சில நேரங்களில் நாம் அகம்பாவத்தோடு “நான்”, “எனது”, “என்னால்” என்றெல்லாம் பயன்படுத்துகிறோம். இது நமது அறியாமையைக் காட்டுவதாக அமைகிறது. ஒருமுறை அம்மா அருளினாள்:

“மகனே! சிலர் மருத்துவர்களிடம் செல்வார்கள். அறைக்குள் நுழைந்தவுடன், எனக்கு ஊசி போடுங்கள் என்று புலம்புவார்கள். ஊசிபோடுவதா? அல்லது வேண்டாமா? என்று தீர்மானிக்க வேண்டியது வைத்தியரின் பொறுப்பு. உனக்கு என்ன செய்கிறது என்பதை மட்டும் சொன்னால் போதும். மாத்திரை கொடுப்பதா? மருந்து கொடுப்பதா? ஊசி போடுவதா? படுக்கையில் இருக்க வைப்பதா? என்றெல்லாம் தீர்மானிக்க வேண்டியது வைத்தியரே, நீயல்ல.

அதுபோல பலர் என்னிடம் வந்தவுடன் அருள்வாக்குச் சொல்லம்மா! என்று கூப்பாடு போடுகின்றனர். “நீ என் மண்ணை மட்டும் மிதித்து விட்டுப் போ!”, நான் சொல்கிறேன், உனக்குத் தேவைப்படும் பொழுது எப்படியும் அருள்வாக்குக் கிடைக்கச் செய்வேன். “ஊசிதான் போட வேண்டும் என்று கூறுவது போல அருள்வாக்குத்தான் தேவை என்று அடம்பிடிக்காதே! உனக்குத் தேவைப்படும்போது அருள் ஊசியை எடுத்து, அருள் மருந்தை ஏற்றி, அருமருந்தாக உனக்கு நான் போடுவேன்.

இதைத் தீர்மானிக்க வேண்டியது நான்தானே ஒழிய, நீயல்ல! கண்ணில் தூசு விழுந்ததற்கும், காலில் முள் தைத்ததற்கும் அறுவைச் சிகிச்சையா செய்ய வேண்டும்?”

மருவத்தூர் மண்ணை மிதித்தவுடன் தனக்கு அனைத்துப் பலன்களும் உடனடியாகக் கிடைத்துவிட வேண்டும் என்று பலரும் ஆசைப்படுகின்றனர். இந்த வகையான எண்ணம் உடையோருக்காக அம்மா அருளினாள்:

“மகனே! ஊசியை நீ பார்த்திருக்கிறாய் அல்லவா? அந்த ஊசியின் பின்பக்கமுள்ள காதின் வழியாக நூல் கோர்க்கப் படுகின்றது.

அதுபோல மனித ஊசிக்குச் சில சமயங்களில் பின்பக்கமாக அருள்நூலைக் கோர்க்கின்றேன். சில நேரங்களில் மனித ஊசியின் முன் பக்கமாகவும் நூல் கோர்க்க வேண்டியிருக்கின்றது. சிலருக்குப் பலனை முன்னதாகக் கொடுத்து அவர்களை இழுக்க வேண்டியிருக்கின்றது.சிலருக்குப் பலனை அவர்கள் தொண்டு செய்த பின்னரே கொடுக்கப்படவேண்டியிருக்கின்றது. எப்படியானாலும் ‘மனித ஊசிக்கு’ நூல் கோர்க்கப்பட்டே தீரும். தைக்காத ஊசி, தையலுக்கு உதவாத ஊசி எதற்கு?”

பேராசிரியர். இரா கண்ணன் அவர்கள்
மகாசக்தி