மரணத்திலிருந்து மீட்டெடுத்த தாய்

0
1176

அன்று 27.01.2006 வெள்ளிக் கிழமை மதியம் 1.30 மணி. நான் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென்று வயிற்றுவலி ஏற்பட்டது. உடனடியாக எங்கள் மேலதிகாரியிடம்
சொல்லிவிட்டு, அருகில் இருக்கும் தனியார் கிளினிக்கில் சென்று டாக்டரிடம் என் நிலையை எடுத்துரைத்தேன்.
அவர், என்னை உடனே அருகில் இருக்கும் மருத்துவமனையில் அவசரப் பிரிவுக்குச் செல்லுமாறு சொன்னார். அவ்வாறே சென்று அங்கிருந்த டாக்டரிடம் என் உடல்நிலை பற்றி விவரித்தேன். அவா் என்னைப் பரிசோதனை செய்து குடல் திரும்பி இருப்பதாகச் சொல்லி அறுவைச் சிகிச்சை செய்தார்கள். அந்த அறுவை சிகிச்சையில் ஒரு பெரிய தவறு நடந்து விட்டது.
குடலில் இன்னொரு இடத்தில் ஓட்டை போட்டவா்கள், அதனை அடைக்க மறந்து விட்டார்கள். அறுவை சிகிச்சை முடிந்த பின்னா், என்னை ரெக்கவரி அறைக்குக் கொண்டு வந்து படுக்க வைத்துவிட்டனா்.
அவா்கள் செய்த தவறான அறுவைச் சிகிச்சையால் எப்படிப்பட்ட விபரீதம் ஏற்பட்டது தெரியுமா……? எனக்குத் தெரியாமலே மல சலம் போய்க் கொண்டிருந்தது. என் உடைகள் நனைந்தபடி இருந்தன.
எனக்கு அறுவை சிகிச்சை செய்த டாக்டா்தான் அந்த மருத்துவமனைக்கே தலைமையான டாக்டா்.
அவா் செய்த தவறான சிகிச்சையை அறிந்தும், மற்ற டாக்டா்கள் மௌனம் காத்தனா்.
அந்தத் தலைமை டாக்டரோ, எனக்கு அறுவைச் சிகிச்சை முடிந்தவுடன் இரண்டு வாரம் விடுமுறை எடுத்துக் கொண்டு போய்விட்டார்.
இந்த நிலையில் எனக்கு எப்படி சிகிச்சை செய்வது என்று மற்ற டாக்டா்கள் யோசித்துக் கொண்டிருந்தனா். எல்லாம் என் கஷ்ட காலம்.
நான் இங்கே இந்த நிலையில் கிடக்கும்போது, என் சகோதரியின் கணவா் இருமுடி செலுத்த மேல்மருவத்தூர் சென்றார். அவருக்கு என்னுடைய பரிதாப நிலை தொலைபேசி மூலம் அறிவிக்கப்பட்டது.
“நீங்கள் பயப்பட வேண்டாம். பரம்பொருள் பங்காருஅம்மா
அவர்களை வேண்டிக்கொண்டு
பிரசாதம் பெற்று வருகிறேன்.
தைரியமாக இருங்கள்” என்று
ஆறுதல் கூறினார்.
28.01.2006 அன்று என் சகோதரியின் கணவா் கருவறையில் அன்னை ஆதிபராசக்திக்கு அபிஷேகம் செய்துவிட்டு, காலை பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களுக்கு பாதபூஜை செய்தார். அப்போது, அம்மா மௌனம்.
அம்மா! அந்தப் பெண்மணி மரணப் படுக்கையில் கிடக்கிறார். மலசலம் போவது கூடத் தெரியாமல் கிடக்கிறார். தவறான அறுவை சிகிச்சை செய்து விட்டார்கள். நீதான் காப்பாற்றவேண்டும் என்று முறையிட்டார். அப்போது பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் தன் இருகரம் தூக்கி நன்றாக ஆசி வழங்கினார்களாம்.
பின்னர் மேல் மருவத்தூரிலிருந்து புறப்பட்டு வந்து சேர்ந்தார்.
எனது சகோதரியும், கணவரும் என்னைப் பார்க்க வந்தனா். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களின் பிரசாதம், கலச தீர்த்தம், அர்ச்சனை குங்குமம் விபூதி, வேப்பிலை ஆகியவற்றைக் கொடுத்து, சக்தி ஒளி புத்தகங்கள் சிலவற்றையும் கொடுத்தார். இரவு படுக்கைக்குப் போகும் முன்னா், இந்த சக்தி ஒளி பத்திரிகைகளைப் படித்துவிட்டுச் செல்லுங்கள் என்றார்கள். அவ்வாறே அவற்றைப் படித்துவிட்டுப் படுக்கச் சென்றேன்.
இரவு 2.00 மணி இருக்கலாம். அப்போது ஒரு கனவு. ஒரு சிறு பெண்பிள்ளை வந்து குடல் பகுதியில் தடவிவிட்டுச் செல்கிறாள். அத்துடன் கனவு கலைந்து விழித்துக் கொண்டேன்.
அதுவரை என்னை அறியாமல் போய்க்கொண்டிருந்த மலசலம் நின்று விட்டது. உடற்சோர்வு மனச்சோர்வு எல்லாம் நீங்கிவிட்டது. மனதில் ஒரு தெம்பு ஏற்பட்டது.
என்னைப் பரிசோதித்த டாக்டா் அன்றைய தினமே நீங்கள் வீட்டிற்குப் போகலாம் என்று கூறி அனுப்பி வைத்தார்.
எங்கே சக்தி ஒளி இருக்கிறதோ அங்கே நான் இருக்கிறேன் என்ற உண்மையையும் உணா்த்தி விட்டாள்.
என்னை மரணத்திலிருந்து மீட்ட தாய்க்கு
நன்றி செலுத்த வேண்டி 2008 ஆம் ஆண்டு இருமுடி எடுத்து வந்து செலுத்தினேன். எல்லாம் அவள் கருணை!
நன்றி!
ஓம் சக்தி!
சக்தி. திருமதி. மீனலோசனி, கனடா
மருவூர் மகானின் 68வது அவதாரத்திருநாள் மலா்.