அவதார புருஷர் பங்காருஅடிகளார்

0
774
“ அடிகளார் ஓர் அவதார புருஷன்”
“அடிகளார் கல்கி அவதாரம்”
“இன்று நான் பங்காரு அடிகளாராகவே அவதரித்து உலாவி வருகின்றேனே…. என்னை எத்தனை பேர் புரிந்துகொண்டீர்கள்?
“சமுதாய வளர்ச்சிக்குத் தக்கபடி தான் பங்காரு அடிகளார் ஆற்றலை வெளிப்படுத்துவேன்.”
என்பன அன்னை ஆதிபராசக்தியின் அருள்வாக்கு.
அவதாரம் என்றால் என்ன
அவதாரம் என்பதற்குத் தன் உயர்ந்த நிலையை விட்டுக் கீழே
இறங்கி வருதல் என்று பொருள்.
பரம்பொருள் சாதாரணமான ஆன்மாக்களுக்குத் தன் எல்லையில்லாத கருணையை வெளிப்படுத்த வேண்டித் தன் மேலான நிலையை விட்டுக் கீழே இறங்கி வருவதே ‘அவதாரம் ‘எனப்படும்.
வைணவ மதமும், கிறிஸ்த மதமும் அவதாரக் கொள்கையை நம்புகின்றன.
மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி தன் தொண்டனுக்கு அருள்வாக்கு அளித்து, வந்த போது, சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் தக்கவாறு தான் அடிகளாரின் ஆற்றலை வெளிப்படுத்துவேன் என்றாள். சில ஆண்டுகள் கழிந்த பின் அடிகளார் ஓர் அவதார புருஷன் என்று வெளியிட்டாள்.
ஒவ்வொரு தெய்வ அவதாரத்துக்கும் சில நோக்கங்கள் உண்டு. அருள்திரு பங்காரு அடிகளார் அவதாரத்துக்கு மூன்று நோக்கங்கள் உண்டு. அவை
1. தெய்வ நம்பிக்கையும், தெய்வ பக்தியையும், ஆன்மிக உணர்வையும் ஊட்டவே இந்த அவதாரம்.
2. பெண்குலத்தை ஆன்மிக வழியில் உயர்த்தவே இந்த இந்த அவதாரம்.
3. அடித்தளத்து மக்களை ஆன்மிக வழியில் உயர்த்தவே இந்த அவதாரம்.
அவதாரம் ஏன்?
“அருச்சுனா! எப்பொழுதெல்லாம் தருமம் அழிந்து மேலோங்கிறதோ, அப்பொழுதெல்லாம் என்னை நான் பிறப்பித்துக்கொள்கிறேன். ” ( கீதை 4:7)
“நல்லோரைக் காப்பதற்கும் கெட்டவர்களை ஒடுக்குவதற்கும் தர்மத்தை நிலை நாட்டுவதற்கும் யுகந்தோறும் நான் அவதரிக்கின்றேன். கீதை (4 :8)
“யோக மாயையினால் நன்கு மூடப்பட்டுள்ள நான், எல்லோருடைய அறிவிற்கும் எட்டுவதில்லை. பிறவாத அழியாதஎன்னை இந்த உலகம் அறிகிறதில்லை. ” (கீதை 7: 25 )
“சென்றனவும், வருவனவும் ஆகிய உயிர்களையெல்லாம் நான் அறிவேன். ஆனால் என்னை யாரும் அறியார்.” என்றெல்லாம் கீதையின் கண்ணன் பேசுகிறான்.
எல்லோராலும் உணர முடிவதில்லையே ஏன்
“அவதார புருஷர்களை எல்லோராலும் உணர முடிவதில்லையே அது ஏன்? காமத்தாலும் காசு ஆசைகளினாலும் கனத்துப் போன மனம் உடையவர்களாலும் அவதார புருஷர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாது.” என்பார் பகவான் இராமகிருஸ்ணர்
அவதார புருஷர்களும் நம்மைபோலவே மானுட உருவம் தாங்கி உலாவி வருவதால் இவரும் நம்மைப் போன்றவர் தானே என்ற அலட்சிய புத்தியோடு உலகோர் நடந்து கொள்கிறார்கள்.
இராமன் அவதார புருஷன் என்பதை அந்த காலத்தில் 12 ரிஷிகள் மட்டுமே அறிந்து வைத்திருந்தார்களாம். அவன் தெய்வம் என்ற உண்மையைத் உணரவில்லை. தாய் கோசலையும் உணரவில்லை. அவன் குடும்பத்தாரும் உணரவில்லை. பரத்துவாசர், விசுவாமித்திரர், அகத்தியர் போன்ற 12 ரிஷிகள் மட்டுமே அவனைப் புரிந்து கொண்டிருந்தனர்.
கண்ணன் அவதார புருஷன் என்பதை பீஷ்மர், விதுரர் என ஒரு சிலர் மட்டுமே தெரிந்து வைத்திருந்தனர். அவன் விசுவரூபம் காட்டிய போதும் துரியோதனன் புரிந்துகொள்ளவில்லை. ஏதோ இவன் மாய மந்திரம் தெரிந்தவன் என்று தான் துரியோதனனும் எண்ணினான்.
தம்மை மீட்பதற்காக மெசையா வருவார் என்று யூதர் இனம் எதிர்பார்த்து காலத்தில் ஏசு அவதரித்தார். ஆனாலும் அந்தக் காலத்தில் அவரை நம்பவும் ஏற்கவும் யூதர்கள் மறுத்தார்கள்.
மனிதனாகத்தான் வர வேண்டுமா?
எல்லாம் வல்ல பரம்பொருள் தன் இச்சா சக்தியால் உலகத்தின் அமைப்பையே மாற்றும் வல்லமை கொண்டது அல்லவா…?
அப்படியிருக்கும் போது அது ஏன் மானிட வடிவம் தாங்கி வர வேண்டும் ?என்று கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் கூட கேட்கக் கூடும். அவ்வாறு கேட்பதும் இயல்பே!
யுக புருஷர்
பங்காருஅம்மா அவர்களை
போன்ற யுக புருஷர்கள் ஏதாவது
ஒரு யுகத்தில் தான் அரிதாகத் தோன்றுவார்கள். சாதாரணமாக விவசாயக் குடும்பத்தில் பிறந்து, ஆன்மிகம் என்றால் என்ன என்பது அறியாமலே வளர்ந்து , இன்றைக்கு ஆன்மிகத்தை வளர்க்கும் ‘ஆச்சாரிய பீட நாயகராக ‘உயர்ந்த பங்காரு அம்மா ஒரு புருஷர் என்பதில் ஜயமில்லை. யுக புருஷர்கள், தன்னை ஒரு சக்தி இயக்க , அதன்படி வாழ்வார்கள்.
உலகத்தில் எல்லாவற்றையும் நல்லது, கெட்டது இயற்கை செயற்கை என்று இரண்டு வகைகளாகப் பிரித்து அறிகிறோமே… அதுபோல ஆன்மிகத்தில் மகான்களையும் இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். இயற்கையாகவே அருள் பெற்றுப் பிறவி எடுத்தவர்கள் என்றும், தன்னுடைய ஞானத்தின் மூலமாகவும் முயற்சியின் காரணமாகவும், தன்னை வருத்தி, தெளிந்து அதன் மூலம் ஞானத்தைப் பெற்றவர்கள் என்றும் இரண்டு வகைகளாக யுக புருஷர்களைப் பிரிக்கலாம். தெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டவர்கள், ஞானத்தை முயன்று பெற்றவர்களினிற்றும் மாறுபட்டவர்கள்.
யுக புருஷர்களில் சிலர் இல்லறத்தில் வாழ்ந்து சுக, துக்கங்களை உணர்ந்து பிறகு ஞானத்தை உணர்ந்து ஞானியானவர்கள் உண்டு. திருமணம் செய்து கொண்டு பிறகு இல்லறத்தை வெறுத்து ஞானியானவர்களும் உண்டு.
இந்த நூற்றாண்டில் “இல்லறமல்லது நல்லறமன்று “என்று இல்லறத்திலே இருந்து கொண்டே நல்லறமாகிய ஆன்மிகத்தை வளர்த்து வருபவர் அருள்திரு “ பங்காருஅம்மா”அவர்கள்.
ஓம் சக்தி
நன்றி
பக்கம்- 1-4.
(ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் அவதாரம் )