ஒரு மந்திர நூலில் காட்சி கொடுத்த அடிகளார்

0
1558

மன்றம் தோறும் சைக்கிள் யாத்திரை பயணம் செய்வது என்ற திட்டப்படி 06.07.1991 அன்று விழுப்புரம் வட்டத்தைச் சார்ந்த அரசூர் மன்றத்திற்கு சென்றோம். அந்த ஊரில் உள்ள மன்றத்தைச் சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் நடத்தி வருகிறார்.
அவர் ஆரம்பகாலத் தொண்டர்
அன்னை ஆதிபராசக்தி போவோர்
வருவோர்க்கெல்லாம் அருள்வாக்கு சொல்லிய அந்தக் காலக்கட்டத்துத் தொண்டர் அவர்.
அம்மா அவர்களிடம் நீங்கள் எப்படி வந்தீர்கள்? அம்மா அவர்களிடம் உங்களுக்கு ஈர்ப்பு உண்டானது எப்படி? அந்த அனுபவங்களைச் சொல்லுங்கள் என்று கேட்டோம்.
சக்தி.எ.எம்.சுப்பிரமணியன் சொல்லத் தொடங்கினார்.
குடும்பத்தில் ஒரு பிரச்சினை காரணமாக முதல் முதலாக அருள்வாக்கு கேட்க மேல்மருவத்தூர் சென்றேன்.
அம்மா, என் குடும்பப் பிரச்சனைகளை எல்லாம் சொல்லி நான் தீர்த்து வைக்கிறேன். நாளை ஆத்தூரில் வேள்வி நடக்கப் போகிறது. அதில் நீ கலந்து கொள்ளாடா மகனே! என்று கூறினாள் அன்னை ஆதிபராசக்தி.
அன்னை ஆதிபராசக்தியிடம் முதன் முதலில் வந்தால் எனக்கு ஆத்தூர் வேள்வி என்ற விபரம் எதுவும் தெரியவில்லை. சரியாகப் புரியவில்லை
வெளியே வந்தவுடன் அருகே இருந்த ஒரு செவ்வாடைத் தொண்டரிடம் விவரம் கேட்டேன்.
அம்மா அவர்கள் சிலர் வீட்டில்
குடும்பநல வேள்வி நடத்து! என்று சொல்லியிருக்கிறார்கள். நாளைக்கு செங்கல்பட்டை அடுத்துள்ள ஆத்தூர் என்ற கிராமத்தில் குடும்பநல வேள்வி நடக்கப் போகிறது. ஆன்மிககுரு அருள்திரு அடிகளார் அவர்கள் அதில் கலந்து கொண்டு வேள்வி முடிந்த பிறகு கலச தீர்த்தத்தை எடுத்து வீட்டின்
நான்கு முலைகளிலும், முக்கியமான இடங்களிலும் தெளிப்பார்கள்.
ஒரு இருபது முப்பது தொண்டர்கள் வருவார்கள். நீங்களும் கலந்து கொண்டு ஏதாவது தொண்டு செய்யுங்கள் என்றார்.
வேள்வி பூஜை முறையெல்லாம் எனக்கு தெரியாதே? என்றேன்.நீங்கள் மந்திரம் படிக்கிற குழுவில் சேர்ந்து மந்திரம் படியுங்கள் போதும்! என்றார்.
“அம்மா உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கொடுத்திருக்கிறாள். உங்கள் இஷ்டம்!”
என்றார்.
எனக்குப் பழக்கமில்லாத ஊருக்குப் போவதும்,தங்குவதும் பிடிக்கவில்லை. எனவே தவிர்க்க எண்ணினேன். என்னிடம் செவ்வாடை இல்லையே என்று சொல்லி நழுவிப் பார்த்தேன். அந்தத் தொண்டரோ விடாக் கண்டராக அது பெரிய விஷயமில்லை எனச் சொல்லி தன் செலவில் செவ்வாடை வாங்கி கொடுத்தார். என் கூடவே வாருங்கள் என்று சொல்லி ஆத்தூருக்கு அழைத்துச் சென்றார்.
ஆத்தூரில் சுமார் 20 வீடுகளில் குடும்பநல வேள்விக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து.தொண்டர்கள்
மூன்று குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.
முதல் குழு 1008 போற்றி மலர்கள் படிப்பதற்கு!
இரண்டாம் குழு 1008 போற்றித் திருவுரு படிப்பதற்கு!
மூன்றாவதுகுழு வேள்வி பூஜைக்கான பணிகளைச் செய்வதற்கு!
நான் பங்கு பெற்ற குழு ஆத்தூர் அரிசனக் காலனியில் உள்ள சில வீடுகட்குச் சென்று வேள்வி செய்ய வேண்டும். 1008 மந்திரங்கள் படிக்கிற தொண்டு எனக்கு அளிக்கப்பட்டது.
எனக்குக் காலனி என்றாலே அலர்ஜி; சிறுவயது முதல் நான் எந்தக் காலனிக்கும் சென்றது இல்லை. எங்கள் கிராமத்தில் நாங்கள் உயர் ஜாதி! நாங்கள் ரெட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்கள். ஊரில் எங்களுக்கு கௌரவம் அதிகம்! நாம் உயர்சாதி கார்கள்! காலனியில் சென்று அவர்களுடன் சரிசமமாகப் பழகுவது எப்படி? என் மனம் குழம்பியது.
அப்போது என் உடல் நலமும் சரியில்லை. அதை முன்னிட்டாவது அங்கிருந்து நழுவி விடலாம் என்று யோசித்தேன். எங்கள் குழுவினரிடம் எனக்கு உடல்நலம் சரியில்லை என்னை விட்டு விடுங்கள் என்றேன்.
உடனே அவர்கள் என்னை அருள்திரு அடிகளார் அவர்களிடம் அழைத்துச் சென்றனர். அப்போது அடிகளார் ஒரு டம்ளர் தண்ணீரில் சிறிது விபூதி போட்டு என்னிடம் கொடுத்து குடியுங்கள் என்றார்.அவ்வாறே குடித்தேன். உடனே எனக்குக் குணமாகிவிட்டது. இனி எதைச் சொல்லி இவர்களிடமிருந்து தப்பிப்பது.
அடுத்த நாள் எங்கள் குழுவுடன் காலனியில் உள்ள ஒரு வீட்டுக்குச் சென்றேன். அங்கே வேள்வி பூஜை தொடங்கப்பட்டது.குரு போற்றி வேண்டுதல்கூறு முடிந்தது;அடுத்து1008 மந்திரங்கள்! அந்தப் பக்கத்தைத் திருப்பும் போது மந்திர நூலில் உள்ள வரிகள் எனக்கு ஒன்றுமே தெரியவில்லை. கண்களை நன்றாகக் கசக்கிக் கொண்டு பார்க்கிறேன். எழுத்துக்கள் ஒன்றுமே தெரியவில்லை திடீரென புத்தகத்தில் அருள்திரு அடிகளார் அவர்கள் உருவமே தெரிந்தது. இறுதிவரை அதே காட்சி! அப்படியே மெய் மறந்தேன்.
என்னுடன் இருப்பாவர்களெல்லாம் மந்திரம் படிக்கிறபோது நான் மட்டும் சும்மா இருந்தேன். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றது. இது நமக்குப்
பாடமா? தண்டனையா?
அம்மா தாயே ! வேண்டா வெறுப்பாகக் கலந்து கொண்ட என்னையும் ஏற்றுக் கொண்டு உன் அருட்காட்சியைக் கொடுத்தாயே! உன் கருணையை என்னவென்று சொல்வேன்?
எனப் புலம்பினேன்.
அன்றிலிருந்து நான் உயர்சாதிக்காரன் என்ற செருக்கு மறைந்து.
காணும் பொருளில் காட்சி அளிப்பவளே! என்ற வாக்கின்படி காட்சி கொடுத்த பங்காரு அம்மாவே எனக்கு இனி எல்லாம் நீயே என்று சரணம் அடைந்தேன்.
‘இந்த மன்றத்தை நடத்தி வருகிறேன்’ என்றார் சுப்பிரமணியன்.
ஓம் சக்தி!
கே.ஆறுமுகம், சிங்காநல்லூர்.
பக்கம்:(20-23).
சக்திஒளி, அக்டோபர்-2019.