நான் ஏன் நேர்மையாக வாழ வேண்டும்?*
*நான் ஏன் ஒழுக்கமாக வாழ வேண்டும்?*
*நான் கஷ்டப்பட்டுச் சம்பாதிக்கிறேன். நான் ஏன் அடுத்தவனுக்குத் தருமம் செய்ய வேண்டும்?*
*என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாம் லஞ்சம் வாங்குகிறார்கள். நான் மட்டும் நேர்மையாய் இருந்தால் எனக்கு என்ன பலன்? எனக்குச் சிலையா வைக்கப் போகிறார்கள்?*
*ஒழுக்கம் ஒழுக்கம் என்கிறீர்கள். பல பிரபலங்கள் எல்லாம் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்கிறார்களா? அவர்கள் எவ்வளவு செல்வத்துடனும், செல்வாக்குடனும் வாழ்கிறார்கள்?*
அவர்கள் பின்னால் எத்தனை பேர் இருக்கிறார்கள்?
*ஒழுக்கம் ஒழுக்கம் என்கிறீர்களே….. அரசியலிலும், சினிமாவிலும் தனி மனித ஒழுக்கம் இல்லாத சிலர் ஓகோ என்று வாழ்கிறார்கள்! பத்திரிகைகள் எல்லாம் சேர்ந்து இப்படிப்பட்டவர்களைப் புகழ்ந்து தள்ளுகின்றன.*
காரும், பங்களாவும் சம்பாதித்து ஓகோ என்று வாழ்கிறார்கள்.
*அநியாயமாகவும், அக்கிரமமாகவும் வியாபாரம் செய்து ஓகோ என்று எத்தனையோ பேர் வாழ்கிறார்கள்! அவர்களெல்லாம் நல்லாத்தானே இருக்கிறார்கள்?*
*அடுத்தவன் சொத்துக்கு ஆசைப்படாதவன் – நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் வாழ்பவன் பரிதாபத்துடன்தானே இருக்கிறான்?*
என்றெல்லாம் இன்றைய இளைஞர்கள் மனத்தில் கேள்விகள் எழுகின்றன.
இந்தக் கேள்விகள் இப்போது மட்டும்தானா எழும்புகின்றன?
காலந்தோறும் எழுகின்ற கேள்விகள்தான்!
ஆனாலும் தெளிந்த அறிவு பெற்ற சான்றோர்கள் நேர்மையையும் ஒழுக்கத்தையும் வற்புறுத்துகிறார்கள்.
‘அறம் வெல்லும் பாவம் தோற்கும்’ – என்கின்றனர்.
‘சத்தியமேவ ஜெயதே! வாய்மையே வெல்லும்!’ என்று ஞான களஞ்சியமான உபநிடதம் ஒன்று பேசுகிறது.
‘ஒழுக்கம் விழுப்பம் தரலால் ஒழுக்கம்
உயிரினும் ஓம்பப்படும்’ – என்கிறார் வள்ளுவர்.
“உன் இரண்டு கண்களில் ஒரு கண் பாவம் செய்தால் அந்தக் கண்ணைப் பிய்த்துப் போடு!” – என்கிறார் ஏசு.
ஒரு காலத்தில் யூதர்கள் வட்டி வியாபாரம் செய்து செல்வத்தில் கொழுத்திருந்தார்கள். அநியாய வட்டி மூலம் ஆடம்பரமாக வாழ்ந்தார்கள். “உன் ஆன்மாவைத் தொலைத்து விட்டு உலகத்தையே பெற்றாலும் அதனால் அடையப் போகிற நன்மை என்ன?” என்றார் ஏசு.
“உன்னைப் பெற்ற தாய் பசியோடு துடித்தாலும், சான்றொர் பழிக்கும் வினைகளைச் செய்யாதே” என்கிறார் திருவள்ளுவர்.
*‘நெஞ்சுக்கு நீதியை* *ஒளித்தே வாழ்பவன் நிச்சயம் மிருகமடா! – நல்ல நேர்மையிலும், தன் வேர்வையிலும் தினம் வாழ்பவன் தெய்வமடா!’* என்று பாடினார் கண்ணதாசன்.
மதிமயக்கம்:
—————
*வாழ்க்கையில் சோதனைகளும், வேதனைகளும் வரும்போது, உம்! நல்லதுக்குக் காலமில்லே! ஏச்சிப் பிழைக்கிறவனுக்குத்தான் காலம்! எனு உதடுகள் சொல்கின்றன. மதி மயக்கத்தால் மனிதர்கள் தவறான முடிவுக்கு வருகிறார்கள்.*
லஞ்சம் வாங்குகிறவன் நல்லாதானே இருக்கிறான்? என்று பேசுகிறார்கள். *அவர்கள் வெளித் தோற்றத்தை வைத்தே பேசுகிறார்கள். கருமச் சட்டம் அவர்தம் குடும்பங்களை எப்படிப் பாதிக்கிறது என்று தெரிவதில்லை.*
என் மனைவி அம்மாவிடம் கேட்ட கேள்வி
————————————————-
என் மனைவி அம்மாவிடம் துணிச்சலாகவே கேட்டாள். *அம்மா இதோ பாரு! உன் கோயிலிலே கூட பணத்துக்குத்தான் மரியாதை! நீ மட்டும்தான் வித்தியாசம் பார்க்கிறது இல்லே! எல்லோரிடமும் பாசம் காட்றே! இங்கே இருப்பவர்களிடம் அப்படி இல்லே!* என்றாள்.
*அம்மா மெல்லிய புன்முறுவல் காட்டிச் சொன்னாள்.*
*“இதோ பார்! நீ யாரை மனசில வச்சிகிட்டு இப்படிப் பேசறே என்று எனக்குத் தெரியும். அவள் பணக்காரி என்பதால் உன்னை அவமதிக்கிறாள். அதனால் இப்படிப் பேசறே!*
உனக்குப் பணம் இல்லை. அது ஒன்றுதான் குறை. அவளுக்குப் பணம் நெறைய இருக்கு. அவள் குடும்பத்தில் எவ்வளவு ஓட்டை உடைசல் இருக்குன்னு உனக்குத் தெரியுமா? அவளது மகள் வாழ்க்கை சரியில்லை…. மருமகன் விவாகரத்து கேஸ் போடப்போறான். அதனாலே அவ நிலை குலைஞ்சு போயிருக்கா!
அவ என்னை நம்பாம, ஒரு சாமியாரை நம்பிப் போய் வந்துகிட்டு இருக்கா. தொழில்லே பிரச்சனை. இங்கே அவள் தொண்டர்கள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டிருக்கா…
*கொஞ்ச காலம் பொறுத்துப்போ….! அவளே ஒதுங்கிக்குவா!”* என்றார்கள்.
ஊர் உலகத்துக்கு அவள் பணக்காரி. உள்ளே அவள் குடும்பத்தில் பூகம்பம்.
*நேர்மையற்றவர்களின் குடும்பங்கள் வெளித்தோற்றத்தை வைத்து, அவர்கள் எல்லாம் நல்லாத்தானே இருக்கிறார்கள் என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்.*
கடவுள் அங்கீகாரம்
————————
நேர்மைக்குக் காலமில்லே…. என்று அலுத்துக் கொள்கிறீர்களே…. உலகத்தில் திருடர்கள் சரிபாதி! இப்படிப்பட்ட உலகத்தில் நேர்மைக்கு அங்கீகாரம் கிடைக்காது. கடவுள் அங்கீகாரம் நிச்சயம் கிட்டும்.
ஒரு சம்பவத்தைச் சொல்கிறேன்.
நம் சித்தர்பீடத்தின் ஆரம்ப காலத்தில் ஒரு எஞ்சினியர் வந்தார். தமிழக அரசில் பெரிய பொறுப்பில் இருந்தார். ஒரு பைசா லஞ்சம் வாங்கியதில்லை. அவரால் பல கட்சிக் காரர்களுக்கு சங்கடம்! அவருக்கு எவ்வளவோ தொல்லைகள் வந்தன. உம்! எதற்கும் அவர் அசைந்தது இல்லை.
*அப்படிப்பட்டவர் உத்தியோகத்திலிருது ஓய்வு பெற்ற பிறகு அம்மாவிடம் வந்தார். அம்மா அவருக்குச் சில தொண்டுகள் கொடுத்தார்கள்.*
ஒருமுறை அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்கச் சென்னையிலிருந்து வந்து கொண்டிருந்தார்.
அன்றைக்கு அம்மா வழக்கத்துக்கு மாறாக நிறைய பேருக்கு அருள்வாக்கு அளித்தாள். நீண்ட நேரம் அருள்வாக்கு நடைபெற்றது. தொண்டர்களுக்கு அது புரியவில்லை. பிற்பாடுதான் புரிந்தது.
அந்த எஞ்சினியர் அருள்வாக்கில் போய் அமர்ந்ததும், *“வாடா மகனே! நீ வருவாய் என்பதால்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தேன். நொண்டி மாடாக இருந்தாலும், அது வந்த பிறகுதான் பட்டி சாத்த வேண்டியிருக்கு.*
*உன்னால்தான் இன்று நிறைய பேருக்கு அருள்வாக்கு கிடைத்தது!” என்றாளாம்.*
*“உன் தேவை எனக்குத் தேவையில்லை. என் தேவை உனக்குத் தேவை!” எனச் சொல்லிய பரம்பொருளான இவள், அந்த எஞ்சினியரிடம் என்ன கேட்டாள் தெரியுமா? மகனே! அண்ணாமலையின் சேவை அம்மாவுக்குத் தேவையடா!” என்றாள்*. அவர் பெயர் அண்ணாமலை!
ஊரும் உலகமும் பிழைக்கத் தெரியாத ஆசாமி என்று கேலியும் கிண்டலும் செய்யப்பட்ட அந்த ஆன்மாவுக்கு ஆதிபராசக்தியின் அங்கீகாரத்தைவிட வேறு என்ன வேண்டும்.?
*மனிதர்கள் நேர்மையுடனும், ஒழுக்கத்துடனும் வாழவேண்டும்.. பிறருக்கு அன்பு காட்டி உதவி செய்ய வேண்டும் ஏன்?*
*அதற்கு இரண்டு காரணங்கள் சொல்லப்படுகின்றன.*
*பிரபஞ்சத்தில் ஒரு சட்டம் இருக்கிறது. விஞ்ஞானிகளே ஒப்புக் கொள்ளக்கூடிய காரணம் அது*!
கருமச்சட்டம்
—————-
*ஒவ்வொரு காரியத்துக்கும் விளைவு உண்டு. அது நேர்விளைவாக இருக்கலாம். எதிர்விளைவாக இருக்கலாம்.*
மேஜையை ஓங்கி ஒரு தட்டு தட்டுகிறீர்கள். அதனால் என்ன விளைவு ஏற்படுகிறது? ஒரு ஓசை எழும்புவதும் கை வலிப்பதும் காரியம்.
காரணம்! காரியம்! என்ற இரண்டும் பின்னிப் பிணைந்தவை.
*காரணம் இல்லாமல் காரியம் இல்லை; இது பிரபஞ்ச விதி.*
*நாம் செய்கிற ஒவ்வொரு காரியத்துக்கும் ஒரு விளைவு உண்டு. அது நேர்விளைவாகவும் இருக்கலாம். எதிர்விளைவாகவும் இருக்கலாம்.*
*நமது இன்ப துன்பங்களுக்கு நாமேதான் காரணம். நமது கர்ம வினைக்கு ஏற்ப பயன்களை அளந்து கொடுப்பது மட்டுமே அன்னையின் பொறுப்பு.*
*அநியாயமும், அக்கிரமமும் செய்பவர்களை உடனுக்குடனே ஏன் தண்டிக்கக் கூடாது?*
அதற்கு அம்மா சொல்கிற பதில், *“அப்படிக் கொடுக்க ஆரம்பித்தால் பூமியில் புல் பூண்டே இருக்காது!”*
இன்னொரு காரணம்
————————-
அடுத்தவனுக்கு உதவி செய்வது நமக்கு நாமே செய்து கொள்கிற உதவி!
அடுத்தவனுக்கு செய்யும் தீங்கு நமக்கு நாமே செய்து கொள்கிற தீமை.
இதைப் புரிந்து கொள்வது கஷ்டம்தான் என்றாலும் ஓரளவு விளக்கலாம்.
*ஒவ்வொரு உடம்பிலும் ஆத்மாவாக ஆதிபராசக்தி இருக்கிறாள். ஒவ்வொரு ஆத்மாவும் அந்த ஒரு பரம்பொருளிலிருந்து வந்த சிதறல்கள்தான்.*
உடம்பை அக்கு அக்காகப் பிரித்துப் போடுங்கள். இந்த உடம்பு நீங்கள் அல்ல! செத்தால் அது அழிகிறது.
*மனமும் நீங்கள் அல்ல!* அது ஏதோ ஒன்றால் இயக்கப்படுகிறது.
*மிஞ்சி நிற்பது அந்த ஒரு ஆன்மாதான். சின்னஞ்சிறு ஜோதிதான். அதுதான் உள்ளுக்குள் இருந்து ஆட்டிப் படைக்கிறது.*
அந்த ஆன்மாதான் உங்களிடம் உள்ளது. அதே ஆத்மாதான் ஞானியிடம் இருக்கிறது. அதே ஆத்மாதான் ஒரு நரிக்குறத்தியிடம் உள்ளது. அது வெளிப்படுவதில்தான் வித்தியாசம் உள்ளது. ஞானியிடம் அது பிரகாசமாக வெளிப்படுகிறது. திருடனிடம் மங்கிக் கிடக்கிறது.
*ஆன்மாவுக்கு ஆண், பெண் என்ற வித்தியாசம் இல்லை.*
ஆன்மாவுக்கு ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசம் இல்லை.
ஆன்மாவுக்கு மதம், ஜாதி என்ற வித்தியாசம் இல்லை. அது வெளிப்படுவதில்தான் வித்தியாசம்.
*நாம் எல்லோருமே பிரம்மம் என்ற கடலில் இருப்பவர்கள். பணக்காரன் அலை என்றால் ஏழை அதில் ஒரு குமிழி போன்றவன். அவை மேலே எழும், மீண்டும் கடலில் கரையும். குமிழியும் அவ்வாறே!*
எனவே அடுத்தவனும், நீங்களும் ஒன்றே. ஒரு கடலில் இருப்பவர்களே. எனவே அடுத்தவனுக்கு நல்லது செய்யும் போது உங்களுக்கு நீங்களே நன்மை செய்து கொள்கிறீர்கள். அடுத்தவனுக்குத் தீமை செய்யும்போது நீங்களே உங்களுக்கு தீமை செய்து கொள்கிறீர்கள்! என்கிறது வேதாந்தம். எல்லா மதமும் இதனை வேறு வேறு விதமாக விளக்குகின்றன.
சக்தி ஒளி – ஜனவரி 2015
பக்கம் (45 – 49)
குருவடி சரணம்.
திருவடி சரணம்.