02.11.1987 அன்று எனக்கு அதிர்ச்சியைத் தரும் அந்த தந்தி வந்தது.எனது மாமனாருக்குத் திடீரெனப் பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தது. உடனே அவசர அவசரமாக உடுமலைப் பேட்டையிலிருந்து பொள்ளாச்சிக்குப் பறந்தோம்.
எனது மனைவியும் நானும் கலங்கினோம். என் மாமனார் பெயர் வீரராகவன். வயது 78, ஏற்கனவே இரத்தக் கொதிப்பு. இப்போது பக்கவாதம் வேறு கூடவே வந்து விட்டது. வாயுட்பட உடம்பின் இடது பக்கம் முழுவதும் பாதிக்கப்பட்டுப் படுக்கையில் கிடந்தார்.
உடுமலைப்பேட்டையிலிருந்து புறப்படும்போது என் நண்பர் திரு.ஜோதிநாதன் அவர்கள் இல்லத்தில் நடைபெற்ற குடும்பநல வேள்வியின் போது பூசை செய்த கலசதீர்த்தத்தை வாங்கி வந்திருந்தேன். அதில் கொஞ்சம்படுத்தபடிக் கிடந்த என் மாமனாருக்குப் புகட்டினேன்.கடந்த 3 நாட்களாகவே அவர்
எமனோடு எதிர்த்து போராடியபடிக் கிடந்திருக்கிறார். கலச தீர்த்தம் அருந்திய பிறகு கொஞ்சம் சமாளிக்கிற நிலை பெற்றார்.வியாழக்கிழமையன்று அவரை வந்து கவனிக்க வேண்டிய ஒரு டாக்டர் பெண்மணி வந்து சேரவில்லை. மறுநாள் வெள்ளிக்கிழமை.
ஒவ்வொரு வாரமும் எங்கள் உடுமலைப்பேட்டை மன்றத்து வழிபாட்டுக்கு செல்லும் வழக்கமுள்ள நான், இப்போது எப்படி, எங்கே எந்த வழிபாட்டுக்குச் செல்வதென ஜோசித்தேன்.
சரி! இங்கே பொள்ளாச்சி மன்றம் எதிலாவது கலந்து வழிபாடு செய்யலாம் என எண்ணியிருந்தேன்.
வெள்ளிக்கிழமை இரவு மணி 8.00 சரி! மாமனாரைப் பார்த்துவிட்டு மன்றத்திற்கு போகலாம் என்றெண்ணியபடி அவர் படுத்திருந்த அறைக் கதவைத் திறந்தேன். அந்த அறைக்கதவை திறக்கவும், கோவையிலிருந்து அந்த டாக்டர் பெண்மணி எதிரே வந்து நிற்கவும் சரியாக இருந்தது.
டாக்டரே வந்து விட்டார். இனி மன்றத்துக்கு போக முடியாது. எல்லாம் அவள் செயல். அவள் விட்டபடி நடக்கட்டும் என்றெண்ணியபடி டாக்டரம்மாவைப் பின் தொடர்ந்து அறைக்குள் சென்றேன்.
அந்த டாக்டரம்மாவோ என்னையும், என் மனைவியையும் மட்டும் உள்ளே இருக்கலாம் என்று அனுமதித்து விட்டு மற்றவர்களை வெளியில் செல்லுமாறு கட்டளையிட்டார். மற்ற உறவினர்கள் வெளியில் வந்து நின்று கொண்டார்கள்.
என் மாமனார் படுக்கையருகே வந்து நின்ற டாக்டரம்மா, படுக்கையில் கிடந்த என் மாமனாரை ஒரு முறை உற்றுப்பார்த்து, “உங்கள் பெயர் என்ன ? ‘என்றொரு கேள்வியை கேட்டு விட்டு, அவர் தலை முதல் கால் வரை கைகளால் நீவி விட்டார். அவர் சட்டைப்பையில்
மேல் கைகளை வைத்து, ‘பாக்கெட்டில் இருக்கும் போட்டோ என்ன? அம்மாவா? ராகவேந்திரரா? என்று கேட்டார். அந்த கேள்வியைப் பலமுறை கேட்டார்.
என் மாமனார் சுவாமி ராகவேந்திரரின் பக்தர். பங்காரு அம்மா அவர்கள் மீதும் பக்தியுள்ளவர். உடனே அவர் இது ஓம்சக்தி!” என்று பதிலளித்து விட்டு, ‘உங்கள் பெயர் என்னம்மா ‘ என்று விநயமாகக் கேட்டார்.
அது கேட்ட அந்த டாக்டரம்மா சற்று முறைத்தபடி… என் பெயரா? எனக்கு ஆயிரம் பெயர் உண்டு! அதில் ஒரு பெயரை நீயே வைத்துக்கொள்! என்று கூறினார்.
உடனே நானும் என் மனைவியும் இந்த பதில் கேட்டு அப்படியே திகைத்துப் போனோம். எந்த கேள்வியும் கேட்க வாய்வரவில்லை! ஒன்றுமே தோன்றவில்லை.அடுத்த கணம், என் மாமனாரைப்
பார்த்து, உனக்கு எல்லாம் சரியாகிவிடும். கவலைப்படாதே!” என்று சொல்லி விட்டு, அருகில் நின்றிருந்த என்னைப் பார்த்து, மனத்தால நினைத்து உள்ளம் உருகினாலே போதும், வந்து
விடுவேன் என்று சொல்லி விட்டு எந்த வேகத்தில் வந்தார்களோ அதே வேகத்தில் சென்று விட்டார்கள் அந்த டாக்டரம்மா!
அந்தப்பேச்சு! அந்த தோரணை! அந்தப்பார்வை! நிச்சயம் அது கோவை டாக்டரம்மா அல்ல! எல்லாம் வல்ல அன்னை ஆதிபராசக்தியே வந்து ஒருசில நிமிடங்களில் இந்த நாடகத்தை நடத்திவிட்டு மறைந்து விட்டாள் என்பதைத் தாமதமாகவே உணர முடிந்தது. அம்மா! எங்களுக்கும் இப்படி ஒரு கருணையா?
இது நடந்த ஒரு சில மாதங்களில் என் மாமனார் உயிர் பிழைத்து எழுந்தார். தற்போது கை கால்களில் அசைவு ஏற்பட்டு நடக்கத் தொடங்கியுள்ளார். நன்றாகப் பேச முடிகிறது.
உடுமலைப்பேட்டை வார வழிபாட்டு மன்ற செயலாளர், என் மாமனார் நலம்பெற வேண்டி வாரந்தோறும் அன்னை ஆதிபராசக்திக்கு அர்ச்சனை செய்து வருகிறார். “என்றைக்கு அவராகவே வந்து தம்கையால் கற்பூரத் தட்டையேந்தி அன்னை ஆதிபராசக்திக்கு அர்ச்சனை செய்யும் அளவுக்கு குணம் அடைகிறாரோ அது வரையில் நானும் அன்னை ஆதிபராசக்திக்கு அர்ச்சனை செய்வதை நிறுத்தப் போவதில்லை என்று அர்ச்சனை புரிகிறார். இப்படிப்பட்ட அன்பு உள்ளங்களிலும் நான் அன்னை ஆதிபராசக்தியை பார்க்கிறேன்.
அவளின் எல்லையில்லாத கருணையை எண்ணியெண்ணி உள்ளம் நெகிழ்ந்து போகிறேன். எங்களின் நன்றிக் கண்ணீரைத்தவிர வேறு எதனைக் காணிக்கையாக தரமுடியும்?
ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா என்றுதான் எங்கள் வாயும் மனமும் முணுமுணுக்கின்றன.
எல்லாம் அவள் செயல்.