செங்கற்பட்டு நகரில் வாழ்ந்து வருகின்ற வழக்கறிஞர் அவர்! கிரிமினல் வழக்குகளில் குறுக்குக் கேள்வி கேட்டே எதிர் வாதம் புரியும் வழக்கறிஞரின் வாதங்களை முறியடித்து விடுபவர். சாட்சிகளைக் குறுக்கு விசாரணை செய்யும் போது சாமர்த்தியமாகத் தனக்குச் சாதகமான முறையில் வழக்கின் போக்கினைத் திருப்பிக் கொள்ளும் வல்லமை அவருக்கு உண்டு.
அன்னையிடம் மிகுந்த பக்தி அவருக்கு உண்டு; சிலர் ஆரவாரமாகத் தன் பக்தியைக் காட்டிக் கொள்வார்கள்; இவரோ அந்தரங்கமாக பக்தி செலுத்துபவர். அன்னை ஆதிபராசக்தி மருவத்தூரில் எழுந்தருளிய ஆரம்ப காலந்தொட்டு அன்னைக்குத் தன்னால் முடிந்த அளவு கோயில் தொண்டு புரிந்து வருபவர். இன்னின்ன முறையில் – இந்த இந்த வகையில் பூசை செய்ய வேண்டும் என்ற வரையறை வைத்துக் கொள்ளாதவர். வீட்டை விட்டுப் புறப்படும் போதும், வெளியில் எங்கேனும் செல்லும் போது “அம்மா! போய் வரட்டுமா?” என்று மானசீகமாக வேண்டிவிட்டுத் நான் புறப்பட்டுச் செல்வார். நண்பர்களோடு உரையாடும் போதெல்லாம் அன்னையை இவர் கேலி செய்வார்; திட்டுவார், இவர் பக்தியில் செயற்கைத் தனம் எதுவும் இல்லை என்பது உடன் இருந்து பழகியவர்கட்கே புரியும்.
அன்னையின் சிலையை உருவாக்க வேண்டி மாமல்ல புரத்தில் ஏற்பாடு செய்யப்பட்டது. அந்தச் சிலையின் அமைப்பும் அன்னையின் அருளாணைப் படியே உருவாக்கப்பட்டது. சிலையை வடித்து முடித்த பிறகு அதனை எடுத்து வருமாறு அன்னை மூன்று பேரை நியமித்தாள். அந்த மூவரில் இந்த வழக்கறிஞரும் ஒருவர். இந்த அன்பரின் வண்டியில் தான் அன்னையின் சிலை கோயிலுக்குக் கொண்டு வரப்பட்டது.
சில மாதங்கள் கழித்து இந்த அன்பரை அழைத்து, “மகனே! நீ வைத்திருக்கும் வாகனத்தை விற்று விடு!” என்று ஆணையிட்டாள். என்ன காரணத்துக்காகச் சொல்கிறாள்? ஏன் சொல்கிறாள்? என்பது அன்பருக்கும் புரியவில்லை. அவரைச் சார்ந்த நண்பர்கட்கும் புரியவில்லை.
அன்னையின் சிலையை எடுத்து வந்த கார் இது! இது ராசியான வண்டி! பெரிய பாக்கியம் எனக்குக் கிடைத்தது! இதைப் போய் விற்பதா என்று அன்பர் தடுமாறினார்; விற்க மனம் வரவில்லை. அவ்வப்போது அன்னை அவரிடம் அருள் வாக்குச் சொல்லிய நேரங்களில் எல்லாம் “வாகனத்தை விற்றுவிடு” என்று அடிக்கடி சொல்லி வந்தாள். அன்பர் கேட்பதாக இல்லை!
சில மாதங்கள் கழித்து, மதுராந்தகம் வழக்கு மன்றத்தில் ஒரு வழக்கு சம்பந்தமாகச் செங்கற்பட்டிலிருந்து வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பினார். கருங்குழி அருகே வந்த போது எதிரில் ஒரு லாரி முரட்டுத் தனமாக வந்தது. அன்பர் தானே வண்டியை ஓட்டி வந்தார். லாரி மோதிவிடப் போகிறது என்று எண்ணி வேகமாகத் தன் வண்டியைத் திருப்பினார். திருப்பிய வேகத்தில் வண்டி சாலையை விட்டிறங்கி அங்கே இருந்த மரத்தில் மோதி விட்டது. வண்டி சேதம் அடைந்தது; வண்டியின் கதவுகள் திறந்த வேகத்தில் யாரோ இவரைக் கைப்பிடித்து வெளியே இழுத்துத் தள்ளியது போல ஓர் உணர்வு. அன்பரின் உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை, என்றாலும் முழங்கால் எலும்புகள் முறிந்து விட்டன! மயங்கிக் கிடந்திருக்கின்றார். இவ்வளவும் பகலில் நடந்த நிகழ்ச்சிகள்! அடுத்ததாக வந்த “பஸ்”களில் இருந்தவர்கள் வண்டியையும் – விபத்தையும் பார்த்து நம்முடைய வக்கீல் வண்டி போல இருக்கிறதே என்று எண்ணி இறங்கி வந்து பார்த்து அன்பரை மருத்துவ மனைக்கு எடுத்துச் சென்றனர்.
எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. என்று தெரிந்தது; புத்தூருக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார்கள். இனி நடக்க முடியுமோ? உலாவ முடியுமோ? நம் கதி இப்படியே ஆகி விடுமோ என்று வழக்கறிஞர் அன்பர்க்குக் கவலைகள் தின்னத் தொடங்கிவிட்டன. அன்னையின் மேல் அவருக்கு ஆத்திரம் ஆத்திரமாக வந்தது; அழுகையும் வந்தது. காலில் முதல் கட்டு போடப்பட்டது. இரண்டாவது கட்டும் போடப்பட்டது. இன்னும் 10 நாள் இந்தக் கட்டு அவிழக் கூடாது, எச்சரிக்கையாக இருங்கள் அதன் பிறகு வரலாம் என்று சொல்லி அவரைப் புத்தூர் மருத்துவர்கள் அனுப்பி வைத்தார்கள்.
வீட்டுக்கு வந்து, சில மணி நேரம் ஓய்வு எடுத்துக் கொண்டு நேராக வேறு ஒரு வண்டியை ஏற்பாடு செய்து கொண்டு மருவத்தூர் வந்தார். அவர் வந்த அன்று அன்னை அருள்வாக்கு அளித்துக் கொண்டிருந்த நாள். ஆலயத்தில் காலடி எடுத்து வைத்ததுமே -10 நாளைக்கு இந்தக் கட்டு அவிழக் கூடாது என்று எச்சரித்து அனுப்பப்பட்ட அந்தக் கால்கட்டு அவிழ்ந்து நழுவி விழுந்தது. அதனைச் சரிப்படுத்திக் கொண்டபின் அன்னையின் எதிரே போய் அருள்வாக்கு கேட்க அமர்ந்தார்.
அன்னை சில மணித்துளிகள் மௌனமாக இருந்தாளாம். அன்னையைப் பார்த்த உடனே அன்பர்க்குக் “கோ” என்று வாய்விட்டு அழ வேண்டும் போல இருந்தது. அடக்கிப் பார்த்தார். கண்களில் மாலை மாலையாகக் கண்ணீர் வந்துவிட்டது அன்பருக்கு! அன்பரின் மனக்குமுறல் தணியட்டும் என்றோ என்னவோ அன்னையும் எதுவும் பேசாமல் மௌனமாய் இருந்தாளாம்! இப்படிச் சில நிமிடங்கள்! ஓரளவு மனந்தேறி நிமிர்ந்து அன்னையைப் பார்த்தார்.
அன்னை சொல்லத் தொடங்கினாள் “மகனே! வாகனத்தை விற்றுவிடு! விற்றுவிடு என்று சொன்னேன். கேட்கவில்லை. குழந்தைக்கு மருந்து புகட்ட வேண்டும் என்று தாய் முயற்சிக்கின்றாள். குழந்தையோ அடம் பிடிக்கின்றது; எப்படியாவது மருந்தை ஊட்டி ஆக வேண்டும்! உண்மையான தாய் இந்த நிலையில் என்ன செய்வாள் மகனே?” என்று அன்பரைப் பார்த்து அன்னை கேட்டாள். “குழந்தையை அடித்தாவது தாய் மருந்தூட்டுவாள்” என்று அன்பர் கூறினார். குழந்தையை அடிக்கும் போது வாய் திறந்து அழும் அல்லவா? அப்படி வாயைத் திறக்கின்ற அந்த நேரத்திலே மருந்தை ஊட்டி விடுகின்றான் அல்லவா? என்றாள் அன்னை. “ஆமாம்” என்றார் அன்பர். அதையே தான் நானும் உனக்குச் செய்தேன் மகனே! என்றான் அன்னை, அன்பர் ஒன்றுமே பேசமுடியாமல் எழுந்து வந்தார்.
அம்மா அவ்வப்போது சொல்வதுண்டு. “நல்லது கிடைத்தால் அம்மா தயவால் கிடைத்தது யான்கின்றீர்கள்; துன்பம் வரும்போதும் தாய் கொடுக்கும் கசப்பு மருந்து இது என்று கருதிப் பொறுத்துக் கொள்ள வேண்டும். இத் துன்பத்தையும் தாய் தருவதாகவே நினைத்துப் பொறுத்துக் கொள்ளும் மனப்பக்குவம் வர வேண்டும்” என்பாள். வழக்கறிஞரின் அனுபவம் இந்த உண்மையை உணர்த்துகின்றது.
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 8 (1982) பக்கம்: 14-16
]]>