“மந்திர விளக்கம்”

மந்திரங்கள் என்றும் உள்ளவை, மந்திரங்கள் ஒலியால் பயன்விளைப்பவை. மந்திரங்கள் உச்சரிக்கப்படும் பொழுது உண்டாகும் ஒலி அதிர்வுகள் (Sound Vibrations) சுற்றிப் பரவுகின்றன. அந்த அந்த அதிர்வுகள் மந்திரங்களை ஓதுகின்றவர்கட்குச் சிறப்பாகவும், அதனைக் கேட்பவர்கட்குப் பொதுவாகவும் சிறந்த பயனை அளிக்கின்றன. ஒலி அதிர்வுகள் இத்தகைய பயனை அளிக்க முடியுமா என்ற சந்தேகம் யார் மனத்திலாவது தோன்றினால் அவர்கட்குத் தற்கால விஞ்ஞானிகளின் ஆராய்ச்சியைப் பற்றி ஓரளவு தெரிவிக்க வேண்டும்.

எண்ணெயில் தோய்த்து எடுத்து அழுக்கும் சேர்ந்துபோன ஒரு துணியை எவ்வாறு தூய்மைப்படுத்த முடியும்? பலமுறை சலவை செய்தால் ஓரளவு தூய்மை அடையும். அதற்குப் பதிலாகத் தற்கால விஞ்ஞானம் ஒலி அதிர்வுகளைப் பயன்படுத்துகிறது. ஒரு கண்ணாடித் தொட்டியில் நீரை நிரப்பி அதில் இக்கத்தைத் துணியை தொங்கவிட வேண்டும். இத்தொட்டியின் பக்கத்தில் அதீத அதிர்வுடைய ஒலி அலைகளை (Ultra sonic Sound) ஒரு கருவியின் மூலம் உண்டாக்கினால் சில வினாடிகளில் துணியைப் பற்றி இருக்கும் அழுக்குகள் கழன்று விழத் துணி சலவை செய்தது போல ஆகி விடுகிறது.

பொருளைப் பற்றியிருக்கும் புற அழுக்கைப் போக்க இன்றைய விஞ்ஞானம் அதீத அதிர்வுடைய ஒலியைப் பயன்படுத்துகிறது. மனத்தைப் பற்றியுள்ள காம, வெகுளி, மயக்கம் என்ற அழுக்குகளை களைய மந்திரங்களை ஓயாமல் பாராயணம் செய்வதால் மன அழுக்கைப் போக்க முடியும் என்ற உண்மையை நம் முன்னோர் என்றோ கண்டுபிடித்துப் பயன்படுத்தி வருகின்றனர்.

“கொல்வா ரேனும் குணம்பல் நன்மைகள்
இல்லா ரேனும் இயம்புவ ராயிடின்
எல்லாத் தீங்கையும் நீக்குவர் என்பரால்
நல்லார் நாமம் நமச்சி வாயவே”

“மந்தரம் அன பாவங்கள் மேவிய
பந்த னையவர் தாமும் பகர்வரேல்
சிந்தும் வல்வினை; செல்வமும் மல்குமால்
நந்தி நாமம் நமச்சி வாயவே”

என்பவை திருஞானசம்பந்தர் வாக்காகும்.

“நிறைமொழி மாந்தர் ஆணையில் கிளந்த
மறைமொழி தானே மந்திரம் என்ப”

என்பது தொல்காப்பியம். எனவே மந்திரங்களின் வலிமையை நம் முன்னோர் அறிந்திருந்தனர் என்பது உறுதி.

இந்த மந்திரங்கள் இருவகைப்படும். முதல் வகை மந்திரங்கள் வேறு பொருள் ஒன்றையும் குறிக்காமல் ஒலிக் கூட்டமாக மட்டும் நிற்கும்; இவை மிக முக்கியமான ஒலிச் சேர்க்கையாகும். வெறும் அதிர்வுகளாலேயே பெரும் பலனை அளிக்கக்கூடிய இந்த மந்திரங்களை “பீஜ அட்சரங்கள்” (மூல ஒலிகள்) என்று கூறுவர். அன்னையைப் பற்றிய மந்திரங்கள் ஆயிரக் கணக்கில் உண்டு. லலிதா சகஸ்ரம், லலிதா திரிசதி போன்றவை இவற்றிற்கு உதாரணம். ஆனால், இந்த மந்திரங்கள் முதல் தொகுதியைச் சேர்ந்தவை அல்ல. பொருளுடன் கூடிய இந்த மந்திரங்கள் இரண்டாவது வகையைச் சேர்ந்தவை.

ஹைம், க்லீம், ஸ்ரிம், ஹ்ரிம் என்பவை போன்றவை பீஜ அட்சர வகையைச் சேர்ந்தவை. இவை ஒலியால் மட்டும் பயன் தருபவை. அன்னையைப் பொறுத்தமட்டில் பஞ்சதசி என்றும் ஷோடசி என்றும் மந்திரங்கள் உண்டு. பஞ்சதசி என்பது பதினைந்து எழுத்துக்களும் ஷோடசி பதினாறு எழுத்துக்களும் கொண்டவை. இரண்டாவது, வகை மந்திரங்களுடன் இந்த பீஜ மந்திரங்களில் ஒன்று, இரண்டு, மூன்று என்று சேர்த்துக் கூறுவதால் வெவ்வேறு பயன் உண்டு என்று பெரியோர் கூறியுள்ளனர்.

ஒருவராக இருந்து மந்திரங்களை செபிப்பது போல் கூட்டமாக இருந்து மந்திரங்களைக் கூறுவதால் ஒலி அதிர்வுகளின் வலிமை மிகுதிப்படுகிறது. கூட்டமாகச் சேர்ந்து சொல்லும்போது ஆளுக்கொரு குரலில் இஷ்டம் போல் கூறுவது பெருந் தவறு. எடுத்தல் – படுத்தல் – நலிதல் ஆகியவற்றில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து கூறுவதுதான் அலைகளை வலுப்படுத்தும். இல்லாவிட்டால் இந்த அலைகள் ஒன்றுடன் ஒன்று மோதி வலுவை இழந்துவிடும். எனவே கூட்டமாகச் சேர்ந்து 1008 108 மந்திரங்களை ஓதும்போது கூடுமானவரை ஒரே வகையான ஒலி அலைகளை உண்டாக்குவது மிக மிக அவசியமாகும், மருவத்தூரைப் பொறுத்தவரை, கலச பூசை, விளக்கு பூசை முதலியவற்றில் இருபது இருபத்தைந்து பேர் சேர்ந்து மந்திரங்கள் படிக்கும் போது ஒலியதிர்வுகள் இணைந்து செல்ல வேண்டும் என்பதை அன்னை பலமுறை வற்புறுத்திக் கூறியுள்ளாள். ‘‘ஒரு குரலாக ஒலிக்க வேண்டும்” என்று அன்னை சொல்வதன் நோக்கம் இப்போது புரிகிறது அல்லவா? இதையே போல மெல்லிய குரலுடைய ஆண்கள் சேர்ந்து மந்திரம் ஓதக்கூடாது என்றும், ஆண்கள் தனியேயும் பெண்கள் தனியேயும் 1008 படிக்க வேண்டும் என்றும் அன்னை வற்புறுத்துவதன் நோக்கம் இப்பொழுது புரிகிறது அல்லவா?

அன்னை ஆதிபராசக்தி கோயிலில் 108, 1008 போற்றிகள் படிக்கப்படுவதை நாம் அனைவரும் அறிவோம். இவைகள் சமஸ்கிருதத்தில் இல்லை; தமிழில் இருக்கின்றன. ஆகவே, இவைகளை மந்திரங்கள் என்று சொல்ல முடியுமா? – என்று கேட்கின்றன பலர் இன்றும் உண்டு. இந்த நிலையில் மந்திரங்கள், அர்ச்சனைக்குரிய சொற்கள் என்பது பற்றிக் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். திருக்கோயில்களில் “ஷோடச உபசாரங்கள்” முடிந்து புஷ்பாஞ்சலி நடைபெறுகின்ற வரைதான் ஆகமத்தில் சொல்லப்பட்டுள்ளன. இதற்கு மேலே நடைபெறுகின்ற சமஸ்ரநாம, அஷ்டோத்திர (1008, 108) அர்ச்சனைகள் திராவிட மொழி உள்பட எந்த மொழியில் வேண்டுமானாலும் இருக்கலாம் என்று காமிகாகமம் வலியுறுத்திச் சொல்வதை நினைவில் கொள்ள வேண்டும். இதை மனத்தில் வைத்துக் கொண்டுதான் – சுந்தரரை நோக்கி “அர்ச்சனை பாட்டேயாகும்; ஆதலால் மண்மேல் நம்மைச் சொற்றமிழ் பாடுக என்றார் – தூமறை பாடும் வாயார்” – என்று சிவபெருமானே சொன்னதாகச் சேக்கிழார் பெரியபுராணத்தில் கூறுகிறார். ஆகமவிதி முறைப் பூசை முடிந்த பிறகு – தோத்திரமாக அவரவர் குறையைச் சொல்லி இறைவனிடம் வேண்டிக் கொள்கின்ற சூழ்நிலையில் அர்ச்சனை பயன்படுகிறது. இந்த நிலையில் எந்த மொழியில் வேண்டுமானாலும் அர்ச்சனை செய்யப்படலாம். இறைவன் புகழைச் சொல்லித் தன் குறையைப் போக்க வேண்டும் என்று கேட் வருபவன் அவனவன் தாய்மொழியில் கேட்பதுதானே முறை? ஆகவே, தமிழில் அர்ச்சனை என்பது ஆகமங்களும் ஏற்றுக்கொள்ளும் ஒன்று என்றால், இதுபற்றி யாரும் பேச வேண்டிய தேவையில்லை.

அர்ச்சனையில் வரும் சொற்களும், சொற் பிரயோகங்களும் நாளாவட்டத்தில் மந்திரங்களின் வலிமையைப் பெற்றுவிடுகின்றன. இந்தக் கருத்தில்தான் இலலிதா சகஸ்ர நாமம் முதலிய சொற்களைப் பலமுறை கூறிப் பெரியோர்கள் அதற்கு மந்திர சக்தியைத் தந்து விட்டனர். இன்று அவை அர்ச்சனையாகக் கொள்ளப்பட்டாலும், மந்திரங்கட்கு உரிய வலிமையைப் பெற்று விளங்குகின்றன. இந்தக்கருத்தை அடியொற்றித்தான் இலைமறை காய்மறையாக மந்திரங்கள் பொதிக்கப்பெற்றுள்ள அபிராமி அந்தாதி போன்ற தோத்திரப் பாடல்கள் மந்திரங்களின் வலிமையைப் பெற்று விளங்கக் காண்கிறோம்.

இதுவரை கூறிய அனைத்தும் மேல்மருவத்தூரில் அன்னை ஆதிபராசக்தி கோயிலில் பாராயணமும் அர்ச்சனையும் செய்யப்படுகின்ற 108, 1008 ஆகியவற்றிற்கும் பொருந்தும், அன்னையே இவற்றை ஏற்றுக்கொண்டு இவற்றிற்கு மந்திரங்களின் வலிமையைத் தந்துவிட்டாள். இந்த மந்திரங்கள் பொருள் இல்லாத முதல்வகை பீஜ அட்சரங்களைப் போல அல்லாமல் – பொருளோடு கூடிய இரண்டாவது வகையைச் சேர்ந்தவை. எனவே, கோயிலில் அதிகம் அன்றாடம் பயிலப்படுகின்ற ‘‘108 போற்றித் திருவுரு” பற்றியும், அவற்றின் பொருளாழம் பற்றியும் தொடர்ச்சியாகச் சிந்திப்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கமாகும்.

இம்மந்திரங்கள் அனைத்தும் ‘‘ஓம்” என்ற மூல ஒலியில் தொடங்கி போற்றி ஓம் என்று முடிவதைக் காணலாம். ‘‘போற்றி” என்ற சொல்லுக்கு, ‘‘வணங்குகிறேன்” என்பது பொருளாகும். முன்னும் பின்னும் இருக்கின்ற ஓங்கார ஒலி ஆழமான பொருள் உடையது ஆகும். இன்று வழக்கத்திலுள்ள பல்வேறு அர்ச்சனைகளிலும் ‘‘ஓங்கார ஒலி” முன்னர்ச் சேர்க்கப்படுமே தவிரப் பின்னர் சேர்க்கப்படுவது இல்லை. போற்றித் திருவுருவில் முன்னும் பின்னும் சேர்க்கப்பட்டிருப்பது – ஆழமான பொருள் உடையது ஆகும். ஒலிகளுக்கெல்லாம் மூலமாகவும், சொல்லின் பொருளுக்கெல்லாம் இடம் தருவதாகவும் உள்ள இந்த ‘‘ஓங்கார நாதம்” அன்னையின் திருவுருவ அமைப்பேயாகும் என்பதை ‘‘மூலமந்த்ராத்மிகாயை” (லலிதம் 89) ‘‘ஷர்வ மந்த்ர ஸ்வரூபிண்யை” (லலிதம் – 204) போன்ற மந்திரங்கள் வலியுறுத்திச் சொல்வதைக் காணலாம். நாம் எவ்வளவு ஆழமான பொருளை, தத்துவத்தை , விளக்கத்தை மந்திரச் சொற்களாகச் சொன்னாலும் அந்தச் சொற்களின் ஒலியும், பொருளும் ஓங்காரத்துள் அடங்கிவிடும். சொல்லையும் அது குறிக்கும் பொருளையும் கூறவந்த காளிதாசன் இரகுவம்சத்தில் ‘‘சொல்லின் ஒலிவடிவை உமையின் வடிவு என்றும், சொல்லின் பொருளைச் சிவபெருமான் வடிவு என்றும் கூறுகிறான். இதை விளக்கும் முறையில் ‘‘சொல்லும் பொருளுமாக விளங்கும் உயர காந்தனை வணங்குகிறேன்” – என்று குறிக்கிறாள். எனவே போற்றித் திருவுருவில் எல்லா மந்திரங்களும் ஓங்காரத்தில் தொடங்கி – ஓங்காரத்தில் முடிவது அன்னை வடிவாக உள்ள நாத சொரூபத்தில் எல்லா மந்திரங்களும் அடக்கம் என்பதைக் குறிப்பதற்காகவே ஆகும்.

இனி முதலாவது மந்திரம், ‘‘ஓம் ஓம்சத்தியே போற்றி ஓம்” என்பதாகும். இதுவரை நாதவடிவமான மந்திரங்கட்கு எல்லையில்லாத பேராற்றல் உண்டு என்று சொல்லி வந்தோம் அல்லவா? அந்தப் பெரிய கருத்தை இந்த முதல் மந்திரம் விளக்குகிறது. ‘‘ஓம் சத்தியே என்றால், ஓங்கார வடிவாய் உள்ள அன்னை, சத்தியே வடிவமாகவும்” உள்ளாள். இங்குச் சத்தி என்ற சொல்லுக்கு ‘‘ஆற்றல்” என்பது பொருளாகும். ஓங்காரமாகிய சொல்லுக்கு உள்ள சத்தி, அலல்து ஆற்றல் அளவிடற்கரியது. அன்னையின் வடிவே ஓங்காரம் என்றால், அவளுடைய ஆற்றல் முழுவதும் அந்த ஓங்காரத்தில் உறையும் அல்லவா? இதனை வேறுவகையாச் சொன்னால், ‘‘ஓம்” என்று சொன்னாலும் ‘‘சத்தி” என்று சொன்னாலும் பொருள் ஒன்றேயாகும். உலகம், உயிர்கள் யாவும் இயங்குவது சத்தியின் துணைகொண்டு ஆதலால் நம்மை ஆக்கி – உயிருடன் வாழச் செய்து பணிபுரியுமாறு செய்கின்றவள் அன்னை. ஆதலால் அந்தச் சத்தியை நினைவு கூர்ந்து – அவளுக்கு நன்றியறிதலுடன் வணக்கத்தைச் செலுத்துகிறது முதல் மந்திரம்.

(வளரும்)

ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி
விளக்கு -1 சுடர் 7 (1982)
பக்கம்: 34-37

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here