ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களுக்கு வந்த கோபம்.

0
808

ஆன்மிகப் பயணம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும். மாலை 6 மணிக்குமேல் அடிகளாரை எங்கும்அழைத்துக்கொண்டு போகாதே! ஓய்வு கொடு! என்பது அன்னை ஆதிபராசக்தியின் உத்தரவு.

அன்று நிகழ்ச்சிகள் இரவு 8.00 மணி வரை நீண்டுகொண்டே போயின.
கடைசி ஊர் ராணிப்பேட்டை. அங்கேயொரு தொழிற்சாலையில் அருள்திரு அம்மா அவர்களுக்கு பாத பூஜை! அங்கு வந்து சேர்வதற்கு இயவு 8 மணி ஆகிவிட்டது. அருள்திரு அம்மா மற்றும் அறநிலைப் பொறுப்பாளர்களும், மாவட்டபொறுப்பாளர்களும் அந்த தொழிற்சாலையின் எதிரே காரில் வந்து இறங்கினார்கள்.

பாதபூஜைக்கு அழைத்த அந்த தொழிற்சாலை அதிபர் அங்கே காணோம். அது ஒரு ஷெட் போல அமைந்த தொழிற்சாலை. கதவுகள் திறக்கக்கூடிய நிலையில் இருந்தன.

பயணத்திட்டம் வகுத்து அழைத்துச் செல்கிற பொறுப்பாளர் ஒரு டாக்டர்.

பாதபூஜைக்கு அழைப்பு விடுத்துவிட்டு வந்த இடத்தில் ஆளைக் காணோம் என்றால் எப்படி இருக்கும்? அருள்திரு அம்மா அவர்களுக்குக் கோபம் வந்துவிட்டது. ‘எங்கே அந்த டாக்டர்’ கூப்பிடு அவரை’ என்றார் அம்மா.

அவர் எதிரே வந்து நின்றார். ‘ என்னை நினைத்துக்கொண்டு என்னை இப்படி எல்லாம் இழுத்தடிக்கிறாய்? இப்போ என்னைய்யா மணி! ஏதோ பணத்துக்காக இப்படி இழுத்த இழுப்புக்கெல்லாம் வருகிறவன் என்றுநினைத்துக்
கொண்டாயா? என்ன நினைத்துக் கொண்டாய் உன் மனத்தில்?பாத பூஜைக்கு கூப்பிட்டு வந்தாயே… கூப்பிட ஆள் இருக்கானாய்யா?’என்று பொரிந்து தள்ளினார்கள் அம்மா.

அம்மா அவர்களின் அப்படிப்பட்ட கோபத்தை அவர்களோடு நீண்ட நாள் பழகிய தொண்டர்கள் கூடப் பார்த்ததில்லை. சுற்றியிருந்தவர்கள் வேர்த்து வெலவெலத்துப் போயினர்.

பாதபூஜைக்கு அழைத்தவர், அருள்திரு அம்மா வரும் வேலையில் எங்கோ போய் விட்டார். பாதபூஜை ஏற்பாடு செய்த டாக்டருக்கு அவமானமாகி விட்டது.

‘ சரி அவன் வந்து வரவேற்காமல் போனால் என்ன?கை நீட்டிப் பணம் வாங்கி விட்டாயல்லவா? போகட்டும்! நானே போய் தொழிற்சாலையில் தீபாராதனை செய்து விடுகிறேன் நீங்கள் வராதீர்கள். அம்மாவின் டாலரைக் கழுத்தில் அணிந்துள்ளவர்கள் யாராவது இருக்கிறீர்களா?அவர்கள் மட்டும் என்னோடு வரலாம் என்று சொல்லிவிட்டு விடுவிடுவென்று அந்த தொழிற்சாலைக்குள் புகுந்தார்கள் அம்மா.

அந்த வேளையில் யார் கழுத்திலும் அம்மாவின் டாலரில்லை. எனவே, மற்றவர்கள் வெளியே நின்றுவிட்டார்கள். அம்மா மட்டுமே தன்னதனியாக அந்த தொழிற்சாலைக்கு சென்று திருவடி பதித்தார்கள். அந்தந்த தொழிற்சாலையைச் சுற்றி ஒரு அருட்பார்வை வீசினார்கள். அடுத்து அங்கே மாடடி வைக்கபட்டிருந்த கருவறை அன்னையின் படத்திற்கு எதிரே கற்பூரம் ஏற்றித் தாமே தீபாராதனை செய்துவிட்டு வெளியே வந்தார்கள்.

உடனிருந்தவர்கள் எல்லோரும் வெளியே நின்றபடி நடந்தவற்றை வேடிக்கை பார்த்தபடி இருந்தார்கள்.

‘ இன்னும் எங்கய்யா என்ன வரச் சொல்றே…?’ என்று கேட்டார்கள் அம்மா.

இதுதாம்மா கடைசி ! இனி ஓய்வெடுக்கப் போகவேண்டியதுதாம்மா! என்றார்கள் பொறுப்பாளர்கள்.

‘ சரி கிளம்பு ! என்று உத்தரவிட அனைவரும் காரில் கிளம்பி ஓய்வெடுக்கும் விடுதிக்கு வந்து சேர்ந்தார்கள்.

உடன் வந்த பொறுப்பாளர்கள், தொண்டர்கள் ஒருவர் முகத்திலும் ஈயாடவில்லை. அம்மாவின் கோபத்திற்கு ஆளாகிவிட்டோமே என்று அனைவரும் கவலை.

அங்கே அப்போது… ஓய்வறைக்குள்ளே அம்மா. அவர்களுடைய பாதுகாப்பு தொண்டர்.

அந்த பாதுகாப்புத் தொண்டரை அழைத்து அம்மா, ‘ இதோ பார் ! பார்த்துக்கொள்! பார்த்துக்கொண்டாயா? என்று தம் முழங்கால்கள் இரண்டையும் காட்டினார்கள்.

அம்மா…! என்று அதிர்ச்சி யில் கூவினார் அந்த தொண்டர் ஆம்! அம்மாவின் அந்த முழங்கால்கள் இரண்டும் கூரிய நகங்களால் கீறப்பட்டு வரிவரியாக இரத்த கசிந்தபடி இருந்தது.

அம்மாவின் டாலரை அணியாத எவணாவது என்னுடைன் அந்த தொழிற்சாலைக்கு உள்ளே வந்திருந்தால் ஒருவன்கூட உருப்படியாக வெளியே வந்திருக்கமாட்டார்கள் . அதனால் தான் எல்லோரையும் வெளியில் நிற்க வைத்துவிட்டு நான் மட்டும் உள்ளே போனேன். கண்ட கண்ட பிசாசுகள் இருக்கும் இடத்திற்கெல்லாம் என்ன இழுத்துக்கொண்டு போகிறார்கள். உம் என்ன செய்வது! எந்தெந்த இடத்தில் என்னென்ன இருக்கிறது என்று பாவம் அவர்களுக்கு என்ன தெரியும்? என்று சொல்லி விட்டுக் குளியலறைகுச் சென்ற அம்மா சற்று நேரம் சென்றபின் கைகால், முகத்தை அலம்பிக் கொண்டு வெளியே வந்தார்கள்.

அம்மா! மருந்துக் கடைப் போய் இதற்கு ஏதாவது ஆயிண்ட்மெண்ட்(Ointment) வாங்கி வருகிறேன…. என்றார். அந்த தொண்டர்.

அதெல்லாம் ஒன்றும் வேண்டாம். இப்போது பார்! சரியாகப் போய்விட்டது என்று கால்களைக் காட்டினார்கள். கீறப்பட்ட அந்த காய்ங்கள் எதுவுமே காணோம். அவை எப்படி அதற்குள் மாயமாய் மறைந்தன?

அடுத்த வாரம் அம்மா அவர்களிடம் ஆசிபெற வேண்டி டாக்டர். சக்தி விசாலாட்சி அம்மையார் வந்தார். இராணிப்பேட்டையில் நடந்த சம்பவம் பற்றி விசாரித்தார்.

அம்மா கூறினார்கள்

ஆமாம்மா ! பாதபூஜைக்கு அருள்திரு அம்மா அவர்களை அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லி இவர்கள் பாட்டுக்கு வேண்டியவர்களுக்கு ஏற்பாடு செய்து கொண்டு அழைத்துப் போகிறார்கள். நேரம் கெட்ட நேரத்திலேல்லாம் என்னை அழைத்துக் கொண்டு போகிறார்கள்.

அந்த இராணிப்பேட்டை தொழிற்சாலைக்குப் போனேன். அங்கிருந்த அட்டை பிசாசு என் கால்களைப் பிராண்டி எடுத்து விட்டது. அங்கே செய்வினை வைத்திருக்கிறான். நம் தொண்டர்கள் யாரும் அம்மா டாலரை அணிந்திருக்கவில்லை. அவர்கள் வந்திருந்தால் ஒவ்வொருவர்க்கும் சங்கடம் வந்திருக்கும். என்ன செய்வது? புரியாதாவர்களாக இருக்கிறார்கள்’என்று சொல்லி முடித்தார்கள் அம்மா. இந்த நிகழ்ச்சி மூலமாக நாம் அறிய வேண்டிய படிப்பினைகள் உண்டு.

மகான்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்று சாரதாதேவியார் அறிவுரை கூறியிருக்கிறார்.

‘ மகான்கள் குழந்தைகள் போல! அவர்கள் நாம் இழுத்த இழுப்புக்கெல்லாம் வருவார்கள். எனவே அவர்கள் மீது நம் விருப்பத்தைத் திணிக்கக் கூடாது. நம் விருப்பப்படியெல்லாம் அவர்களை ஆட்டி வைக்கக்கூடாது. அப்படி நடந்தால் அந்த பாவம் நம்மைச் சேரும். அதற்குரிய விளைவுகளை நாம் அனுபவிக்க நேரிடும்’ என்றார்.

அம்மா அவர்களிடம் எப்படிப் பழக வேண்டும் என்பது பற்றி அன்னை ஆதிபராசக்தியும் அருள்வாக்கில் குறிப்பிட்டது உண்டு.

‘ அம்மா அவர்களை தனிமையில் இருக்க விடு! அவர்களுக்கு ஒய்வு கொ! அவராக வாய் திறந்து ஓய்வு கேட்க மாட்டார். நீங்கள் தான் அவன் காதில் போடாதே! அம்மாவிடம் அதிகமாகவும் நெருங்காதே! விலகியும் போய்விடாதே! அவரை வருத்தி அருள்பெற நினைக்காதே! அவரை பொன்முட்டையிடும் வாத்து போல ஆக்கி விடதே!’ என்றெல்லாம் தொண்டர்களிடம் சொல்லியதுண்டு. புரிந்து கொண்டு நடப்பவர்கள் மிகவும் சிலர். புரியாமல் நடப்பவர்களே மிகுதி! ஒரு வீட்டில் பாதபூஜை ஏற்பதற்காகச் செல்வதில் உள்ள சிரமம் பற்றித் தொண்டர்களிடம் அம்மா ஒருமுறை சொன்னார்கள்.

‘ நீங்கள் 100, 200 வீடுகளுக்கு நினைத்தால் போய்வர முடியும். என்னால் அப்படி போய்விட்டுத் திரும்ப முடியாது. உங்களுக்குத் தெரியாது. எத்தனை தீய சக்திகளை விரட்ட வேண்டியிருக்கிறது தெரியுமா? அவற்றையெல்லாம் மீறிக் கொண்டு தான் அந்த வீடுகளில் நான் நுழைய வேண்டியிருக்கிறது. பாத பூஜை ஏற்றுக் கொண்டு நான் வெளியே வரும்போது என் முகத்தைப் பார்த்தால் உங்களுக்கு ஓரளவு புரியும்’ என்றார்கள்.

(வேலூர் மாவட்டத்தில் ஆச்சரியப்பீட நாயகர் ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களின் ஆன்மீக பயணத்தின் போது நடந்த அற்புதங்கள்)

பக்கம்: 336-340.

மேல்மருவத்தூர் அன்னை ஆதிபராசக்தி சித்தர் பீடம் தல வரலாறு. பாகம்-2.