ஓம்சக்தி” நாமத்தை எழுது!

0
697
எங்கள் வீட்டில் என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பிள்ளைகள். நான்காவது பிள்ளையான என் தம்பி சரியாகப் படிக்கமாட்டான்.
இதனால் என் பெற்றோருக்கு கவலையாக இருந்தது. எங்கள் குடும்பமோ மிகவும் கஷ்டமான நிலையில் இருந்தது.
இந்த நிலையில் என் தம்பி படிக்க மாட்டான் என்கிறானே என்று மிகவும் கவலைப்பட்டேன். தற்செயலாக எனக்கு சக்திஒளி புத்தகம் கிடைத்தது. அதில் பலருடைய அனுபவங்கள் வெளியிடப்பட்டிருந்தன.
நானும் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களிடம் வேண்டிக்கொண்டேன். என் தம்பிக்கு படிப்பில் அக்கறை வருவதற்கு பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள் அருள் செய்ய வேண்டும். அவனுக்கு நல்ல புத்தி கொடுக்க வேண்டும்.
அவன் படிப்பில் முன்னேற்றம் பெற வேண்டும். அப்படி நடந்தால் சக்தி ஒளிக்கு எழுதுவதாக பரம்பொருள் பங்காருஅம்மா அவர்களிடம் மனமுருகி வேண்டிக் கொண்டேன்.
என்ன ஆச்சரியம்! என் தம்பி அடுத்த அரையாண்டுத் தேர்வில் எல்லா பாடங்களிலும் நன்றாகப் படித்து நல்ல மதிப்பெண் பெற்றிருந்தான். 60 சதவீதத்துக்கும் அதிகமாகவே மதிப்பெண் வாங்கியிருந்தான். அவனது மாற்றம் என் பெற்றோருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. பரம்பொருள் பங்காரு அம்மா அவர்கள்தான் அவனுக்கு நல்ல புத்தியைக் கொடுத்திருக்கிறாள்.
எங்கள் வீட்டிற்கு அருகில் ஒரு குடும்பம். அந்தக் குடும்பத்தில் மாரிச்செல்வி என்ற சிறுமி இருந்தாள். அவளுக்கு படிப்பு வரவில்லை என்று நிறுத்திவிட்டார்கள்.
ஒருநாள் அவள் எங்கள் வீட்டிற்கு வந்தாள். “நீ பள்ளிக்கூடம் போவதில்லையா?” என்று கேட்டேன். “எனக்கு படிப்பு வரவில்லை என்பதால் நிறுத்தி விட்டார்கள்” என்று சொன்னாள்.
“இந்தச் சிறிய வயதில் படிப்பை நிறுத்தினால் பின்னால் மிகவும் கஷ்டப்படுவாய்” என்று அவளிடம் கூறினேன். அவள் குடும்பத்தில் மொத்தம் ஐந்து பிள்ளைகள்.
அந்தச் சிறுமியை நினைத்து அவள் பெற்றோர் வேதனைப்பட்டனர். ஒருநாள் என் வீட்டிற்கு வந்து அழுதாள்.
என் மனதில் திடீரென்று ஒரு யோசனை உதித்தது.
“நீ ‘ஓம்சக்தி’ என்ற நாமத்தை தினமும் எழுது! உன் வாழ்வில் கண்டிப்பாக முன்னேற்றம் வரும்” என்று கூறினேன். அவளும் அவ்வாறே எழுதினாள்.
அடுத்த வருடம் அவளை பள்ளிக்கு அனுப்பும் அளவிற்கு அவளது குடும்ப சூழ்நிலைகள் மாறின. அவள் இப்போது பள்ளி செல்கிறாள். எல்லாம் பரம்பொருள் பங்காரு அம்மா அவர்களின் அருள்!
ஓம்சக்தி!
பக்கம் 197 – 198.
சக்தி டி. தனலட்சுமி, சிவகாசி(கிழக்கு)
மலரும் நினைவுகள் என்னும் நூலிலிருந்து…..