அம்மா நீ எங்கோ மருவத்தூரில் இருக்கிறாய்: நான் இந்த ஊரில் கவலையில் வாடுகிறேன். எங்கள் குடும்பமோ, கோர்ட், வழக்கு, பில்லி, சூன்யம் இவற்றில் மாட்டிக் கொண்டு அல்லல் படுகிறது.

அப்பாவும், அண்ணனும் குடிகாரர்கள்: தம்பியோ உடல்நிலை பாதிக்கப்பட்டவன் ! நானோ ஒருவரை நேசித்து அவரையே திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன்.

இவ்வளவு பிரச்சனைகளையும் தாங்க முடியாமல் தவிக்கிறேன்.

எனக்கு நல்ல வழி சொல் ! என்று நினைத்துக் கொண்டிருக்கும்போதே என் உச்சந்தலையில் கிரீச் ! கிரீச் ! என்று பல்லி குரல் எழுப்பியது.

உச்சந்தலையில் பல்லி சகுனம் அடித்தால் அச்சமில்லை ! என்பார்கள்.

நீ அச்சம் இல்லாமல் இரு ! என்று அம்மா சொல்வதாக எடுத்துக் கொண்டு ஆறுதல் அடைந்தேன்.

நிம்மதியாக உறங்க வழி சொல்லு !

அம்மா ! இந்த வீட்டில் சற்றும் உறக்கம் வரவில்லை. நிம்மதியாகத் தூங்க ஒரு வழி சொல்லு ! என்று மூல மந்திரம் சொல்லிவிட்டு உறங்க ஆரம்பித்தேன்.

அன்று பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் கனவில் தோன்றிக் கையில் கலசச் சொம்பு எடுத்துக் கொண்டு, வேப்பிலையில் மஞ்சள் நீர் தெளித்துக் கொண்டு, முன் வாசலிலிருந்து பின் வாசல் வரை வருகிறார்கள். இப்படிச் செய்தால் நீங்கள் அனைவரும் நிம்மதியாக உறங்கலாம் என்று அம்மா சொல்கிறாள் போலும் என்று நினைத்துக் கொண்டேன்.

குடும்பத்திற்கு வருமானம் கிடைக்க வழி பண்ணு!

ஒரு நாள் அம்மாவை நினைத்து, என் குடும்பத்திற்கு ஒரு வருமானத்தைத் தந்து என் குடும்பத்தைக் காப்பாற்றும்மா ! என நினைத்து வேண்டிக் கொண்டேன்.

அன்று இரவே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் என்
கனவில் தோன்றி, “ மகளே ! உன் குடும்பத்தாரையெல்லாம் என்னிடம் அழைத்துக் கொண்டு வா ! “ என்று சொல்லி மறைந்துவிட்டாள்.

அவ்வாறே குடும்பத்துடன் மேல்மருவத்தூர் சென்று பாத பூஜை செய்துவிட்டுத் திரும்பினோம்.

ஒரு வாரத்திற்குள் எங்கள் வீடு தேடி இருவர் வந்தனர். உங்கள் நிலத்தில் ஏர்டெல் டவர் ( Airtel Tower ) அமைக்க, கம்பம் நிறுவ வந்துள்ளோம். நீங்கள் அனுமதித்தால் மாத வாடகையாக ரூ.2500/- தருகிறோம் என்றார்கள்.

பரம்பொருள் பங்காரு அம்மாவே அவர்களே இவர்களை அனுப்பி வைத்ததாகக் கருதி ஒப்புக் கொண்டோம். எங்கள் சாப்பாட்டிற்கு வழி வகுத்துக்கொடுத்தாள்.

நன்றி

சக்தி. ராஜலட்சுமி பிரம்ம தேசம், பெரம்பலூர் மாவட்டம்.

பக்கம் -33 .
சக்தி ஒளி அக்டோபர் 2009.