முதலில் உலகத்து மக்கள் அனைவரும் புரிந்து கொள்ள வேண்டிய ஒன்று உள்ளது. ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் இந்து மதம் சார்ந்த இயக்கம் என்று யார் சொன்னது?? *ஆதிபராசக்தி* *என்பதன் பொருள் என்ன? ஆதியில் பரந்து இருந்த ஒரு சக்தி.* அதுவே பிரபஞ்சமாக, அண்ட சராசரங்களாக, இயற்கையாக, அனைத்துமாக பரந்து இருந்தது. அதை இந்தக் கடவுள் என்று சொல்வதே *முற்றிலும் தவறு.* *ஆதிபராசக்தி என்பவள் தாய் தெய்வம். அனைத்து தெய்வங்களுக்கும் தாய் தெய்வம்.* மச்ச புராணத்தில் கூறப்பட்டுள்ளது போல, சித்தவனத்திலே அன்னை சுயம்பாக தான் அமர்ந்து இருந்தாள். அதே போல சுயம்பாகவே இந்த கலியுகத்திலும் காட்சி தந்தாள். ஆனால் மானிடர்களான நாம் தான் அன்னையை சிலை வடிவில் காண வேண்டும் என்று அம்மாவிடம் கேட்டோம். தனது பிள்ளைகளின் விருப்பத்தை என்றுமே நிறைவேற்றும் எல்லை இல்லாத கருணைக்கடல் பங்காரு மாதா எமது விருப்பத்திற்காகவே *சுயம்புவாக, பங்காருவாக விளங்கும் தன்னை சிலை வடிவிலும் அமைத்துக் கொள்ள அனுமதி தந்தார்கள்.*
சிலை வழிபாட்டில் இருப்பதால் ஆதிபராசக்தியை இந்து தெய்வம் என்ற சிறிய வட்டத்துக்குள் அடக்க முடியுமா? சித்தர்களுக்கு மதம் உண்டா? இனம் உண்டா? சித்தர்கள் அனைத்தையும் கடந்தவர்கள். சித்தர்கள் என்பவர்கள் உலகத்து நன்மைக்காகவும், உலக உயிர்களின் நன்மைக்காகவும் இருப்பவர்கள். அவர்களை மதம் என்ற எல்லைக்குள் அடைக்க முடியுமா? இல்லை. *அப்படி இருக்க சித்தர்களின் தலைவி அன்னை ஆதிபராசக்தியை எப்படி மதம் என்ற சிறிய வட்டத்துக்குள் நாம் ஒடுக்க முடியும்??*
எமது ஆதிபராசக்தி ஆன்மீக இயக்க வழிபாடு என்பது ஆகம விதிகளை எல்லாம் கடந்த சித்தர்களின் வழிபாட்டு முறை. *இது சித்தர்களின் தலைவியான அன்னை ஆதிபராசக்தியின் ஸ்தூல வடிவமான பங்காருதாயை குருவாக கொண்ட வழிபாட்டு முறை.*
இந்து அறநிலையின் கீழ் கொண்டு வர வேண்டும் என்று பின்புலத்தில் இருந்து பணியாற்றும் அனைத்து அரசியல் தலைவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். செவ்வாடை தொண்டன்/பக்தன் ஒவ்வொருவரையும் கேட்டு பாருங்கள் சித்தர் பீடத்தில் நீங்கள் யாரை வணங்க செல்கிறீர்கள் என்று? ஒவ்வொருவரினதும் பதில் எதுவாக இருக்கும் தெரியுமா? *நாம் எமது குருநாதர் பங்காரு அடிகளாரை (அம்மாவை)* பார்ப்பதற்கும், வணங்குவதற்கும் தான் சித்தர்பீடம் செல்கிறோம் என்பதே பதிலாக இருக்கும்.
*பங்காரு அடிகளாரின் பக்தராக இந்து மதத்தவர்கள் மட்டும் இல்லை, இஸ்லாம் மதம், கிருஸ்துவ மதம், மற்றும் உலக நாடுகளில் உள்ள வேறு மதத்தை சார்ந்தவர்களும் உண்டு.* அப்படி என்றால் அந்த மதத்தை சார்ந்தவர்களும் உரிமை கோர முடியுமா சித்தர்பீடம் தங்கள் மத அறநிலையை சார்ந்தது என்று??
மேல்மருவத்தூர் சித்தர் பீடம் ஒரு கீற்றுக் கொட்டகையாக இருந்த போது உங்கள் இந்து அறநிலை எங்கு போனது? கடந்த 50 வருட காலத்தில் எண்ணிலடங்கா சமுதாய பணிகளும், சமுதாய, கல்வி, மருத்துவ தொண்டு நிறுவனங்களும் நிறுவி மக்களுக்கு சேவை செய்யும்போது எங்கே போனது உங்கள் இந்து அறநிலை? பெண்களையும், தாழ்த்த பட்டவர்களையும் ஆலயத்துக்குள் வர விடாமல் தடுத்த போது எங்கே போனது உங்கள் இந்து அறநிலை? அனைவரும் எனது பிள்ளைகள்… யாரும் எனது கருவறைக்குள் வரலாம் என்று பெண்களையும், அனைத்து மக்களையும் சாதி, மத பேதம் இன்றி கருவறைக்குள் அனுமதித்தது யார்? உங்கள் இந்து அறநிலையா? உங்கள் அறநிலையின் கீழ் உள்ள எந்தக் கோயிலில் இப்படியான செயல்பாடுகள் நடைபெறுகிறது? *எதை வைத்துக் கொண்டு மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் இந்து அறநிலைக்குள் வரும் என சொல்கிறீர்கள்?*
*அடிகளார்* என்ற தனி ஒருவரால் கடந்த 50 ஆண்டுகள் அயராத சேவையின் மூலமாக உருவாக்கப்பட்டது தான் இந்த ஆதிபராசக்தி அறநிலை. இதை தற்போது வந்து தங்கள் மதம் சார்ந்தது என்று கூறுவதற்கு எந்த மதத்திற்கும் உரிமை இல்லை. ஏனெனில் சித்தர்பீடம் எந்த ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த ஆன்மீக இயக்கம் இல்லை.
இதை வெளிப்படுத்தவே கிருஸ்துவர்களின் நத்தார் தினத்தில் கருவறை அம்மனுக்கு அன்னை மேரியின் அலங்காரம் செய்யப்படுகிறது. இஸ்லாமிய பக்தருக்கு தியானத்தில் அம்மா காட்சி கொடுக்கவில்லையா? இஸ்லாமிய, கிருஸ்துவ பக்தர்களின் உயிரை அம்மா காக்கவில்லையா? இன்றும் இஸ்லாமிய, கிருஸ்துவ பக்தர்கள் அறநிலையில் தம்மை இணைத்துக் கொண்டு தொண்டா ஆற்றுகிறார்களே! இவற்றுக்கு எல்லாம் எழுத்து வடிவிலேயே அவர்களின் அனுபவங்கள் ஆதாரமாக உள்ளது.
அடிகளார் ( *அம்மா*) இந்து மதத்தை சார்ந்தவர்கள் தான் தன்னை தரிசிக்க முடியும் என்று எப்போதும் கூறியதில்லை. எல்லா மதத்தவரும், எல்லா இனத்தவரும் சித்தர் பீடம் வரலாம் என்று தான் இன்று வரை கூறி அனைத்து இன மக்களுக்ளின் துன்பம் துடைத்து கொண்டிருக்கிறார்கள். அடிகளார் ( *அம்மா*) என்பவர் *மனிதாதீதன், சமயாதீதன், தத்துவாதீதன், தெய்வாதீதன்* *அதாவது மனிதர்களை, சமயங்களை, தத்துவங்களை, தெய்வங்களை* எல்லாம் கடந்து நிற்பவர்.
மதம், இனம், சமயம் என்று கூறிக்கொண்டு நீங்கள் எதைச் சாதித்தீர்கள். ஆனால் அடிகளாரோ ( *அம்மா*) அனைவரும் தனது குழந்தைகளே என்று கூறி, கடந்த 50 வருட காலத்தில் மேல்மருவத்தூர் என்ற பெயரே தெரியாத ஒரு குக்கிராமத்தை இன்று உலகமே அறியும் வண்ணம் மாற்றியது மட்டுமல்லாமல், கல்வி மற்றும் மருத்துவ சேவை புரியும் தொண்டு நிறுவனமாக மாற்றி பல லட்சம் பாமர மக்களுக்கு வாழ்வாதாரமும், கல்வி, மருத்துவ சேவையும் செய்கிறார். இப்படிப்பட்ட அறநிலையை எப்படி இந்து மதத்தின் கீழே கொண்டு வர முடியும்?
*அம்மா (அடிகளார்) கூறுவதை போல ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கம் என்பது ஒரு தொண்டு நிறுவனம். இது குறிப்பிட்ட ஒரு மதம், இனம் சார்ந்த வழிபாட்டு ஸ்தலம் அல்ல.*
*அம்மாவையோ (அருட்திரு.பங்காரு அடிகளார்) அல்லது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தையோ ஒரு குறிப்பிட்ட மதக் கொள்கைக்குள் அடக்க முயன்றால் அதை உலகம் முழுவதிலும் உள்ள செவ்வாடை தொண்டர்களாகிய நாம் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம்.*