எந்த மருத்துவராலும் முடியாது

0
1070

நமது இந்து மதத்தின் சிறப்பே தெய்வத்தை விதவிதமாகக் கற்பனை செய்து வணங்குவதுதான். பாரதியார் “கண்ணன் என் சேவகன்” என்று வர்ணித்தார். “கண்ணம்மா என் காதலி” என்று தெய்வத்திடம் தன் பக்தியை நாயக நாயகி பாவத்தில் வடித்துக் கரைந்துபோனார். நாவுக்கரசர் தொண்டராக இருந்து அன்பு செலுத்தியதை விட சுந்தர் சிவனை நண்பனாக மதித்துத் தன் காதலுக்கு சிவனையே தூது அனுப்பியது சுவாரஸ்யமான காவியம் அல்லவா?

இதைத் திருப்பிப்போட்டுப் பார்த்தால், தூதுவனாக நடந்தாவது, அல்லது சேவனாகப் பணிபுரிந்தாவது தன் பக்தனை விட்டு அகலாது பற்றிக் கொள்ளத் துடிக்கும் தெய்வத்தின் பரம் கருணை விளங்கும். தன்னை அடித்தாலும், உதைத்தாலும் தன் பிள்ளையின் மனம் கோணாமல் நடந்து அவன் அன்பினைப் பெறத் துடிக்கும் ஒரு தாயின் பாசம் அதில் விளங்கும். அன்றைய காவியங்களை இன்றைய காவியம் ஆக்கிக் கொண்டிருக்கிறார் நம் “ பங்காரு அம்மா”

என் தங்கைக்குத் திருமணம் ஆகி இரண்டுஆண்டுகள் ஆகியும் குழந்தை தரிக்கவில்லை. நான் மகப்பேறு மருத்துவராக இருப்பதால், அவளுக்கு முதலில் டெஸ்ட் எதுவும் எடுக்காமல், ஸ்கானிங் மூலம் மட்டும் சிகிச்சை அளித்தேன். இந்தச் சமயத்தில் திருவள்ளுர் மாவட்டத்தில் “ ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா” அவர்கள் ஒரு பெரிய மாவட்ட வேள்வியினைச் செய்ய அவளுடைய மாமனாரைப் பணித்தார்கள். அவரும் கடுமையாக உழைத்து, “ஆன்மிககுரு அருள்திருபங்காரு அம்மா” வின் மனம் குளிரச் சிறப்பாகச் செய்து முடித்தார்.

அந்த வேள்வி முடிந்து “ ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா” அவர்கள் கிளம்பும்போது, இவ்வளவு தொண்டு என் தங்கையின் மாமனார் செய்துள்ளார் என்ற உரிமையில், பங்காருஅம்மாவிடம், “அம்மா! என் தங்கைக்குக் குழந்தை பிறக்க நீங்கள்தான் அருள வேண்டும்” என்று கேட்டேன்.

அப்பொழுதுஆன்மிககுரு அருள்திரு அம்மா, “அவளுக்குக் குழந்தை உன்னால் கொடுக்க முடியாது! எந்த மருத்துவராலும் கொடுக்க முடியாது. என் அருளால்தான் கொடுக்க முடியும். தொடர்ந்து தொண்டு செய்” என்று கூறிவிட்டார்கள். என் தங்கையும், அவள் மாமனாரும் இவ்வளவு தொண்டு செய்ததற்கே இவ்வளவுதானா? என்று நான் நினைத்ததும், “ பங்காரு அம்மா” அவர்களின் வார்த்தைகளைக் கெட்டியாகப் பற்றிக் கொண்டோம்.

இவ்வாறு பல ஆண்டுகள் உருண்டோடின. திடீரென்று எவராவது குத்தலாகச் சொல்லிவிட்டாலோ, அல்லது வயதாகிக் கொண்டே போகிறதே என்ற திகில் வந்தாலோ என் தங்கை அங்கிருந்து ஆவேசமாக வருவாள். “நான் இன்றே எனக்கும், என் கணவருக்கும் டெஸ்ட் எடுக்கப் போகிறேன்” என்ற கத்துவாள். ஆனால் அன்று எதுவும் செய்ய முடியாதபடி பிரச்சனைகள் ஏற்பட்டு இதைப்பற்றிச் சிந்திக்க விடாமல் தடுத்துவிடும்.

நானும் “என்னால் உனக்குக் குழந்தை பிறக்க வைத்தியம் செய்ய முடியும். ஆனால் அந்தக் குழந்தை எவ்விதக் குறையும் இன்றிப் பிறக்கவும், நல்ல அறிவோடும், அதிர்ஷ்டத்தோடு வாழவும், தெய்வ அருள்தான் முக்கியம். எப்பொழுது பங்காரு அம்மா அவர்கள்
மருத்துவரால் முடியாது என்று கூறினாளோ, அதன் பிறகு உனக்கு நான் எவ்வித வைத்தியமும் செய்ய மாட்டேன்” என்று மறுத்துவிட்டேன்.

இவ்வாறே 8 ½ ஆண்டுகள் திருமணம் ஆகி ஓடிவிட்டன. என் தங்கையின் முயற்சியிலும், கடும் உழைப்பிலும் மற்றுமொரு தங்கைக்கும், அவளுடைய மைத்துனருக்கும் நல்ல முறையில் திருமணங்கள் நடந்து இரு பெண்களும் உடனே கருவுற்றார்கள்.

இந்தச் சமயத்தில் “ ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா” அவர்களை என் தங்கை நேரில் சந்திக்கும் போதெல்லாம் பங்காரு அம்மாவே அவளைப் பார்த்து “அவர்களுக்கெல்லாம் குழந்தை தங்கிவிட்டதல்லவா?” என்று “தன் மகளுக்குத்தான் இன்னும் அருளவில்லையே” என்கிற ஆதங்க உணர்வோடு கேட்பார்கள். “அதைப்பற்றியெல்லாம் ஒன்றும் இல்லையம்மா” என்று அவளும் கூறுவாள்.

இந்தச் சமயத்தில் 1996ல் நாங்கள் இருமுடிப் பிரச்சாரத்திற்கு உத்திரமேரூர் சென்ற வேளையில், அங்கு ஒரு ஓரமாகக் கோவிலில் சென்று அமா்ந்து நானும் என் தங்கையும் பேசிக் கொண்டிருக்கும் பொழுது அவள் சொன்னாள். “அக்கா!
நானும் ஒவ்வொரு வருடமும் இருமுடித் தொண்டு செய்கிறேன். ஆனால் அவள் என் விஷயத்தில் கண்ணே திறக்கவில்லை. எனக்கு நம் குழந்தைகள் காட்டும் பாசத்திலேயே குழந்தை ஆசை நிறைவேறிவிட்டது. ஆனால், ஊர் உலகம் என்னை ஏளனமாகப் பார்த்து, நல்ல காரியங்களில் ஒதுக்கி வைக்கும்பொழுது எனக்கு அவமானமாகவும், வருத்தமாகவும் உள்ளது” என்று அழுதாள். நான் சமாதானம் கூறினேன்.

இரண்டு நாட்கள் கழித்து, என் தங்கை “ பங்காரு அம்மா” அவர்களிடம் அருள்வாக்கிற்குச் சென்ற பொழுது “ பங்காரு அம்மா” இவள் என்ன என்னிடம் பேசினாளோ அதைக் கூறி “மகளே! நீ இத்தனை காலம் செய்த தொண்டிற்காகத்தான் உன் வியாபாரத்தையும், அதில் நடைபெற்ற தவறுகளையும் உக்குக் கண்டுபிடித்துக் காட்டினேன். நீ இத்தனை வருடம் செய்ததை விட, இன்னும் தீவரமாக இருமுடித் தொண்டு செய். அடுத்த வருடம் இதே நேரத்திற்குள்ளாக நீ எவ்வளவு சந்தோஷமாக இருப்பாய் பார்! உத்தரவு” என்று அனுப்பிவிட்டார்கள்.

8 ஆண்டுகள் செய்ததை விட இன்னும் மிகத்தீவிரமாக அவள் தொண்டு செய்தாள். இருமுடி செலுத்திய அந்த மாதமே கருவும் உற்றாள். அவளுக்கு மாதவிடாய்த் தள்ளிப்போகும் பொழுது ஒரு Pregnancy Test கூடச் செய்யக் கூடாது; ஸ்கானிங்கும் செய்யக் கூடாது என்று “ பங்காரு அம்மா”கூறிவிட்டார்கள். “ பங்காரு அம்மா”வே அவளுக்கு வைத்தியமும் சொல்லி 5 மாதம் ஆன பிறகே மருத்துவ ரீதியாகப் பரிசோதனை செய்துகொள்ள அனுமதித்தார்கள்.

அப்பொழுதுதான் அவள் உண்மையாகவே கருவுற்றிருக்கிறாள் என்று எங்களால் நம்ப முடிந்தது. பிரசவ தேதி வந்த பொழுது அவளுக்கு “ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா”அவர்களிடம் உத்தரவு பெற்று, காலையில் வலி வரவழைத்தேன். அவளுக்கு சுகப் பிரசவத்துக்கு முயற்சி செய்து கொண்டிருந்தாலும் மயக்க மருந்து டாக்டரிடம் நான் எப்பொழுது கூப்பிட்டாலும் உடனே வந்துவிட வேண்டும் என்று கூறியிருந்தேன்.

திடீரென்று சாயங்கால் நல்ல வலி வந்தும் குழந்தை தலையிறங்கவில்லை என்றவுடன் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும்; குழந்தைக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டுவிடக்கூடாது என்று அவசர அவசரமாக மயக்கமருந்து டாக்டருக்கு போன் செய்தேன். நான் வேறு ஒரு ஆஸ்பத்திரியில் ஒரு நோயாளிக்குச் சிகிச்சை செய்து முடிக்கும் தறுவாயில் இருந்ததால் “நான் 20 நிமிடத்தில் வந்துவிடுகிறேன். நீங்கள் எல்லாம் தயார் செய்யுங்கள்” என்றார்.

அப்பொழுதும் என் தங்கை 1008 மந்திரங்களைப் படித்து முடித்துவிட்ட பின்னரே தியேட்டருக்குக் கொண்ட சென்றோம். 20 நிமிடம் ஆகியும் டாக்டர் வராததால் நான் மறுபடியும் போன் செய்தேன். “நான் விரைவில் வந்து விடுவேன். நீங்கள் wash செய்து ஆபரேஷன் தியேட்டரில் உடையணிந்து தயாராக நின்றேன். அவர்கள் வரவில்லை. என் உயிர் துடிக்க ஆரம்பித்துவிட்டது.

கிட்டத்தட்ட ஒருமணி நேரம் ஆகிவிட்டது. நான் அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்து குழந்தைக்கு ஏதேனும் ஆகிவிட்டால் நான் என்ன செய்வேன்? என்று என் தலைசுற்ற ஆரம்பித்துவிட்டது.

நான் மறுபடியும் டாக்டருக்கு போன் செய்தேன். அவா்கள் கூறினார்கள்; “டாக்டர்! இங்கு ஆபரேஷன் முடிந்துவிட்டது. ஆனால் பேஷண்ட் மயக்கத்திலிருந்து மீண்டு வரவில்லை. ஆதலால் பேஷண்டை வேறு பெரிய ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸில் கொண்டு போகிறோம். பேஷண்ட மூச்சு விடாததால் நானும் கண்டிப்பாகக் கூடவே செல்ல வேண்டியிருக்கிறது. நீங்களே Spinal – ல் மயக்க ஊசி போட்டு ஆபரேஷன் செய்யுங்கள். உங்களால் முடியும். “You can!” “You can” என்று கூறி போனை வைத்துவிட்டார்கள். “You can!” “You can” என்று அவர்கள் கூறியது எனக்கு ஒரு அசரீரி வாக்கு போன்றிருந்தது.

நான் என் தங்கையிடம் “பிரேமா! அக்காவிற்கு ரொம்ப பயமாக
இருக்கிறது. நீ சிறிது நேரம் ஆட்டாமல் இரு. நான் Spinal ல் மயக்க ஊசி போட்டு விடுகிறேன்” என்றேன். ஊசியைப் பிடித்த உடனே என் கைகள் நடுங்க ஆரம்பித்துவிட்டன. என்னால் ஊசி போட முடியவில்லை என்றால் என்ன செய்வது என்று “ பங்காரு அம்மா” அவர்களின் மூலமந்திரத்தை உச்சரித்துக் கொண்டே Spinal ல் மயக்க ஊசி ஒரே ஷாட்டில் போட்டுவிட்டேன்.

பிறகு மயக்க மருந்து டாக்டர் இல்லாததால் அறுவை சிகிச்சை செய்யவும், ஆக்ஸிஜன் வைக்கவும் கூட எனக்கு உதவிக்கு நர்ஸ்கள் போதவில்லை. என் தாயாரைத் தியேட்டருக்குள் உதவிக்குக் கூப்பிட்டுக் கொண்டேன்.

ஆகக்கூடி தியேட்டரில் இருந்தவர்கள் அனைவரும் மூலமந்திரம் ஜபிக்க “ஓம் சக்தி” என்ற ஓங்காரத்துடன் குழந்தையை வெளியே எடுத்தோம். அதை ஆபரேஷன் தியேட்டரில் என் தாய்தான் “ஒம் சக்தி, பராசக்தி” என்று கூவிக் கொண்டே பெற்றுக் கொண்டார்கள்.

அது ஒரு ஆபரேஷன் தியேட்டர் போலவே இல்லை. “ பங்காரு அம்மா” அவர்களின் கருவறைப் போல் தோற்றம் அளித்தது. தன் அருளினால் தன் பக்ததைக்குத் தரித்த குழந்தையை, “ ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அம்மா” அவர்களின் பக்தைகள் மட்டும் தொடவேண்டும். அந்தக் குழந்தையைக் கூட அவள் பக்தைதான் முதலில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று, வரவிருந்த மயக்க மருந்து டாக்டரையும் தடுத்து நிறுத்தி ஆபரேஷன் தியேட்டரை கருவறை போன்று மாற்றி இப்படி ஒரு அற்புத நாடகம் ஆடினாளோ!

ஒரு சிறு குழந்தை தனக்குப் பிடித்ததை மற்றவர்கள் தொடக்கூடாது என்று மறைத்து மறைத்து வைப்பதைப் போல் இவள் நாடகம் ஆடினாளோ!

நன்றி!

ஓம் சக்தி!

பக்கம் :(47 – 51).

டாக்டர். சிவகாமு தண்டபாணி, M.D.,D.G.O.,

அவதார புருஷர் அடிகளார், பாகம் 13.