அம்மா பக்தர்களும் – செவ்வாடைத் தொண்டர்களும்

நம் அம்மா பக்தர்களும் , செவ்வாடைத் தொண்டர்களும் ஒரு விஷயத்தில் பாக்கியசாலிகள். அதிர்ஷ்டம் செய்தவர்கள்.ஏன் தெரியுமா?  வேதங்களும், உபநிடதங்களும் எந்தப் பரம்பொருளைப் பிரம்மம் என்று குறிப்பிடுகின்றனவோ, அந்தப் பிரம்மத்தின் திருவடி நிழலில் நாமெல்லாம் ஒதுங்கியிருக்கிறோம். எல்லையற்ற அந்தப் பரம்பொருளின் அவதார காலத்தில் வந்து இளைப்பாறிக் கொண்டிருக்கின்றோம்.

‘சென்று நாம் சிறு தெய்வம் சேர்வோமல்லோம்.’ -என்று சிவனடியார் திருநாவுக்கரசர் பாடினார். நாம் சிவசக்திக்கு மேற்பட்ட ஆதிபராசக்தியிடம் அடைக்கலம் புகுந்திருக்கிறோம். நாமும் நெஞ்சு நிமிர்த்திப் பெருமித உணர்வோடு பாடலாம். ‘சென்று நாம் சிறுதெய்வம் சேர்வோம் அல்லோம்!’

சிவசக்தி-ஆதிபராசக்தி

உலகம் இதுவரை சக்தியைச் சிவசக்தியாகவே பாவித்து வருகிறது. சிவ சக்திக்கு மேற்பட்டது ஆதிபராசக்தி! அந்த ஆதிபராசக்தியே மேல்மருவத்தூர் தலத்தில் விளையாடிக் கொண்டிருக்கிறாள்.  வேதங்களும், உபநிடதங்களும் , எல்லா வல்ல மூலப் பரம்பொருளை முழுமுதல் பொருளைப் பிரம்மம்- பரப்பிரம்மம் என்று குறிப்பிடுகின்றன.

அந்த முழுமுதல் பொருள் நானே! என்பதை அன்னை அவ்வப்போது குறிப்பாகவும் வெளிப்படையாகவும், உணர்த்தியிருக்கிறாள். அருள் நிலையில் அருள்வாக்கில் தன் பரத்துவத்தை உணர்த்தியிருக்கிறாள்.

சாதி, மதம், இனம், மொழி என்ற எல்லைக் கோடுகளைத் தாண்டி வந்து உலகம் , இப்பரம்பொருளின் நிழலில் வந்து இளைப்பாறட்டும் என்பதற்காகவே சில சம்பவங்களைக் குறிப்பிடுகின்றோம்.

உலகம் என்னுடையது

“உலகம் என்னுடையது. அதனை இயக்கும் சக்தியே ஆதிபராசக்தி! பம்பரம் சுழலுவதற்கு விரலும் சாட்டையும் தான் தேவை என்று நினைக்கலாம். அது சுற்றுவதற்கு விசை அவசியம். சக்தி அவசியம்! ஆடுவது யார்! ஆட்டுவிப்பது யார் என்பதையெல்லாம் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.”

சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை

“சக்திக்கு அப்பாற்பட்டது எதுவும் இல்லை. சக்தியே சாதிக்கும் தன்மை படைத்தது.”

“ஓடுவதும் நானே உடைவதும் நானே!  காடும் நானே!  களர் நிலமும் நானே! பார்க்கும் பொருளும் நானே!  பார்க்கப்படும் பொருள்களும் நானே!”

ஆணிவேரும்- சல்லி வேரும்

“ஆணிவேரும் சல்லிவேரும் இல்லாமலே மரம் வளர்ப்பவள் நான்.

சிறு தெய்வங்களெல்லாம் என்னை எப்படி வந்து வணங்குகின்றன என்பதைக்கூட ஒரு சிலர்க்குக் காட்டுவேன்.”

உருவம் இல்லை

எனக்கு உருவம் இல்லை. என்னுடைய தோற்றங்கள் அணு, ஜோதி! குழந்தை! பாம்பு! விளக்கின் சுடர்! சித்தர் !முதலியன ஆகும்.

அனைத்துக்கும் கரு

“சூரியன், சந்திரன், பூமி , காற்று, ஆகாயம், ஈ, எறும்பு முதலிய எல்லா இயற்கைப் பொருள்களுக்குள்ளும் ஆண், பெண் என்ற இனம் உண்டு. எல்லாவற்றுக்கும் கரு உண்டு. அந்தக் கரு தான் ஆதிபராசக்தி!

சக்தி ரூபம்

“உங்களுக்காகவே இப்போது நான் சக்தி ரூபம் எடுத்து வந்திருக்கிறேன்!”

எனக்கு விருப்பு வெறுப்பு இல்லை

“எத்தனை தவறுகள் செய்தாலும், அவனும் என் பிள்ளை தான் நான் பெற்ற பிள்ளைகளுள் ஒருவன் கொலைகாரன், ஒருவன் குடிகாரன், ஒருவன் கள்ளக் கடத்தல் செய்பவன். ஒருவன் கள்ள வாணிகம் செய்பவன். ஒருவன் பெரும் கல்வி மான். அனைவருமே என் பிள்ளைகள் தான்.

இப்பிள்ளைகளின் ஒருவன் மீது விருப்போ, மற்றவன் மீது வெறுப்போ எனக்கில்லை.

ஞானி என்பதால் ஒருவனை விரும்புவதும், கொலைகாரன் என்பதால் ஒருவனை வெறுப்பதும் என்பால் இல்லை.-?

யார் இங்கு வரலாம். யார் இங்கு வரக்கூடாது என்று கூற யாருக்கும் உரிமை இல்லை. எவ்வளவு தீய குழந்தையானாலும் தாயைத் தேடிவரும் குழந்தையைக் தடுத்து நிறுத்த முடியாதல்லவா…..?

என்னையே இல்லை என்று சொற்பொழிவு செய்து விட்டு இரகசியமாக வருபவனையும் நான் ஏற்றுக் கொள்கிறேன். யாரிடமும் விருப்போ, வெறுப்போ எனக்கில்லை.”

தண்டனையும் உண்டு பலனும் உண்டு

“கொலைகாரனும் என் பிள்ளை தான். கொள்ளையடிப்பனும் என் பிள்ளைதான் . ஓம் சக்தி!  என்று சொல்லிக் கொண்டு வந்துவிட்டால் அவர்களை ஏற்றுக் கொள்வதால் அவர்களது தவறுகளையும் ஏற்றுக் கொண்டேன் என்று பொருள் அல்ல! உரிய காலத்தில் அவனவனுக்குத் தண்டனை உண்டு. தாயே!  என்று என்னை நாடி வருவதால் அதற்கான சில பலன்களும் உண்டு.”

கல்லைத்தான் கும்பிடுகிறாய்

“பகுத்தறிவை எல்லோருக்கும் தான் கொடுத்திருக்கிறேன். எல்லோரும் அதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் என்று கூற முடியாது. நீ கல்லைத் தான் கும்பிடுகிறாய். அந்தக் கல்லைக் கும்பிட்டதற்காகவும் உன்னைக் காப்பாற்றுகிறேன்.

– இவையெல்லாம் அன்னை அருள்வாக்கில் வெளிப்படுத்தியவை.

எல்லோருடைய ஆன்மாகவும் நான் இருக்கிறேன்.

அன்று ஏதோ ஒரு விழா நெருங்குகிற சமயம்!  அந்த விழா ஏற்பாடுகளைச் செய்ய அவரவர்க்குப் பொறுப்புகள் கொடுத்திருந்தாள் அன்னை.

ஆரம்ப நாட்களில் நிர்வாகம் தொடர்பாக அறநிலையினருக்குத் தனி அருள்வாக்கு. தொண்டர்களுக்குத் தனி அருள்வாக்கு. பக்தர்களுக்குப் பொது அருள்வாக்கு என்று பிரித்துக் கொண்டு அம்மா அருள்வாக்கு அளிப்பது வழக்கம்.

அன்று தொண்டர்களை எதிரில் வைத்துக் கொண்டு அருள்வாக்கு சொல்ல ஆரம்பித்தாள்.

உங்கள் எல்லோருடைய ஆன்மாவாக நானே இருப்பதால் , இந்த விழா நடத்துவது பற்றி உங்கள் மனத்தில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் சொல்லிவிடுகிறேன். பிற்பாடு ஏதாவது கேட்க இருந்தால் கேளுங்கள்! என்று சொல்லிவிட்டு அருள்வாக்கு அளிக்கத் தொடங்கினாள் அன்னை.

இங்கே குறிப்பிட்ட வேண்டிய விஷயம். எல்லோருடைய ஆன்மாவாகவும் நான் இருக்கிறேன் என்றாளே அதுதான்!

இந்த உண்மையை இன்று அவதாரமாக வந்து வெளிப்படுத்தினாள். அன்று தவம் மேற்கொண்டு உண்மை காண முயன்ற உபநிடத கால ஞானிகளுக்கு உள்நின்று உணர்த்தினாள்.

ஆன்ம மூர்த்தி

“நம் அகத்தில் உறையும் ஆன்மாவும் புறத்தில் விளங்கும் பிரம்மமும் ஒன்று என்பதை உணர்வதே ஞானம் ஆகும்” என்கிறது ஈசா உபநிடதம்.

நமது மூச்சின் மூச்சாக , பேச்சின் பேச்சாக, கண்ணின் கண்ணாக உள்ளத்தின் உள்ளமாக இருப்பது ஆன்மா.

பிரம்மமே இந்த ஆன்மாவாக இருக்கிறது- என்கிறது கேன உபநிடதம்.

ஒரே ஒரு நெருப்பு உலகத்திற்குள் நுழைந்து பல உருவங்களாக மாறுவதைப் போல எல்லா உயிர்களுக்கு உள்ளும் ஒரு அந்தராத்மா இருக்கிறது. அது ஒவ்வொரு உருவமாக மாறியதும் அல்லாமல் அவற்றுக்கு வெளியேயும் இருக்கிறது.

பிரம்மம் எல்லா இடங்களிலும் பரவியிருந்தாலும் அது எதனுடனும் ஒட்டிக் கொள்ளாமலேயே இருக்கிறது.

ஆத்மா உடலிலிருந்து வேறுபட்டது- என்கிறது கடோபநிடதம்.

“அணுவுக்கும் சிறியதான, அண்டங்களைவிடப் பெரியதான பரமாத்மா மனிதனின் இதயக் குகையில் விளங்குகிறது-” என்கிறது.

இறைவனை ‘சர்வ பூத அந்தராத்மா ‘என்கிறது சுவேதாஸ்வதர உபநிடதம். எல்லா உயிர்களுக்கும் உயிராக அந்தராத்மாவாக இருக்கும் இறைவனை சர்வ பூத அந்தராத்மா என்று கூறுகிறது அந்த உபநிடதம்.

‘எல்லா உயிர்களுக்கும் உயிரே’ என்கிறார் மாணிக்கவாசகர்.

உயிராக உள்ளவன் இறைவன் எனவே அவன் ஒருவனே நமக்கு உறவினன் என்ற உண்மையை உறவே போற்றி! உயிரே போற்றி! என்கிறது திருவாசகம்.

இறைவன் நம் உள்ளத்தையே கோயிலாகக் கொண்டுள்ளான். உடம்பையே ஆலயமாகக் கொண்டுள்ளான் என ஞானிகள் பலர் கூறுகிறார்கள்.

அறிவே வடிவான இறைவன் அகத் தாமரையிலே அமர்ந்துள்ளான். இதயம் என்ற ஆகாயத்தில் (சிற்றம்பலத்தில்) அவன் விளங்குகிறான். ம்னோ மயமாக அவன் உடலில் நிலைத்து நிற்கிறான்.- என்கிறது முண்டக உபநிடதம்.

ஒரு சந்தேகம்

உயிர்களுக்கெல்லாம் உயிராக ஒளிரும் இறைவனை நம்மால் ஏன் உணரமுடியவில்லை. நம் உயிரிலே கலந்து நிற்கும் அந்த ஒன் பொருளை நாம் ஏன் எளிதில் காணமுடியவில்லை.

-இதுபற்றி நாம் சிந்திக்க வேண்டும். பேராசிரியர் சண்முக சுந்தரம் விளக்குகிறார்.

“நம் இருதயம் நிமிடத்திற்கு எழுபதில் இருந்து எண்பது தடவை துடிக்கிறது. கரியமில வாயு கலந்த நம் இரத்தம், பிராண வாயுவால் சுத்தப்படுத்தப்படுகின்றது. இரத்தக் குழாய்கள் வழியாக நம் உடல் முழுவதும் இரத்தம் பரவுகின்றது. இன்னும் நாம் உண்ட உணவைச் செரிக்கச் செய்வது உயிர்ச்சத்துகளை உறிஞ்சுவது, உடம்பிலுள்ள கழிவுப் பொருட்களை அகற்றுவது போன்ற வேலைகள் இடைவிடாமல் நம் உடம்பிலே நடக்கின்றன. அதற்கென்று உட்கருவிகள் வேலை செய்தபடி இருக்கின்றன.

-இதையெல்லாம் நாம் தினம் தினம் உணர்ந்துபார்க்கிறோமா….?

பரம்பொருளாக இருக்கின்ற உடலின் உட்கருவிகள் இயங்குவதையே நம்மால் உணர முடியவில்லை. இந்த லட்சணத்தில் நுண் பொருளான இறைமை நம் உள்ளத்தில் ஒளிர்வதை நாம் எப்படி எளிதில் உணர முடியும்?

“இறைவனே!  நீ என் உடலாகி, உயிராகி, அதனுள் நின்ற உணர்வாகி, என் உள்ளத்தில் உறைகின்றாய். நல்லது எது? தீயது எது? என்று காட்டிக் கொண்டு நிற்கின்றாய். ஆயினும் நான் உன்னை அறிவதில்லை” என்கிறார் திருநாவுக்கரசர்.

நாம் அறியாமலே நம்முள் நிற்கிறது இறைமை!

எனவே, இறைவனை ‘மனத்துள் நிற்கும் மாயன்’ என்கிறார் நாவுக்கரசர்.

சித்தம் அறியாதபடி சித்தத்திலே நின்று விளங்கும் ஒளிவடிவான இறைவன் என்கிறார் தாயுமானவர்.

‘அன்பர்கள் உள்ளத்திலே மறைந்து நிற்கும் கள்வன்’ என்கிறார் மாணிக்கவாசகர்.

பாலிலே நெய் எவ்வாறு கலந்து நிற்கிறதோ, அவ்வாறே நம் இதயத்திலே இறைமை கலந்து விளங்குகிறது என்கிறது சுவேதாஸ்வர உபநிடதம்.

இறைவன் எல்லோருடைய உள்ளத்திலும் ஒளிர்கிறான் என்பது சரி! அத்தகையனை நாம் ஏன் உணர்வதில்லை?

அதற்கு மாணிக்கவாசகர் கூறுகிறார், ‘ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே!’

எப்போதும் இடைவிடாமல் நினைத்துக் கொண்டே இருக்கிறார்களே அவர்கள் உள்ளத்தில் உணரும்படியாக இருக்கிறான் இறைவன். அப்படி நினைக்காமல் கிடப்பவர்கள் உள்ளத்திலே ஒளிந்து கிடக்கிறான் இறைவன். அவர்களிடமும் இறைமை ஒளி இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது ஒளிந்து கிடக்கிறது.

-எல்லோருடைய ஆன்மாவாக இருக்கிறேன் என்றாளே அன்னை, அதன் மூலம் அவள் பரத்துவம் புலப்படுகிறது.

கல்லால் அடிப்பதும் நானே! கல்லால் அடிபடுவதும் நானே!

சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த சம்பவம் இது!

ஓரிடத்தில் நம் தொண்டருடன் ஏற்பட்ட ஒரு சிறு தகராறில் சிலர் நம் தொண்டர்களைத் தாக்கினர். இப்படி செவ்வாடைத் தொண்டர்கள் தாக்கப்படுவதை கண்டு மனம் பொறுக்காத ஒருவர் அருள்வாக்கு கேட்க ஓடி வந்தார்.

“தாயே! நம் தொண்டர்களைக் கல்லால் அடித்துத் தாக்குகிறார்களே…” என்று முறையிட்டார்.

அம்மா சாந்தமாகச் சொன்னாள். “கல்லால் அடிப்பதும் நானே! கல்லால் அடிபடுவதும் நானே!” என்று சொல்லி அனுப்பி விட்டாள்.

என்ன இது! தொண்டர்களை அடிக்கிறார்களே என்று கேட்டால் இந்த அம்மா என்னவோ தத்துவம் பேசுது! ஒன்னும் புரியலே ….என்று முணுமுணுத்தபடி போனார்.

கல்லால் அடிப்பவன் உள்ளே ஆன்மாவாக இருப்பதும் நான்தான்! கல்லால் அடிபடுகிறவன் உள்ளே ஆன்மாவாக இருப்பதும் நான்தான்! என்பதை அன்று அம்மா உணர்த்தினாள்.

ஓம் சக்தி

நன்றி (சக்தி ஒளி ஜூன் 2008, -பக் – 22- 27)

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here