19-2-1984 ஞாயிறு மாலை சுமார் ஆறுமணி. என்னுடைய இல்லத்தில் பழுது பட்டிருந்த மின்சார சுவிட்சுக்கு ஸ்க்ரூ வாங்கி வர வெளியே சென்றிருந்தேன். செல்வதற்கு முன் மனைவியிடம் பழுதடைந்த சுவிட்சைப் பற்றி எச்சரித்துவிட்டுச் சென்றேன்.
மாலை நேரமாதலால் விளக்கு ஏற்ற எண்ணிய என் மனைவி பழுதடைந்த சுவிட்சை ஜாக்கிரதையாகப் போட்டுவிட்டு சிறிது நேரம் கழித்து அதற்கு அடுத்துள்ள சுவிட்சைப் போட முனைந்திருக்கிறாள். தவறுதலாகப் பழுதுபட்ட சுவிட்சில் கைவைத்து மின்சாரம் பாய்ந்து உணர்வு இழந்து விழுந்துவிட்டாள்.
நான் மாலை 7 மணியளவில் வந்து பார்த்தபோது என் வீடு முழுவதும் ஒரே கூட்டம். டாக்டர் சிகிச்சை அளித்துக்கொண்டு இருந்தார்.
மனைவியின் கண்கள் டார்ச் ஒளியில் அசையவே இல்லை. அம்மோனியா திரவத்தை மூக்கில் பலமுறை வைத்தும் பலனில்லை. கை,கால்கள் விறைத்து ஐஸ் போல் குளிர்ந்துவிட்டன. நாடித்துடிப்பு இறங்கிக் கொண்டிருந்தது. வாயில் சூடாகக் கொடுத்த காபி வெளியே வழிந்துவிட்டது. இதயத்துடிப்பு மட்டும் இன்னும் உயிர் போகவில்லை என்று சொல்லிக் கொண்டிருந்தது.
டாக்டர் சுமார் 20 நிமிடத்தில் 9 ஊசிகள் போட்டார். ஒரு விக்ஸ் பாட்டில் உள்ளங்கைகளிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்துவிடப் பட்டிருந்தது. உடம்பில் சூடு தணியாமல் பார்த்துக் கொள்ளும்படியும் 9 மணிக்கு நிலைமையை வந்து சொல்லும்படியும் சொல்லிவிட்டு டாக்டர் சென்றுவிட்டார். சிறிது நேரத்தில் ஜன்னி வந்தது. பிறகு பழையபடி உடல் விறைத்துவிட்டது.
என்னுடன் இருந்து உதவிசெய்த மன்றப் பொருளாளர் நிமிடத்திற்கு ஒருமுறை நாடிபார்ப்பதும், சத்தம் கொடுத்துக் கூப்பிட்டுப் பார்ப்பதுமாக இருந்தார்.எனது மனைவியிடம் அசைவே இல்லை. இந்நிலையில் அவர் அன்னையின் மூலமந்திரத்தை சொல்ல ஆரம்பித்தார்.
நான் சக்திக் கவசத்தை படித்து முடித்தேன். எட்டு வயதான என் மகனிடம் மூலமந்திரம் இருக்கும் பக்கத்தை எடுத்துக் கொடுத்து அம்மாவின் தலைப்பக்கத்தில் உட்கார்ந்து தொடர்ந்து படி! என்றேன்.
எனது மகனும், பொருளாளரும் திரும்பத்திரும்ப மூலமந்திரத்தைச் சொல்லியவாறு இருந்தனர்.
நான் என்னுடைய மனச் சஞ்சலங்களை எல்லாம் ஒதுக்கிவிட்டு அம்மாவை எண்ணி, அம்மா! இரண்டு மணி நேரமாக நாங்கள் போராடிக்கொண்டு இருக்கிறோம்.என்னால் முடிந்த அளவு தெரிந்த டாக்டரை அழைத்து வந்து வைத்தியமும் செய்து விட்டேன்.இதுவரை பலன் ஏதும் இல்லை.
எங்களது சக்தியை மீறி நிலைமை செல்கிறதம்மா….
என் கடமையைச் செய்துவிட்டு உன்னிடம் வந்திருக்கிறேன் அம்மா!
இனி நான் செய்வதற்கு ஒன்றுமில்லை. உன்னுடைய மூலமந்திரத்தை இரண்டுபேர் இடைவிடாது சொல்வது எங்கும் நிறைந்திருக்கும் உனக்கு கேட்காமல் இருக்க முடியாதம்மா….
தன்னுடைய தாய்க்காக எனது மகன் உன்னை நினைத்து வேண்டுகிறான் அம்மா…!
சிறுகுழந்தையின் குரல் கேட்டால் தாய் ஓடி வருவாளே….!
டாக்டர் 9 மணிக்கு வந்து நிலைமையைச் சொல்லச் சொல்லியிருக்கிறார். நான் என்ன சொல்ல வேண்டும்?
எடுப்பவளும் நீதான்! கொடுப்பவளும் நீதான்!
உன்னுடைய மூலமந்திரத்திற்கு பலன் உண்டு என்றால் என்னுடைய மகன் உனது நாமத்தை – அதன் மகிமையைக்கூடத் தெரியாமல் குழந்தை மனத்துடன் விடாமல் மாறி மாறிச் சொல்லிக்கொண்டு இருக்கிறானே…!
அவனது தாய் தானாக எழ வேண்டும். நான் எழுப்பவே மாட்டேன். உன்னை விட்டால் எனக்கு வேறு கதி இல்லையம்மா!
நீதான் சரணம் அம்மா!
நீதான் சரணம் அம்மா!
உனது முடிவு என்னம்மா…?
சீக்கிரம் சொல்லும்மா..!
என்றெல்லாம் கண்களில் நீர் மல்க,அமைதியாக மனத்திற்குள் ஒரே சிந்தனையாகப் பிரார்த்தனை செய்தேன்.
அப்பொழுது எனது வீட்டுக் கடிகாரம் மூன்று முறை மணியடித்தது. மணியின் ஒலி கேட்டு மணியைப் பார்த்தேன்.மணி 8.45! என்னுடைய வீட்டுக் கணிகாரத்தில் 8.45க்கு மணி அடித்துக் கேட்டது இதுவே முதல் முறை!
8.50 க்கு என் மனைவி தானே தூங்கி எழுவது போல எழுந்தாள்.
எனக்கு என்ன ஆச்சு? ஏன் கூட்டமாக இருக்கிறீங்க?என்றவாறு எழுந்தாள்.
எனக்குக் கண்களில் நீர் நிரம்பி அன்னையின் அருளுக்கு எப்படி நானும் பாத்திரமானேன் என்று உள்ளம் கலங்க நின்றேன்.
எனது மனைவின் கைகளில் கற்பூரத் தட்டைக் கொடுத்து அன்னைக்கு கற்பூரதீபம் காட்டச் சொன்னேன்.
அதைத் தொடர்ந்து வலது கை முழுவதும் உணர்வு இன்றிச் செயல் இழந்து கிடந்தது.
டாக்டர் நான்கு நாட்கள் சிகிச்சைக்குப் பின் ஸ்பெஷலிஸ்ட் ஒருவரைப் பார்க்கச் சொன்னார்.
என் மனைவி உறுதியாக, அம்மாவின் மூலம் முழுக்க குணம் ஆகும்..டாக்டரிடம் செல்லத் தேவையில்லை என்று சொல்லிவிட்டாள்.
24-02-1984 அன்று வெள்ளிக்கிழமை வார வழிபாட்டு மன்றத்தில் சிறப்புப் பிரார்த்தனையில் கலந்துகொண்டு 1008 போற்றித் திருவுரு சொல்லும்போது எனது மனைவியின் உடலில் யாரோ கட்டிப்போட்டது போன்ற உணர்வு ஏற்பட்டுள்ளது. மறுநாள் காலையில் இருந்து வழக்கமாக வீட்டுவேலைகளை செய்யுமளவிற்கு அவள் கை முழுவதும் இயங்க ஆரம்பித்து முழுவதும் குணமாயிற்று!
ஏழையர் அன்னை போற்றி ஓம்!
ஏங்குவோர் துணையே போற்றி ஓம்!
நான் கண்ட அன்னை நூலில் இருந்து….