ராமதாஸ் நைனார் என்பவர் திண்டிவனத்தைச் சேர்ந்த அன்னையின் தொண்டர். அவருக்குத் திண்டிவனத்தில் ஒரு தியேட்டர் உண்டு. செஞ்சிக்குப் பக்கத்தில் ஒரு கிராமத்தில் நில புலன்கள் உண்டு. சினிமா தொழிலில் ஈடுபட்டு ஏராளமான நஷ்டம் அடைந்த குடும்பம் அவர் குடும்பம்.
அதனால் பாதிக்கப்பட்டு அம்மாவிடம் வந்தவர் அவர். அவர் ஊழ்வினை தணிய அம்மா ஒரு வழிகாட்டினாள்! *ஒரு ஆடிப்பூர விழா நிகழ்ச்சிகளைப் படம் எடுத்து பக்தர்களுக்குக் காட்டு!”*– என்றாள் அன்னை. அவ்வாறே படம் எடுத்தார். *அடிக்கடி இங்கு வந்து போ! என் பணி செய்!”* – என்று அன்னை கூறியருளினாள்.
அம்மா சொல்லியவாறு அடிக்கடி மருவத்தூர் வந்து வணங்கி விட்டுச் செல்வார். அவரது ஊழ்வினைத் துன்பங்கள் பலவற்றிலிருந்து அம்மா அவரை விடுவித்தாள். அதன் பிறகு ஆர்வமாக அம்மா பணி செய்து கொண்டு வருகிறார். அந்த ஆண்டு தைப்பூச விழாவை ஏற்று நடத்தும் பேற்றை தென்னார்க்காடு மாவட்டத்துக்கு அளித்திருந்தாள் அன்னை.
தைப்பூச விழா அன்னதானத்துக்குத் தேவையான அரிசி மற்றும் மளிகை சாமான்களைக் கொண்டு வந்து சேர்க்கும் பணியில் பேராசிரியர் கேசவனும், சக்தி ராமதாஸ் நைனார் அவர்களும் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் ராமதாஸ் நைனாரின் நிலபுலன்களைக் கவனித்துக் கொண்டிருந்த விவசாயி ஒருவர் மேல்மருவத்தூருக்கு வந்தார்.
“பத்து ஏக்கர் கரும்பும், நெல்லும் தண்ணீர் இல்லாமல் வாடுகிறது. கிணற்றில் தண்ணீர் இல்லை, மழையும் இல்லை ஏதாவது செய்து பயிரைக் காப்பாற்றியாக வேண்டும். உடனடியாக போர் (Bore well) போட்டு சமாளித்தாக வேண்டும். நீங்கள் ஒருமுறை வந்து பார்க்க வேண்டும். ஒரு மூன்று நாள் தண்ணீர் இறைத்தால் கூட போதும். நீங்களே வந்துதான் ஏற்பாடு செய்ய வேண்டும்” – என்றார் அந்த விவசாயி!
பக்கத்து நிலத்துக் கிணற்றுக்காரரிடம் சொல்லி தண்ணீர் இறைக்க ஏற்பாடு செய்யலாமா என்று பார்த்தால் அதற்கும் ஒரு சோதனை!
தமிழ்நாடு முழுதும் தொடர்ந்து மூன்று நாள் மின்சார வெட்டு வந்த நேரம் அது! ஒருபுறம் தைப்பூச அன்னதானப் பணிக்கு அரிசி சேகரிக்க வேண்டிய நெருக்கடி!
இன்னொரு புறம் பத்து ஏக்கர் கரும்பையும் நெல்லையும் காப்பாற்ற வேண்டிய நெருக்கடி! சக்தி ராமதாஸ் நயினார் திணறினார். “ நீ ஊருக்குப் போப்பா, அம்மா வேலையை விட்டு விட்டு என்னால் அப்படி இப்படி நகர முடியாது. நடக்கிறபடி நடக்கட்டும்! அம்மா விட்ட வழி எதுவோ அப்படியே நடக்கட்டும்! – எனச் சொல்லி அந்த விவசாயியை அனுப்பி வைத்து விட்டு அன்னதானத்துக்கு அரிசி கொண்டு வந்து சேர்க்கும் வேலையில் மும்முரம் காட்டினார் சக்தி. ராமதாஸ் நைனார்.
மூன்று நாள் மின்வெட்டு அமுலில் இருந்த அந்த நாட்களில்… இவர் அன்னதானப் பணியில் மும்முரமாக ஈடுபட்டிருந்த அந்த வேளையில்… அம்மா ஓர் அற்புதம் நடத்திக் காட்டினாள்.
ஆம்! தொடர்ந்து மூன்று நாள் மழை கொடுத்து அந்தப் பக்தரின் பயிர்களுக்கு உயிர் கொடுத்துக் காப்பாற்றினாள் அன்னை! அவரது அயராத தொண்டுக்குக் கிடைத்த பரிசு அது!
*ஆணி வேரும், சல்லி வேரும் இல்லாமலே மரம் வளர்ப்பவள் நான்!-* என்று அம்மா இங்கே ஒருமுறை தன் பரத்துவம் பற்றிச் சொல்லிக் காட்டியது உண்டு.
அம்மாவின் பரத்துவத்தை உணர்ந்தவர்கள் உண்மை தொண்டர்கள். *என் பணியை நீ செய்; உன் பணியை நான் பார்த்துக்கொள்கிறேன்”*– என்று நம் அம்மா தொண்டர்கட்கு அவ்வப்போது சொல்வது உண்டு.
ஆனாலும் அம்மாவின் அந்த வாக்கில் பலருக்கு உறுதியான நம்பிக்கை வருவதில்லை.
லாபமோ நஷ்டமோ அம்மா சொல்கிற பணிதான் முக்கியம் என்று நினைத்துப் பணி செய்யும் உறுதி வருவதில்லை! பெரும்பாலோர் பாதி தன்னையும், தன் முயற்சியையுமே நம்புகிறார்கள்! மீதி அம்மாவை நம்புகிறார்கள்.
இத்தகையவர்களை அவரவர் வினை வழியே அம்மா விட்டு விடுகிறாள்.
*அம்மா பணிதான் முக்கியம் என்று லாப நஷ்டக் கணக்குப் போடாமல் பணி செய்கிறவர்கட்கு அம்மா துணை நிற்கிறாள்.