மேல்மருவத்தூரில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பை ஆந்திரா, தெலுங்கானா பக்தர்கள் வெகு விமரிசையாக கொண்டாடினர். ஆன்மிககுரு பங்காரு அடிகளார் ரூ. 11 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் யுகாதி தெலுங்கு வருடப்பிறப்பை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் உள்ள ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் விமரிசையாக கொண்டாடினர். இன்று நடைபெற்ற மேடை நிகழ்ச்சியில் ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளார் ரூ.11 லட்சம் மதிப்புள்ள பல்வேறு நலத்திட்ட பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினார். விழாவை முன்னிட்டு சித்தர்பீடம் மலர்களால் சிறப்பாக அலங்கரிப்பட்டிருந்தது. ஆங்காங்கே பல அலங்கார பதாகைகள் தெலுங்கு ,தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் வைக்கப்பட்டிருந்தன.
இன்று விடிகாலை ஆதிபராசக்தி அம்மனுக்கு கருவறையில் சிறப்பு அபிடேகம், அலங்கார ஆராதனைகள் செய்யப்பட்டன. அதை தொடர்ந்து வரிசையில் வந்த பக்தர்களுக்கு யுகாதி பச்சடிபிரசாதமாக வழங்கப்பட்டது. காலை10.30 மணியளவில் சித்தர்பீடம் வருகை தந்த ஆன்மிககுரு அருள்திரு பங்காரு அடிகளாருக்கு ஆந்திரா மற்றும் தெலுங்கானா பக்தர்கள் பாதபூசை செய்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து 11 மணியளவில் அன்னதானம் நடைபெற்றது. காலை 11.45 மணிஅளவில் ஆன்மிக மண்டபத்தில் சிறப்பு மேடைநிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவில்ரூ.11 லட்சம் மதிப்புள்ள பல்வேறு சமுதாயநலத்திட்டப் பணிகளை ஆன்மிககுரு அடிகளார் நடத்தி வைத்தார். 45 பேருக்கு தையல் இயந்திரங்கள், 4 பேருக்கு சலவைகற்கள் வெட்டும் கருவிகள், 10 பேருக்கு மின் சாதனங்கள் பழுதுபார்க்கும் கருவிகள், 10 பேருக்கு மருந்து தெளிப்பான், 4 பேருக்குஅடுப்பு, 13 பேருக்கு சமையல் பாத்திரங்கள், 20 பேருக்கு கல்விஉதவித் தொகை, அன்னை இல்லத்திற்கு 1 லட்சம் ரூபாயும் வழங்கப்பட்டது.
விழாவில் மண்டலபாஸ்போர்ட் அதிகாரி டாக்டர். விஷ்ணு வர்த்தன் ரெட்டி, முக்கிய விருந்தினராக கலந்துக் கொண்டார். மேலும் இந்நிகழ்ச்சியில் அன்னையின் 108 அற்புதங்கள் அடங்கிய தெலுங்கு புத்தகத்தை அருள்திரு அடிகளார் மற்றும் லட்சுமி பங்காரு அடிகளார் வெளியிட சிறப்பு விருந்தினர் விஷ்ணுவர்தன் ரெட்டி பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆன்மிக இயக்கத்தின் துணைத் தலைவர் கோ.ப. செந்தில்குமார் மற்றும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டனர். விழாஏற்பாடுகளை ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலதலைவர்கள் சக்தி.கங்காதாரம், சக்தி.சரிதா மற்றும் சக்தி.கலாதர் மற்றும் பக்தர்கள் சிறப்புடன் செய்திருந்தனர்.