வாழும் தத்துவம்

மருவத்தூர்- ஓர் ஊரின் பெயர் மட்டுமல்ல. அது ஒரு வாழ்க்கைத் தத்துவம். வாழும் தத்துவம். எக் காலத்தும், எவ்விடத்தும், எவ்விதத்தும் பொருந்து பொதுமைத் தத்துவம் , ஆன்மிகத்தை முதலாகவும், முடிவாகவும் கொண்ட முழுமைத் தத்துவம்.

மருவத்தூர் ஒரு தெய்வத்திருத்தலம். அன்னை ஆதிபராசக்தியே அவதார நோக்கத்தோடு எழுந்தருளி அருளாட்சி புரிந்துவரும் ஆன்மிகத்தலம். ஆனால் இவ்விடத்தை ஒரு திருத்தலமாக மட்டுமே காண்பதும் காட்டுவதும் அம்மாவின் அவதார நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டதாகாது.

உலக அரங்கில் இதுவரை தோற்றுவிக்கப்பட்ட இசங்களும் அதன் அடிபடையில் நிர்மாணிக்கப்பட்ட சமுதாய அமைப்புகளும் மனிதனுக்கு நிறைவான, சரியான , முழுமையான வாழ்வை அமைத்துத்தரவில்லை என்பதை மனிதகுலம் வேதனையோடும் விரக்தியோடும் உணரத் தலதலைப்பட்டுள்ள இந்தக்கால கட்டத்தில், மருவத்தூரின் வாழ்க்கைத் தத்துவத்தைச் சரியாகப் புரிந்து கொள்வதும், உலகிற்குப் புரியவைப்பதுமே இன்றுள்ள முக்கிய ஆன்மிகப் பணியாகும்.

செயல் வடிவம்

அந்தத் தத்துவத்திற்குச் செயல்வடிவம் தந்து, செயல்வடிவ ஆன்மிகத்தின் புற வடிவத்தை, வடிவமைப்பி உலகிற்கு உணர்த்த வந்த கர்மயோகி தான் நம் ஆன்மிக குரு சித்தர்பீட நாயகர் அருள்திரு அடிகளார் அவர்கள்.

அருள்திரு அடிகளார் எளிய மானிடராகப் பிறப்பெடுத்து, மகானாக உயர்ந்து, அன்னை ஆதிபராசக்தியின் அவதாரமே இவர் என்பதை மேடைப் பேச்சால் வெற்றுவாய் வீச்சால் அல்லாமல், அருள்வாக்கால் ஆன்ற சன்மார்க்கம் அணிபெறச் செய்யும் ஆக்கப் பணிகளால், சமயப் பொறாயால் ஆன்மிகத்
தொண்டால் உலகிற்கு உணர்த்தி வரும் நம் குருபிரான் அவதார புருஷர் என்பது ஐயங்களுக்கு அப்பாற்பட்ட உண்மை.

அவர் காலத்தில் நாம் வாழ்கிறோம். அவரோடு பேசுகிறோம். அவர்களின் அருளுக்குப் பாத்திரமாகி வருகிறோம் என்பது இந்தக் கலியுகத்தில் மானிடப் பிறவி எடுத்ததில் நாம் பெற்ற பெரும் பேறு.

ஆன்மிக குரு

ஆன்மிகத்தில் குருவிற்கே முதலிடம் குருவருள் வழியே தான் திருவருள் சித்திக்கும். என்பது ஆன்மிக விதி. இது பரம்பொருளே வகுத்து வைத்துள்ள ஆன்மிகச் சட்டம்.

தெய்வத்தை நேரே அணுகலாகாதா குருவழியே தன் அணுக வேண்டுமா அவ்விதம் அணுகினால் பலன்கிட்டாதா எனச் சிலர் வினவலாம். அணுகலாம். பலனும் கிட்டும். ஆனால் இவ்வித அணுகுமுறையில் ஒருசில உலகியல் பலன்கள் மட்டுமே கிட்டும். அதற்கு மேல் ஓர் அடி கூட மேல் நோக்கி எடுத்து வைக்க முடியாது.

ஆன்மிக பலம்

மனிதப் பிறவியில் மானுடன் அடைய வேண்டிய பலன், ஆன்மிகப் பலன், எய்த வேண்டிய இலக்கு பேரின்ப வீடுபேறு . உலகியலில் பெறும்பட்டம்,பதவி, பகட்டு, பவுசுகளால் மட்டும் ஒருவன் கர்ம வினைகளை அனுபவித்துக் கழிக்கவோ, பிறவிக்கடலைக் கடந்து வீடுபேறு அடையவோ முடியாது. அந்நிலை குருவழியே தான் சித்திக்கும். குருவழி அணுகுமுறையில் ஆன்மிகப் பலனோடு உலகியல் பலனும் அடையலாம்.

உலகின் எந்த ஒரு மதம், மார்க்கம், சமயம் என்று எடுத்துக் கொண்டாலும் சரி, அல்லது மதங்களுக்கு அப்பாற்பட்ட ஆன்மிகநெறி என்றாலும் சரி- அதன் அதீத நிலையில் சாயுச்சிய நிலையில் பரம்பொருளை நேரே சென்று அடையும் நிலை என்றோ,வழி என்றோ எதுவுமில்லை. சில அதீதிகளுக்கும் பரம்பொருளே குருவாக வந்து தான் அருள்புரிந்து ஆட்கொண்டிருக்கிறது.இதில் வேறு குறுக்கு வழி,
சுருக்குவழி என்று எந்த வழியும் கிடையாது.

தக்க பருவத்தில் பக்குவத்தில் தான் பக்தனுக்கே குரு கிடைப்பார். பக்தியில் கனிந்து ஆன்மிகத்தில் கமழும் போது பரம்பொருளே குருவைக் காட்டிக் கொடுக்கும். அப்படித் தான் அன்னை ஆதிபராசக்தி , தவத்திருஅடிகளாரை நமக்கெல்லாம் ஆன்மிக குருவாகக் காட்டிக் கொடுத்துள்ளாள்.

அடிகளாரே அம்மா

அடிகளார் வேறு: அம்மா வேறா? இல்லை; இல்லவே இல்லை. அம்மா தான் அடிகளார். அடிகளார் தான் அம்மா. இருவரையும் ஒன்றாகக் காண்பவனே பக்குவி.பிரித்துக் காண்பவன் அபக்குவி.

அம்மாவின் இணையடி நிழலில் இளைப்பாறுவதற்கு இன்னமும் பக்குவம் பெற வேண்டியவன் என்பது பொருள்.

அம்மா பண்டம். அடிகளார் பாண்டம். இந்தப் பாண்டத்தின் வழியே தான் அந்தப் பாண்டம் நமக்குக் கிடைக்கும். பாண்டம் வேறு, பண்டம் வேறு எனப் பிரித்துப் பார்ப்பதோ, பேசுவதோ கூட ஒரு வகையில் பக்குவக் குறைவு தான். இரண்டையும் ஒன்றாகக் காணும் பக்குவமே பக்குவம்.

அம்மா சக்தி. அடிகளார் கம்பி. இந்தக் கம்பி வழியே தான் அந்த மின்சக்தி அளவிலாப் பெருஞ்சக்தி – நமக்குக் கிடைக்கும். கம்பியின்றி மின்சக்தியை எந்த வகையிலும் பயன்கொள்ள முடியாது.

அம்மா அருவம். அடிகளார் உருவம். “குரு எனும் உருவத்தின் வழியே தான் அந்த அருவம் வசமாகும். ஆன்மிகத்தின் நீண்ட நெடிய பயணத்தில் – அதில் பெறவேண்டிய அதீத அனுபூதி நிலையில் “குரு” எனும் உருவில் கரைந்து கடக்க வேண்டிய நிலையும் உண்டு. அது அதீத நிலை. ஆயினும் அந்நிலையும் அம்மாவின் கருணையால் அடிகளார் எனும் “குரு” உருவில் தான் சித்திக்கும்.

நான்கு படிகள்

ஆன்மிகத்தில் ஏற வேண்டிய பல படிகளில் நான்கு படிகளை
முக்கியமாகக் குறிப்பிடலாம்.

1. அம்மாவை உணராத அஞ்ஞான நிலை.

2. தெய்வ விக்கிரகங்கள் வழியே அம்மாவைத் தரிசிக்கும் நிலை.

3. தவத்திரு அடிகளார் உருவில் (குரு வடிவில்) அம்மாவை உணரும் நிலை.

4. எல்லாமும் அம்மாவாகக் காணும் நிலை.

இதில் “எல்லாமும் அம்மாவாக காணும் நிலை” அதீத நிலை. அத்வைத நிலை. அது ஞானத்துள் ஞானம். துரியம் கடந்த துரியா தீத நிலை. அந்நிலையில் “தான் ,குரு அம்மா” என்பதெல்லாம் கரைந்து “ஏகன், அநேகன்” எனக் காணும் பக்குவம் கிட்டும். காணும் பொருள் யாவும் அம்மாவாக அடிகளாராகத் தோன்றும். குரு உருவில் (அடிகளார்) உருவில் எல்லாவற்றையும் காண்பது போலவே, எல்லாவற்றுள்ளும் குருவைக் காண முடியும்.

அந்நிலையை எய்துபவர் யார்? அதற்கும் அருள்புரிபவர் யார் ? இக் கேள்விகளுக்கான பதில் ஆன்மிகத்தில் பரம ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒன்று சொல்லலாம். குரு சீடனின் பக்குவமறிந்து மனம் கனிந்து அல்லது மனம் இரங்கி மேலிடத்தில் விண்ணப்பம் வைத்தால் தான் சீடன் அடைய வேண்டிய பக்குவமோ பெற வேண்டிய பதவியோ பெற முடியும். இது திருக்குறள் போன்ற தெளிவு. தொல்காப்பியம் போன்ற உறுதி.

அருள்திரு அடிகளாரின் தனித்தன்மை

மரபு வழிப்பட்ட மடாதிபதிகள், ஆதினகர்த்தாக்கள் போல் அல்லாமல் எளிமையின் உருவில் நம்மிடையே நடமாடிக் கொண்டிருக்கும் நம் குருபிரான் தவத்திரு. அடிகளார் அவர்கள் வணங்கத் தக்கவர். திரிகரண சுத்தியோடு போற்றத்தக்கவர்கள்.

குருவை வணங்குவது குருவிற்குப் பெருமை சேர்க்கும் செயல் அல்ல. அது நம்மை நாமே உயர்த்திக் கொள்ளும் செயல். குருவின் காலில் விழுந்து வணங்குவது மானிட சமத்துவ சிந்தனைக்கும், சமதர்ம்
கொள்கைக்கும் முரணானது அல்ல. உண்மையான சமத்துவம். சன் மார்க்கம், மனித நேயம் எனும் பூட்டைத் திறக்கும் திறவுகோல். குருவின் பொற்பாத கமலங்களைக் கண்ணீரால் கழுவுவதும், பாதபூசை செய்வதும், குருவடியைச் சென்னியில் வைத்துப் போற்றுவதும் சுயமரியாதைக்கும், தன்மானத்திற்கும் இழுக்கு என்பதல்ல.

கார் அறிவும் ,சீர் அறிவும்

அறிவு, பகுத்தறிவு, நுண்ணறிவு, பேரறிவு,மெய்யறிவு, எது என்பது தெரியாமல் கண்டதே காட்சி,கொண்டதே கோலம் எனக் கொண்டு வெறும் உலகியல் அறிவே – கார் அறிவே – கருவி அறிவே மெய்யறிவு என மயங்கி மமதை கொண்டு அஞ்ஞான இருளில் மூழ்கி, அகங்காரச் சேற்றில் அழுந்திக் கிடக்கும் நம் அழுக்குகளைப் போக்குவது. வற்றா வளம் சேர்க்கும் ஆன்மிக செல்வத்தை வாரி வழங்குவது.

எது பகுத்தறிவு எது மெய்யறிவு என்று அறியாத வெறும் உலகியல் அறிவால் – கருவி- அறிவால்- குருவை அணுகுவதும்- ஆராய்வதும் மடமை.

குருபக்தி என்பது குருட்டு பக்தி அல்ல. குருவழிபாடு என்பது தலைமை வழிபாடோ, தனி நபர் வழிபாடோ (Hero Worship)அல்ல.

குருவடிகளைச் சரண் அடைவது மனிதனின் சுயமுயற்சியைத் தன்னம்பிக்கையை அடகுவைக்கும் அறிவீனம் என்பதல்ல.

உலகியலில் அரசியல் தலைவர்களை , திரைப்பட நடிகர்களை, சாதி, மத , சமயத்தலைவர்களை வழிபடும் தெய்வங்களாக்கி கண்மூடித்தனமான மோகத்தால், கவர்ச்சியால் ஈர்க்கப்பட்டு அறிவுமனம் யாவற்றையும் அடகு வைத்துக் குருட்டு மந்தைகளாக்கும் போக்கு தலைமை வழிபாட்டால், (Hero Worship) தனிநபர் வழிபாட்டால் உருவாகிறது என்பது உளவியல் பூர்வமான உண்மை.

ஆனால் உலகியல் தனிநபர் வழிபாட்டையும், ஆன்மிக குரு வழிபாட்டையும் , ஆன்மிக குரு வழிபாட்டையும் ஒப்ப வைத்துப் பார்க்கக் கூடாது. இவை இரண்டும்
அடிப்படையில் மாறுபட்டவை. இதன் நுட்பமான வேறுபாடு அனுபவத்தில் தான் புரியும்.

குருவடியின் மகிமை

அஞ்ஞான இருளில் சிக்கி, உலகியல் சேற்றில் புதைந்து அகங்காரத்தின் பிடியில் சிக்கிச் சீரழிந்து வரும் மானிட ஆத்மாவின், ஜீவாத்மாவின் மயக்கை அறுத்து, களைப்பை நீக்கி, உண்மை விழிப்பை ஊட்டி, விழித்தெழச் செய்யும் மூல உயிர்ப்பு குருவடிகளுக்குத் தான் உண்டு.

அல்லது வேறுவிதமாகச் சொல்வதென்றால் உலகியல் மாயை மயக்கங்களிலிருந்து விடுபட்டு ஆன்ம விழிப்புற்று அருள்தாகமும், ஆன்மிக நாட்டமும் கொண்ட மானிட ஆன்மா, ஜீவாத்மா – குருவடியைப் பற்றவே செய்யும். இது அனுபவ நிலை.

ஆனால் இன்றைய நவீன அரசியல் சிந்தனை, அறிவியல் சிந்தனை, பொருளாதாரச் சிந்தனை, உற்பத்தியை மையப்படுத்தும் தொழில் சிந்தனை, ஆன்மிகச் சிந்தனைகளை அடிப்படை ஆன்மிக விதிகளைப் பலநிலைகளில் மறுதலிக்கின்றது.பகுத்தறிவு எனும் பெயரால் குருபக்தி, குரு வணக்கம், குரு வழிபாடு, குரு காணிக்கை, குருவிடம் சரணாகதி என்பதைப் பகிடி செய்கின்றது.

குரு காணிக்கை

குருவிற்குக் காணிக்கை கொடுப்பதையும், தொண்டு செய்வதையும் பிற்போக்குத்தனம் என்றும், மனித இனத்தை மடமைக் குழியில் வீழ்த்தும் அடிமைத்தனம் என்றும் – மாற்று வடிவச் சுரண்டல் என்றும் ஏளனம் செய்கின்றது.

குரு காணிக்கை என்பது ஒரு புனிதச் செயல். ஒப்பற்ற உயரிய பண்பு. ஆன்மிகத்தின் அடிப்படையான ஒழுகலாறு. சீடன் ,குருவிற்குக் காணிக்கை தந்து அருள் ஆசி பெறுவது அடிமைத்தனமோ, குரு. சீடனிடமிருந்து காணிக்கை பெறுவது சுயநலமோ, சுரண்டல் மனப்பான்மையோ அல்ல. சரிவர விளங்கிக் கொள்ளாமல் அவசரப்பட்டு எதையும் கொச்சைபடுத்தி விமர்சிப்பது மகாபாவம்.

தகுதி வாய்ந்த உண்மை குரு சீடனிடமிருந்து எதையும் எதிர்ப்பார்ப்பதில்லை. சீடன் மனம் உவந்தே கொடுத்தாலும் அந்தக் காணிக்கையை ஏற்றுக் கொள்வதில் உள்ள இடர்ப்பாடுகளை, கர்ம வினை கணக்குகளைக் குரு நன்கறிவார். பொதுவாகக் குருமார்கள் உலக விவகாரங்களிலிருந்து விலகவே விரும்புவார். வலிந்து சென்று வினையை வாங்கிக் கொள்ள மாட்டார்கள்.

குருவே வலிந்து சீடனிடம் ஏதோ ஒரு காணிக்கை கேட்கிறார் என்றால் அது சீடனின் நன்மைக்காகவே இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். ஒன்று சீடனுக்கு நேர இருக்கும் ஒரு பேரிழப்பைத் தடுப்பதாக இருக்கும். அல்லது சீடனுக்கு நிறைய கொடுக்க விரும்பும் விருப்பமாக இருக்கும் இது ஆன்மிக சூட்சுமம்.

நம் ஆன்மிக குரு தவத்திரு அடிகளார் குரு காணிக்கை பெறுவது பக்தர்களின் நலனை முன்னிட்டுத் தான் என்பது அனுபவசாலிகளுக்கு நன்கு தெரியும். ஆயர் பர்டியில் கோகுலக் கிருஷ்ணன் வெண்ணெய் திருடித் தின்றது. தனக்குப் புசிக்க ஒன்றும் கிடைக்கவில்லையே என்பதாலா? ஆன்மிகத்தின் சூட்சுமம் அங்கல்லவா இருக்கின்றது!

நம் ஆன்மிக குரு பக்தனிடமிருந்து வெறும் 10 காசு காணிக்கைக்காகத் திரும்ப என்ன தருகிறார் என்பது நமக்குத் தெரிவதில்லை. அதற்கான பலன் கண்ணுக்குத் தெரியாமலே நம்மை வந்து சேருகின்றது. கொடுக்கும் காசிற்குத் தான் நாம் கணக்குப் பார்க்கின்றோம். பெறும் பலனுக்குக் கணக்கு வைப்பதில்லை. இது மனித நிலை.

அம்மா நம் மீது அளவிலாக் கருணை வைத்து நமக்கு நிறையகொடுக்க நினைக்கும் போது தான் “பாலகனைப் பற்றிக் கொள் குரு காணிக்கை செலுத்து, பாலகனுக்குத் தொண்டு செய்” எனும் உத்தரவைப் பிறப்பிக்கிறாள்.

இது ஆன்மிகச் சட்டம், அம்மாவே கொடுக்க விரும்பினாலும்
எதையும் நேரடியாகக் கொடுக்காமல் குருவழியாகத் தான் கொடுக்க முடியும். கொடுக்க வேண்டும் என்பது பரம்பொருளாகிய அம்மாவே வகுத்துள்ள சட்டம். இது ஏன் இப்படி என்பதில்லை. அது அப்படித் தான் அதைப் புரிந்து கொண்டு செயல் படுத்துவது தான் ஆன்மிக விதி. பக்தனின் கடமை.

அம்மா நமக்கு இந்தச் சூட்சுமங்களை எல்லாம் சொல்லிக் கொடுத்து, குருவைக் காட்டிக் கொடுத்த பின்னரும் குருவை வணங்காமல் குருவடியைப் பற்றாமல் நெட்டை நெடுமரமாய் நின்று கொண்டிருந்தால், இனி நம்மை மீட்க யார் தான் வரப்போகிறார்கள்?

ஓம் சக்தி

நன்றி

பக்கம் 56- 61.

சக்தி ஒளி 1996 மே.