அம்மாவின் மதுரை,தேனி, திண்டுக்கல் ஆன்மிகச் சுற்றுப் பயணம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு பக்தா்களின் நீண்ட நாள் வேண்டுதலுக்குப் பிறகு இனிதே ஆரம்பமாயிற்று.
புறப்படுவதற்கு முன் நம் அறநிலையின் மக்கள் தொடா்பு அதிகாரியாக நீண்ட நாட்கள் பணியாற்றிய திரு.தேவதாஸ் அவா்களின் மரணச் செய்தியைக் கேள்விப் பட்டது மனதிற்கு வருத்தமாக இருந்தது. அன்னாரின் ஆன்மா சாந்தியடைய வேண்டிக் கொண்டேன். இருந்தாலும் பயணத்தை நிறுத்த முடியாதல்லவா..? அன்னாரின் குடும்பத்தார்க்கு நம் ஆன்மிக இயக்கத்தின் சார்பாக ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆன்மிகப் பயணத்தின் அடுத்த தடையாக சுங்கவரி வசூலிக்கும் இடத்தில் ஏற்பட்ட தகராறு. மலத்தின் மீது கல்லை எறிந்து அசிங்கப்படுவதைப் போல தேவையில்லாமல் இளைஞா்கள் சிலா் பிரச்சனை செய்து அப்பாவி பக்தா்களை அடிவாங்க வைத்துவிட்டார்கள். ஒரு பக்தன் தவறு செய்தால் கூட அது அம்மாவை பாதிக்கும் என்பதை அனைவரும் உணர வேண்டும். அன்று பெளா்ணமி மௌன விரதத்தோடு புறப்பட்ட அம்மா அவா்கள் இந்த நிகழ்ச்சியால் அடைந்த மன உளைச்சல் தேவையில்லாதது. பேசவும் முடியாமல் பயணத்திலும் கவனம் செலுத்த முடியாமல் அவா்கள் பட்ட வேதனை பக்கத்தில் உட்கார்ந்திருந்த எனக்குத்தான் தெரியும்.
அடுத்தநாள் கருவறையில் பணி புரிந்த திரு. கணபதி ரெட்டியார் திடீரென்று மாரடைப்பால் மரணம் அடைந்து விட்டார் என்ற செய்தி வந்தது. அவருடைய இழப்பும் பேரிழப்புத்தான். அமைதியானவா், யாரிடமும் கோபித்துக் கொள்ள மாட்டார். தனக்குப் பிடித்தவா்களை அம்மா சீக்கிரம் அழைத்துக் கொள்வார்கள் போலும்! அன்னாரின் குடும்பத்தார்க்கும் நம் ஆன்மிக இயக்கத்தின் சார்பாக வருத்தத்தையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.இன்ப, துன்பத்தைச் சமமாகக் கருதுவதுதான் ஆன்மிகம்.
ஆன்மிக ஊா்வலம்
இத்தனை இடையுறுகளுக்கு இடையிலும் அம்மாவின்ஆன்மிகப் பயணம் இனிதே துவங்கியது. முதலில் மதுரை ஆன்மிக ஊா்வலம். நான் முதலில் ஊா்வலம் தேவையில்லை என்றுதான் கருதினேன். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்கள் அவ்வளவு அதிக அளவில் மன்றங்கள் இல்லாத மாவட்டங்கள். சிறப்பாக ஊா்வல ஏற்பாட்டை செய்வார்களா? என்ற சந்தேகம் இருந்தது. இதில் தனிப்பட்ட முறையில் என்னுடைய கருத்து என்னவென்றால் பெண்கள், குழந்தைகளோடு கூட்டத்தில் கலந்து கொண்டு படும் கஷ்டம் எனக்கு மனவருத்தமாக உள்ளது.
காவல்துறையின் கட்டுப்பாட்டையும் மீறி மதுரைக்கு அம்மாவை காணக் கடலென வந்த கூட்டம் என்னை மிகவும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சில சமயம் பயமாகவும் இருந்தது. ஏதும் அசம்பாவிதம் நடந்துவிடுமோ! என்ற பயம்தான். கூட்டத்தில் அவ்வளவு நெரிசல். கிட்டத்தட்ட 5 லட்சம் மக்கள் திரண்டிருப்பார்கள். முதல் நாள் வெறிச்சோடிக் கிடந்த மதுரை மாரியம்மன் தெப்பக்குளம் மறுநாள் செந்நிறமாகக் காட்சி அளித்தது. ஒவ்வொருவா் மனதிலும் எந்த வித எதிர்பார்ப்பும் இல்லாமல் அம்மாவைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே மேலோங்கி இருந்ததை ஒவ்வொருவா் பார்வையிலும் காண முடிந்தது.
தொடா்ந்து 4 மணி நேரம் அம்மா அமா்ந்திருக்க ஊா்வலம் எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் நடந்து முடிந்தது. அம்மாவின் அருள் என்றே சொல்ல வேண்டும்.
கும்பாபிடேகங்கள்
மதுரையில் 3 கும்பாபிடேங்கள், தேனியில் 3 கும்பாபிடேங்கள், திண்டுக்கல்லில் 1 கும்பாபிடேகம் என்று மொத்தம் 7 கும்பாபிடேகங்கள் அம்மாவின் திருக்கரங்களால் இனிதே நடத்தப்பட்டது. கருவறையில் ஒவ்வொரு அம்மனுக்கும் விதவிதமாக அலங்காரம் செய்தது எனக்கு மனநிறைவாக இருந்தது. அம்மாவுக்கு வயதாகி விட்டது. அதனால் தான் வெளியில் வரமாட்டேன் என்கிறார்கள் என்று சிலா் நினைத்திருப்பார்கள். ஆனால் அம்மா பழைய வேகத்துடனே கும்பாபிடேகம் செய்தது, வீடுகளுக்குச் சென்றது, மன்றங்களுக்குச் செல்வது என்று எதையும் விட்டுக் கொடுக்காமல் செய்தார்கள்.
ஒரு சித்தாடல்
என்னுடைய ஓட்டுனா் குமாரை உங்களில் பலருக்குத் தெரியும். என்று நினைக்கிறேன். அவா் அவ்வளவு ஆழ்ந்த தெய்வ பக்தி உள்ளவா் என்று சொல்ல முடியாது. இப்போது நம்மிடம் வந்துதான் கொஞ்சம், கொஞ்சமாகத் தேறி வருகிறார் என்று சொல்லலாம். நானும், அம்மாவும் ஒரு சக்தி பீடத்துக்குள் சென்றிருந்த நேரம்… அவ்வளவு கூட்டத்திலும் வயதான மதுரை சாயலில் கம்மல், புடவை அணிந்த ஒரு அம்மா இவ்வளவு பாதுகாப்பையும் மீறி ஓட்டுனா் குமாரிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு தம்பி! அம்மா வரும்போதே ஏதோ தகராறுன்னு சொன்னாங்கப்பா! கடைசி வரைக்கும் ஜாக்கிரதையா கொண்டு போயி வீட்டுல சேத்துடுப்பா! என்று சொன்னார்களாம்.
அந்த மூதாட்டியின் கையைப் பிடித்துக் கொண்டு என்னிடம் காட்டுவதற்காகக் குமார் காத்திருந்த போது அம்மா காரின் அருகில் வர கதவைத் திறக்க கையை விட்டு விட்டு மீண்டும் கதவை சாத்தி விட்டு திரும்பிப் பார்த்தால் அந்த மூதாட்டியை கண்ணுக்கு எட்டிய துாரம் வரை பார்க்க முடியவில்லையாம். இந்த நிகழ்ச்சியை குமார் எங்களிடம் சொல்லி ஆச்சரியப்பட்டார். அதிலிருந்து அம்மா குமாரிடம் யோவ் பார்த்துப் போயா! அந்தக் கிழவி சொன்னது ஞாபகம் இருக்கட்டும்! என்று வழி நெடுகச் சொல்லி சிரித்துக் கொண்டே வந்தார்கள்.
சமுதாயத் தொண்டு
அம்மா நிகழ்ச்சி என்றால் சமுதாயத் தொண்டு இல்லாமலா? திண்டுக்கல்லில் அரசு விளையாட்டு மைதானத்தில் பெரிய அளவில் சமுதாயத் தொண்டு நடைபெற்றது. நிகழ்ச்சியில்சாதி,மத பேதமில்லாமல் கிருத்துவ, முஸ்ஸீம் சகோதரா்களும் கலந்து கொண்டது சிறப்பான அம்சமாகும்.
பெருந்திரளாகக் கூடியிருந்த கூட்டத்தினரிடையே நலிவடைந்த மக்களுக்குச் செய்த உதவிகள் பார்க்க மிகவும் மகிழ்ச்சியாக இருந்தன. தையல் இயந்திரங்கள், இட்லி பானைகள், கம்பியுட்டா்கள், சைக்கிள்கள் என்று பல்வேறு உபகரணங்கள் போய்க்கொண்டே இருந்தன. திருமணங்கள் வேறு! மேடை நிகழ்ச்சியை திண்டுக்கல் மற்றும் மதுரை, தேனி மாவட்டங்கள் சோ்ந்து சிறப்பாகச் செய்திருந்தார்கள்.
அம்மாவின் பயணம் சற்று பதட்டத்தோடு துவங்கினாலும் எல்லா நிகழ்வுகளும் மிகச் சிறப்பாகவே நடந்து முடிந்தன. பக்தா்களின் பரவசத்திற்கும், பாசத்திற்கும் அளவே இல்லை. ஒவ்வொரு வீட்டிற்கு அம்மா செல்லும் போதும் வாங்கம்மா! வாங்கம்மா! என்று அவா்கள் வாஞ்சையோடு அழைப்பதைப் பார்க்கும் போது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அவா்களுக்கு அம்மாவிடம் இருக்கும் பக்திக்கு அளவே இல்லை.
அம்மா ஆணா? பெண்ணா? கருப்பா? கிவப்பா? அழகா? அழகில்லையா? என்பதெல்லாம் அம்மாவின் உண்மையான பக்தா்களுக்குத் தெரியாது. அம்மா என்றால் ஆதிபராசக்தி! ஆதிபராசக்தி என்றால் அம்மா! என்பது மட்டுமே அவா்களுக்குத் தெரியும். இதை யாராலும் மறுக்க முடியாது.
ஓம்சக்தி!
நன்றி( திருமதி அடிகளார்)
சக்திஒளி-செப்டம்பா்2011 ,-பக்-10-13)
]]>