அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?

0
511

உடுமலைப் பேட்டைக்கு அருகேயுள்ள ஊர் குமரலிங்கம். அங்கே ஜவுளி வியாபாரம் செய்து வந்தவர் திரு. செல்வராஜ். எம்.ஏ.பட்டதாரி, 12 வயது முதலே வள்ளலாரிடம் ஈடுபாடு கொண்டவர். அவர் நெறியில் தியானம் பழகி வந்தவர்.
ஆதிபராசக்தி மன்றம் அவ்வூரில்
அமைக்கப்பட்டு, நம் தொண்டர்கள் சிறப்புடன் பணியாற்றி வந்தனர். வள்ளலார் கொள்கைகளுக்கும், ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் கொள்கைகளுக்கும் பலவகையில் ஒற்றுமை இருந்ததால், அன்னை ஆதிபராசக்தியிடம் ஈடுபாடு கொண்டு ஆன்மிகப் பணியோடு ஜவுளி வியாபாரத்தையும் மேற்கொண்டு வந்தார் அவர். ஆதிபராசக்தி வாரவழிபாட்டு மன்றத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுத் தொண்டு செய்தபடி இருந்தார்.
வியாபாரம் முடங்கிவிட்டது
இந்நிலையில் எதிர்பாராத விதமாக அவருடைய தொழில் மூன்று மாதங்களாக முடங்கிவிட்டது. தைப் பொங்கலுக்காக அவா் லட்சக்கணக்கில் கொள்முதல் செய்த சரக்கெல்லாம் விற்பனையாகாமல் தேங்கிவிட்டன. பொங்கல் விழா நெருங்க நெருங்க வியாபாரம் படுமேசமாக ஆகிவிட்டது. மற்ற கடைகளில் ஆகிற வியாபாரம் அவர் கடையில் ஆகவில்லை.
நாளாக, நாளாக அவர் தூக்கம் போயிற்று; நிம்மதி போயிற்று; ஒழுங்காகச் சாப்பிட முடியாதபடி
கவலை வாட்டியது. எல்லாக் கஷ்டங்களும் ஒருசேர வந்து
அழுத்தின.
அன்னை ஆதிபராசக்தியின் தொண்டர்கள் ஆறுதல்
அவரது பரிதாபமான நிலையைப் பார்த்து அன்னையின் தொண்டா்கள் ”எப்படியாவது உங்களுக்கு நல்ல வியாபாரத்தையும், நிம்மதியையும் அம்மா தருவாள். மனம் தளரவேண்டாம்” என்று ஆறுதல் கூறினர்.
பொங்கல் விழாவிற்கு இன்னும் 13 நாட்களே உள்ளன. அவர் கடைக்குச் சரக்குக் கொடுத்தவர்கள் கடன் வசூலிக்க வருவார்கள். அவர்களுக்குப் பணம் கொடுத்து அனுப்பியாக வேண்டும். வியாபாரமோ படுத்துவிட்டது. மற்ற கடைகளில் எல்லாம் ஆகா ஓகோவென்று வியாபாரம் நடக்கிறது. அவர் கடையில் மட்டும் வியாபாரம் நடக்கவில்லை. விழா நெருக்கத்தில் வியாபாரம் இல்லையென்றால் கடன் கொடுத்தவா்கள் நம்பமாட்டார்கள். நம் நிலைமை இப்படியாகிவிட்டதே என்று மனம் குலைந்து போனார் செல்வராஜ். ஒரு ஐந்து நிமிடம் கூடச் சோ்ந்தாற்போல் கடையில் உட்காரப் பிடிக்கவில்லை. இருப்புக் கொள்ளவில்லை.
மேல்மருவத்தூர் சென்று வாருங்கள்
சில தொண்டர்கள் “நீங்கள் ஒருமுறை மேல்மருவத்தூர் சென்று அன்னை
ஆதிபராசக்தியைத் தரிசனம் செய்துவிட்டு வேண்டிக்கொண்டு வாருங்கள். எல்லாம் சரியாகிவிடும்” என்றார்கள்.
“தெய்வத்தை நம்பி இருப்பவனுக்கு நல்லதுதான் நடக்க வேண்டும். அதுதான் விதி. அப்படியும் துன்பம் வருகிறதென்றால் அதைவிடப் பெரிதான துன்பம் ஏதோ ஒன்று வரவேண்டும். அதைக் கழிக்கச் சின்னச் சின்னத் துன்பங்கள் வந்து வாட்டலாம். நீங்கள் எதற்கும் அன்னை ஆதிபராசக்தியின் சந்நிதிக்குச் சென்று வாருங்கள்” என்று கூறினார்.
அருள்வாக்கு கேட்டார்.
அன்று வியாழக்கிழமை. காலை மேல்மருவத்தூர் புறப்பட்டு இரவு வந்து சேர்த்தார். மறுநாள் வெள்ளிக்கிழமை, காலை அங்கவலம் வந்தார். அன்னை ஆதிபராசக்தியைத் தரிசித்தார். ஆயினும் மனம் நிம்மதி அடையவில்லை.
அருள்வாக்கு கேட்கச் சென்றார். “ஓம்சக்தி அம்மாவே சரணம் அம்மா!” என்று சொல்லியபடிக் கண்ணீர் விட்டுக்கொண்டே வந்து அமர்ந்தார். “மகனே! எதற்காக அழுகிறாய்? நான் உன் கூடவே இருக்கிறேனே…! உனக்கு எந்தக் குறையும் வைக்கலையேடா மகனே” என்றாள் அன்னை.
“அம்மா! எனக்கு எந்தக் குறையும் இல்லையா? நான் அழுவது உனக்கே நல்லா இருக்குதா? என்று கேட்டார்.
பொருள் வேண்டுமா? அருள் வேண்டுமா?
“மகனே எனக்குப் புரியுதடா மகனே! உனக்கு அருள் வேண்டுமா? பொருள் வேண்டுமா?” என்று கேட்டாள்.
”அம்மா! எனக்கு உன் அருள் இருக்குது. உன் அருளில்லாமல் இந்த மண்ணுக்கு வந்து உன் எதிரிலும் வந்திருக்க
முடியுமா? இப்பொழுது எனக்குப் பொருள்தாம்மா வேணும்” என்று முறையிட்டார்.
அதுகேட்ட அன்னை ஆதிபராசக்தி “மகனே உன்னிடம் பொருள் இருந்தால் உன்னுடைய சொந்தக்காரங்க எல்லாம் உன்னைப் பைத்தியக்காரனாக ஆக்கிடுவாங்கடா மகனே! என் அருள் இருந்தால் உன் கூடவே பத்துப் பேர் சுற்றிக்கிட்டே இருப்பாங்க….. இப்போ சொல்லடா… உனக்குப் பொருள் வேணுமா? அருள் வேணுமான்னு சொல்லு….” என்றாள்.
“இன்னும் பொருள்தான் வேணும்னு நீ சொன்னால் நீ இங்கிருந்து வீட்டிற்குப் போவதற்கள் நிறையப் பொருளைக் கொடுத்துவிடுகிறேன். பிறகு எனக்கு அப்படியாச்சு, இப்படியாச்சு என்று நீ சொன்னால் நான் பொறுப்பல்லடா மகனே” என்று அன்னை சொல்லியது அவர் மனத்தை நெகிழ வைத்துவிட்டது.
வீட்டிற்கு வந்து ஒரு மாற்றத்தைச் செய்கிறேன்
“அம்மா! இன்னும் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் உன் அருள் ஒன்றே போதும் அம்மா!” என்று சொல்லிக் கொண்டு “அம்மா! இன்று என் கண்களைத் திறந்தாய். இனி எல்லாம் எனக்கு நீயே!” என்று கூறி வணங்கிவிட்டு வெளியே வந்தார் செல்வராஜ்.
“மகனே! விரைவிலேயே உன்னுடைய இல்லத்திற்கு வந்து பெரிய மாற்றத்தைச் செய்கிறேன். ஊருக்குப் புறப்பட்டுச் செல்” என்று வாழ்த்தியனுப்பினாள் அன்னை.
ஆனந்தக் கண்ணீரோடு இதமான சுகத்தோடு ஊர் திரும்பினார்.
மீண்டும் பெரிய சிக்கல்கள் உருவாயின
ஊர் வந்து சேர்ந்ததும் 3,4 நாட்கள் சந்தோஷமாக இருந்தது. பழைய குருடி கதவைத் திறடி என்பது போல வியாபாரத்தில் மீண்டும் பெரிய சிக்கல்கள் உருவாயின.
என்ன செய்வது? ஏது செய்வது? என்ற குழப்பத்தில் நாட்கள் கடந்தன. யாரிடமும் தனது நிலைமையை எடுத்துச் சொல்ல முடியாமல் மௌனமாக மனம் சோர்ந்து
கிடந்தார் செல்வராஜ்.
ஒரு மூதாட்டி வந்தது
ஒரு செவ்வாய்க் கிழமை காலை 8.30 மணியிருக்கும். சற்று முன்னதாகவே கடையைத் திறந்து அன்னைக்குக் கற்பூர ஆராதனை காட்டி ஒரு நாற்காலியில் அமர்ந்தார். பத்து நிமிடங்களிருக்கும்.
சுமார் 65 வயதான ஒரு பாட்டி வந்து, “அப்பா! எனக்கு ஏதாவது ஒரு சேலை கொடு அப்பா!” என்று கேட்டார்.
கடைக்குப் பின்புறம் உள்ள வீட்டிற்குச் சென்று, ஒரு பழைய செவ்வாடையை எடுத்துவரப் போய்விட்டார். வீட்டிலிருந்து வெளியே வரும்போது அந்தப் பாட்டி உட்கார்ந்திருந்த நிலையில் கடையின் வாசலில் வட்டமான ஒரு அடையாளக் கோடு போட்டபடி இருந்தார்.
வாயிலுக்கு ஓடிவந்து, கோபத்துடன் “யாரம்மா நீ? என்னம்மா செய்து கொண்டிருக்கிறாய்?” என்று கேட்டார்.
இந்த இடத்தினைத் தோண்டிப் பாரப்பா!
“அப்பா! இந்த இடத்தில் தான் நமக்கு ஆகாத சில விஷயங்களைப் பதுக்கி வைத்துள்ளார்கள். இரவு வந்ததும் உன் கடையெல்லாம் அடைத்துவிட்டு ஓர் எலுமிச்சம்பழத்தை நாலு திசையிலும் திருஷ்டி கழித்துவிட்டுத் தோண்டிப்பாரப்பா! எல்லா விவரமும் புரியும்” என்று சொல்லிவிட்டு அந்தப் பாட்டி புறப்பட்டுச் சென்றுவிட்டார். அந்த நிமிடம் முதல் அந்த நாள் முழுவதும் இந்தச் சம்பவமே நினைவாக இருந்தது.
எந்திரத் தகடுகள் வெளிப்பட்டன
இரவு 11.00 மணிக்கு ஊரெல்லாம் அடங்கியபின், அந்தப் பாட்டி குறிப்பிட்டுக் காட்டிய இடத்தில் எலுமிச்சம்பழம் ஒன்றை அரிந்து நான்கு திக்கிலும் வீசித் திருஷ்டி கழித்தார்.
ஓர் ஆளைவிட்டுத் தோண்டச் சொன்னார். சுமார் ஒன்றரையடி ஆழம் தோண்டியவுடன் குப்பைகளும். செத்தைகளும் வெளிவந்தன. பின் ஒரு அங்குலஅகலமும், அரை அடி நீளமும் உள்ள செப்புத் தகடுகள் வெளிவந்துகொண்டே இருந்தன.
ஒவ்வொரு தகட்டிலும் மந்திரங்கள் சில எழுதப்பட்டுச் சில சக்கரங்கள் வரையப்பட்டு இருந்தன. இப்படி 13 தகடுகள்….! அதுமட்டுமா…? நீண்ட தலைமுடிகள், எலும்புகள், ஆணிகள் எல்லாம் வெளியே எடுக்கப்பட்டன. அவற்றையெல்லாம் பார்த்த செல்வராஜுக்கு மயக்கம் வந்தது. உடம்பெல்லாம் வியர்த்தது.
தகடுகளில் எழுதப்பட்டவை
அந்த இடத்திற்கு மீண்டும் எலுமிச்சம்பழம் திருஷ்டி கழித்து, பள்ளத்தை மூடி விட்டனர். தோண்டியெடுக்கப்பட்ட தகடுகள் 13ல் புதிய தகடு ஒன்றும் இருந்தது. அதனைச் சுத்தம் செய்து, விளக்கு வெளிச்சத்தில் பார்த்தார். அந்தத் தகட்டில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் இவை….
1. செல்வராஜ் செத்துத் தொலையவும்
2. கடை நாசமாகவும்
3. அவன் குடும்பம் குட்டிச் சுவராகவும்
இப்படி எழுதப்பட்ட சக்கரங்கள். அவற்றின் மேல் பலவர்ண மைகள் பூசப்பட்டிருந்தன.
அவற்றைப் பார்த்த செல்வராஜ், பயமும் அதிர்ச்சியும் அடைந்தார். வியாபாரம் நடக்காதது ஏனென்று புரிந்து கொண்டார். எப்படிப்பட்ட ஆபத்திலிருந்து அன்னை ஆதிபராசக்தி நம்மைப் பாதுகாத்த இருக்கிறாள்! என்று உணர்ந்து கொண்டார்.
தோண்டியெடுக்கப்பட்ட பொருள்களையெல்லாம் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொளுத்தி, அவற்றை அப்படியே வாரியெடுத்து ஆற்றில் கொண்டுபோய்ப் போட்டுவிட்டார்.
ஏவல், பில்லி, சூனியம் எல்லாம் உண்டு
ஏவல், பில்லி, சூனியம் இவற்றில் எல்லாம் நம்பிக்கையின்றி இருந்த செல்வராஜுக்கு அவையெல்லாம் உண்மை என்பதை இந்த அனுபவம் உணாத்தியது.
“உன் வீட்டிற்கு வந்து ஒரு பெரிய
மாற்றத்தைச் செய்கிறேன்” என்று சொல்லிய அன்னை ஆதிபராசக்தி, ஒரு பாட்டியாக வந்ததும், எந்திரத் தகடுகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த இடத்தை வட்டம் போட்டுக் காட்டியதும், “இங்கேதான் நமக்கு ஆகாத விஷயங்களைப் பதுக்கி வைத்திருக்கிறார்கள்” என்றதும், அன்னை ஆதிபராசக்தியே அந்தக் கடையில் பாட்டியாக வந்து திருவடி பதித்ததையும் எண்ணி அன்னை ஆதிபராசக்தியின் கருணையை நினைத்து நமக்கும் இப்படியொரு அருள்பாலிப்பா…! என்று நெகிழ்ந்தார் செல்வராஜ்.
ஓம் சக்தி!
நன்றி
பக்கம் (432-436).
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பிடம் தல வரலாறு. பாகம்- 1.