ஓம் தாய்மையில் இறைமை காட்டு வை போற்றி ஓம் !

0
2741

தாய்மை என்பது அன்பு உணர்ச்சி ஓங்கி இருக்கும் நிலை. இறைமையும் அன்பு, கருணை மயமானது; அன்பே சிவம் என்பர்.

தாய்மையிடம் தான், அந்த அன்பு இயல்பாகச் சுரக்கிறது.

வயிற்றில் வளரும் குழந்தையின் நலனுக்காக, அவள் பத்தியம் இருக்கிறாள்; உணவு, உறக்கம் குறைக்கிறாள். குழந்தை பிறந்த பிறகும், அதனை வளர்க்கப்படாத பாடுபடுகிறாள்.

மனிதர்களிடம் மட்டுமின்றி, பிற உயிரினங்களிலும் தாய்மையின் சிறப்பைக் காணலாம்.

தன் குட்டிகளுக்கு யாராவது தீமை செய்ய முயன்றால், நாய் கோபம் கொண்டு குறைக்கிறது.

சிங்கம், புலி, சிறுத்தை போன்றவைும், தங்கள் குட்டிகளுக்குப் பிற விலங்குகள் துன்பம் செய்ய முயன்றால், சீறுகின்றன; உடனே தாக்குகின்றன.

கோழி தன் குஞ்சுகள் சூழ்ந்து இரையை உண்ணும் போது, பருந்து அதன் குஞ்சுகளைக் கவர முயன்றால், பறந்து பறந்து எதிர்க்கிறது.
எனவே தாய்மையில் இறைமை பண்பைப் பார்க்க முடிகிறது.

இந்தத் தாய்மை உணர்வை, இயல்பாகவே சுரக்க வைப்பது இறைமை, அந்த இறைமைப் பண்பைத் தாய் நிலையில் உள்ள, பெண் இனங்கட்கு அமைத்துப் பிறக்க வைத்தவள் அன்னை ஆதிபராசக்தி !

தான் படைத்த ஒவ்வொரு உயிரையும், தானே நேரடியாக வந்து, பாதுகாக்க முடியாது என்பதால், இறைவன் ஒவ்வொரு உயிர்கட்கும் தாயைப் படைத்தான் என்பர். அன்பு, இரக்கம், கருணை,பாசம் என்ற மனத்தின் மென்மையான உணர்வுகள் என்னவெல்லாம் உண்டோ, அந்த உணர்வு கட் கெல்லாம், தெய்வ ரூபமாய்த் தாய் விளங்குகிறாள் என்பர்.

527 ஓம் இறைமை யில் தாய்மை விளக்குவை போற்றி ஓம் !

பரம்பொருள் ஆணும் அன்று;பெண்ணும் அன்று; ஆண், பெண் அல்லாத அலியும் அன்று !

அது தன்னை ஆணாகவும், பெண்ணாகவும் பிரித்துக் கொண்டு, பிரபஞ்ச விளையாட்டை நடத்துகிறது.

“ஆதிபராசக்தி என்பது தாய்மைக் கடவுள்” என்கிறாள் அன்னை ஆதிபராசக்தி.

“சக்தி ரூபம் எடுத்து வந்திருக்கிறேன்” என்கிறாள்.

சக்தி வழிபாட்டில் தாய் – மகன் உறவு முக்கியமான அம்சம்.

மற்ற தெய்வ உபாசனைகளில், விதிமுறைப்படி வழிபட்ட பிறகே, ஆண் தெய்வங்களின் அருளும், உதவியும் கிட்டும் ! ஆனால் சக்தி வழிபாட்டில், ஒரு பலனை முன்னாலேயே கொடுத்து விட்டுப் பிறகு, விதிமுறைப்படி வழிபாடு செய்யும் புத்தியைக் கொடுப்பாள் !_ என்பர்.

அபிராமி பட்டருக்காக, அமாவாசையை பெளர்ணமியாக மாற்றினாள்.

குளக்கரையில் நின்று அழுத ஞானசம்பந்தருக்கு, ஞானப்பால் ஊட்டினாள்.

ஊமையாகப் பிறந்த குமரகுருபரனுக்குத் திருச்செந்தூர் முருகனிடம் சொல்லிப் பேசும் சக்தியைத் தரச் செய்து, “மீனாட்சி அம்மைப் பிள்ளைத்தமிழ்” பாடச் செய்து, ஓடோடி வந்து முத்துமாலையைப் பரிசளித்தாள்.

அந்தக் குமர குருபரர், காசியில் மொகாலய மன்னரிடம் பேசுவதற்காக அம்பிகையைத் தியானித்து “சகலகலாவல்லி மாலையைப் பாடிய போது, மொகலாய மொழியைப் புரிந்து, பேசும் சக்தியை அருளினாள் .

பிறவி பிலேயே ஊமையாக இருந்த மூகனைப் பேச வைத்துக் கவிஞன் ஆக்கினாள். அந்தக் கவிஞனைக் கொண்டு “மூக பஞ்ச சதி” ! என 500 சுலோகங்களைப் பாட வைத்தாள்
மூடனாக இருந்த வரதன் என்பவனை, கவி காளமேகமாக மாற்றினாள்.
ஆடுகள் மேய்த்து வந்த இடையன் ஒருவனைக் கவி காளிதாசனாக ஆக்கினாள்.இவையெல்லாம்
வரலாற்று உண்மைகள்.

இப்போது, தற்காலத்தில் அன்னை ஆதிபராசக்தியின் கருணையை பற்றித் கொள்ள வேண்டுமா ….?

மேல்மருவத்தூர் தொடர்பான நூல்களைப் படியுங்கள் …!

அவளிடம் பொங்கித் ததும்புகின்ற தாய்மை உணர்வு தெரியும்!

பக்கம்:( 263 – 265).

1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்.