திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் ஆன்மீக இளைஞர் அணியைச் சேர்ந்த தொண்டர் சக்தி. மாரியப்பன். வசதி குறைந்த நடுத்தரக் குடும்பம். அவருடைய தங்கை ஒரு தீப்பெட்டித் தொழிற்சாலையில் பணி புரிந்தார். அந்தத் தொழிற்சாலையோ அவர்கள் வீட்டிலிருந்து ரயில் ஏறி வேலைக்கு சென்று வரும் தூரம்.
அந்தப் பெண் விடியற்காலை நான்கு மணிக்கு ரயில் ஏறி சென்றால் தான் குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியும். அந்நேரம் தனியாக செல்ல முடியாது என்பதால், அவருடைய அண்ணனும் துணைக்குச் செல்வார்.
உயர்ந்து நின்ற ஓநாய்:
ஒரு நாள் வழக்கம் போல் இருவரும் ரயில் நிலையம் நோக்கி நடந்து கொண்டிருந்தனர். எங்கும் ஒரே கும்மிருட்டு ஒரே நிசப்தம். ரயில் நிலையம் அடைய இன்னும் கொஞ்சம் தூரம் தான் இருந்தது. அப்போதுதான் அந்த பயங்கர காட்சி தெரிந்தது. அவர்களுக்கு எதிரே பத்தடி தூரத்தில்….
ஒரு ஓநாய்! பார்க்கவே பயங்கரமான உருவம். இவர்கள் மேல் பாய்வதற்காக தயாராய் இருந்தது. அதைக் கண்டதும் இருவருக்கும் குலை நடுங்கிற்று!
என்ன செய்வது என்றே தெரியவில்லை. சுமார் 12 அடி உயரத்திற்கு ஆஜானுபாகுவாக உயர்ந்து நின்ற படி இருந்தது அந்த ஓநாய்! அது அவர்களை நோக்கி வரத் தொடங்கியது.
குருவே தெய்வம்:
சக்தி. மாரியப்பனுக்கும் அவருடைய தங்கைக்கும் இப்போது சர்வ நாடியும் ஒடுங்கி விட்டது. அந்த நேரத்தில்தான் மாரியப்பனுக்கு பளிச்சென்று குருபகவான் பங்காரு தெய்வத்தின் நினைவு வருகிறது.அவர் ” ஓம் சக்தியே !ஓம் பங்காரு அடிகளே போற்றி ஓம் !ஓம் சக்தியே !பங்காரு அடிகள் திருவடிகளே சரணம்! என்று நம் குருநாதரை எண்ணி மானசீகமாக வேண்டினார்.
அந்த நேரத்தில் ஆன்மிககுருவின் நினைப்பே அவருக்கு முதலில் வந்தது.இப்போது அந்த ஓநாய் அவர்களுக்கு மிக அருகில் வந்துவிட்டது.அப்போது தான் ஒரு அற்புதத்தை பரம்பொருளான பங்காரு அம்மா அவர்கள் நடத்திக் காட்டினாள். சக்தி மாரியப்பனுக்கு பின்புறமிருந்து கற்பூரத் தட்டுடன் பரம்பொருள்பங்காரு அம்மா அவர்கள் அங்கே வந்து நின்றார்கள்.
சக்தி. மாரியப்பனையும்அவர் தங்கையையும் நிமிர்ந்து பார்த்தார்கள். கற்பூரத் தட்டை ஒருமுறை சுற்றினார்கள். அப்படியே திரும்பி அருகில் வந்துவிட்ட ஓநாயை ஒரு பார்வை பார்த்தார்கள். என்ன ஆச்சர்யம்! பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பார்வையின் உக்கிரம் தாங்க முடியாமல் அந்த ஓநாய் படக்கென்று தாவி சாலையின் ஓரத்தில் தண்ணீர் ஓடும் வாய்க்காலில் போய் விழுந்தது. விழுந்த உடனேயே அந்த ஓநாயின் உருவம் மறைந்து இப்போது கருப்பு பூனையாக மாறி தரையில் புரண்டது.
கால்களை இழுத்துக்கொண்டு ஓடி இருளில் மறைந்தது. நொடிப்பொழுதில் நடந்த இந்த சம்பவத்தைப் பார்த்த இருவரும் கைதொழுது குருபகவான் பக்கம் திரும்பினார்கள். இப்போது பரம்பொருள் பங்காரு அம்மா அம்மா அவர்கள்,சக்தி. மாரியப்பனின் வலது புறமாக சென்று இருளில் மறைந்து விட்டார்கள்.
ஒரு பேயின் கையால் அடிபட்டு சாக இருந்த அந்தப் பிள்ளைகளை பரம்பொருள் பங்காரு அம்மா காப்பாற்றினார்கள். சக்தி மாரியப்பனின் குருபக்தியால் உணர்ந்து கொண்டார் அன்னை ஆதிபராசக்தியே குருவாகவே வந்து அவர்களைக் காப்பாற்றினாள்.
குருபக்தி இன்றி முக்தி இல்லை:
ஒருவன் நான்கு வேதங்களைக் கற்று இருக்கலாம். ஆறு சாஸ்திரங்களை படித்திருக்கலாம். உடம்பெல்லாம் திருநீறு பூசி நாள் முழுவதும் ஜெபம் செய்யலாம். புண்ணிய தீர்த்தம் ஆடியிருக்கலாம். விரதம் இருக்கலாம். நீண்ட சடை முடி வளர்த்து இருக்கலாம். ஆனாலும் எவனுக்கு குருபக்தி இல்லையோ அவன் முக்தி பெற முடியாது!
புரந்தரதாசர்.
சக்தி ஒளி
ஜனவரி 97.