‘அம்மாவே கதி என்று அவள் கூறும் வழியே நடக்கிறோம். அம்மா எப்போது இந்த கவலையை தீர்ப்பாள்? காலம் நீண்டுக்கொண்டே செல்கிறதே!’ என வருந்துக்கிறாயோ?*
அம்மாவிற்கு எப்போது எதை நமக்கு செய்யவேண்டும் என்று தெரியும். பால் நினைந்தூட்டும் தாயல்லவா நம் அன்னை. நம்முடைய வினைக்காலம் கழிந்தவுடன் சிறிதுக்கூட காலம் தாழ்த்தாமல் அம்மா நமக்கு உரியதை வழங்குவாள்.
பொறுமையாக இருக்கவேண்டிய காலம் இது. பொறுத்துதான் ஆக வேண்டும். ஒருவனின் வாழ்க்கை முழுமையடைய இந்த துன்ப காலம் மிக அவசியம்.
வாழ்க்கையில் எந்த ஒரு நிகழ்வும், நடப்பதற்குறிய கால நேரம் என்று ஒன்று உண்டு. வாழ்க்கையில் எந்த ஒரு குறையும் தீர்வதற்கு உரிய சூழல், தேவையான காரணிகள் எல்லாம் ஒன்று சேரவேண்டும்.
கேட்டதெல்லாம் கொடுக்கின்ற தாய், நாம் இவ்வளவு வேண்டியும் காலத்தே கொடுக்கவில்லை, காலம் தாழ்த்துகிறாள் என்றால் அதன் முக்கியத்துவத்தை புரிந்துக் கொள்ளவேண்டும்.
உடல்நிலை சரியில்லாத குழந்தைக்கு, அதன் நோய்க்கான மருந்து கொடுத்துவிட்டு, மருந்து நோயை குணப்படுத்தும் காலம் வரை, அந்த குழந்தை வலி மறந்து இருக்க விளையாட்டுக் காட்டும் தாயைப் போல, அன்னையும் நம்முடைய வினைக்கான அருள் மருந்தை கொடுத்துவிட்டு, அந்த மருந்து வேலை செய்யும் வரை நாம் அந்த வலியை மறந்து இருக்க அதைச்செய், இதைச்செய் என நம் வலி மறக்க வேடிக்கைக் காட்டி வினை வலி தெரியாமல் வினைக்காலத்தை கழிக்கவைகிறாள்.
அந்த வினைக்காலம் வரை வலி இருக்கத்தான் செய்யும், ஆனால் அன்னையின் மீதும் அவள் சொற்களின் மீது முழுகவனமும் செலுத்தும் போது வினை வலி தெரியாமல் போகிறது.
“மகனே! இந்த வினாடியிலேயே உன் குறையைப் போக்கிவிடுவேன்.
ஆனால் *எந்த ஒரு பிராரத்துவ வினையினால் இந்தக்குறை உனக்கு வந்ததோ அந்த வினை சும்மா இராது. இந்தக்குறையைப் போக்கினால் வேறுவிதமாக அது உடனே உன்னைத் தாக்கும். இப்பொழுது உள்ள வயிற்றுவலியை நீக்கினால் நாளை தலைவலியாக வரும். அதை நீக்கினால் முதுகுவலியாக வரும்.*
அந்த வினை தீருகின்ற வரையில் ஏதாவது ஒருவகையில் அதன் தாக்கம் உன்னிடம் இருந்துகொண்டு தான் இருக்கும். எனவே, கவலைப்படாமல் இரு. வினை தீருகின்ற காலத்தை நான் அறிவேன். அது தீருகின்ற காலம் வரும்வரை உன்னை ஒன்றும் செய்யாமல் நான் பார்த்துக் கொள்கிறேன். உரிய காலம் வரும்பொழுது குறையைப் போக்குகிறேன்” என்ற அன்னையின் அருள்வாக்கை நினைத்து தெளிவு பெறு.
குருவடி சரணம். திருவடி சரணம்.