தொண்டனுக்குத் தெண்டனிடு
வெகுநாளாக ஒரு ஏக்கம். அம்மாவிடம் எப்படியாவது கேட்டுப் பெற வேண்டும் என்று. ஒரு நாள், இரண்டு நாள் எக்கமல்ல அது. கல்ப கோடி வருடங்களாக, யுகம் யுகமாக இந்த ஆன்மா அச்சுகத்தை அனுபவித்து உய்ய வேண்டும் என்று தவமிருந்து தவிக்கின்ற ஏக்கம்.
அதனை அம்மாவிடமிருந்து தான் பெற முடியுமேயன்றி வேறெங்கு முயற்சித்தாலும் கிஞ்சித்தும் பயன் கிடையாது என்பதுவும் தெளிவு. “பிறகென்ன….? அம்மாவிடம் கேட்டு விடவேண்டியது தானே….?” என்று போய்க் கேட்பதிலும் பல சிக்கல்கள். சரி, அதில்தான் பல சிக்கல்கள் இருக்கின்றனவே என்று விட்டு விடவும் மனம் இல்லை.
தலையானதும் முதலாமாவதுமான சிக்கல் என்னவென்றால், “அம்மாவிடம் எதையுமே கேட்டுப் பெறக் கூடாது” என்ற நம் கொள்கைதான் அது. இது மாதிரி பல முக்கியமான சந்தா்ப்பங்களில் இந்தக் கொள்கை இருக்கிறதே, அதாவது அம்மாவிடம் “எதையுமே கேட்கக் கூடாது” என்பது – அது பல வகைகளில் நமக்கு இடைஞ்சல்.
அம்மாவிடம் கேட்காமல் யாரிடம் போய்க் கேட்பது? அதற்குத் தானே அம்மாவே இறங்கி வந்திருக்கின்றது. இதிலெதற்கு நமக்கோர் வெட்கம்? என்ற ஆயிரக் கணக்கான உள்ளங்கள் கேட்பதிலும் நியாயமிருக்கின்றது என்றாலும் ஒரு உண்மையை நினைத்துப் பார்த்தால் கேளாமலிருப்பதில் உள்ள உயா்வு விளங்கும்.
“கேட்டால் தான் கிடைக்கும்” என்கின்ற தெய்வமல்ல நமது தெய்வம். கேளாதவனுக்கும், காணாதவனுக்கும், வணங்காதவனுக்கும், ஏன்….? தன்னை ஒரு முறை கூட நினைத்திராதவனையும் கூட வலிய வரவழைத்து அல்லது அவனிடத்திற்கே சென்று தன்னருளை வாரி வழங்கும் தாய்மையுள்ளமல்லவா நமது அன்னையின் உள்ளம். பிறகென்ன கேட்டு விட வேண்டியது தானே? என்றால் அடுத்தொரு சிக்கல். அது என்ன?
அதாவது அப்பேர்ப்பட்ட கேள்வியைக் கேட்கக் கூடிய அருகதை நமக்கிருக்கின்றதா….? என்பது தான். “இன்னும் என்ன கேட்கின்றாய்? கேள் மகனே! என்றும் “வேறென்ன கேட்கிற, கேள் மகனே!” என்றெல்லாம் அன்னையே வாய்ப்புக் கொடுக்கும்பொழுது கேட்டு விட வேண்டியது தானே…..? என்றால் “கேள்“ என்றதும் கேட்கக்கூடிய கேள்வியல்ல அது.
தன்னைப் பக்குவப்படுத்திக் கொண்டு, அந்நிலைக்குத் தயார்படுத்திக் கொண்டு, அந்த அருகதையைப் பெற்றுக் கொண்ட பிறகும் இரவு பகல் எந்நேரமும் ஏங்கித் தவித்து எப்பொழுது கிடைக்கும் என்று காத்துக் கொண்டேயிருந்தால் பரம்பொருளாகப் பார்த்து இறங்கி வந்து தானே விரும்பிக் கொடுத்தால் தான் உண்டு.
இது அத்தனைக்கும் மேலாக இன்னொரு சிக்கல். சரி இந்தக் கவலைகளெல்லாம் நமக்கெதற்கு? கேட்டு விட வேண்டியது தானே என்று சற்றேனும் யோசிக்காமல் கூடக் கேட்டு விடலாம். அப்படிக் கேட்டதும் அம்மா உடனே கொடுத்து விட்டால் நம்மால் தாங்கிக் கொள்ள முடியுமா? என்பதுதான்.
இவ்வளவு பீடிகை எதற்கு? அப்போ்ப்பட்ட கோரிக்கைதான் என்ன? என்ற வினாவுக்கான பதில் என்ன தெரியுமா? “குருவடிவாய் வந்த திருவடிவாம் அன்னையானவள் நம்மைச் சீடனாக ஏற்றுக் கொண்டு தன்னோடு ஐக்கியப் படுத்திக் கொள்ள வேண்டும்” என்ற வேண்டுதல் தான்.
“ப்பூ…..! இதற்குத்தான் இவ்வளவு பீடிகை போட்டானா? அதுதான் அம்மாவே சொல்லியிருக்கின்றதே……?! உங்கள் எல்லோருக்கும் அடிகளார் தான் ஆன்மிக குரு என்று. அம்மாவே அருட்திரு அடிகளார் அவா்களை நம் அனைவருக்கும் ஆன்மிக குரு என்று சொல்லி விட்டதனால் நாமெல்லாம் ஆன்மிககுருவின் சீடா்கள் தானே?
இதற்குப் போய்த் தனியாக வேறு அம்மாவிடம் கேட்க வேண்டுமா? நடமாடும் அம்மா ஆன்மிககுரு என்றால் “ஆட்டோமெடிக்” காக நாமனைவரும் அவா்தம் சீடா்தானே….?” என்று நினைப்பதற்கு இடமில்லை.
அன்னையினுடைய சிருஷ்டியில் இப்பிரபஞ்சத்திலோ அதற்கு அப்பாலோ, அல்லது அதற்குக் கீழோ மேலோ எந்ததொரு லோகத்திலும் தோன்றுகின்ற குருமார்கள் ஒரு குறிப்பிட்ட வட்டத்திலுள்ள சீடா்களுக்கு மட்டும் அதுவும் விசய ஞானத்தைப் பற்றி மட்டுமேதான் அவா்களால் போதிக்க முடியும். மேலும் பரஞானத்திற்கு வழிகாட்ட முடியுமேயன்றி அப்பரம்பொருளை அன்னை ஆதிபராசக்தியை அடையச் செய்ய முடியாது. மேலும் தக்க சீடா்கள் கிடைக்காமல் தங்களுக்குத் தெரிந்ததைப் போதிக்கமலேயே சென்று விட்ட குருமார்களும் எத்தனையோ பேர் இருந்திருக்கிறார்கள்.
ஆனால் அடிகளார் ஒருவா்தான் தேவா்கள், முனிவா்கள், சித்தா்கள், யோகிகள் முதலாக மனிதர்களிலிருந்து, மிருகங்கள், பறவைகள் ஐந்துக்கள் ஈறாகச் சகல ஜீவராசிகளுக்கும் விசய ஞானத்தை மட்டுமின்றிப் பிரம்மஞானத்தையும் போதிக்கவல்ல, நல்கவல்ல, சா்வவல்லமை படைத்த ஒப்பற்ற குரு ஆவார்கள். அடிகளார் அவா்கள் நினைத்தால் வண்டுக்கும் முத்தி கொடுக்க முடியும். இன்னும் சித்தா்களாக இருந்து கொண்டு ஜீவசமாதி அடைந்தும் பரம்பொருளை எட்டிப் பிடிக்க வேண்டிய நிலையிலிருப்பவா்களுக்கும் ஒருசேர ஞானத்தை அள்ளி வழங்க அடிகளாரால் தான் முடியும்.
அத்தனை பேருக்கும் ஆன்மிக குருவாக இருக்கக்கூடிய கருணை நம் குருபிரான் அவா்களுக்கு இருக்கின்றது. இவன் திருடன், இவன் போலீஸ், அவன் ஏழை, இவன் செல்வந்தன், இவன் தீயவன், இவன் நல்லவன், இவன் பாவி, இவன் யோகி, என்று தரம் பிரிக்காமல் தகுதியற்றவா்களுக்கும் அவரவா்தம் கணக்கை நோ் செய்ய வைத்துத் தன்பால் ஈா்த்துக் கொள்கின்ற வல்லமை நம் குருநாதா் ஒருவா்க்கே உண்டு.
ஆனால் “நான் அருட்திரு அடிகளார் அவா்களின் சீடன் என்று கூறிக் கொள்ளுகின்ற யோக்கியதையைப் பெற்றுக் கொண்டிருக்கிறோமா…..? என்று யோசிக்கும் போதுதான் உதைக்கின்றது.
இத்தனை சிக்கல்கள் இருக்கின்றன என்று தெரிந்தாலும் அந்த ஏக்கமான எண்ணத்தைக் கைவிட மனம் ஒப்பவில்லை. ஏனெனில் தெய்வமே குருவடிவாய் இறங்கி வந்து நிற்பதென்பது யுகத்திற்கொரு முறை கூட நிகழாது. இவ்வரிய வாய்ப்பினைப் பயன்படுத்திக் கொள்ளாவிட்டால், இனி எப்பிறவியிலும், எந்த ஜென்மத்திலும், எந்த யுகத்திலும் கடைத்தேறுவது என்பது நம் கையில் இல்லையே! இனி என் செய்வது………? என்று நமது குருபிரான் அவா்களின் பாதார விந்தங்களைச் சரணடைந்து தொழுதபோது ஒரு வழி புலப்பட்டது. மேற்சொன்ன எந்தவொரு சிக்கலுக்கும் இடமில்லாதது. எனவே அது நமக்கு நல்வழியாகப்பட்டது.
அதனை அன்னையிடமே சென்று கேட்டு விடலாம் என்று அருள்வாக்கிற்குச் சென்று, அன்னையின் கமல மலா்ப்பாதங்களை வணங்கி அமர்ந்தபோது நாம் எதுவும் கேட்பதற்கு முன்னரே அன்னை “சக்தி…..! அடிகளாரின் தொண்டன் எப்படி இருப்பான் தெரியுமா….?
அடிகளாரின் தொண்டன் உழைத்து உண்பான், ஊரார் பொருளுக்கு ஆசைப்படமாட்டான். ஊன், உறக்கமின்றிச் சித்தா்பீடத்தைச் பற்றியும், அடிகளாரின் அவதார நோக்கம் பற்றியும் பட்டி தொட்டியெங்கும், பார்க்கும் இடம் எங்கும் போவோர், வருவோர் அனைவரிடத்தும் எடுத்துச் சொல்லிக் கொண்டே இருப்பான்.
மகனே! அவன் அடிகளாரையும் அம்மாவையும் எந்த நேரத்திலும் வேறுபடுத்திப் பார்க்க மாட்டான். நான் அவனைப் படாதபாடு படுத்துவேன். ஆனால் பார் மகனே அவனுக்குச் சந்தேகம் என்ற ஒன்று மட்டும் வருவதில்லை.
மகனே! என்னுடைய உண்மையான தொண்டன் பட்டம், பதவி, புகழ், பரிசுக்கு என்றுமே ஆசைப்பட மாட்டான். அவனுக்குத் தொழில் தொண்டு மகனே! என்று மொழிந்து கொண்டே வந்த அன்னை தனது வாக்கினை நிறுத்தித் தன் பார்வையருளைச் சற்றே பாய்ச்சி “ஏன்டா, மகனே! கடைசியாக என்னடா சொன்னேன்…..?” என வினவ,
“அவனுக்குத் (அம்மாவினுடைய தொண்டனுக்குத்) தொழில் தொண்டு மகனே….!” என்று சொன்னீங்கம்மா…… என்றதும், “மகனே! அவனுடைய தொழில் தொண்டு என்றால், அதை வியாபாரம் பண்ணுவான். அம்மா பேரைச் சொல்லிக் காசாக்கி அவனுடைய காலி வயிற்றை நிரப்பிக் கொள்வான் என்ற பொருளல்ல.”
நான் ஏற்கனவே சொல்லியிருக்கின்றேனே! ஆலயத்திற்கு வருவதை உன் அன்றாடக் கடமையாகவும், வேலைக்குச் (பணிக்குச்) செல்வதை உலகியலில் உனக்குக் கிடைத்த ஓய்வாகவும் கொள்ள வேண்டும் என்று. அதனுடைய தாத்பா்யத்தை இன்னும் புரிந்து கொள்ள முடியாதவா்கள் எத்தனை போ் “ஏன் அம்மா இப்படிச் சொல்கிறதே! கோவிலுக்குப் போவதை கடமையாகக் கொள் என்றும், கடமையாற்றச் செல்வதை ஓய்வாகக் கொள் என்கிறதே……. கோயிலே கதியாகக் கிடந்தால் வீட்டுக்கு அனுப்பி விடமாட்டானா நம் மேலதிகாரி” என்று குழம்பிக் கொண்டு அலைகிறார்களே…….!
மகனே! உலகியலில் ஒருவன் ஏன் வேலைக்குச் செல்ல வேண்டும்? என்று எங்களைப் பார்த்துக் கேட்க நாங்களோ, “அம்மா…….. அவனவன் தன்னையும் தன் குடும்பத்தையும், தன் சுற்றத்தாரையும் காப்பாற்ற வேண்டுமானால் பொருள் வேண்டும். அந்தப் பொருளுக்காக உழைத்துத் தானே ஆக வேண்டும்….!” என்றதும், “அட முட்டாளே….! நீயாடா உன்னையும் உன் குடும்பத்தாரையும், உன்னைச் சேர்ந்தவா்களையும் காப்பாற்றுகின்றாய்…..?” என்றாள் நகைத்தவாறு.
“மகனே! ஆதிகாலத்தில் மனிதன் எப்பசியுமின்றி என்னிலேயே தன் மனதை லியிக்க வைத்துக் கொண்டு இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து வந்தான். ஆனால் இன்றைய நிலை அப்படியில்லையே.”
மகனே! தன்னையும் தன் குடும்பத்தாரையும் காப்பாற்றுவதற்காகப் பொருள் தேவைப்படுகின்றது. அப்பொருளுக்காக அலுவலாற்றுவது, வியாபாரம் செய்வது இன்னபிறதான் தனது முக்கியக் கடமையாகின்றது என்று ஒவ்வொருவனும் நினைத்துக் கொண்டிருக்கின்றானே! தன்னையும் தனது சுற்றத்தாரையும் பொருளைத் தேடிக் கொண்டு காப்பாற்றுவதற்காக வேண்டி அவனவனுக்குப் பிறவியை நான் தரவில்லை.
மகனே! தன்னையுணர, தன் வினையை அனுபவித்துக் கழிக்க மேலும் வினையைக் கூட்டிக் கொள்ளாமலிருப்பதற்காக மனித குலத்திற்கு இப்புவியில் நான் கொடுத்த பொன்னான வாய்ப்படா இம்மனிதப் பிறவி. அதிலும் இந்நேரம் நானே நேரில் வந்திருக்கின்றேனே! அதனையுணா்ந்து அதன்படி நடக்க வேண்டியது தானே அவனவன் கடமை.
மகனே! உனது வினையைக் கழிப்பதென்பது எளிதான செயல் என்றா நினைத்துக் கொண்டாய்? அது அவ்வளவு சுலபமல்லடா., ஒருவன் வினையைக் கழித்துக் கொள்ளுகின்ற மார்க்கத்தை என்னருளால் தெரிந்து கொண்டபின் அவனறியாமல் என்னருகே வர ஆரம்பிக்கின்றான்.
எனவே நான் விளையாட்டுக்காகச் சோதனை தருவது போல பாவனை செய்தால் உடனே மனம் சோர்ந்து வினையைக் கழிக்கின்ற வேலையை விட்டுவிட்டு உலகியல் கடமைகளைச் செய்ய ஓடி விடுகின்றான். ஆனால் என்ருசி கண்டவன் என்னைவிட்டு நீங்க முடியுமா….? மறுபடியும் தன் அகக் கடமையாற்ற வந்து விடுகின்றான். இதனிடையில் நான் அவனுக்குக் கொடுப்பது “ஓய்வு” என்பதனைப் புரிந்து கொள் மகனே!
மகனே! இதனுடைய தாத்பா்யம் போகப் போகத்தான் விளங்கும். சரி அதை விடு மகனே! உனக்கு என்ன வேண்டும் கேள் மகனே! என்று மிகப் பரிவோடு அம்மா அவா்கள் கூறினார்கள்.
நாங்கள் சற்றுத் தயங்கியபடியே “அம்மா! அருட்திரு. குருபிரான் அடிகளார் அவா்களின் சீடனாவதற்கு ஒருவன் என்னென்ன இலக்கணம் படைத்தவனாக இருக்க வேண்டும்…..?” என்றதும்…….
“அட மகனே…..! அதுதான் இந்நேரம் வரை சொன்னேனே…. புரியவில்லையா? இன்னும் உனக்கு…..?” என்று கூறி மறுபடியும் அம்மா அவா்கள் முன் சொன்னதையெல்லாம் திரும்பவும் விளக்கமாகச் சொல்லி மேலும் கூறினார்கள்.
மகனே! அடிகளாரின் தொண்டன் நாணயமானவனாயிருப்பான், நன்னடத்தையைக் கொண்டிருப்பான், அல்லும் பகலும் ஆன்மிக முன்னேற்றத்தைப் பற்றியே அயராது சிந்தித்துக்கொண்டிருப்பான், அவன் உழைத்துச் சாப்பிடுவான். ஒரு ரூபாய் சம்பாதித்தால் அதிலிருந்து பத்துக் காசை ஆன்மிகத்திற்காகச் செலவிடுவான்.
மகனே! அவன் யாருக்கும் வால் பிடிக்க மாட்டான். வஞ்சக எண்ணங்களை நெஞ்சிலே சுமக்க மாட்டான். வீணில் பொழுதைக் கழிக்க மாட்டான். விளையாட்டக்காகக் கூடப் பொய் கூறமாட்டான். கபடு, வாது, சூது அவனை நெருங்க மாட்டா.
மகனே! அவன் தனது பெற்றோரை, குடும்பத்தாரை, சுற்றத்தாரை மதித்து நடப்பான். மகனே! அவனொருவனுக்காக, அவனுடைய அகங்காரமில்லாத தொண்டினுக்காக அவனைச் சார்ந்த அனைவரையும் காப்பாற்றுவேன் என்றெல்லாம் அம்மா அவா்கள் மொழிந்து கொண்டே போனபோது மனதில் ஒன்று தோன்றியது.
அடிகளார் அவா்களின் சீடனாவதற்கு ஒருவன் என்ன இலக்கணம் பெற்றிருக்க வேண்டும் என்று கேட்டால் அம்மா அவா்களோ தொண்டனுக்கு இலக்கணம் கூறிக்கொண்டே போகிறார்களே! எனச் சற்றே நினைத்தபொழுது அம்மா அவா்கள் தனது அதரங்களில் ஒரு இளநகையைக் காட்டி,
“மகனே! என் தொண்டனின் ஆன்ம வளர்ச்சி எப்படியிருக்கும் தெரியுமா….? எனக்கேட்டு விட்டுப் பிறகு அடுக்கிக் கொண்டே போன வார்த்தைகள் எல்லாம் வேதங்கள். ஆஹா….. நம் அன்னையிடம் தொண்டு மட்டும் செய்வதில் கூட இத்தனை அனுகூலங்கள் கிடைக்குமா? என்றெல்லாம் மனதில் ஆனந்தம் பீறிக்கொண்டு வந்தது. ஓ…..! அவையனைத்தையும் பிரயத்தனப்படும் ஆன்மாக்களைத் தேடிச் சென்று சொல்லத்தக்கவை என்ற பிரமித்து அமர்ந்திருந்த வேளையில் அம்மா அவா்கள் “உத்தரவு” என்று கூறி வழியனுப்பி விட்டார்கள்.
அடுத்தொருமுறை அருள்வாக்கிற்குச் சென்றபோது நடந்தது இது. ஆலயத்தைச் சுற்றி நடந்த சில நிகழ்ச்சிகளினால் நெஞ்சிலே முள் தைத்தது போன்ற வலியுடன் அன்று சென்று அமர்ந்தோம். எப்படியாவது இவற்றிற்கெல்லாம் அம்மாவிடமே ஒரு தீர்வு காணலாம் என்று நினைத்தபோது அம்மா அவா்கள் சொன்னார்கள்…..
“சக்தி…….. உலகெங்கிலும் இப்பொழுது அக்கிரமம் தலை விரித்தாடுகின்றதடா! எங்கு பார்த்தாலும் அழிவுகள், எங்கு பார்த்தாலும் விபத்துக்கள், சாவுகள், ஆன்மிகத்திற்கும், அமைதிக்கும் இடம் தேட வேண்டியிருக்கின்றதடா…. திருட்டுக்களும் பாவங்களும் பெருகிக் கொண்டிருக்கின்றதடா……… ஆலய எல்லைக்குள்ளேயே திருட்டுக்கள் நடக்கின்றதே……! எத்தனை ஆசாபாசங்களோடும், ஆபாச எண்ணங்களோடும் வந்து என் சந்நிதியை மிதிக்கின்றார்கள்? ஏற்கனவே மூன்று மடங்கு அழிவு பெருகும் என்று சொன்னேன். இதற்குள் நான்கு மடங்காகப் பெருகி விட்டதடா!!
மகனே! ஆன்மிகம், சமாதானம் இவைதானடா இதற்கு மாற்று வழி….. மகனே! இவைகளிலிருந்து விடுபட ஒரு வழிதானடா இருக்கின்றது. அதுதானடா தொண்டு! ஒவ்வொருவனுக்கும் தொண்டனாக மாற வேண்டும். தன்னையும் தன் குடும்பத்தையும் மட்டும் மாற்றிவிட்டால் போதாது. அவனவன் அக்கம் பக்கத்து வீட்டுக் காரனையும், அயலானையும் மாற்ற வேண்டும்.
மகனே! சித்தா்பீடத்தில் நடக்கின்ற அத்தனை வேலைகளையும் உன் சொந்ந வேலை என்று பொறுப்பேற்று நடத்து. எனக்கு இந்த வேலை மட்டும் தான் அம்மா சொல்லியது. நான் இதை மட்டும் ஒழுங்காகச் செய்தால் போதும் என்று உன் பொறுப்பைத் தட்டிக் கழிக்காதே. நான் இந்த (Group) குரூப்பில் தானே இருக்கின்றேன். எனவே இந்த வேலையைத் தான் செய்வேன். அது அந்த “குரூப்” போட வேலை. இதை அந்த “குரூப்” தான் செய்ய வேண்டும் என்று உன் எல்லையைச் சுருக்கிக் கொள்ளாதே.
“மகனே! கருவறைப்பணியும், கழிவறைப் பணியும் ஒன்றுதானடா…. ஆனால் அவற்றில் ஒரு சிறு வித்தியாசம். கருவறைப்பணி செய்யும் போது நீ என்னருகே இருக்கின்றாய். ஆனால் மகனே! நீ கழிவறைப்பணி செய்யும் போதோ நான் உன்னருகில் இருக்கின்றேனடா” என்று மொழிந்த அன்னை தனது
]]>