1008 மந்திரங்களுக்கு உருவேற்றிக் கொடுத்து, அவற்றுக்குச் சக்தியையும் கொடுத்த அன்னைஆதிபராசக்தி,
அம்மந்திரங்களின் அருமையைத் தொண்டர்களுக்கு விளக்கினாள்.
“எவன் ஒருவன் விடியற் காலையில் எழுந்து இம்மந்திங்களை மனஒருமையோடு 1008 நாட்கள் தொடர்ந்து படித்து வழிபாடு செய்கிறானோஅவனுடைய சந்ததிகளையும் காப்பாற்றுவேன்” என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
“இம்மந்திரங்களை எந்தக் கோயிலில் படித்து வழிப்பட்டாலும் அந்தக் கோயிலின் மூர்த்திகரம் விளங்கும். அக்கோயில் தெய்வங்களுக்கும் சக்தியளிப்பேன்” என்றெல்லாம் அருளியிருந்தாள் அன்னை ஆதிபராசக்தி.
அதுகேட்டது முதல் தொண்டர்கள் பலர், நாள்தோறும் விடியற்காலை மூன்று மணிக்கு எழுந்து 1008 மந்திரம் படிப்பதை அன்றாடக் கடமையாக மேற்கொண்டனர். சிலர் அம்முயற்சியில் வெற்றிபெற முடியாமல் சோர்ந்து போயினர்.
அன்னை ஆதிபராசக்தியின் ஆலயத்தில் தொண்டர் ஒருவர், தினந்தோறும் தவறாமல் கருவறைக்குப் பின்புறம் அமர்ந்து கொண்டு1008 மந்திரங்களைச் சிரத்தையுடன் படித்து வந்தார்.
” ஆகா ! இவர்தான் அம்மாவுக்கு
நல்ல பிள்ளை ! விடாமல் மந்திரம் படிக்கிறார். நம்மால் தொடர்ந்து படிக்க முடியவில்லையே… இவரைப் பாருங்கள். எவ்வளவு பக்தி சிரத்தையோடு தவறாமல் மந்திரம் படிக்கிறார் ?”
என்று தொண்டர்களே
அவரைப் பாரட்டிப் புகழ்ந்தார்கள்.
ஒருநாள் தொண்டர்களுக்கு பொது அருள்வாக்குச் சொல்லும் போது
அந்த அன்பரும் உடனிருந்தார்.
அவரை நோக்கி ” மகனே உலகமெல்லாம் நன்மையடைவதற்காகவே இந்த மந்திரங்களை உங்களுக்கு அருளியிருக்கிறேன். நீயோ உன் விரோதி அழிய வேண்டும் என்றே
இந்த மந்திரம் படிக்கிறாய். அந்த எண்ணத்தை விட்டுவிட்டு மந்திரம் படி !”என்றாள் அன்னை ஆதிபராசக்தி.
அதன்பிறகு தான் அந்த அன்பர் எந்த நோக்கத்திற்காக இவ்வளவு பக்தி சிரத்தையோடு மந்திரம் படிக்கிறார். என்று மற்ற தொண்டர்களுக்குப் புரிந்தது.
” உள்ளுவார் உள்கிற்றெல்லாம்
உடனிருந்து அறிவான்” என்று
தேவாரம் இறைவனைபுகழ்கிறது. அவரவர் உள்ளத்தில் உள்ள எண்ணங்களை அன்னை
ஆதிபராசக்தி அறிவாள்.
அவற்றுள் இந்தச் சம்பவம் ஒன்று.
பக்கம்: 229 -230.
மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி
சித்தர் பீடம் தலவரலாறு. பாகம்-1.