இருபத்தைந்து அடி உயரத்திலிருந்து கீழே விழுந்தவர்.

0
1147

எங்கள் விருகம்பாக்கம் மன்றத்தில் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு தொண்டாற்றும் அன்பர் வடிவேலு. அவர் வேலை செய்து வந்த தொழிற்சாலை மூடப்பட்டதால் வேலை கிடைக்காமல் அவதிப்பட்டு கொண்டு அவரும் அவர் மனைவியும் ஒரு வாரவழிபாட்டு மன்றத்தில் கலந்து கொண்டு அன்னை ஆதிபராசக்தியிடம் வேண்டினர்.
“ஓம் அழுவார் கண்ணீர் துடைப்பாய் போற்றி ஓம்!” என்ற மந்திரம் ஒன்று 1008 போற்றி மலரில் உண்டல்லவா…? அந்த மந்திரத்தை அடியேன் அந்த அன்பருக்கு நினைவூட்டி, “முற்றும் உணர்ந்த முதல்வியான நம் அன்னை ஆதிபராசக்தியை வேண்டுங்கள்.
உங்கள் குறை தீர்ப்பாள். அடுத்தவாரம் நல்ல செய்தியுடன் வருவீர்கள்” என வாழ்த்தி அனுப்பினேன்.
அதற்கு ஏற்றவாறு அடுத்தவாரம் எதிர்பாராத வண்ணம் காவல் துறையில் காவல்காரராகப் பணியாற்ற நேர்முகப் போட்டிக்கும், உடற்பயிற்சி போட்டிகட்கும் உத்தரவு வந்திருப்பதாக கூறி வியந்தார்.
வேலைக்கான உத்தரவு வரும் வரும் என்று எதிர்பார்த்தபடி இருந்தார். இதற்கிடையில் குடும்பத்தை நடத்த வேண்டி இருந்தமையால், கிடைத்த வேலையை ஏற்றுக் கொண்டு பணி செய்து வந்தார்.
ஒரு முறை 25 அடி உயரத்தில் ஏணியில் நின்று கொண்டு வெள்ளையடித்துக் கொண்டிருந்த போது, கீழே ஏணி நொடிந்ததால் கீழே விழுந்து விட்டார். அவ்வாறு அவர் கீழே விழும்போது “ஓம்சக்தி!” என்று அலறி கொண்டே விழுந்திருக்கிறார். அந்த நேரத்தில் ஏதோ வானவெளியில் பறப்பது போன்றும்,
புல் தரையில் விழுவது போன்றும் தோன்றியதாம். பிற்பாடு நடந்தவற்றைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்றார்.
அருகில் இருந்தவர்கள், அவரை மருத்துவமனையில் சேர்ப்பதற்காக முடிவு செய்து சைக்கிள் ரிக்ஷா எல்லாம் தயார் செய்து ஆளைத் தூக்கி சென்ற போது இவர் தூங்கி எழுந்திருப்பவரைப் போன்று எழுந்து ” என்ன நடந்தது? ஏன் இந்தக் கும்பல்?” என்று வினவியிருக்கிறார்.
பிறகு நடந்தவற்றை ஒருவாறு ஊகித்துக் கொண்டு, “ஓம்சக்தி!” என்று தனது கழுத்திலிருந்த அம்மா டாலரை எடுத்து முத்தம் கொடுத்து விட்டு கண்ணீர் மல்க, மீண்டும் விட்ட பணியைத் தொடர்ந்தார். அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்தில் வாய் பிளந்து நின்றனர்!
சக்தி டாக்டர். கோபாலகிருஷ்ணன்
விருகம்பாக்கம்.
(பக்கம் 85-87).
அன்னை எழுதிய பாடல் என்ற நூலிலிருந்து….