பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை

0
1223

மனித நேய வழிபாட்டியாம் நம் பரம்பொருள் பங்காரு அம்மாஅவர்களின் நின்ற கோலத்தைப் பளிங்குக் கல்லில் சிலை வடிக்க விரும்பி, சென்னை இளைஞர் அணித் தொண்டர் சக்தி. சுரேஷ் அவர்கள் பலமுறை பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்களிடம் உத்தரவு கேட்டார். பரம்பொருள் பங்காரு
அம்மா அவர்கள் உடனே உத்தரவு கொடுக்கவில்லை.
பலமுறை சக்தி. சுரேஷ் பரம்பொருள்
பங்காருஅம்மா அவர்களிடம்கெஞ்சிக் கேட்டு இறுதியில் ஒப்புதல் பெற்றார்.
திறமையும், நுணுக்கமாகவும் பளிங்குச் சிலைகளை வடிக்கின்ற ஒருவரிடம் ஜெய்ப்பூரிலே பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்களின் திருவுருவச் சிலை வடிக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருவுருவ அமைப்புக்காக அம்மாவின் பல நிழற்படங்கள் ஜெய்ப்பூர் சிற்பிக்குக் கொடுக்கப்பட்டன.
நம் சித்தர் பீடத்தைச் சேர்ந்த புகைப்பட நிபுணர் சக்தி. பக்தவச்சலம், அவரது புதல்வர் நந்தகுமார், சக்தி சுரேஷ் மூவரும் பலமுறை ஜெய்ப்பூர் சென்று சிலை வடிக்கும் பணிகளைக் கவனித்து வந்தனா்.
சிலை தயாரானதும், பரம்பொருள்
பங்காருஅம்மா அவர்களின் ஆசி பெற்று, பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் சொன்ன நாளிலே சென்னைக்கு எடுத்து வரப்பட்டது.
சென்னை தியாகராய நகரில் சக்தி. சுரேஷ் வீட்டில் பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை மரப் பலகைகளால் மூடப்பட்ட பெட்டியில் ரயிலில் வந்தபடி இறக்கி வைக்கப்பட்டிருந்தது.
அந்தப் பெட்டியைப் பிரித்தோம். அந்த அறையில் இந்தப் பணிக்காகப் பத்து பேர் மட்டும் சட்டையின்றி நுழைந்தோம்.
ஒரு பக்கம் பலகையைப் பிரித்தும் உள்ளே வைக்கோல் வைத்து மூடப்பட்டிருந்தது. அதை அப்புறப்படுத்தினோம்.
சிலை பாலிதின் கவர்களால்
சுற்றப்பட்டிருந்தது. அவற்றையும் பிரித்தோம்.
படுத்த நிலையிலிருந்த அந்தப் பெட்டியைப் பத்து பேரும் சோ்ந்து
தூக்கி நகர்த்தி நிமிர்த்தினோம்.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் பளிங்குச் சிலை அமைப்பு கண்டு பூரித்து நின்றோம்.
இடது கையில் வேப்பிலைக் கொத்து! வலக்கை தூக்கி ஆசி வழங்கும் கோலம்.
அந்தப் பெட்டியில் மற்ற மூன்று பக்கப் பலகைகளையும் ஆணிகளைத் தட்டித் தட்டி ஜாக்கிரதையாகக் கழற்ற வேண்டியிருந்தது.
அவ்வாறு ஆணிகளைக் கழற்றியபோதுதான் சிலையில் அந்த அற்புதம் நடந்தது. ஆம்!
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின்உடல் எங்கும் லேசாக வியர்த்தது.சற்று நேரத்தில் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளி நிறைந்து நின்றது. பளிங்குச் சிலைக்கும் வியர்க்கிறதே! என்று ஆச்சரியப்பட்டுப் போனோம்.
சக்தி. சுரேந்திரநாத் வியர்வையை லேசான துண்டினால் துடைத்து விட்டார். சற்று நேரத்தில் வியர்வை பெருகியது.
கருவறையிலிருந்து அருள்நிலையில் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் வெளிவரும் போது திருமேனியில் வியா்வை வருவது போல, உடலெங்கும் வியா்வை கொப்பளித்தது.
வேறெங்கும் காணாத இந்த அற்புதத்தைக் கண்டு ஆனந்தம் அடைந்தோம். அடடா….! எத்தனை முறை துடைத்தாலும் மீண்டும் மீண்டும் வியர்வை!
படிப்பறிவால் வந்த சந்தேகம்
வெளிக்காற்றில் ஈரப்பதம் இருக்கிறது. குளிர்ச்சியான பொருட்கள் மீது வெளிக்காற்று வரும்போது காற்றில் உள்ள ஈரப்பதம் (Moisture) சிறு சிறு நீர்த் திவலைகளாக மாறி அந்தப் பொருளின் மீது படியும் என்பது விஞ்ஞானம்
குளிர்ந்த நீரை ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி மேசை மீது வைத்துச் சிறிது நேரம் சென்று பார்த்தால் கண்ணாடி டம்ளரில் வெளிப்புறம்முழுவதும் நுண்ணிய சிறு சிறு நீர்த் திவலைகள் படிந்திருக்கும். டம்ளரின் வெளிப்புறத்தை விரல்களால் தடவிப் பார்த்தால் விரல் எல்லாம் தண்ணீராக – இருக்கும். கண்ணாடி டம்ளரின் உள்ளே இருக்கும் தண்ணீர் வெளியே கசிந்து வர முடியாது. அப்படி எனில், டம்ளரின் வெளிப்புறத்தில் ஒட்டிக் கொண்டிருந்த நீர்த் திவலைகள் எங்கிருந்து வந்தன?
வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதம் டம்ளரின் குளிர்ச்சியால் குளிர்ந்து அதில் உள்ள ஈரப்பதம் நீர்த் திவலைகளாகிக் கண்ணாடியின் வெளிப்புறத்தில் படிந்து விட்டது.
பளிங்குக்கல் வெளிக்காற்றை விடக் குளிர்ச்சியாக இருக்கும்போது (அப்போது இரவு 10.00 மணி) வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதம் பளிங்குச் சிலை மேற்புறத்திலே நீர்த் திவலைகளாக மாறிப் படிய வாய்ப்புண்டு.
இந்த அறிவியல் உண்மைப்படிதான், அந்தச் சிலையின் மீது படியும் வெளிக்காற்றின் ஈரப்பதத்தால் நீர்த் திவலைகளை நாம் வியர்வை என்று எண்ணிவிட்டோமோ என்ற ஒரு சந்தேகம் எனக்குள் எழுந்தது.
சோதித்துப் பார்த்தேன்
உடனே பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் சிலையில் வேட்டி கட்டியிருக்கும் பக்க வாட்டிலே விரல்களால் லேசாகத் தடவிப் பார்த்தேன். அங்கே கொஞ்சம் கூடத் தண்ணீர் தென்படவில்லை. அடுத்து கையில் வேப்பிலை வைத்திருக்கும் வேப்பிலைக் கொத்தின் மீது விரல்களால் தடவிப் பார்த்தேன். அங்கும் சிறிது கூட நீர்ப்பசை இல்லை! அதே நேரத்தில் சிலையின் நெற்றியில் முத்து முத்தாக வியர்வைத் துளிகள்! உடலெல்லாம் வியர்வை. எனது சந்தேகம் தீர்ந்தது.
வெளிக்காற்றில் உள்ள ஈரப்பதம் தான் நீர்த்தி வலைகளாகப் படிகிறது என்றால் சிலையின் முழுப் பகுதிகளிலும் அல்லவா படிந்திருக்க வேண்டும்? அப்படியில்லையே… நெற்றியிலும், உடம்பிலும்மட்டுமல்லவா வியர்வைத் துளிகள் தோன்றியிருக்கின்றன….?
அப்படியானால் இது பரம்பொருள்பங்காரு அம்மா அவர்களின் சித்தாடல்தான்……!
மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்
“பரம்பொருள் பங்காரு அம்மா! உன்னைச் சோதிக்கவில்லை. உடல் வியர்த்ததைப் பற்றிச் சக்தி ஒளியில் எழுத நேர்ந்தால் இந்த வேறுபாட்டையும் எழுதவேண்டும் என்பதற்காகத்தான் வேட்டிப் பகுதி, வேப்பிலைப் பகுதிகளில் தடவிப் பார்த்தேன் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டு, சிலையின் முகத்தைப் பயபக்தியுடன் நிமிர்ந்து பார்த்தேன். பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் என்னை நோக்கிப் புன்னகை புரிவது போல இருந்தது. இதற்கு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அங்கீகாரம் கிடைத்துவிட்டது என்று அக மகிழ்ந்தேன்.
மின் விசிறி வைத்தோம்
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் சிலைக்கு எதிரே ஒரு மின் விசிறியை வைக்கலாமே என்றார் ஒருவர். உடனே சக்தி. சுரேஷ் வீட்டிலிருந்து ஒரு மின் விசிறி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு சிலையிலிருந்து வரும் வியர்வை நின்றது. எல்லோரும் மகிழ்ச்சி அடைந்தோம்.
மேல்மருவத்தூருக்கு ஊர்வலம்
இந்தச் சிலையை மேல்மருவத்தூருக்கு ஊர் ஊர்வலமாக எடுத்துச் செல்ல வேண்டும். இதனை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. மனித நேய வழிகாட்டிப் பெருவிழா என்ற பெயரும் இடப்பட்டது.
சாலிக்கிராமத்தில் வழிபாடு
9.7.1988 அன்று பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் சிலை சாலிக்கிராமம் கொண்டு செல்லப்பட்டது. அந்த மன்றத்தில் ஒருவாரம் வழிபாடு!
அந்தச் சிலையை எடுத்துவரும் வண்டி (Van) அழகான ஒரு கோவில் மண்டபம் போல வடிவமைக்கப்பட்டிருந்தது. இது மோட்டார் வண்டி என்று யாருக்குமே தெரியாது. ஒரு கோவில் மண்டபமே தெருவில் வருவது போல் இருந்தது.
சாலிக்கிராமத்து
மன்றத்தில் அற்புதங்கள்
09.07.1998 பெளர்ணமியன்று குருவின் சிலைக்கு வழிபாடு செய்து கொண்டிருந்தனர். அப்போது அந்தச் சிலை பெருமூச்சு விட்டதையும், நெஞ்சு விம்மித் தாழ்ந்ததையும் விலாப்புறம் புடைத்து அமுங்கியதையும் வழிபாடு செய்தவா்கள் நேரில் கண்டார்கள்.
16.7.98 அன்று சாலிக்கிராம மன்றத்திலிருந்து சிலையை அலங்கார வண்டியில் ஏற்றத் தொடங்கினார்கள். அவ்வாறு ஏற்றும்போது ஒரு சிக்கல்.
சிலையின் பாதங்களின் கீழே உள்ள பகுதியை அலங்கார வண்டியில் அடிக்கப்பட்ட துளையுடன் பொருத்த வேண்டும். தொண்டர்கள் சிரமப்பட்டுப் பொருத்த முயன்றனர். ஆனாலும் முடியவில்லை. அப்போது சிலை முன்பக்கமாகச் சாய்ந்து விட்டது. சுரேந்திரநாத் சிலையைத் தன் வயிற்றில் தாங்கிக் கொண்டார்.
மீண்டும் முயன்ற போது பின்பக்கம் சாய்ந்தது. என்ன செய்வது என்று அனைவரும் குழம்பிப் போனார்கள்.
சிலையை அலாக்காகத் தூக்கி வந்து வண்டியின் மட்டத்தில் உள்ள துளையில் பொருத்த வேண்டும்.
ஆனால் அப்படித் தூக்க முடியாது. கைகள் இரண்டையும் பிடித்துக்கொண்டு தூக்கலாம் என்றால் முடியாது. கைகள் பின்னப்படலாம். உடலைத் தொட்டுத்தூக்கலாம் என்றால் அதுவோ பளிங்குச் சிலை! வழுக்கிக் கொள்ளலாம்.
என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பினார்கள் தொண்டர்கள்.
பின்னே சாய்ந்தபடி இருந்த சிலையை நிமிர்த்திய போது அந்த அற்புதம் நடந்து விட்டது.
ஆம்! ஆலயத்தில் மின்னும் புவிக்கெலாம் பாடும்போது, அருள்நிலையில் வெளிப்படும் போது பரம்பொருள் பங்காரு.அம்மா அவர்களின் குதிகால்கள் சற்று உயரும் அல்லவா…? அதைப்போல அந்தச் சிலை உயர்ந்தது, துளையுடன் சென்று கச்சிதமாகத் தானே பொருத்திக் கொண்டது!
சென்னையில் வீதி உலா
16.7.98 காலையில் சாலிக்கிராம மன்றத்திலிருந்து சிலை புறப்பட்டு வடபழனி மன்றங்கள், M.M.D.A. பகுதி மன்றங்கட்கு பவனி வந்தது. தொண்டர்களும், பக்தர்களும் பாதபூஜை செய்தனர். அபிடேகம் செய்தனர். பின்னர் பெரம்பூர் சென்றது.
17.7.98 அன்று சிலை ஊர்வலம் வேப்பேரி மன்றத்தை அடைந்தது. வேப்பேரி மன்றத்தில் அபிடேகங்களும், பாதபூஜைகளும் நடைபெற்றன.
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் சிலை வந்ததற்கு அடையாளமாக வேப்பேரி மன்றத்தில் ஓர் அற்புதம் செய்தாள் அன்னை ஆதிபராசக்தி! ஆம்! அங்கே நாகம் ஒன்று வந்து சென்றதற்கான அடையாளமும், தடயமும் மன்றத்தில் ஆழமாகப் பதிந்திருந்தன. அன்னை நாக வடிவத்தில் வந்து அங்கே விளையாடிக்கொண்டிருந்தாள்.
18.7.98 அன்று வேப்பேரியிலிருந்து புறப்பட்டுச் சென்னை கடற்கரையை அடைந்தது. மந்தவெளி மன்றத்தார், திருவான்மியூர் மன்றத்தார் மற்றும் பக்தர்கள், பொதுமக்கள் அபிடேகம் செய்தனர். பின் அடையாறில் உள்ள பங்காருஅம்மா வீட்டில் தங்கியது. பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் புதல்வர்கள் இருவரும் பாதபூஜை செய்தனர்.
அங்கிருந்து நந்தனம், தி. நகர் பனகல் பூங்கா அருகில் சென்று நின்றது.
மேடை நிகழ்ச்சி
பனகல் பூங்கா அருகே மேடை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. உயர்நீதி மன்ற நீதியரசர திரு. என். ஜெகதீசன் தலைமை வகித்தார்.
இலவச சட்ட ஆலோசனை மையம் என்ற அமைப்பு, ஒன்று ஆதிபராசக்தி அறநிலையத்தால் நிறுவப்பட்டு மக்களுக்கு அறிவிக்கப்பட்டது.
அதன்பின் தாம்பரம், கூறுவாஞ்சேரி, மறைமலை நகர், சிங்கப் பெருமாள் கோயில், செங்கற்பட்டு, மதுராந்தகம் வழியாக சிலை ஊர்வலம் சென்றது. வழி நெடுக மன்றத்தாரும், பக்த்தர்களும் அபிடேகம் செய்தனர்.
மேல்மருவத்தூர் சித்தர்பீடம் அடைந்தது.
இறுதியாக, பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் தேர் மேல்மருவத்தூர் சித்தர்பீடம் ஓம்சக்தி மேடையருகே கொண்டுவந்து நிறுத்தப்பட்டது.
மத்திய வேள்விக்குழு உறுப்பினர் சக்தி. தியாகராசன் என்னைப் பார்த்து, அண்ணே! நான்கு நாட்களாகச் சிலையுடன் வருகிறீர்கள். என்னென்ன அற்புதங்கள் கண்டிர்கள்? என்று கேட்டார்.
“இந்த நான்கு நாட்களும் நீங்கள்தானே சிலைக்குப் பாதபூஜை, அபிடேகம் எல்லாம் செய்தபடி வந்தீர்கள்? நீங்கள்தான் சொல்ல வேண்டும்” என்றேன்.
தியாகராசன் சொன்னார். “சிலையின் மார்பில் ஏதோ இருக்கிறதே என்று துடைக்க முயன்றேன். என் உள்ளங்கையை மார்பு மீது வைத்தேன். அப்போது மனித உடம்பின் மார்பில் கை வைப்பதாகவே உணர்ந்தேன். உடனே வெடுக்கென்று கையை எடுத்து விட்டேன்.
பாதபூஜை செய்து வைக்கும் போது சில சமயம் என விரல்கள் சிலையின் பாதத்தில் பட்டுவிடும். கால் நகத்தில் பட்டுவிடும். அப்போதெல்லாம் பங்காருஅம்மா அவர்களின் பாதங்களில் கைபட்ட உணர்ச்சியை அடைந்தேன். பாதங்களைத் தொடும்போது மெத்தென்று மெதுவாக இருந்தன.” எனச் சொல்லி வியந்தார்.
பங்காருஅம்மா…..! உன் அற்புதங்கள்!
பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் திருஉருவ சிலை துடைக்கத் துடைக்க வியர்வை வந்ததும், சாலிக்கிராம மன்றத்தில் சிலை மூச்சு விட்டதும், வண்டியில் ஏற்றும்போது பக்தர்கள் தூக்கி நிறுத்த முடியாமல் தவித்தபோது சிலை தானே எம்பிக் குதித்துப் பொருத்தமான நிலையில் நின்றதும், பாதபூஜை செய்யும் போது சக்தி. தியாகராசன் விரல்கள், அம்மாவின் பாதங்களில் விரல் பட்டபோது எப்படி மெத்தென்று இருந்ததோ அப்படிப்பட்ட உணர்வை அடைந்ததும் எண்ணிப் பார்த்தேன்.
பரம்பொருள் பங்காருஅம்மா! நீ வேறு! அந்தச் சிலை வேறு அல்ல! சூக்குமமாய், ஸ்தூலமாய் சிலை உருவாய் வந்த தெய்வமே! உன் அற்புதங்கள் ஒன்றா……. இரண்டா…… ஆயிரங்கள்! என என் மனம் அசை போட்டது.
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. C.A. முத்துகிருஷ்ணன் M.A.B.O.L., Ph.D., கோவை
பக்கம்: (16 – 22).
அவதார புருஷர் அடிகளார், பாகம் 13.