அம்மாவின் தொண்டர் ஒருவரின் தாத்தா,மிகப்பெரும் ஜோதிடர்.அந்த அன்பர் பிறந்த போதே,அவரது தாத்தா அவருக்கு எந்த வயதில் என்ன நடக்கும் என்பதையெல்லாம் கணித்து எழுதிவிட்டார்.திருமணமானால் இருதாரம் என்றும்,முதல்தாரம் நிலைக்காதென்றும்,குழந்தை பாக்கியம் கிடையாதென்றும்,ஆயுள் 50 வருடங்கள் என்றும் கூறியிருந்தார்.சிறு வயதிலிருந்தே அவர் தாத்தா கணித்தபடியே நோய்வாய்ப்பட்டது,விபத்து நடந்தது என சம்பவங்கள் நிகழ்ந்தன.

எனவே மணவாழ்க்கையும் தாத்தா கணித்தபடிதான் இருக்கும் என்று திருமணத்தில் விருப்பம் இல்லாதிருந்தார்.அம்மாவின் மன்றத்தில் இணைத்துக் கொண்டு,தன்னால் இயன்ற தொண்டுகளைச் செய்தார்.நம் குருஅம்மாவுக்கு பாதபூஜை செய்தபோது,திருமணம் செய்து கொள்ளும்படியும்,எல்லாவற்றையும் தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார்கள்.திருமணம் நடந்தது.குழந்தை பாக்கியமும் கிடைத்தது.அவரது வயது 50ஐ நெருங்கியது.

அம்மாவிற்கு பாதபூஜை செய்த போது,50ஆவது வயது ஆரம்பமாகும் நாள்,ஒரு EXPRESS ரெயிலை குறிப்பிட்டு.அதில் வந்து,சரியாக இரவு 12 மணிக்கு ஓம்சக்தி மேடை முன்பு அமர்ந்து கொள்ளும்படி கூறினார்கள்.

இவரும் அம்மா கூறிய நாளன்று,அம்மா கூறிய ரெயிலில் வந்து,இரவு 12 மணிக்கு ஓம்சக்தி மேடை முன்புறம் அமர்ந்தார்.அப்போது ஆலயத்தின் தெற்கு வாயில் வழியாக,கரிய நிற எருமை வாகனத்தின் மீது,சிவந்த மேனியோடு,கையில் பாச கயிற்றோடு இவரை நோக்கி வந்தார் எமதர்மன்.அப்போது இவருக்கு சிறுநீர் கழிக்கும் உணர்வு ஏற்ப்பட்டு அவ்விடத்தை விட்டு நகர முற்பட்டபோது,அதர்வண பத்திரகாளி சந்நிதியிலிருந்து அதர்வண பத்திரகாளியும்,கருவரையிலிருந்து கருவறை அம்மாவும்,அருட்கூடத்திலிருந்து நம் குருஅம்மாவும் வந்தார்கள்.

நம் குருஅம்மா எமனைப் பார்த்த பார்வையில் பின்னோக்கி சென்று மறைந்து விட்டார்.பிறகு அதர்வண பத்திரகாளியும்,கருவறை அம்மாவும்,குருஅம்மாவும் அவரவர் இருப்பிடம் திரும்பிவிட்டனர்.மறுநாள் நம் குருஅம்மாவுக்கு பாதபூஜை செய்தபோது “உயிரை எடுக்கவந்த எமனையே நேற்று விரட்டிவிட்டியே” என்றார்கள் சிரித்துக்கொண்டே.தொண்டர் கூறினார் “அம்மா எல்லாம் உங்கள் அருளால்தானம்மா நடந்தது” என்றார் நீர்நிறைந்த விழிகளோடு.

தொண்டருக்கும் அடங்கி,தொண்டு செய்தால் எமனுக்கே எமன் ஆவாய்.
-அன்னை.