தூத்துக்குடி மாவட்டத்தில் அம்மாவின் தொண்டர் சக்தி. பிச்சுமணி.மந்திர தந்திரங்களில் பயிற்சிஉள்ளவர். விவரம் தெரிந்தவர். வேள்விகுழுவில் இணைந்து வேள்வித்தொண்டும் செய்து வருபவர். ஆசிரியராக பணிபுரிபவர்.
7-2-1992 அன்று அவரைச் சந்தித்துப் பேசிக் கொண்டிருந்தேன் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் அவர் பெற்ற அனுபவம் ஒன்றை என்னிடம் சொன்னார்.அது வருமாறு.
1984 ஆம் வருடம் அக்டோபர்
31ம்தேதி நாகர்கோவில் எஸ் எல் பி மேல்நிலைப்பள்ளியில் எஸ் எஸ் எல் சி ஆங்கிலம் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டிருந்தேன் .அப்போது திடீரென்று என் பேனா ஓரிடத்தில் குத்திட்டு நின்றது. அதற்குமேல் என் கை ஓடவில்லை. அப்போது அதே விடைத்தாளில் ஒரு நிழற்படம் போல் ஒரு காட்சி தெரிந்தது. தூத்துக்குடியில் உள்ள என் வீடு தெரிகிறது. என் மனைவி தெரிகிறாள். வீட்டிலிருந்து அவள் வெளியே வருகிற போது, கால் தடுக்கி திடீரென்று கீழே விழுந்து விடுகிறாள். கை கால்கள் விளங்காமல் பேச்சு மூச்சற்று அப்படியே விழுந்து கிடக்கிறாள். நாக்கு உள்ளே இழுத்துக் கொள்கிறது.
இப்படி ஒரு அவலமான காட்சி கண்டு திடுக்கிட்டேன். எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. அருகே இருந்தபடி நம் குருபிரான் தான் இப்படி ஒரு காட்சியை காட்டுகிறார்கள்.
அருகிலிருந்த ஆசிரியர்களிடம், இது பற்றிக் கூறுகிறேன். யாருமே நம்பத் தயாராக இல்லை. பின்னர் தலைமை ஆசிரியரிடம், இதைப்பற்றிக் கூறினேன். அவரும் உடன் வருகிறேன் என்றார்.
வருகிற வழியிலேயே அந்த தலைமை ஆசிரியரிடம், நமது மேல்மருவத்தூர் பற்றியும், நம் குருவருளைப் பற்றியும் ஆன்மிககுரு அருள்திருஅம்மாஅவர்கள் நடத்திய அற்புதங்களையும் சொல்லிக் கொண்டு வந்தேன்.அவரும்அதைக்கேட்டு அதிசயப்பட்டார்.
இருவரும் தூத்துக்குடியை அடைந்தோம். வீட்டிற்குச் சென்றதும், விடைத்தாளில் நான் பார்த்தது போலவே ,என் மனைவி பேச்சு மூச்சின்றி கிடந்தாள்.
இதனை உடன் இருந்து பார்த்த தலைமை ஆசிரியரும் ஆச்சரியத்தின் உச்சிக்கே போய்விட்டார்.
“சக்தி !உங்கள் அடிகளார் ஒப்பற்ற தெய்வ சக்தி படைத்தவர் தான்.பரம்பொருள் அதர்மத்திலிருந்து மக்களை மீட்க அவதாரம் செய்யும் என்று நான் படித்தது உண்மைதான். இது உலகப் பேரதிசயம் தான் “என்றார்.
நான் என்ன செய்ய முடியும். உடனே மேல்மருவத்தூர் புறப்பட்டேன். பங்காரு அம்மா அவர்களிடம் அருள்வாக்குக் கேட்டேன். அம்மா! சொன்னாள், *”மகனே தந்தேனடா ப்ரைன் ட்யூமர் இதோ! பிடித்துக்கொள்! இது தான் கொடிய வியாதி”* எனப் பெருமையாய்க் கூறினாள்.
பொதுவாக அம்மா இப்படி யாருக்கும் சொல்வதில்லை. சொல்லி நான் கேட்டதும் இல்லை.
இவன் தாங்கிக் கொள்ளும் சக்தி உள்ளவன் என்று நினைத்தாளோ என்னவோ!
இதோ பிடித்துக் கொள்! என்று சொல்லி விட்டே என் மனைவிக்குக் கொடியநோயை (மூளையில் கட்டி) கொடுத்தாள்.
இவள் பரம்பொருள் என்பது எனக்குத் தெரியும். சொல்லிவிட்டே அடிக்கிறாள். எனவே, தாயே! நோயும் நீயே! அதற்கு மருந்தும் நீயே! உன்னைப் பிறர் திட்ட வைப்பவளும் நீயே !அதை ஏற்றுக் கொள்பவளும் நீயே !உன் சட்ட திட்டம் எதுவோ அதையே நடத்து தாயே !உன் சந்தோஷமே என் சந்தோஷம் என்று அமைதியாகக் கூறிவிட்டு வெளியே வந்தேன்.
அடித்தால் அணைக்கிறேன் என்று பொருள் என்றுதானே சொன்னாள். முதலில் மனைவி மூலமாக என்னை அடித்தாள். பின்னர் அணைத்தாள். கொஞ்ச காலம் நோயை அனுபவிக்க வைத்துப் பிறகு அதிலிருந்து மீட்டாள்.
எல்லாம் அவள் செயல்!
வேறு என்ன சொல்ல !வேறு என்ன செய்ய!
சக்தி ஒளி
ஜூலை 2018.