குடும்பத்தில் அடுக்கடுக்கான பல சோதனைகள்

0
1200
என் குடும்பம் 20 வருட காலமாக ஆதிபராசக்தியை வழிபட்டு வருகிறது. எங்கள் குடும்பத்தில் அடுக்கடுக்கான இன்னல்களும், சோதனைகளும் நிறைந்திருந்தன.
என் கணவர் சில வருடங்களாக சாமியே இல்லை என்று சொல்லிக் கொண்டு சாமி மீது நம்பிக்கை இல்லாமல் இருந்து வந்தார்.
பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் மீது நம்பிக்கை வையுங்கள் என்று
கூறி வந்தேன். அவரும் பரம்பொருள்
பங்காரு அம்மா அவர்களின் அருளை
வேண்டினார்.அதன்பின் என் குடும்பத்தில் நிலவிய பல கஷ்டங்களும், மன உளைச்சல்களும் நிவர்த்தி அடைந்தன. அதன்பிறகு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் திருப்பாதங்களையே சரணடைந்து வணங்கி வருகிறோம்.
என் குடும்பத்திற்கு நல்லவற்றையே பரம்பொருள் பங்காருஅம்மா அவர்கள்கொடுத்து வருகிறார்கள்.
கடந்த 1997 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீபாவளிக்கு இரண்டு தினங்களுக்கு முன்பு எங்கள் இளைய மகள் சரண்யா கடைத்தெருவுக்குச் சென்றபோது வாயிலிருந்து இரத்தம் வருவதாகச் சொன்னாள்.
பிறகு, தண்ணீர் கொப்பளிப்பது போல இரத்தமாகக் கொப்பளித்தாள். உடனே மருத்துவரிடம் சென்று காட்டினோம். அவரோ பரிசோதனை செய்து பார்த்து விட்டு, ‘ஒன்றும் இல்லை’ என்று கூறி அனுப்பி விட்டார். மருந்து, மாத்திரைகள் எது கொடுத்தும் குணமாகவில்லை.
நானும், என் கணவரும் மீளாத்துயரம் அடைந்தோம். பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் சரண் அடைந்தோம். விடியற்காலை 1 மணியளவில், “தாயே! இனி இவள் எங்கள் குழந்தை அல்ல…. உன் குழந்தை! உனக்கே தத்து கொடுத்து விடுகிறோம்!” என்று வேண்டினோம்.
அதன் பிறகு வாயின் வழியாக இரத்தம் வருவது சிறிது சிறிதாக நின்றுவிட்டது. அதன்பிறகு நல்ல முறையில் இருந்தோம்.
மறுபடியும் 1999 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 – 11 -1999 அன்று பள்ளி சென்றுவிட்டு வந்த என் மகள் கால் வலியால் அவதிப்பட்டாள்.
நான் மஞ்சளைக் கொதிக்க வைத்துத் தடவி வந்தேன். மறுநாள் அதிகமாகக் கால் வீங்கி இருந்தது. அதிக வலியும் ஏற்பட்டது. மருத்துவரிடம் காட்டினோம்.
அவர் பரிசோதித்து விட்டு, தஞ்சை பெரிய மருத்துவமனை மருத்துவரை அணுகுங்கள் என்று கூறிவிட்டார். அவரிடமும் சென்று காட்டினோம். எக்ஸ்ரே எடுத்துப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று கூறிவிட்டார். சிகிச்சை அளித்தும் காலின் வீக்கம் குறையவே இல்லை.
விஞ்ஞான மருத்துவம் கைவிட்ட எங்களை மெய்ஞ்ஞான ஞான மருத்துவச்சியான பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் கைவிடவில்லை. அன்னை ஆதிபராசக்தியிடம் தஞ்சம் புகுந்து வணங்கினோம்.
எங்களை வாழவைத்துக் கொண்டிருக்கும் அன்னை ஆதிபராசக்தி அவளைக் காப்பாற்றி விட்டாள். நோயும் நீங்கியது. எங்கள் கவலையும் அகன்றது.
ஓம்சக்தி!
சக்தி வீரச்செல்வி, இராஜமன்னார்குடி
பக்கம் 172 – 173.
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து….