“எழுச்சியான மருவத்தூர் ஆன்மிகம்” தழைத்திட பின்வரும் விஷயங்களை யோசித்துப் பார்ப்பது நல்லது.
1. மருவத்தூர் மண்ணை மிதித்த நாள் முதல் அன்னையும், அடிகளார் தெய்வமும் நமக்கு அளித்து வரும் “அருள் பாதுகாப்பை” கூர்ந்து நோக்கி ஆராய வேண்டும்.
2. குடும்பக் கடமை செய்ய நேரம் ஒதுக்கும் போது – முதல் கடமைக்கு “ஆன்மிகம்” என்று முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
3.வாரம் முழுக்க, மாதம் முழுக்க, வருஷம் முழுக்க “படியளக்கிறாள்” பராசக்தி! வழிகாட்டுகிறார் அடிகளார் தெய்வம்!! அதற்கு நன்றி சொல்லும் முகமாக….. வரத்திற்கு ஒருமுறை மன்ற வழிபாட்டில் (மூலமந்திரம் ஆரம்பிக்கும் முதல் வாழ்த்துப் பாடி முடிக்கும் வரை) கலந்து கொள்வோம். அள்ளி அள்ளி அருளை வழங்கிவிட்டு, இவன் வரமாட்டானா? இவனுக்கு மேலும் அருள் செய்ய மாட்டோமா? என்று ஏக்கம் பொங்கக் காத்துக் கிடக்கிறாள் மன்றத்து அன்னை! அவளை ஏமாற்றலாமா?
மனதைக் கெடுக்கும் சினிமாவுக்கு மூன்று மணி நேரம் ஒதுக்குகிறோம்! ஆன்மாவைப் புனிதப் படுத்தும் மன்றத்திற்கு ஒரு இரண்டு மணிநேரம்…. வாரத்திற்கு ஒதுக்க முடியாதா?
4.மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தின் மகிமைகளையும், அன்னையின் உரு, ஆன்மிக குரு அருள்திரு அடிகளார் அவர்களின் அருள் வலிமையையும் அடுத்தவர்களிடம் அடிக்கடி பேசுங்கள். அதோடு சக்தி ஒளி பத்திரிக்கையை அவர்களைப் படிக்கச் செய்யுங்கள். சக்தி ஒளி பத்திரிக்கை அவர்களது ஆன்மாவைச் சுடர்விடச் செய்யும்!
5. வாரத்துக்கு ஒரு முறை – பத்து இளைஞர்களுடன் கிராமத்து மையப் பகுதியில் அனைவரும் பார்க்கும்படியாக ஒரு இடத்தில் அன்னையின் திருவுருவப்படத்தையும், அருள்திரு அம்மாவின் படத்தையும் அலங்கரித்து வழிபாடு செய்யுங்கள். பிரசாதம் விநியோகம் செய்யுங்கள். சக்தி ஒளி பத்திரிக்கையைப் படிக்க ஏற்பாடு செயயுங்கள். கிராமத்தில் ஆன்மிகம் பரப்புவது நம் அடிகளார் தெய்வத்திற்கு மிகவும் விருப்பமானது!
6.மன்றம், மாவட்டம், மருவத்தூர் அறநிலை, அருள்திரு அம்மா, மற்றும் அம்மா குடும்பத்தாருடன் நெருக்கமா உறவை வளர்த்துக் கொள்ளுங்கள்! அந்த உறவு …… உங்களின் முழுநேர ஆன்மிகத்திற்கு உதவியாக இருக்கும்.
7. நல்ல எண்ணங்களின் தொகுப்பே ஆன்மிகப் பயிற்சி. அதோடு, ஆன்ம வளர்ச்சியே அதுதான்! நல்ல எண்ணங்களை இதயத்தில் சுரக்க வைப்பதன் மூலம் அம்மாவின் அருளை எளிதாகக் கறக்க முடியும்! எத்தனை நாளைக்குத்தான் புலன்களுக்கு அடிமையாய் இருப்பது? என்றைக்கு நாம் ஆன்மாவிற்கு அடிமையாவது,? என்றைக்கு அம்மாவை நம் வசப்படுத்துவது? முழுநேர ஆன்மிகம் நம்மை நல்வழிப்படுத்தும்! குருவடி தொழுது இந்தப் பொழுதே முடிவெடுப்போம்‘!
முழுநேர ஆன்மிகம் சுகமானது, மருவத்தூர் அம்மா, மன்றம், மாவட்ட ஆன்மிகம், கிராமத்து ஆன்மிகம், வழிபாடு, செவ்வாடை, தியானம், தொண்டு…… தொண்டு…… தொண்டு. இதுதான் முழுநேர ஆன்மிகம்!
எப்படித் திட்டமிடுவது?
திட்டமே வேண்டாம்!
யதார்த்த வாழ்க்கை நெறியே மருவத்தூர் ஆன்மிகம்! மலைக்க வேண்டாம்! தயங்க வேண்டாம்! பயப்பட வேண்டாம்! நாம் எதை விரும்புகிறோமோ அதை அடையப் போகிறோம்! நம் இயல்போடு! நம் குடும்பச் சூழலோடு…. குருவை நெருங்கப் போகிறோம்! குடும்பக் கடமைகளோடு அம்மாவை நெருங்கப் போகிறோம்!!
ஒவ்வொரு கணப்பொழுதும் ஆன்மிகமாய்க் கழிய வேண்டும்!
அருள்திரு அடிகளார் தெய்வம், மனிதனால் செய்ய முடிந்த ஆன்மிகப் பணிகளை மாத்திரம் மனிதன் செய்தால் போதும் என்றே நினைக்கிறது!
இந்த இடத்தில் ஒரு முக்கிய விஷயத்தைச் சொல்லிவிடுவது நல்லது.
அதாவது –
மருவத்தூர் வளர்ச்சியே நம் ஆன்மிக வளர்ச்சி!
என்பதே அந்த விஷயம்!
எனவே, தனி ஆவர்த்தனம் மருவத்தூரில் எடுபடாது! கூட்டு முயற்சியையே அன்னை விரும்புகிறாள்!
சொந்த ஊரில் களப்பணிகள் நடக்க வேண்டும்! மன்றத்தில் எழுச்சியோடு வழிபாடும், சமுதாயப் பணியும் நடந்தாக வேண்டும்! மாவட்ட அளவில், பெரிய ஆன்மிகப் பணிகள், சமுதாயப் பணிகள் நடந்தே ஆக வேண்டும்! சக்திமாலை, இருமுடி பெருகியாக வேண்டும்! மேல்மருவத்தூர் சித்தர் பீடத்தில் தினசரி விழாக்கோலமாக இருக்க வேண்டும். மருவத்தூர் அறநிலைப் பணிகள் எல்லோருடைய ஒத்துழைப்போடு சிறப்பாக நடந்தே ஆகவேண்டும்.
சக்தி ஒளி – ஆகஸ்ட்டு “99