எந்த துடக்குமே (தீட்டு) தடையல்ல.
இந்த நிகழ்வை வாசித்துப் பாருங்கள். 2010 தை மாதம், இருமுடி எடுக்க புறப்பட்டோம். கட்டுநாயக்க விமான நிலையத்தில் luggage எல்லாம் கொடுத்துவிட்டு, immigration க்கு கிட்ட போகும்போது, தொலைபேசி அடித்தது. என் கணவரின் அண்ணன் இறந்துவிட்டதாக தகவல் வந்தது. என்ன செய்வதென்று தெரியவில்லை.

பங்காரு அம்மா அவர்களை நினைத்துக்கொண்டு, பிள்ளைகள் மூவரையும் தனியே அனுப்பிவிட்டு, நாங்கள் இருவரும் விமான நிலையத்தாருடன் கதைத்து(பேசி) சீட்டை மாற்றி எடுத்துக் கொண்டு வந்து உடனடியாக யாழ்ப்பாணம் புறப்பட்டோம். அண்ணன் இறந்த கவலை ஒருபக்கம், பிள்ளைகள் தனியே போகிறார்களே என்ற கவலை ஒருபக்கம், எமக்கு (தீட்டு) துடக்கல்லவா, இருமுடி எடுக்கலாமா என்ற கவலை ஒருபக்கம், எம்மால் துக்கம் தாங்க முடியவில்லை.

யாழ் போய் சேர்ந்துவிட்டோம். அங்கு அனைவருமே எம்மை குறையும் குற்றமும் அள்ளி அள்ளி வீசினார்கள். (தீட்டு)துடக்கு, எப்படி பிள்ளைகளை அனுப்பினார்கள் என்று, எம் காது கேட்கவே என்னவெல்லாமோ (பேசினார்கள்)கதைத்தார்கள் . நாம் பட்ட மனக்கஷ்டம் கொஞ்சமல்ல. அம்மாவிற்க்கு( தீட்டு இல்லை) துடக்கில்லை என்று எனக்குத் தெரியும். மற்றவர்களுக்கு தெரியாதே.

மறுநாள் பிள்ளைகள் தொலைபேசியில் சொன்ன கதைகளை கேட்க, அப்படியே உறைந்து போனோம். திக்கற்றவர்க்கு தெய்வமே துணையல்லவா, எந்த பிரச்சனையும் இல்லாம, மருவூர் சென்றார்களாம். round building ல் இடமும் கிடைத்ததாம். ஆலயத்தில் நடந்ததை சொல்லி, கேட்டபோது, ஆத்மாவெல்லாம் இங்கேதான் இருக்கிறது, இருமுடி எடுக்கலாம் என்றார்களாம். அடுத்தநாள் தைப்பொங்கல். விடிய அபிஷேகத்துக்கு சென்றார்களாம்.

சப்தகன்னியர்க்கு அபிஷேகம், அலங்காரம் செய்ய இவர்களைத்தான் விட்டார்களாம். அதுமட்டுமா, கருவறை அன்னை ஆதிபராசக்திக்கு குங்கும அர்ச்சனை செய்யவிட்டார்களாம். அன்று விசேட அருள்வாக்கு இருந்ததாம்.
அதுவும் கிடைத்ததாம். பாதபூசையில் அம்மா (ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்)
அவர்கள் நன்றாக (பேசினார்கள்) கதைத்தார்களாம். அதுமட்டுமல்ல, மூவரும் பெண்குழந்தைகள் அல்லவா, லண்டனைச் சேர்ந்த ஒருசக்தி, இவர்களை அழைத்துப்போய், இருமுடி எடுக்க மிகவும் உதவி செய்தாராம்.

நாங்கள் இல்லாத குறையை அம்மா(ஆன்மிக குருஅருள்திரு பங்காருஅடிகளார் அவர்கள்) எப்படித் தீர்த்திருக்கிறா என்று பார்த்தீர்களா? இதைக் கேட்டதும், எமக்கு எப்படி இருந்திருக்கும். கண்ணீர் விட்டு அழுதே விட்டோம். யார் என்ன சொன்னால் என்ன.. எமக்கு அம்மா அம்மா தான்.ஆலயம் அம்மாவின் மருவூர் ஆலயம்தான். எங்கள் சொந்தம் பந்தம் எல்லாமே அம்மாதான்.எந்த( தீட்டு) துடக்குமே எங்கள் ஆன்மிக குருஅருள்திரு அம்மா அவர்களின் ஆலயத்தில் கிடையாது சக்திகளே.

இப்படி எத்தனையோ சம்பவங்கள். எதை எப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ள அம்மா நினைக்கிறார்களோ அதை அப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அம்மாவை கெட்டியாகப் பிடித்துக் கொள்ளுங்கள்.

எல்லாம் நன்றாகவே நடக்கும்.

ஓம் சக்தி.

அன்புடன்

கெளரி விமலேந்திரன். இலங்கை.