என் கணவர் 2001 ஜனவரியில் இறையடி சேர்ந்தார். அவர் இங்கு எங்கள் பகுதியில் மன்றத் தலைவராக இருந்தார். அவர் மறைந்தபிறகு அடிக்கடி பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் என்னால் வர முடியாத நிலை. டிசம்பர் மாதம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தேன். பாதபூஜை செய்யும் போது மிகவும் அழுதுவிட்டேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் என்னிடம் அழவேண்டாம் என்று கூறி எனக்குத் துணையிருப்பதாக கூறினார்கள்.
என் மருமகள் கர்ப்பக் கோளாறுகளால் அவதியுறுகிறாள் என்றேன். அதற்கு பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள் “மகள் குடும்பம் மாலை போட்டு வர வேண்டும். மகனை என்னிடம் பேசச் சொல்” என்றார்கள்.,
என்னை மாலை போட்டு வரும்படி கூறவில்லை. ஒன்பது பேருக்கு மாலை போட்டு அனுப்பு என்றார்கள். நாளுக்கு நாள் மூட்டு வலியால் மிகவும் அவதியுறும் நான், எனது வலியின் காரணமாகத்தான் சும்மா என்னை வரச் சொல்லவில்லை என்று எண்ணினேன். அம்முறை மற்றவர் துணையுடன் தான் மருவத்தூர் வந்திருந்தேன். மிக மிக மெதுவாகத்தான் என்னால் நடக்க முடிந்தது.
2002 ஜனவரி 15 ஆம் தேதி வலது
காலில் மிகுந்த வலி. அன்று இரவு மருத்துவமனை சென்று 2 ஊசிகள் போட்டுக் கொண்டேன். மறுநாள் இரத்தம், சிறுநீர் பரிசோதனை செய்யும்படிக் கூறினர். 16 ஆம் தேதி பரிசோதனையில் இரத்தத்தில் மிகுந்த சர்க்கரை, சிறுநீரில் மிகுந்த உப்பு இருப்பது தெரிந்தது. எனக்கு அதற்கு முன் சர்க்கரை, உப்பு எதுவும் கிடையாது. என் வயது 69 முடியும் தருவாயில் இருந்தது.
அன்று இரவு காலை ஊன்ற முடியவில்லை. நடக்க முடியவில்லை. மிகுந்த வலி, எரிச்சல், பாதத்திலிருந்து முழங்கால் வரை மிகுந்த வீக்கம், காலில் கொப்புளங்கள், நீராக வழிகிறது. எரிச்சல், வலியின் காரணமாக மயக்க மருந்து கொடுத்து ஒரு சிறிய அறுவை சிகிச்சை, 9 நாட்கள் உள் நோயாளி, 11 நாட்கள் வெளி நோயாளியாக இருந்தேன்.
குணமடைந்து வருவது போல் தோற்ற்றமளித்த பின், வலது காலின் வலது பக்கத்தில் விரல்களிலிருந்து கணுக்கால் முடிய திசுக்கள் இறந்து, பெரிய புண்ணாக மாறிவிட்டது. காலே கருப்பாக இருந்தது. உடனடியாக சென்னை செல்லவேண்டுமென்றனர். கணுக்களில் இருந்து முழங்கால் பாதி தூரம் வரை சீழ் பிடித்திருந்தது. காலையே எடுக்க வேண்டுமோ என்ற அளவில் இருந்தது.
தெய்வச் செயலாக எனது கணவரின் கடைசி தங்கை, தந்து தமக்கை மருமகளின் வளைகாப்பிற்காக குடும்பத்துடன் சென்னையிலிருந்து வந்திருந்தார்கள். அவர்களின் 2 ஆவது மருமகள் சென்னை மருத்துவக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படிப்பவர். அவரிடம் எனது ஊர் மருத்துவமனை மருத்துவ அதிகாரி, தாமதியாமல் சென்னைக்கு என்னைக் கூட்டிச் சென்று மேற்கொண்டு சிகிச்சை மேற்கொள்ள வேண்டுமென்று கூறிவிட்டார்.
நான் இருந்த ஊரில் மேற்கொண்ட சிகிச்சைக்காக ரூ 15 ,௦௦௦/= கடன் வாங்கியிருந்தேன். அவை யாவும் செலவழிந்து விட்டது. மேற்கொண்டு சிகிச்சைக்கு என்னிடம் பணம் இல்லை. என் நாத்தனார் மற்றும் அவரது கணவர் இருவரும் எனக்கு உதவி செய்ய சம்மதித்தனர். உடனே பயணச் சீட்டு எடுத்து என்னை சென்னை அழைத்துச் சென்றனர். அங்கு அடுத்த நாளே ஒரு சர்க்கரை நோய் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற வைத்தனர். இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. எனது இடது தொடையிலிருந்து தோலையெடுத்து இரு இடங்களில் வைத்தனர்.
25 நாட்கள் தொடர்ந்து மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்றேன். எனது நண்பர் ஒருவர் தாம்பரம் சானிடோரியத்தில் உள்ளார். அவரும், எனது நாத்தனாரும் சேர்ந்து பண உதவி செய்தனர். எனது நாத்தனார், அவரது குடும்பம் உடனிருந்து இன்முகத்துடன் பணிவிடை செய்தனர். எனக்கு மகள் வயிற்றுப் பேத்தியும் அச்சமயம் அங்கிருந்ததால் அவளும் எனக்குப் பணிவிடைகள் செய்தாள்.
மார்ச் 1 ஆம் தேதி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு வீட்டில் தங்கி வெளிநோயாளியாக ஒருநாள் விட்டு ஒருநாள் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றேன். மார்ச் 15 ம் தேதி மறுபடியும் செக்கப் செய்து, மார்ச் 16 ம் தேதி ஊர் திரும்பினேன். சக்கர நாட்காலியில் நடைபயின்ற நான், திரும்பி வரும்பொழுது நடக்கும் நிலையில் இருந்தேன்.
ரூ 75000 எனக்கு மட்டும் செலவானது. நாத்தனார் குடும்பத்திற்கு மேலும் சில ஆயிரங்கள் செலவு. ஒரு மாதத்திற்கு மருந்துகளையும் வாங்கி, ரயில் பயணச் சீட்டும் எனக்கு எடுத்து என்னை என் இல்லத்தில் கொண்டு வந்து விட்டனர்.
உடலால் நான் பட்ட கஷ்டங்களுக்கு அளவே இல்லை. அம்மா கூறுவதுபோல் இப்பிறவியில் நாம் படவேண்டிய கஷ்டங்களைப் பெற்று முடித்து விடல் வேண்டும். இருப்பினும் 1 பைசா கூட நான் செலவு செய்யாமல் நன்முறையில் சிகிச்சை பெற்று திரும்பியுள்ளேன்.
சக்திகளே! இதை எல்லாம் ஏன் இவ்வளவு விரிவாக எழுதினேன் தெரியுமா….? இவையெல்லாம் எனக்கு எப்படி நடந்தன…? இத்தைகைய உதவிகளெல்லாம் எனக்கு எப்படிக் கிடைத்தன தெரியுமா….? என் உடல் நிலையோ தொண்டு செய்ய விடவில்லை. ஆனாலும் பிறர்க்கு, வசதியற்றோருக்கு என்னால் முடிந்த பண உதவிகளைச் செய்வேன். மருவத்தூருக்கும் ஆனி அமாவாசை மற்றும் இருமுடி சமயத்தில் என்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.
2000 ஜனவரி முதல், மாதம் ரூ 120 ; அதாவது மருத்துவமனைக்கு ரூ 108 ம் ரூ 12 அன்னதான உண்டியலிலும் போடும்படி அனுப்புவேன். என் கணவருக்குத் தெரியாமல் அனுப்புவேன். ஏனெனில் என் கணவர் பணக் கஷ்டத்தை மனதில் கொண்டு என்னைத் தடுத்து விட்டால் என்ன செய்வது என்றுதான். 2001 ஜனவரியில் என் கணவர் இவ்வுலகை விட்டுச் சென்றார். 2002 ஜனவரியில் கணவருக்குத் திதி. பின் எனது நோய்.
சக்திகளே! ஆதிபராசக்தி மருத்துவமனைக்குத் தவறாமல் நான் அனுப்பிய அணுவிலும் அணுவான இச்சிறு தொகை, உயிர்காத்து, எனது காலையும் எனக்குத் திரும்பத் தந்துள்ளது. எனக்கு உதவியவர்களும் மனமார உதவினர். அம்மாவின் வழி நின்று நடந்தால் நம்மை எப்போதும் அவள் கைவிடமாட்டாள் என்பது உறுதி. உடலால் அனுபவிப்பது நம் விதி. அதை நாம் அனுபவித்துத்தான் தீர்க்க வேண்டும் என்பது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருட்கூற்று. நான் பழையபடி நடந்து என் வேலைகளைச் செய்ய சில மாதங்கள் ஆகும். ஆனாலும் இன்று அம்மா தன்னம்பிக்கையுடன் வாழ வழி வகுத்துள்ளார்கள். அவர்கள் தம் திருவடி பற்றிக் கொள்வோமாக, பாரதியார் கூறுவதுபோல்,
“நிதிமிகுந்தவர் பொற்குவை தாரீர்,
நிதி குறைந்தவர் காசுகள் தாரீர்,
அதுவுமற்றவர் வாய்ச் சொல் அருள்வீர்,
ஆண்மையாளர் உழைப்பினை நல்குவீர்”
ஆகவே, பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் மருத்துவமனைக்கு நம்மால் இயன்ற உதவி செய்வோம். அது நமக்கு நாமே செய்து கொள்வதென
உணர்வோம்.
ஓம்சக்தி!
சக்தி என் சுசீலா, ஈரோடு.
பக்கம் 49 – 51.
சக்தி ஒளி- ஜனவரி 2009.