உலகம் ஒன்று தான்! அதைக் காண்கின்ற மனிதர்களின் பார்வை தான் பலவிதம்!
எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா…! என்று பாடுகிறார் பாரதியார்.
உலகில் உள்ள ஏற்றத் தாழ்வுகளையும், முரண்பாடாக உள்ள விஷயங்களையும் பார்த்துவிட்டுக் கடவுளைச் சிலர் நிந்திக்கவும் செய்கிறார்கள்.
ஆன்மிக அறிவோடு சிந்தித்துப் பார்த்தால், இறைவன் கருணை வடிவானவன் என்பது தெரியும்; புரியும்.
உலகம் பிறந்தது எனக்காக!
ஓடும் நதிகளும் எனக்காக!
மலர்கள் மலர்வது எனக்காக!- அன்னை
மடியை விரித்தாள் எனக்காக!
தவழும் நிலவாம் தங்கரதம்
தாரகை பதித்த மணிமகுடம்
குயில்கள் பாடும் கலைக்கூடம்
கொண்டது எனது அரசாங்கம்!
காற்றில் மிதக்கும் ஒலிகளிலே
கடலில் தவழும் அலைகளிலே
இறைவன் இருப்பதை நானறிவேன்!
என்னை அவனே தானறிவான்!
– என்று கவிஞர் கண்ணதாசன். மனித குலத்துக்காகவே, இயற்கையைப் படைத்துக் கொடுத்த, இறைவனது கருணையைப் புகழ்கிறார்.
“கோழிக்குள் முட்டை வைத்து
முட்டைக்குள் கோழி வைத்து
வாழைக்கும் கன்று வைத்தான் ஒருவன் – அந்த
ஏழையின் பெயர்தான் இறைவன்!”
– என்று, இறைவனது படைப்பில் உள்ள நேர்த்தியைப் புகழ்வார் அவர்.
“இறைவன் போட்டது இந்த தோட்டம் – இதில்
இனிமை ஒன்று தான் நாட்டம்!”
– என்று சொல்லி, வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளும் புத்திசாலித்தனம் வேண்டும் என்கிறார்.
இன்னோரு பாடலில், கற்பனை கலந்து, ஒரு நீதியைப் புகட்டுகிறார். அது:
“கடவுள் ஒருநாள் உலகைக் காண தனியே வந்தாராம்;
கண்ணில் கண்ட மனிதனை எல்லாம் நலமா? என்றாராம்.
ஒரு மனிதன் வாழ்வே இனிமை என்றான்;
ஒரு மனிதன் அதுவே கொடுமை என்றான்;
படைத்தவனோ உடனே சிரித்து விட்டான்.
” கள்ளம் இல்லா பிள்ளை உள்ளம் நான் தந்தது
காசும் பணமும் ஆசையும் யார் தந்தது?
எல்லை இல்லா நீரும் நிலமும் நான் தந்தது
எந்தன் சொந்தம் என்னும் எண்ணம் ஏன் வந்தது ?
*இந்தப் பாடலில், மனிதனுக்கு வேண்டிய அனைத்தையும், கருணையுடன் கடவுள் படைத்துக் கொடுத்திருந்தாலும், அதை உணரமுடியாத, மனிதனின் சுயநலமே அவனவன் துன்பத்துக்குக் காரணம் என்று, குறிப்பால் உணர்த்துகிறார்.*
கருணை என்ற குணம் எல்லாம் சேர்ந்து, ஒரு மலை போல உருவானால், எப்படி இருக்கும்… ?
*கருணையின் வெளிபாடு: ஒரு சம்பவம்*
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்தவர் அவர். கடவுள் நம்பிக்கை இல்லாதவர். ரியல் – எஸ்டேட் தொழில் நடத்தி வந்தார். மது, மாது, சூது என்ற எல்லாக் கெட்ட பழக்கங்களும் அவரிடம் இருந்தன.
மேடையில் சீர் திருத்தம், சம தர்மம் என்று பேசுவார்; ஆனால் ஊருக்கு தான் உபதேசம்; தனக்கு இல்லை” என்று வாழ்ந்தவர்.
அவர் அன்னையிடம் முதன் முதல் அருள்வாக்குக் கேட்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அப்போது….
” வாடா மகனே! இதுவரை நீ ஆடிய ஆட்டமெல்லாம் போதுமடா மகனே! வாடா இனி நீயும் நானும் சேர்ந்து, ஆன்மிகம் வளர்ப்போம்!
*மகனே! இனி உனக்குத் தண்ணியெல்லாம் ( மது ) வேண்டாமடா! அதை விட்டு விட்டு, ஆன்மிகத்தின் பக்கம் வாடா!” என்றெல்லாம் சொல்லி அழைத்தாள்.*
*ஆதிபராசக்தியிடமிருந்து வந்த வார்த்தைகள் அல்லவா அவை…..!*
*அவரை நெகிழ வைத்து விட்டன; அழுத கண்ணீரோடு வெளியே வந்தார். பின்பு அவர் முழுமையாக மாறிவிட்டார்.*
*இத்தகைய கருணை மலையாக இருப்பவள் அன்னை ஆதிபராசக்தி என்று இந்த மந்திரம் புகழ்கிறது.*
1008 போற்றி மலர்கள்
விளக்க உரை நூல்
பக்கம் -514, 515, 516.