பது வழக்கம்! அபிராமி பட்டரின் இந்தப் பாட்டை இன்றும் அவன் நினைத்துப் பார்க்கின்றான்! தன்னுடைய சிறுமைகளையும் நினைத்து, அம்மாவின் பரம கருணையையும் நினைத்து இந்தப் பாட்டைப் படிக்கும் போதுதான் அனுபவப் பொருளை உணர முடிகின்றது! எத்தனையோ பேர் இங்கே வருகின்றார்கள். பிரார்த்தனை பலித்த பிறகு காரியம் முடிந்து விட்டது என்று வருவதை நிறுத்திக் கொள்கின்றார்கள்! அம்மா, தனக்கு வந்த துன்பத்திலிருந்து மீட்டுக் காப்பாற்றினாளே என்பது கருதி அந்த நன்றி உணர்ச்சியால் சிலர் வருகின்றார்கள்! அவன் அம்மாவைப் பற்றிக் கொண்டது இந்த நன்றி உணர்ச்சியால் தானே தவிர அவனுக்குப் பக்தி மிகுந்த விட்டது என்று சொல்ல முடியாது. பக்திக்கான அடையாளங்கள் எதுவுமே அவனிடம் இல்லை. ஆனாலும் அம்மா அவனைக் கைவிடவில்லை. பராசக்தியை நோக்கி பாரதி, “அம்மா! உன் வௌ;ளக் கருணையிலே இத்தாய் சிறு வேட்கை தவிராதோ?” என்று அங்கலாய்த்துக் கொண்டு கேட்கின்றான்.
பாரதியின் வேட்கையைப் பராசக்தி தணித்தாளோ இல்லையோ நாத்தழும்பேற நாத்திகம் பேசிய அந்த தாய்க்கும் அம்மாவின் கருணை வௌ;ளத்தில் திளைக்கின்ற வாய்ப்பபு ஏற்பட்டது! அந்தக் கருணையை நினைத்து நினைத்து ஆனந்தப்பட முடிந்தது! அந்தக் கருணையை மேலும் மேலும் பெற எண்ணி ஆசைப்படுகின்றது! அந்த வேட்கை மேலும் மேலும் பெறுவதற்குப் பேராசை கொள்கின்றது! தகுதி இருக்கிறதோ, இல்லையோ, மனப்பக்குவம் இருக்கிறதோ இல்லையோ, மனத்தில் ஆயிரக்கணக்கான அழுக்குகள் இருந்தாலும் அம்மாவின் அன்பும் அருளும் வேண்டும் என்று ஏங்குகின்றது! மற்றவர்கட்கு இவள் காட்டும் கருணை மிகுதியாகத் தெரியும் போது அவன் மனம் பொறாமைப் படுகின்றது; இந்தப் புத்தி எப்போது ஒழியுமோ தெரியவில்லை! நாடி வருகின்ற எல்லார்க்கும்தான் இவள் கருணை கிடைக்கின்றது! சிலருக்கு வெளிப்படையாகப் பலா பலன்கள் தெரிகின்றன! சிலர்க்குத் தீவினைக் கொடுமைகளிலிருந்து விடுதலை கிடைக்கின்றது! சிலருடைய விதியை மாற்றியும் அமைக்கின்றாள்! இவை எல்லாம் சூட்சுமமாக நடைபெறுகின்ற காரியங்கள். அருள்வாக்கு என்ற ஒன்றன் மூலமாக அம்மாவின் கருணை வெளிப்படுவதால் சிலவற்றைக் குறிப்பாக உணர முடிகின்றது! முற்பிறவி – மறுபிறவி என்ற உண்மைகளைக்கூட அம்மாவின் அருள்வாக்கின் மூலமாகத்தான் அவன் நம்பினான்.
திருமணத்தைக் கூட்டுவித்த அன்னை:
அன்னையிடம் பக்தி கொண்ட அன்பர் ஒருவர் அவர் தம் மகளுக்குத் திருமணம் செய்து முடிக்க வேண்டும் என்று உறுதி கொண்டு நல்ல இடமாகப் பார்த்துத் திருமண ஏற்பாடுகளில் ஈடுபட்டார். மகளுக்கோ திருமணம் செய்து கொள்ள விருப்பம் இல்லை. மேற் படிப்பு படிக்க வேண்டும்; பட்டம் பெற வேண்டும் என்று ஆசை! அந்த அன்பரின் குடும்பமே அம்மாவிடம் பக்தியும் ஈடுபாடும் கொண்ட குடும்பம். தந்தை, மகளுக்குத் திருமணம் செய்துவிட வேண்டும் என்று உறுதியாக நிற்கின்றார்; மகளோ மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று திருமணத்தை மறுக்கின்றாள்! நல்ல வரன் போய் விடுமே என்று தந்தைக்குக்கவலை; படிக்கும் வாய்ப்பு நழுவிப்போய்விடுமே என்பது மகள்கவலை. இந்தப் போராட்டத்திலிருந்து மீள வேண்டி அந்த அன்பர் மகளை அழைத்துக் கொண்டு அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்க வந்தார். அம்மா ஆணையிட்டால் மகள்மீற மாட்டாள் என்று தந்தைக்கு நினைப்பு! அம்மா, தன் படிப்பு பாழாக விட மாட்டாள் தன் நியாயமான ஆசையை நிறைவேற்றிக் கொடுப்பாள் என்பது மகளின் நினைப்பு! இருவரும் அருள்வாக்கிற்காக அம்மாவிடம் சென்று அமர்ந்தார்கள். அம்மா, அந்தமகளைப் பார்த்துச் சொன்னாளாம். “மகளே! நான்தான் உனக்கு இந்தத் திருமணம் நடைபெற அருள்பாலித்தேன். மறுக்காதே! முற்பிறவியில் நீ உரிய வயதில் திருமணம் நடைபெறாத காரணத்தால் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனாய்! என்னிடம் பக்தி கொண்டு நீ வந்து விட்டதால் தான் உனக்கு இந்தத் திருமணத்தைச் செய்தாக வேண்டி உள்ளது! பேசாமல் உன் தந்தையின் சொற்படி திருமணம் செய்துகொள்! உன்னுடைய நலன்களைப் பார்த்துக்கொள்வது எப்படி என்று எனக்குத் தெரியும். உனக்கு நல்லது எது என்பதும் எனக்குத் தெரியும் உத்தரவு” என்று சொல்லி அனுப்பினாளாம்.
புல்லறிவாண்மை:
அந்தத் தந்தையார் இந்த விவரங்களை அவளிடம் சொன்னபோதுதான் அவனுக்குப் பிறவிகள் பற்றிய கருத்து வலுப்பட்டது. காரல்மார்க்ஸ், இங்கர்சால், பெட்ராண்ட்ரசல் ஆகியோர்களின் நூல்களை அங்கொன்றும் இங்கொன்றுமாகப் படித்துவிட்டு ஒன்றிரண்டு மேற்கோள்களை வைத்துக்கொண்டு சமயவாதியை கேலியம் கிண்டலும் செய்த அறியாமைக்காக அவன் நாணப்பட்டான். அதன் பிறகு தத்துவ நூல்களைப் படித்துப் பார்க்க முற்பட்டான். சில புரிந்தன் சில புரியவில்லை. கீதையைப் படித்த பிறகு பல உண்மைகள் அவனுக்கு வெளிச்சமாயின. அதற்கு முன்பு அவன் எங்கே கீதையைப் படித்தான்? கண்ணன் பரம்பொருள் என்றால் போர்க்களத்தில் பல உயிர்களைக் கொல்வதற்குத் துணைபோகலாமாப எங்கள் திருக்குறளில் சொல்லாதது கீதையில் அப்படி என்ன சொல்லப்பட்டு விட்டது? சரி! போர்க்களத்தில் போருக்கு என்று இறங்கி விட்ட பிறகு இத்தனை சுலோகங்களைக் கண்ணன் சொல்லிக் கொண்டும் அருச்சுனன் கேட்டுக்கொண்டும் இருக்கும் நேரத்தில் எதிரிகள் என்ன பூப்பறித்து கொண்டா இருந்தார்கள்? என்று மேலோட்டமாகக் கீதையைப் பற்றி விமர்சனம் செய்தார்களே தவிர அதுவரை அவன் கீதையைப் படித்தது இல்லை. வள்ளுவன் “புல்லறி வாண்மை” என்ற தொடரைச் சொன்னான். நம்மைப் போன்ற ஆட்களின் செயலைப் பார்த்துதான் வள்ளுவன் இந்தத் தொடரைச் சொன்னான் போல இருக்கிறது என்று நினைத்துக்கொண்டான்.
பற்றித் தொடரும் இருவினை புண்ணிய பாவமுமே!
அம்மையார் ஒருவர் தம் குடும்பத்தில் நிம்மதியும் – ஒற்றுமையும் இல்லையே என்று கருதி அம்மாவிடம் அருள் வாக்குக் கேட்க வந்தார். அம்மா அவருக்கு எலுமிச்சம் பழம் ஒன்றை மந்திரித்துக் கொடுத்து, “மகளே! இந்தப் பழம் எப்படியும் உன்னை விட்டுப் போய்விடும். ஆனாலும் இதனைக் கண்போலக் காத்துப் பூசையறையில் வைத்து என்னை வணங்கிக்கொண்டு வா” என்று சொல்லி அனுப்பி விட்டு ஆலயத்திலிருந்த தொண்டர் ஒருவரை அழைத்து, வந்து போன அந்த அம்மையாரைப் பற்றிக் குறிப்பிட்டு, “மகனே! அந்தக் குடும்பத்தில் நிம்மதியும் ஒற்றுமையும் இல்லாமல் அந்தக் குழந்தைகள் அவதிப்படுகின்றன! அந்தக் குழந்தைகள் எந்தத் தவறும் செய்யவில்லை மகனே! அந்தக் குடும்பத்தில் எவனோ செய்த தவறுகட்கு அந்தக் குடும்பத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து கஷ்டங்களை அனுபவிக்கின்றார்கள் மகனே! இது போல அவதிப்படும் குடும்பத்தார்க்கு நிம்மதியும் – அமைதியும் அளிக்க வேண்டிக் குடும்ப நல வேள்விகள் செய்ய வேண்டும் மகனே! அதற்கான வழிமுறைகளைச் சொல்வேன். அதன்படி நீங்கள் சென்று குடும்ப நல வேள்விகள் செய்யுங்கள். சிலபேர் நினைப்பார்கள் இந்தக் குடும்ப நல வேள்வி செய்தால் லட்சம் லட்சமாக கொட்டும் என்று! உறுதியாகச் சொல்லிவிடு; குடும்பத்தில் நிம்மதியும் அமைதியும் உண்டாகும்; சில ஊழ்வினைக் கொடுமைகள் மட்டும் தணிக்கப்படும் என்று சொல்லிவிடு மகனே! என்றும் ஆணையிட்டாள். அம்மாவே குடும்பநல வேள்விக்கான பயிற்சிகளைச் சில தொண்டர்கட்கு அளித்தாள்.
யார் பாவத்துக்கு யார்பொறுப்பு:
“எவனோ செய்த தவறுகட்கு அந்தக் குடும்பத்தில் உள்ள குழந்தைகள் எல்லாம் சேர்ந்து கஷ்டப்படுகின்றன” என்று அம்மா சொன்னாளே! இது எப்படி நியாயம்? அவனவன் செய்த வினைகளை அவனவன் தானே அனுபவிக்க வேண்டும்? எவனோ செய்த பாவங்கட்கு அவன் குடும்பத்தில் உள்ளவர்கள் ஏன் துன்பப்பட வேண்டும் என்ற கேள்விகள் அவன் மனத்தில் தோன்றலாயின. அந்தக் குடும்பத்தைப் பற்றித் தெரிந்தவர்களிடம் விசாரித்தான்! நல்ல வசதியான குடும்பம் அது! ஒற்றுமை மட்டும் இல்லை. நவக்கிரகம் போன்ற வீடு அது! அந்த வீட்டார் நடத்துகின்ற நிறுவனத்தில் நாள்தோறும் குறைந்தது 500 ரூபாய் அளவுக்குப் பணியாட்கள் கையாடுவது வழக்கமாம். சரியான கண்காணிப்பும் இல்லை; சரியான நிர்வாகமும் இல்லை. பெண்களுக்கு இடையில் ஓயாத சண்டை சச்சரவுகள்! ஆண்களுக்கிடையே உரிமைப் பிரச்சினைகள்! அந்தக் குடும்பத்தில் சோற்றுப் பிரச்சினை பற்றிய கவலை மட்டும் இல்லையே தவிர பிரச்சினைகட்குக் கணக்கு இல்லை. இதற்கு மூலகாரணம் என்ன? வேறொன்றும் இல்லை. உடன் பிறந்தவர்களை வஞ்சித்து ஏராளமாகச் சொத்து சேர்த்து வைத்துவிட்டுப் போய்விட்டார்கள் முன்னோர்கள்! சொத்து மட்டும் இருக்கிறது. சுகப்பட முடியவில்லை. இதற்கு மேலும் எழுதுவதற்கு மனம் வரவில்லை. அந்தக் குடும்பத்தார் இதனைப் படித்து விட்டு மனம் புண்படக் கூடாதே என்ற கவலையாலும் அச்சத்தாலும் விளக்கி எழுத முடியவில்லை.
ஆனாலும் இந்தப் படிப்பினை மற்றவர்கட்கு மனமாற்றத்தை ஏற்படுத்தாதா என்ற ஏக்கத்தால் வெளியிட வேண்டி உள்ளது. அடுத்த தலைமுறை நன்றாக இருக்க வேண்டும் என்று கருதித் தீவினைப் புரிந்துசெல்வத்தைச் சேர்க்க முனையும் போது விதி வேறு விதமாக விளையாடத் தொடங்குகின்றது! இந்த விதி பின்னுகின்ற வலையையும் வலையில் அகப்பட்டுக் கொண்டு அவதிப்படுபவர் நிலையையும் யார் புரிந்துகொள்ள முடியும்? யார் அறிந்துகொள்ள முடியும்?
அண்ட சராசரங்களையெல்லாம் படைத்த ஆதிபராசக்திக்குத் தெரிகின்றது! எவன்போய் அருள்வாக்குக் கேட்க முன்னே உட்கார்ந்தாலும் அவனுடைய ஆன்மாவின் பயணங்கள், பிறவிக் கணக்குகள், செய்த தீவினைகள், செய்த நல்வினைகள் எல்லாக் கணக்கும் அவளுக்குப் புரிகின்றது! திருடனாயிருந்தாலும், விபச்சாரம் புரிந்தாலும் அக்கிரமம் செய்தாலும் விதி சாட்டை கொண்டு அடிக்கும்போது “தாயே! காப்பாற்று என்று கதறிக் கொண்டு காலில் விழுந்து அழும்போது அது உண்மையான அழுகையாகத் தெரியும் போது அவர்கட்கும் கருணை காட்ட வேண்டிய தாய் கருணை காட்டத்தான் செய்கின்றாள்! படைத்தவனிடமே இவர்கள் சரணடைந்து விடும்போது இவர்கள் ஆன்ம ஈடேற்றம் பெறுகின்றார்கள். இதைப் புரிந்துகொள்ளாமல், கடவுளையும் நம்புவதில்லை; செய்கின்ற அக்கிரமங்கட்கும் குறைவில்லை, சிற்றறிவும், வெற்றறிவும் கொண்டு கடவுள் நம்பிக்கை உள்ளவர்களைக் கேலி பேசுவது; கிண்டல் புரிவது; உலகத்து அறிவு எல்லாம் ஏதோ தன் மூளையில் மட்டும் திணித்து வைத்திருப்பது போல் கருதிக்கொண்டு வாதம்புரிபவர்கட்கு இவையெல்லாம் தெரிவதில்லை. இவற்றையெல்லாமும் செய்கின்றவர்கட்கும் அன்னை கருணை காட்டத்தான் செய்கின்றாள்! ஒரு காலம் வரை அவர்களை விட்டுப் பிடிக்கின்றாள். சிலரை இந்தப் பிறவியில் ஆட்கொள்ள வேண்டாம்! இவர்கட்கு இன்னும் நான்கைந்து பிறவிகள் பிறப்பு கொடுத்து அதன் பிறகாவது தன்னை உணர்கின்றார்களா என்று பார்ப்போம் என்று விட்டு வைக்கின்றாள். அம்மாவே, சிலருக்குத் தன்நினைவை உண்டாக்காத போது அந்தப் பட்டியலில் இவர்களைச் சேர்த்து வைக்கும் போது யார் என்ன சொன்னாலும் ஆதிபராசக்தியின் அந்புதத்தை எவ்வளவு விளக்கமாக உணர்ந்தது, உணர்ந்தபடி சொன்னாலும் கேட்க மாட்டார்கள்; நம்ப மறுப்பார்கள்; பழைய புண்ணியக் கணக்கினால் சிலர் வசதி வாய்ப்பு பெற்றும் முன்னோர் செய்த புண்ணியத்தால் நன்மை பெற்றும் வாழ்ந்து திரிவார்கள். எந்தப் பிறவியிலே பராசக்தி நினைக்கின்றாளோ அந்தப் பிறவியில்தான் அவர்கட்கும் தெய்வநம்பிக்கை, பக்தி, பூசை, வழிபாடு, கோயில் என்ற நினைப்பே வரும்போல இருக்கின்றது!
பெறற்கரிய பேறுகள்:
இயல்பாகவே ஒருவனுக்குத் தெய்வத்திடம் பக்தி எற்படுவதும், ஆன்மிக வளர்ச்சியில் நாட்டம் கொள்ள விழையும் ஒருவனுக்குத் தகுந்த குரு ஒருவர் கிடைப்பதும், பெறமுடியாத பேறுகள் என்று சொல்கின்றார்கள். பல்லாயிரம் பிறவிகள் எடுத்த பிறகே ஒருவனுக்குத் தேவியிடம் பக்தி ஏற்படும் என்று தேவிபாகவதம் கூறுகின்றது. அந்தப் பக்தி உணர்வையும் அன்னையாகவே ஊட்டினால் தான் உண்டு; அம்மா பல வகையில் பலரையும் தன்னிடம் பக்திகொள்ள வைக்கின்றாள். எப்படி?
-தொடரும்
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 9 (1982) பக்கம்: 7-13
]]>