ஊழ்வினை பெரிதா? முயற்சி பெரிதா

0
1377
பாரதப் போர் முடிவடைந்தது. பாண்டவர்கட்கு மீண்டும் அரச பதவி கிடைத்துவிட்டது. அம்புப் படுக்கையில் படுத்திருக்கும் பீஷ்மரைத் தரிசிக்க எல்லோரும் சென்றார்கள். ஓகவதி ஆற்றங்கரையில் பல முனிவர்கள் புடை
சூழ பீஷ்மர் அம்புப் படுக்கையில் படுத்திருந்தார்.
தருமன் அர்ச்சுனனை நோக்கி, ‘அர்ச்சுனா! என் தேரை ஆயத்தப்படுத்து! படைகள் நம்முடன் வர வேண்டாம். நாம் மட்டும் போகலாம். நமது மற்ற பரிவாரங்களும் வர வேண்டாம். இரகசியமான தத்துவங்களைப் பீஷ்மர் நமக்கு உபதேசிக்கப் போகிறார். அறிவுக் குறைபாடு உள்ளவர்கள் நம்மோடு வரக்கூடாது. விரைவில் புறப்படு!” என்றார்.
பிஷ்மரின் அம்புப் படுக்கை அருகே வந்த பாண்டவர்கள் அவரைத் தரிசித்தார்கள். அவரிடம் தருமன் தன் மனத்தில் உள்ள பல சந்தேகங்களையெல்லாம் கேட்டான். பீஷ்மர் அதற்கெல்லாம் தகுந்த பதில்களை அளித்தார்.
பார தத்தில் சாந்தி பருவம், அனுசான பருவம் என்ற இரண்டிலும் அவை கூறப்பட்டுள்ளன. உலகியல், ஆன்மிக இயல் தொடர்பான பல சந்தேகங்கட்கு விளக்கங்கள் இவற்றில் உள்ளன.
தருமன் “பரதகுலத் தோன்றலே! ஊழ்வினை அதிக வலிமை உடையதா? அல்லது முயற்சி அதிக வலிமை உடையதா? இரண்டில் எதற்கு அதிக வலிமை உண்டு?” என்று கேட்டான்.
“தர்மா! இது சம்பந்தமாக வசிட்டரும் பிரும்மாவும் உரையாடி இருக்கிறார்கள். அதை உனக்குச் சொல்கிறேன் கேள்! இது பற்றிப் பிரும்மா வசிட்டருக்கு சொல்லியது இது !”
” முனிவரே! வித்திலிருந்து முளை உண்டாகிறது; முளையில் இருந்து காம்பு உண்டாகிறது; காம்பிலிருந்து கிளை உண்டாகிறது; கிளையிலிருந்து மலர் உண்டாகிறது; மலரிலிருந்து கனி உண்டாகிறது; கனியிலிருந்து வித்து உண்டாகிறது; வித்திலிருந்து திரும்பவும் உற்பத்தி உண்டாகிறது; வித்தில்லாமல் ஒன்றும் உண்டாவதில்லை வித்தின்றிப் பழமில்லை; முடிவில் பார்த்தால் வித்திலிருந்தே வித்து உண்டாகிறது. விதை நல்லதாய் இருந்தால் பலன் நல்லதாய் இருக்கிறது. விதை கெட்டதாய் இருந்தால் பலனும் கெட்டதாய் இருக்கிறது.
அதைப் போலத் தான் நல்வினை நற்பலனையும், தீவினை தீய பலனையும் தருகின்றன. தகுந்த நிலத்தில் பயிரிட்டால் தான் விதை பலனைத் தருகிறது. அதே போல தகுந்த முயற்சி இருந்தால் தான் ஊழ்வினையும் பலனைத் தருகிறது.முயற்சியைப் பூமி என்றும், ஊழ்வினையை விதை என்றும் சொல்கிறார்கள். நிலமும் வித்தும் சேர்ந்தால் பயிர் உண்டாவதைப் போல, முயற்சியும் ஊழ்வினையும் சேர்ந்தால் தான் பலன் கிடைக்கின்றது. முயற்சி செய்யாதவனுக்கு அதிர்ஷ்டத்தினால் எதுவுமே கிட்டாது. செல்வம், இன்பம், சொர்க்கம், எல்லாமே முயற்சினால் தான் கிட்டுகின்றன. இயக்கர்கள், நாகர்கள், தேவர்கள் இவர்கள் எல்லாருமே மனிதர்களாயிருந்து முயற்சியினால் தான் தேவத் தன்மையை அடைந்திருக்கிறார்கள்.
செல்வம், நண்பர்கள், புகழ், ராஜ்யம், காம் பீரியம் இவை அனைத்தும் முயற்சி செய்யாதவர்க்குக் கிட்டா!
முயற்சிக்கு உரிய பலணுண்டு. இல்லையேல் தெய்வத்தை நம்பிக் காரியத்தில் ஈடுபடாமல் மக்கள் இருந்துவிடுவர். சொந்த முயற்சி இல்லாமல் தெய்வத்தை மட்டும் நம்பி இருப்பவன் ஆண்மையற்றவனை அடைந்த பெண் போல வீணே வருத்தப்பட்டுக் கொண்டு தான் இருப்பான்.
மிகச் சிறிய நெருப்பாயினும் காற்றின் தூண்டுதலால் அது விருத்தி அடைவது போல, முயற்சியுள்ளவனுக்குத் தெய்வமும் முன் வந்து உதவுகிறது. எண்ணெய் இல்லாது போனால் விளக்கு அணைவது போல, முயற்சி செய்யாதவனுக்குத் தெய்வமும் உதவாமல் இருந்து விடுகிறது.
செல்வம், பெண்டிர், இந்த போகங்கள் எல்லாம் எளிதாகக் கிடைப்பினும், முயற்சில்லாவிட்டால் அனுபவம் என்னும் இன்பம் எந்த மனிதனுக்கும் கிட்டாது. தெய்வமே முன் வந்து உதவி புரியிலும், முயற்சி இல்லாதவனால் தெய்வம் கொடுத்ததை எப்படி அனுபவிக்க முடியும்?
செலவுசெய்து கொண்டே இருப்பினும் முயற்சி உள்ளவனுக்குச் செல்வம் பெருகிக் கொண்டே இருக்கும்.
“மானிட லோகத்தை விடத் தேவலோகம் சிறந்ததன்று; ஏனெனில் முயற்சியுடன் இருப்பதால் மானிட லோகத்தில் மாட மாளிகைகளும், செல்வங்களும் நிரம்பியிருக்கின்றன. தேவலோகம் அப்படி இல்லை விடாமுயற்சியுள்ள மனிதன் செல்வத்தையும் அடைவான்; சொர்க்கத்தையும் அடைவான்” என்று பிரும்மாவே கூறியுள்ளார்.
இவ்வாறு பீஷ்மர் கூறியதாக மகாபாரத்தில் கூறப்பட்டுள்ளது.
ஓம் சக்தி
நன்றி
பக்கம்:11-13.
சக்திஒளி எப்ரல் 1989