அம்மா சொல்லுவதெல்லாம் “எந்த அளவுக்கு என் மீது நம்பிக்கை வைக்கிறாயோ அந்த அளவுக்கு உன்னைக் காப்பேன்”. என்னை முழுவதுமாக நம்பிச் சரண் அடைந்தவன் ஒருவனுக்காக அவன் குடும்பம் முழுவதையும் காக்கும் பொறுப்பு என்னுடையதாகி விடுகிறது” என்பதே.

“வெற்றியோ தோல்வியோ கவலைப்படாதே. உயர்வோ தாழ்வோ எது பற்றியும் எண்ணாதே என்னை முழுவதுமாக நம்பிச் சரண் அடைந்து விடு. மற்றவர்களை நான் பார்த்துக் கொள்கிறேன்” என்பதே அவளது அருள்வாக்கு.

அவள் மீது அசைக்க முடியாத நம்பிக்கையை வளர்த்துக் கொள்வது நம் பொறுப்பு. நாம் ஒன்பது தீமைகள் செய்து நம்மையும் அறியாமல் ஒரு நன்மை செய்திருப்போம். அந்த ஒன்பது தீமைகளையே எண்ணுவது மனித இயல்பு. அறியாமல் நாம் செய்த ஒரு நன்மையையும் எண்ணி அதற்காகக் கருணை காட்டுவது தெய்வ இயல்பு.

புல்லனைப் பேரரசாக்குபவள் மூடனைச் கவியென ஆக்குபவள் வறியவனைச் செல்வன் ஆக்குபவள் அவள் நினைத்தால் நடவாதது என்று ஒன்றும் இல்லை. மண்ணை மிதித்தவர்களை மனதிலே வைத்திருப்பவள், தஞ்சம் என்று வந்தவர்களிடம் தாயன்பு காட்டுபவள். வாழ்விலே தட்டுத் தடுமாறித் தன்னிடம் ஒதுங்குகின்ற ஆத்மாக்களைச் சீர்தூக்கிப் பார்ப்பது அவள் தம் தனிச்சிறப்பு.

செடி வைத்தவன் தண்ணீர் ஊற்றுவான் என்று சொல்லுவார்கள். படைத்தவள் நம்மைப் பாதுகாப்பாள். புல்லுக்கும், பூண்டுக்கும், ஈக்கும், எறும்புக்கும் ஏன் ஈயாத செல்வர்க்கும் கூட படி அளக்கிற அவள் நம்மையா கைவிட்டு விடுவாள்? அல்ல……அல்ல

காட்டாற்று வெள்ளத்துக்கு இலக்கு இல்லை. ஆனால் நமக்கு அம்மா என்கிற இலக்கு இருக்கிறது. பிறகு ஏன் நாம் கவலை கொள்ள வேண்டும்

வாழ்விலே சுற்றிக் கொண்டிருப்பவன் கம்பு இன்றி தன்னைத் தானே சுற்றி வருகிறான். ஆனால் நாம் ‘அம்மா‘ என்ற கம்பின் உதவியோடு சுற்றி வருகிறோமே ‘அம்மா’ என்ற அந்த ஊன்று கோல் வாழ்வில் நம்மை நிலை தடுமாறச் செய்யாது.

சிலையைத் தேர்ந்தெடுத்தாலும் அதைச் சிறப்பாக்க, அதிலே கலைநுணுக்கத்தை ஏற்ற உளி தேவைப்படுகிறது. அதுபோல நம் வாழ்க்கை என்கின்ற சிலைக்குத் தெய்வீக ஒளி ஏற்றத் துன்பம் என்ற அனுபவ உளி தேவையாய்த் தானிருகிறது.

புயலுக்குப் பின் தான் அமைதி. துன்ப அனுபவங்களுக்குப் பின்னால் தான் சாதனை? வாழ்வின் அமைதி என்பது காத்திருக்கிறது.

இரவு என்றால் பகல் உண்டு. பள்ளம் என்றால் மேடு உண்டு. துன்பப்படுகிறோம் என்றால் சந்தோஷப்படப் போகிறோம் என்பது தான் உண்மை. மயக்கமா, கலக்கமா, மனதிலே குழப்பமா? என்ற பாடல் ஒன்று உண்டு ஏன் நமக்கு அந்த நிலை? ஆடையின்றிப் பிறந்தோம் நாம் ஆசையின்றிப் பிறந்தோமா?- இல்லையே!

ஏதோ ஒரு பிறவியில் நம்மையும் அறியாமல் நாம் ஆசையால் செய்தவைகள் இன்று பாவமாகி நாம் வாழ்விலே பரிதவிக்கிறோம்.  எது எப்படி இருந்தாலும் நம்மைக் காக்க, நமது இப்போதைய துன்பங்களைத் தகர்க்க. இனிவரும் துன்பங்களைத் தவிர்க்க நம் அன்னை ஆதிபராசக்தி இங்கு அமர்ந்து இருக்கிறாள். பிறகு என்ன?

நமக்கு வேண்டிதெல்லாம் அவள்பால் கொண்ட நம்பிக்கையை மென்மேலும் வளர்த்துக் கொள்வதே.

வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எதுவென்றாலும் வாடிநின்றால் ஓடுவதில்லை என்பதற்கேற்ப எல்லாவற்றையும் மறந்து அவளின் பால் நாம் கொண்ட பக்தியை வளர்ப்போம்! நம்பிக்கையை வளர்ப்போம்! அதுவே நாம் வாழ்வில் அமைதி பெற வழி!  இன்பம் பெற வழி! பனித் துளிகள் பலவாக இருக்கலாம். ஆனால் பகலவன் ஒருவனே. பகலவன் புறப்பட பனித்துளிகள் மாயும். கஷ்டங்கள் பலவாக இருக்கலாம்.ஆனால் கடவுள் ஒருவரே.துன்பங்கள் எத்தனை இருந்தாலும் எப்படி இருந்தாலும் அன்னை சக்தி என்கின்ற ஒன்று நம்மீது கோலோச்சும் போது நமது சிரமங்கள் சிதறிப் போவதை நாம் நன்கு உணரலாம். எது எவ்வாறாக இருக்கட்டும்? நமது துன்பங்களுக்கு வடிகால் இப்போதைய நமது தேவை… அவள் பால் நம்பிக்கை!  நம்பிக்கை! நம்பிக்கை!!! மற்றவைகள் எல்லாம் அவள் பொறுப்பு. இறைவனால் இயலாதது இல்லை!  கடவுளை நம்பினோர் கைவிடப்படார்! எனக்கென்ன மனக்கவலை? என்தாய்க் கன்றோ தினம் தினம் என் கவலை! என்ற வரிகளை அடிக்கடி நினைவு கூர்வோம்.

பாரத்தை அவள்மேல் போட்டு விட்டு முழுமையாக அவளைச் சரண் அடைந்து விடுவது மட்டுமே நம் பொறுப்பு. மற்றவைகளை எல்லாம் அவள் பார்த்துக் கொள்வாள்.

செய்வது எல்லாமே தெய்வந்தான். அதிலே நம்முடைய ஒரே பங்கு அவள்பால் உள்ள அசைக்க முடியாத நம்பிக்கை தான். அதை அன்றாடம் கூட்டிக் கொள்ள முயற்சிப்போம்!  முயற்சி திருவினை ஆக்கும்!

                                                            ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி 1990 யூன் பக்கம் 2-4.  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here