ஆரம்பத்தில் வீட்டிலும், மற்ற இடங்களிலும் பெரிய பெரிய அம்மா படத்தையும், குரு படத்தையும் மாட்டியவா்கள் துன்பம் நேர்ந்தவுடன் எல்லாப் படத்தையும் எடுத்துவிடுவார்கள். சிலா் அம்மா படத்தை மட்டும் மாட்டுவார்கள். அடிகளார் படத்தை எடுத்துவிடுவார்கள். இன்னும் கொஞ்சம் அவா்கள் நிலையில் கீழே போனால் அம்மா படத்தையும் எடுத்துவிடுவார்கள்.
குடும்பத்தினா், மற்றும் உறவினா் “எல்லாம் கோயிலுக்குப் போனதால் வீணாப் போயிட்டான்“ என்று அம்மா மீதும், ஆலயத்தின் மீதும் பழிபோடுவார்கள். உண்மையில் என்ன நடந்தது என்பது அம்மாவுக்கும், பக்தனுக்கும்தான் தெரியும். ஆரம்பகாலத்தில் “அம்மாவுக்காக என் உயிரையும் கொடுப்பேன்! என் உடல், பொருள், ஆவி எல்லாம் அம்மாவுக்கே! என்று மேடையில் ஆவேசமாகப் பேசுவார்கள். அவா்களுக்குத் தேவையானது நடக்கவில்லை என்றால் “சீச்சி…. இந்தப் பழம் புளிக்கும்” என்ற நரியின் கதையைப் போல எதையாவது குறை சொல்லிவிட்டுச் சென்றுவிடுவார்கள். இதுபோன்று குறுகிய மனப்பான்மை கொண்ட ஆடம்பரமான, ஆரவாரத்தன்மையுடைய பக்தி என்றும் நிலைக்காது.
அம்மா யாரையும் இதைச் செய்! அதைக்கொடு என்று வலியுறுத்துவதில்லை. உனக்கு விருப்பம் இருந்தால், “விரலுக்கேற்ற வீக்கம்” என்பார்களே அதுபோல், உன்னால் முடிந்த தான தர்மம் செய்! அதுவும் முடியாதென்றால் முடிந்த தொண்டு செய்! அதுவே சாலச்சிறந்தது என்று கூறுவார்கள். அம்மா அடிக்கடி சொல்வார்கள்; “நான் இந்தப் பணக்காரா்களை எப்போதும் நம்பறதில்லை சார்! ஏழைங்க உண்டியல்ல போடற பத்துப் பைசாவேதான் நிரந்தரம் சார்! அதுதான் என்றைக்கும் நிலைக்கும்” என்று. அதுபோல வருகின்ற வருமானத்தில் முடிந்த ஒரு பகுதியைத் தவறாமல் தர்மம் செய்து தன்னால் முடிந்த தொண்டினைச் செய்து ஆரவாரமற்ற, ஆழ்ந்த பக்தியோடு இருப்பவனே, நீண்ட நாட்கள் ஆன்மிகத்தில் நிலைத்து நிற்க முடிகிறது. என்னுடைய முப்பது வருட ஆன்மிக வாழ்க்கையில் இது போல பலரை நான் பார்த்துவிட்டேன்.திருமதி. இலட்சுமி பங்காரு அடிகளார்.
ஒரு ஆத்மாவின் அனுபவங்கள்
]]>