மனம் மாறிய கள்வர்கள்

0
772

இன்றைய கலியுக மக்களின் இன்னல் தணிக்கவும், இன்ப வாழ்வு வாழவும் அன்னை ஆதிபராசக்தியின் அவதார காலத்தில் உருவாக்கிக் கொடுத்துள்ள வாய்ப்புக்கள் பல. அவற்றுள் சக்திமாலை அணிந்து விரதம் இருந்து இருமுடி செலுத்துகிற வாய்ப்பும் ஒன்று.

கோடிக்கணக்கான மக்களை ஈர்த்து அவர்களுக்குக் கருணை காட்டி ஊழ்வினை தணிக்க தன் அருளார் அமுதத்தை ஊட்டவே மருவத்தூர் தாயுள்ளம் விரும்புகிறது. அது கருதியே, “ஏழை எளிய மக்களையும், பாமர மக்களையும், கிராமத்து மக்களையும் உங்கள் செலவில் சக்திமாலை போட்டு இருமுடி எடுக்க வைத்து இங்கே அழைத்துவா! என்று அந்தத் தாய் தன் தொண்டர்களுக்குக் கட்டளையிடுகிறாள். அதனால் உனக்கும் பயன், அவர்களுக்கும் பயன் என்று சொல்லிக் காட்டுகிறாள்.

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மைச் சம்பவம் இது. அன்னையின் அருள்வாக்கு ஆணைகளை தலைமேற்கொண்டு செயல்புரியும் தொண்டர்களுள் ஒருவர் சக்தி பாலசுப்ரமணியம். திருப்பூரைச் சேர்ந்தவர். சுமார் இருபது ஏழைகளுக்கு சொந்தச் செலவில் சக்திமாலை அணிவித்து இருமுடி எடுக்க வைத்து, மருவத்தூர் அழைத்துச் சென்று திரும்பி வந்தார்.
அவ்வாறு ஆலயம் சென்று திரும்பிய வந்தபோதுதான் அந்தப் பயங்கரமும், அற்புதமும் கலந்த சம்பவம் நடந்தது.

திருப்பூருக்கும், பல்லடம் நகரத்த்துக்கும் இடையே வாலிபாளையப் பள்ளம் என்று ஒன்று உள்ளது. அந்த இடம் மிகவும் மோசமான இடம். அடிக்கடி கொலை, கொள்ளைகள் நடக்கிற இடம். அந்தக் காலத்தில் இரவு 09.00 மணிக்குமேல் அந்தப் பக்கம் யாருமே தனியாகச் செல்ல மாட்டார்கள். அவ்வளவு பயங்கரமான பள்ளம்!
இருமுடி செலுத்திவிட்டு வந்தவர்களில் உடுமலைப்பேட்டை மன்றத்தைச் சேர்ந்த 45 பெண்களும் இருந்தனர். மேல்மருவத்தூரிலிருந்து திரும்பி வந்தவர்கள் நேராக திருப்பூரில் உள்ள சக்திபீடம் வந்து, திருப்பூர்காரர்களை அங்கே இறக்கி விட்டு, இரவு 10.00 மணி அளவில் உடுமலைப் பேட்டையைச் சேர்ந்த மகளிர் மன்ற சக்திகளை உடுமலைப்பேட்டைக்கு அனுப்பி வைத்தார் சக்தி பாலசுப்ரமணியம்.

அப்படி உடுமலைப்பேட்டை நோக்கி அவர்கள் வண்டி சென்ற போதுதான் அந்தச் சம்பவம் நடந்தது.

அந்த லாரி மேற்சொன்ன வாலிப்பாளையம் பள்ளத்தைக் கடக்கும் போது, சுமார் 10 கொள்ளைக்காரர்கள் லாரியை வழிமறித்தனர். லாரியில் இருந்த டிரைவைரையும், உடன் இருந்தவர்களையும் கத்தி, அரிவாள், தடி முதலான ஆயுதங்களைக் காட்டி மிரட்டிக் கொண்டிருந்தனர்.

அப்போது லாரிக்குப் பின்னாலேயே மகளிர் சக்திகள் வந்த பேருந்தின் முகப்பு விளக்குகளின் வெளிச்சம் லாரியின் மீது பட்டது.
லாரியை மடக்கிய கொள்ளையர்கள், பஸ்ஸையும் மடக்கினர். மடக்கி நிறுத்தி திமுதிமுவென்று பஸ்ஸில் ஏறினர். அவர்களைப் பார்த்த பெண் சக்திகள், நீங்கள் யார்? என்ன வேண்டும்? என்று கேட்டனர்.
அந்த கொள்ளையர்கள் என்ன நினைத்தார்களோ…?
“எங்களுக்கு ஒன்றுமே வேண்டாம். முன்னாலே கொள்ளையடிக்கும் கும்பல் இருக்கிறார்கள். பார்த்துப் போங்கள்” என்று சொல்லி ஒன்றும் மிரட்டாமல் இறங்கிக் கொண்டார்கள்.

கொள்ளையர்களையும், அவர்தம் கைகளில் இருந்த ஆயுதங்களையும் கண்டு பயந்து நடுங்கிப்போன மகளிர் சக்திகள் “அப்பாடா..! தலை தப்பியது தம்பிரான் புண்ணியம்!” என்று சொல்லியபடி டிரைவரை நோக்கி, ‘வண்டியை வேகமாக ஓட்டு’ என்று அவசரப்படுத்தினார்கள்.
எத்தகைய அசம்பாவிதமும் இல்லாமல் உடுமலைப்பேட்டை மகளிர் தத்தம் பகுதிகளில் இறங்கிக் கொண்டனர்.
கொள்ளையடிக்க வந்தவர்கள் ஒன்றும் செய்யாமல் இறங்கி விட்டார்களே ஏன்….? இது ஆச்சரியமாகவே இருந்தது.
ஒரு சில நாட்கள் கழித்து, இது பற்றி அம்மாவிடம் எடுத்துக் கூறினோம். அன்று நடந்தது என்ன? அவர்கள் செயலற்று இறங்கிப் போய் விட்டதற்கு காரணம் என்ன…?

அம்மாதான் அந்தச் சம்பவத்தை விளக்கினார்கள்.

“அவர்கள் பஸ்ஸில் நுழையும்போதே கொள்ளையடிக்கும் எண்ணத்தோடு தான் நுழைந்தார்கள். வண்டியில் இருப்பவர்கள் சக்திமாலை அணிந்திருப்பவர்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. அம்மா என்ன செய்தது தெரியுமா…?
அந்த மகளிர் சக்திகள் அணிந்திருந்த சக்திமாலை ஒவ்வொன்றையும் நாகமாகக் காட்டியது! அந்த மகளிர் முகங்களையெல்லாம் அம்மாவின் முகங்களாகக் காட்டியது. ஒவ்வொருவர் கண்களிலிருந்தும் பிரகாசமான ஒளியைக் காட்டியது.
இவற்றைக் கண்டு பயந்து போனதால்தான் கொள்ளைக்காரர்கள் இறங்கிக் கொண்டார்கள். அந்தப் பயத்திலேதான் என்ன சொல்வது என்று தெரியாமல் வாயிலே வந்ததைச் சொல்லிவிட்டு இறங்கி விட்டார்கள்” என்று கூறிய அம்மா மேலும் சொன்னார்கள்.

பஸ்ஸிலே வந்த நம் மகளிர் சக்திகளில் ஒரு சிலர் அம்மாவின் மந்திரங்களைச் சொல்லிக் கொண்டே வந்தார்கள்.
ஒரு சிலர் அன்னையின் புகழ் பாடிக் கொண்டு வந்தனர்.
ஒரு சிலர் அன்னையின் அருமையையும், கருணையையும் நினைத்தபடி ஒருமித்த எண்ணத்தோடு பயணம் சென்றனர்.
அப்படிச் சென்றதால்தான் அம்மாவின் அருள் தக்க சமயத்தில் எல்லோரையும் காப்பாற்றியது!” என்று விளக்கினார்கள்.

சக்திகளே இதிலிருந்து நமக்கு தெரிவது என்ன?

  • சக்திமாலை ஒரு புனிதமான மாலை! சக்திமாலை அணிந்து விரதம் இருப்பவர்கள் ஐந்து நாட்களும் பயபக்தியுடன் ஊசி முனையில் நிற்பது போல நெறியோடு இருக்க வேண்டும்.
  • அந்த இருமுடி விரதம் நமது முன்னைப் பாவங்களிலிருந்து நம்மை விடுவிப்பது. தெய்வ அருளால் நமது பாவங்கள் மன்னிக்கப்பட அந்த விரதம் ஒரு வாய்ப்பு தருகிறது!
  • பஸ்ஸை அமர்த்திக் கொண்டு இருமுடியுடன் வரும்போது அரட்டைப் பேச்சு, அரசியல் பேச்சு, சினிமா நடிகர், நடிகையர் பற்றிய பேச்சு பேசிக்கொண்டு வரவே கூடாது.
  • காமக்கிளர்ச்சி, போதையூட்டும் பாடல்களைப் போட்டுக் கொண்டும் , கேட்டுக் கொண்டும் வரக்கூடாது.
  • அன்னையின் மந்திரங்கள், அன்னையின் புகழ் கூறும் பாடல்கள் இவற்றையெல்லாம் சொல்லியபடி, பாடியபடி, பயணம் வந்தால் அம்மா நம்முடன் துணைக்கு வருவாள்! ஆபத்து வராமல் தடுப்பாள்.

சக்தி மாலை அணிவோம்!
சஞ்சலங்கள் போக்குவோம்!
இருமுடி சுமப்போம்!
இருவினை அகற்றுவோம்!

ஓம்சக்தி!
சக்தி இசைமணி,
பக்கம் 52-55.
சக்தி ஒளி- நவம்பர் 2019.