பாலக்குறிச்சி என்னும் பகுதியில் ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றம் இயங்கி வருகிறது. அந்த மன்றத்தில் உறுப்பினரான இளம்பெண் ஒருத்தி வழிபாட்டு மன்றத்தில் தொண்டு செய்து வந்தாள். அன்னையிடம் தீவிர பக்தி கொண்டவள்.

நாளும்
எழுந்து நீராடிவிட்டு மன்றத்திற்குச் சென்று சாணம் தெளித்து, பெருக்கி, மெழுகிக் கோலம் வரைந்து, மலா் கொண்டு வந்து அன்னையின் படத்திற்கு அலங்காரம் செய்து வருவாள். பெளா்ணமி, அமாவாசை நாட்களில் வீடு வீடாகச் சென்று அரிசி வாங்கி வந்து சேகரித்து அன்னதானம் செய்வாள். தன் தகப்பனாரின் பராமரிப்பில் வாழ்ந்து வந்தவள் அந்தப் பெண்.

1989ஆம் ஆண்டு முடிவில் ஒரு புதன்கிழமை அன்று அவள் தகப்பனார் வழக்கம் போலத் தம் உழவு மாடுகளை ஓட்டிக்கொண்டு விடியற்காலை வயலுக்குப் போனார். வழியில் அவரைக் கொடிய விஷநாகம் தீண்டிவிட்டது. அவா் அந்த இடத்திலேயே பிரக்ஞை இழந்து கீழே விழுந்தார். அந்த வழியே வந்த சிலா் அவரை வீட்டிற்குத் துாக்கிச் சென்றனா். வீட்டில் கொண்டு போய்ப் போட்டதும், அவருக்கு பேச்சு, மூச்சில்லை. பிணம் போலக் கிடந்தார்.  தந்தையின் நிலை கண்டு அந்தப் பெண் கதறிக் கதறி அழுதாள்.

தன் தந்தையை ஒரு மாட்டு வண்டியில் படுக்க வைத்துப் பக்கத்து ஊரிலிருந்த ஒரு நாட்டு வைத்தியரிடம் கொண்டு போய்க் காட்டினாள். அந்த வைத்தியா் அவரை பரிசோதித்து, வாயில் கொஞ்சம் தண்ணீர் ஊற்றினார். இறங்கவில்லை. கண்கள் மூடிக்கொண்டன. உடம்பில் சூடு இல்லை. நாடி பிடித்துப் பார்த்தார். நாடித்துடிப்பு கொஞ்சம் கூட இல்லையேம்மா…. என்னால் ஒன்றும் செய்வதற்கு இல்லையேம்மா… எடுத்துக் கொண்டு போய்விடு என்றார்

மீண்டும் தகப்பனார் உடம்பை மாட்டு வண்டியில் வைத்துத் தன் வீட்டிற்கு கொண்டு வந்தாள். அவரை ஒரு கட்டிலின் மேல் கிடத்திவிட்டு நேராக ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்திற்கு வந்தாள்.

அன்னையின் திருவுருவப்படத்தின் முன்பு நெடுஞ்சாண்கிடையாக விழுந்தாள். அன்னயைின் மூல மந்திரம், 108 மந்திரம் ஓதினாள். தாயே உன்னையன்றி எனக்கு வேறு
கதியில்லை. நான் ஆதரவற்ற பெண் என்பது உனக்கே தெரியும். என் அப்பாவைக் காப்பாற்று என்று சொல்லி ஓலமிட்டாள். ‘ஓம் சக்தி பரா சக்தி’! என்று கூறிக் கொண்டு அழுத கண்களுடன் தலையை மன்றச் சுவரில் மோதி மோதி அழுதாள். பின் மூா்ச்சித்து விழுந்துவிட்டாள்.

இவள் நிலை இப்படியிருக்க இவள் வீட்டிலே அந்த அற்புதம் நடந்தது.

அந்தப் பெண்ணின் வீட்டில் கும்பல் கூடிவிட்டது. எல்லாம் முடிந்துவிட்டது என்று அங்கிருந்தோர் முடிவுக்கு வந்துவிட்ட அந்தச் சமயத்தில் தான் அந்த அற்புதம் நடந்தது. ஆம்! விஷம் தீண்டி நாடித்துடிப்பு அடங்கிவிட்டது என்று கைவிடப்பட்ட அந்தப் பெண்ணின் தகப்பனார் திடீரென்று கண் திறந்து கட்டிலில் எழுந்து உட்கார்ந்தார். சுற்றியிருந்தவா்களைப் பார்த்து நான் எங்கே இருக்கிறேன்? என்னை ஏன் இங்கு படுக்க வைத்திருக்கிறீா்கள்?  என்னைச் சுற்றி ஏன் இவ்வளவு கும்பல்? என்று விசாரிக்க ஆரம்பித்துவிட்டார்.

இந்த நல்ல செய்தியைச் சொல்ல சிலா் மன்றத்திற்கு ஓடிவந்தனா். அந்தப் பெண்ணின் முகத்தில் தண்ணீர் தெளித்து உன் அப்பா பிழைத்துக் கொண்டார்.  என்றனா்.

பாலக்குறிச்சி பகுதி மக்கள் ஆதிசயப்படும் வகையில் பாம்பு விஷம் தீண்டி இறந்து போன ஒருவரைக் காப்பாற்றினாள் அன்னை.

1 COMMENT

Leave a Reply to Muthusamy Cancel reply

Please enter your comment!
Please enter your name here