எனக்கு கடந்த இரண்டு மாதங்களாக மாதவிலக்கு ஆகவில்லை. எனக்கு இரண்டு குழந்தைகள். இரண்டு பிரசவமுமே அறுவை சிகிச்சை தான்! இரண்டாவது குழந்தை பிறந்த கையோடு குடும்பக் கட்டுப்பாடும் செய்து கொண்டேன். அதனால் நானும் சற்றுக் கவனக் குறைவாக இருந்து விட்டேன்.
இரண்டு மாதங்களாகியும் மாதவிடாய் ஆகாததால் அருகிலுள்ள டாக்டரிடம் காண்பித்தோம். இரத்த பரிசோதனை, சிறுநீர் பரிசோதனை எல்லாம் செய்து பார்த்துவிட்டு, இரத்தம் மிக குறைவாக உள்ளதால்தான் மாதவிலக்கு வரவில்லை என்று சொல்லவும் நானும் அதற்கான மருந்து மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டு இருந்து விட்டேன்.
ஆனால் என் உடம்பு நாளாக ஆக, எடை அதிகரித்தது மட்டுமில்லாமல் கை, முகம் எல்லாம் கறுப்பாக திட்டு திட்டாக ப் பரவ ஆரம்பித்து உடம்பே வீக்கமாக ஆகிவிட்டது.
என் அம்மா மேல்மருவத்தூர் பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் தீவிர பக்தை. மேல்மருவத்தூர் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் டாலர் ஒன்றை என் தாலிக் கயிற்றில் கட்டி என் உடம்பைப் பழையபடி தரச் சொல்லி வேண்டச் சொன்னார்கள். நான் அதுவரை பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களை வணங்கியதில்லை.
சரியாக ஒருவாரம் தான். எனக்கு திடீரென்று வயிற்று வலி, வாந்தி. நிற்கவும் முடியாத நிலைமையில் துவண்டு விழுந்து விட்டேன். அன்று இரவு மருத்துவமனையில் சேர்த்து, மறுநாள் காலை ஸ்கேன் செய்து பார்த்ததில் 2 மாத கரு டியூப்பிலே தரித்து வளர இடமில்லாமல் டியூப் வெடித்து, கர்ப்பப்பையைச் சுற்றி இரத்தம் உள்ளேயே கசிந்து கொண்டிருக்கிறது.
2 மணிநேரம் தான் தாங்கும். அதற்குள் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார்கள். பிறகு, மதியத்திற்குள் அறுவை சிகிச்சை நடந்தது.
10 நாள் படுக்கையிலேயே இருந்து வீட்டிற்கு வந்து கண்ணாடியில் பார்த்தால் கறுப்பு கறுப்பாகத் திட்டு திட்டாக இருந்ததெல்லாம் மறைந்து விட்டன. கையிலும் முகத்திலும் அவை இருந்ததற்கான அடையாளமே தெரியவில்லை. உடம்பும் பழையபடி எடை குறைந்து இப்போதுதான் நார்மலாக இருக்கிறேன்.
என்னால் இந்த அதிசயத்தை இன்னும் நம்ப முடியவில்லை. இப்போது பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களை மனமுருகக் கையெடுத்துக் கும்பிடுகிறேன். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்எப்போதும் எங்களுடன் இருந்து எங்கள் குடும்பத்திற்கு ஆசி வழங்க வேண்டும்.
இந்த அதிசயத்தை சக்தி ஒளிக்கு எழுதுகிறேன் என்று வேண்டிக் கொண்டேன். மனம் இப்போதுதான் அமைதியாக இருக்கிறது.
ஓம்சக்தி!
சக்தி ஜே ராஜலட்சுமி,
சேலம்.
பக்கம்: 62 – 63.
சக்தி ஒளி – பிப்ரவரி 2009.