விதியை மாற்றிய பங்காரு பகவான்

0
939

நான் இராமநாதபுரம் மாவட்டம் கடுக்காய் வலசை கிராமத்தில் 29.05.1949 அன்று பிறந்தேன்.

என் தாய்வழிப்பாட்டனார் சோதிடக் கலையில் வல்லவர். அவர்தான் எனது ஜாதகத்தை ஒரு பனை ஓலையில் எழுதிவிட்டுச் சென்றார்.

இவனுக்கு 50 வருடம்தான் ஆயுள்! 1999 வரை இரண்டாவது மனைவிதான் நிலைத்திருப்பாள். இவனுக்கு குழந்தையே பிறக்காது. என்று துள்ளியமாக எழுதிக் கொடுத்துவிட்டுத் தாத்தா மறைந்துபோனார்.

எனது வாலிபப் பருவம் வந்தது. 1972-ல் வங்கிப் பணியில் சேர்ந்தேன். திருமண வயதில்தான் என் தாத்தா கணித்த ஜாதகத்தைப் படித்துப் பார்த்தேன். 50 வயதுதான் என் ஆயுள்! முதல் மனைவி நிலைக்க மாட்டாள். இரண்டாவது மனைவிதான் நிலைத்திருப்பாள். குழந்தையே பிறக்காது என்று தெரிந்து கொண்ட பிறகு திருமண வாழ்வில் வெறுப்பு ஏற்பட்டது.

திருமணமே வேண்டாம் என்றே மறுத்து வந்தேன். யாராவது வற்புறுத்தினால் என் ஜாதகத்தைப் படித்துப் பார்த்துக் கொள்! எனக்கு இரண்டு தாரமாம்! முதல் மனைவி நிலைக்க மாட்டாளாம்! குழந்தை பாக்கியமும் இல்லையாம்! இந்த லட்சணத்தில் எனக்குக் கல்யாணமாவது! குடும்பமாவது! என்று வெறுப்போடு பேசி வந்தேன். என் உறவினர்கள் என் திருமணப் பேச்சு எடுப்பதை நிறுத்திக் கொண்டார்கள்.

1981-ஆம் ஆண்டு வங்கிப் பணியில் இராமநாதபுரத்துக்கு மாறுதல் வந்தது.

மேல்மருவத்தூர் போய்_வா!

என் சகோதரி மேல்மருவத்தூர் அம்மா அவர்களின் தீவிர பக்தை. மேல்மருவத்தூர் போய் வரும்படியும், ஆன்மிக குருஅருள்திரு பங்காரு அடிகளார் அவர்களை அடிக்கடி தரிசித்துவிட்டு வரும்படியும் வற்புறுத்தி வந்தார்.

வங்கிப் பணியிலும், தொழிற்சங்கப் பணிகளிலும் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் மேல்மருவத்தூர் செல்வதில் எனக்கு நாட்டம் வரவில்லை.

ஒருமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் எங்கள் தொழிற்சங்கம் தொடர்பான வழக்கிற்காகச் சென்னை செல்லவேண்டிய கட்டாயம் வந்தது.

சென்னைக்குப் போகிறாய்! வழியில்தானே மேல்மருவத்தூர் இருக்கு! இறங்கி ஒரு தரம் அந்த அம்மாவை கும்பிட்டுவிட்டு வந்தால் என்ன…? ஊரும், உலகமும் அங்கே தேடி வருது. நீ என்னடா என்றால் அங்கே இறங்கிச் சாமி கும்பிட்டுவிட்டு வருவதற்கு யோசனை செய்கிறாய் என்று அன்பாகக் கடிந்து கொண்டார் என் சகோதரி.

இந்த முறை சென்னை செல்லும்போது மருவத்தூர் அம்மா அவர்களை (ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்) கும்பிட்ட பிறகே சென்னை செல்வோம் என்று கருதிக் கொண்டு மேல்மருவத்தூரில் இறங்கினேன்.

வாழ்க்கையில் திருப்பு முனை

மேல்மருவத்தூர்! அதுதான் என் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்தது.

அன்று காலை நமது குருபகவான் சித்தர்பீடத்திற்கு வந்தார்கள். அம்மா வர்றாங்க! என்று தொண்டர்கள் அங்கும் இங்கும் ஓடினார்கள். நான் ஓம் சக்தி மேடையருகே நின்று கொண்டிருந்தேன்.

உள்ளே செல்லுமுன் அம்மா என்னை உற்றுப் பார்த்து விட்டு நகர்ந்தார்கள். நேரம் அதிகமாகிவிட்டதால் உடனே அங்கிருந்து கிளம்பி உயர்நீதிமன்றம் வந்து சேர்ந்தேன்.

நீதிமன்றத்தில் குருபகவான் அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்

அன்று நான் செவ்வாடையில் இருந்தேன். நீதிமன்றத்துக்கு வரவேண்டிய எனது வக்கீல் வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லையாம். ‘ஐயா! எனது வக்கீல் வரவில்லை. அவருக்கு உடல்நிலை சரியில்லையாம். ஆதலால் வாய்தா கொடுக்க வேண்டும்’ என்று நீதிபதியிடம் முறையிட்டேன்.

உங்கள் வக்கீல் வரவில்லையென்றால் பரவாயில்லை. உங்கள் வழக்கு என்ன? அதன் விபரத்தைச் சொல்லுங்கள் என்றார் நீதிபதி. அப்போது எதிரே நம் குருபகவான் இருப்பது தெரிந்தது. 20 நிமிடங்கள் என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. வழக்கு வெற்றி பெற்றது. தீர்ப்பு குறித்த ஆணையை வாங்கிக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.

என் வழக்கின் விபரம் என்ன? வாய்தா வேண்டும் என்பதற்கான காரணங்கள் என்ன என்பது பற்றி 20 நிமிடங்கள் ஆங்கிலத்தில் பேசியிருக்கிறேன். என்னை அடக்கி வைத்துவிட்டு அம்மா பேசியிருக்கிறாள் என்ற விவரம் பிற்பாடுதான் ஒவ்வொன்றாகப் புரிய வந்தது.

அங்கிருந்த ஒரு பெண் வக்கீல்! இன்று மத்திய அரசில் பெரிய பதவியில் இருக்கும் ஒருவரின் மனைவி அவர். என் தோற்றத்தைப் பார்த்து அவர் இளக்காரமாக நினைத்துவிட்டார் போலும். ஆங்கிலத்தில் நான் வழக்காடிய திறமையைக் கண்டு நீங்கள் என்ன மேல்மருவத்தூர் பக்தரா? என்று விசாரித்துவிட்டு, பரவாயில்லே! உங்களுக்கு மேல்மருவத்தூர் அடிகளாரின் அருள் ரொம்பவே இருக்கு! இங்கிலீஷில் பிரமாதமாகப் பேசுகிறீர்களே என்று ஆச்சரியப்பட்டார்.

நானா பேசினேன்? என்னை எனக்குள் அடக்கி வைத்துவிட்டுப் பங்காரு பகவான் பேசினார் என்ற அற்புதம் அவருக்குத் தெரியாதே…!

அம்மா கூப்பிட்டுக் கேட்டது

நீதிமன்றத் தீர்ப்பைப் பெற்றுக் கொண்டு அடுத்தநாள் மருவத்தூர் வந்தேன். அன்று போலவே அம்மா வந்தார்கள். அருட்கூடம் சென்றார்கள். சிறிது நேரம் கழித்து, சகாதேவன் யாரு? என்று செக்யூரிட்டி ஒருவர் தேடினார். நான் அவரிடம் சென்று நின்றேன்.

உங்களை அம்மா கூட்டிட்டு வரச்சொன்னாங்க! வாங்க! என்று அழைத்துச் சென்றார். அம்மாவின் திருவடிகளில் விழுந்து வணங்கினேன்.

“என்ன சார்? நீதிமன்றத்தில் வழக்கில் வெற்றி கிடைத்து விட்டதா? அம்மா ஆங்கிலத்தில் பேசியதா?” என்றார்கள்.

ஆமாம்மா என்றேன், நன்றியுடன்.

திருமணம் செய்து கொள்

அடுத்து ஒரு நாளைச் சொல்லி அன்றைக்கு என்னை வந்து பாருங்கள் என்றார்கள். அவ்வாறே அந்த நாளில் சென்றேன்.

ஆன்மிகம் பற்றிச் சில செய்திகளைச் சொல்லி அறிவுரையும் வழங்கினார்கள்.

ஆரம்பத்திலேயே, “நாம் ஊசி முனையில் நிற்கிறோம். கத்தி முனையில் நிற்கிறோம், அக்னியில் நிற்கிறோம்.

தனிமனித ஒழுக்கம்! அந்த ஒழுக்கத்தில் மட்டும் சரியாக இருந்து விட்டால் ஆன்மிகத்தில் நிலைத்து நிற்கலாம்.

மற்றவர்களுக்காக வாழ வேண்டும். முடிந்த வரை நல்லதையே செய்ய வேண்டும். இந்தப் பக்குவத்திற்கு வரவேண்டுமானால் திருமண வாழ்க்கை மிக முக்கியம்” என்றார்கள்.

திருமணம் செய்து கொண்டு ஆன்மிகத்தில் உயர முடியும் என்பதற்குப் பல எடுத்துக்காட்டுகளைக் கூறினார்கள். திருமணத்துக்கும் சம்மதிக்க வைத்தார்கள்.

குழப்பத்துடன் அருட்கூடத்தை விட்டு வெளியே வரக் காலடி எடுத்து வைக்கிறேன். உங்களுக்குரிய பெண் உங்கள் மன்றத்துக்கே வரும். முடித்துக் கொள்ளலாம் என்று அம்மா சொல்லி அனுப்பினார்கள்.

தம்பியின் கனவில

இது ஒரு புறம் இருக்க, என் தம்பி பச்சையப்பன் ஒரு கனவு கண்டானாம். காலமான என் தந்தை, தாத்தா, ஆச்சி மூவரும் தோன்றுகிறார்கள். உன் அண்ணனுக்குத் திருமணம் செய்யவில்லையே என்று நினைக்க வேண்டாம்; இவர்தான் பெண்! என்று ஒரு பெண்ணைக் காட்டி, இதுதான் பெண்! திருமணம் சீக்கிரமே நடக்கும் என்று சொல்லி மறைந்து விட்டார்களாம்.

இந்த கனவிற்குப் பிறகுதான் அந்தப் பெண் செவிலியராக(Nurse) வேலை கிடைத்து இராமநாதபுரத்துக்கு வந்தாள்.

ஆயுள் நீட்டிப்பு

அடுத்து ஒரு வழக்கிற்காகச் சென்னை செல்லும் போது, இடையில் மருவத்தூரில் இறங்கி ஆன்மிக குருஅருள்திரு அம்மாவைப் பார்க்கப் போனேன். அங்கே அம்மா, “மணப்பெண் வந்து விட்டதே! உன் தம்பியிடம் கனவிலும் சொல்லிவிட்டேன்.

ஆயுள் 50 என்றுதானே நினைக்கிறாய்? 10 ஆண்டுகள் அதிகமாய் 60 கொடுத்து விடலாம்! திருமணம் நடந்த பிறகு, சென்னையில் நடக்கப் போகும் உலக சமாதான மாநாட்டு வேள்வியில் இருவரும் கலந்து கொண்டுஆசிர்வாதம் வாங்கிக் கொள்” என்று கூறினார்கள்.

இது ஒரு கலப்புத் திருமணம்! எங்கள் பகுதியில் எங்கள் இரண்டு சமுதாயத்திற்குமே ஆகாது.

11.7.88 அன்று எங்கள் திருமணம் நடைபெற்றது. 8.8.88 அன்று திருமணத்தைப் பதிவு செய்து விட்டு அதன்பின் உலக சமாதான ஆன்மிக மாநாட்டில் கலசவிளக்கு வேள்விப் பூசையில் கலந்து கொண்டோம். அம்மாவிடம் ஆசி பெற்றோம்.

நீங்கள் இருவரும் இணைந்து ஆன்மிகப் பணி செய்தால் ஆயுள் 75 தரலாம் என்றார்கள்.

1989-ல் எங்களுக்கு ஒரு பையன் பிறந்தான். அம்மாவிடம் சென்று ஆசி பெற்றோம்.

சோதனைக் காலம்

அதன்பின் எங்கட்குச் சோதனைக் காலம்! நாங்கள் இருவரும் இணைந்து ஆன்மிகப் பணிகள் செய்ய முடியவில்லை. மூன்றாவது ஆட்கள் எங்கள் குடும்பத்தில் நுழைந்து ஆன்மிகப் பணிக்கு முட்டுக்கட்டை போட்டார்கள்.

ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் அவர்கள்(அம்மா) கொடுத்த அனுபவங்களை மறவாமல் அவள் அருளைப் பரிபூரணமாகப் பெற நான் முயன்று கொண்டிருந்தேன். அம்மாவின் பொற்பாத கமலங்களை இறுகப் பற்றிக் கொண்டேன்.

2006-ல் பதவியிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். 2009-ல் என் ஆயுட்காலம் முடியும் காலம் வந்தது.

ஓம்சக்தி மேடை அருகே இருந்து கொள்

60-ஆம் ஆண்டு ஆன்மிககுரு அருள்திரு அம்மா அவர்களிடம் ஆசிபெற விரும்பினேன். ஆனால் குடும்பத்தில் ஒத்துழைப்பு இல்லை.

(ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார்)அம்மாவிடம் வந்து கேட்டேன். 31.05.2009 அன்று குருவாயூர் எக்ஸ்பிரஸ் வண்டியில் வந்து ஓம் சக்தி மேடையருகே இருந்து கொள்! என்றார்கள்.

31.05.2009 அன்று இரவு ஓம் சக்தி மேடை அருகே வந்துவிட்டேன்.ஓம் சக்தி மேடையைவிட்டு வெளியேறி விட்டால் என் ஆயுள் முடிந்து விடும் என்பது தெரியும்.

எமனையே பார்த்தேன்

11.30 மணி இருக்கும். ஆலயத்தில் முகப்பில் வடக்கே ஒரு வளைவு இருக்கும் அல்லவா? அதற்குச் சற்று தூரத்தில் பார்க்கிறேன் சொன்னால் நம்ப மாட்டார்கள். சினிமாவில் எமன் உருவத்தைப் பார்த்திருக்கிறோம்! அதே போல உருவம்! கையில் பாசக்கயிறு! எருமை வாகனம்! சினிமாவில் வரும் எமனுக்குக் கறுப்பு நிறம்! நான் பார்த்த எமனுக்குச் சிவப்பு நிறம். அந்த நேரத்தில்தானா சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்பட வேண்டும்?

என்னை ஓம் சக்தி மேடையை விட்டுக் கிளப்பி வெளியே கொண்டு வர வேண்டும் என்பது அவன் திட்டம் போலும் சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதலை என்னால் கட்டுப் படுத்த முடியவில்லை.

ஓம் சக்தி மேடையை விட்டுக் கடந்தேன். அந்த இடத்தில் எமன் வந்து நின்றான்.

அப்போது நடந்த அதிசயத்தை என்னவென்று சொல்வேன்? எப்படி வருணிப்பேன்?

“என் இடது புறம் அதர்வண பத்ர காளி வந்து நிற்கிறாள்! வாய் பிளந்து பார்க்கிற போதே இன்னொரு அதிசயம்! ஆம்! என் வலப்புறத்தில் கருவறை அம்மா நிற்கிறாள்”

தேவி டெக்ஸ்டைல் கடையின் எதிரே எமன் வந்து விட்டான்!

“அந்த முகப்பின் வளைவிற்கு அருகில் அருள்திரு பங்காரு பகவான் சிவப்பு வேட்டியுடனும், வெள்ளைச் சட்டையுடனும் வழக்கம் போல அமைதியாக வந்தார்கள்”. அவர்களை பார்த்த மாத்திரத்தில் வந்த வழியே பின்னங்கால்களை எடுத்துவைத்து எருமை நகரத் தொடங்கியது! எமனோ அடிகளார் திருமண மண்டபம் வரை சென்றுவிட்டான் அதுவரை அம்மா அமைதியுடன் நிற்கிறார்கள்!

அதன் பின்னர் நம் குருபகவான் அருள்திரு அம்மா அவர்கள் அருட்கூடம் சென்று விட்டார்கள். கருவறை அம்மா கருவறை சென்று விட்டது.

அதர்வண பத்திர காளியும் தனது கருவறைக்குக் சென்று விட்டாள்!

சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் கட்டுப்பட்டது.

நானும் ஓம் சக்தி மேடையருகே வந்து படுத்துக் கொண்டேன்.

மறுநாள் காலை நம் குருபகவானைத் தரிசிக்க அருட்கூடம் சென்றேன்.

எமனுக்கே_அல்வா

“என்ன திருநெல்வேலிக்காரரே! எமனுக்கே அல்வா கொடுத்தாச்சா?” என்றார்கள். எல்லாம் அம்மா நீங்கள் போட்ட உயிர்ப் பிச்சை! எனச் சொல்லிக் கண் கலங்கினேன்.

இன்னும் எத்தனை வருடம் வேணும் என்று கேட்டார்கள். எனது மகன் திருமணம் வரை என்றேன்.

“எல்லாம் அம்மா பார்த்துக்கும்” என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.

50 தாண்டி 60 வயதையும் தாண்டி இன்னும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

முதல் மனைவி உயிரோடுதான் இருக்கிறாள். எனக்குப் பையன் பிறந்து பொறியியல் படித்துப் பொறியாளராக வேலை செய்கிறான்.

50 வரைதான் ஆயுள் என்பது சோதிடப்படி விதி!

முதல் மனைவி நிலைக்கமாட்டாள் என்பது விதி.

எங்களுக்குக் குழந்தை பாக்கியம் இல்லை என்பது விதி!

என் விதியை மாற்றியது பங்காரு பகவான் அவர்கள்தான் மார்க்கண்டேயன் கதை என்றோ எழுதப்பட்டது.

என் கதை 2009-ல் நடந்தது! இதையெல்லாம் எழுதினால் எத்தனை பேர் நம்பப் போகிறார்கள் என்ற நினைப்பும் எனக்குள் வருகிறது!

அனுபவித்தவன் சொல்கிறேன். நம்பினால் நம்புங்கள்.

ஓம்சக்தி!