மக்களின் பண்பாட்டை வளர்க்கும் சாதனங்களுள் விழாக்கள் முக்கிய இடத்தை வகிக்கின்றன. இந்துக்கள் கொண்டாடும் சிறப்பான விழாக்கள் பல. அவற்றுள் முக்கியமானது நவராத்தி.  தமிழ்நாடு, ஆந்திர மாநிலங்களில் நவராத்திரி என்றும் , கர்நாடகத்தில் தசரா என்றும், வட மாநிலத்தில் பூஜா விழா என்றும் பெயரிட்டு இவ்விழா கொண்டாடப்படுகின்றது. வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களும் ஆங்காங்கே கொண்டாடுவது வழக்கம்.

மகிசாசுரன் என்ற அரக்கன் மக்களை துன்புறுத்திய போது, தங்களைக் காப்பாற்றி அருளுமாறு அன்னை ஆதிபராசக்தியிடம் அனைவரும் முறையிட்டனர். அன்னை ஒன்பது நாட்கள் போரிட்டு பத்தாவது நாள் மகிசாசுரனை வதம் செய்து வெற்றி கொண்டாள். அந் நிகழ்ச்சியைக் கொண்டாடுவதே நவராத்திரி எனப் புராணங்கள் கூறுகின்றன. நவராத்திரி மாதக் காலத்தில் ஏற்படும். மாறுபாடான தட்ப வெப்பநிலை கடுமையான நோய்களை ஏற்படுத்துவதாகவும்., கிரக நிலை சரியில்லாதவர்கள் அதிகம் பாதிப்பிற்குள்ளாவதாகவும், அக்கொடுமையினின்றும் விடுபட அரசர்கள் பெரிய வேள்வி நடத்தி, துர்க்கா, லட்சுமி, சரஸ்வதி பூஜை நடத்தி ,நவராத்திரி விழா கொண்டாடி மக்களைப் பாதுகாத்ததாகவும் கூறப்படுகிறது. அந்த முறையில் தான் இன்றும் தொடர்ந்து இவ்விழாவினைக் கோயில்களிலும் வீடுகளிலும் கொண்டாடுகிறார்கள்.

பத்தாம் நாளான விஜயதசமி அன்று புதிய தொழில்களையும், படிப்பையும் துவக்கினால் வளர்ச்சி ஏற்படும் என்பது இந்துக்களின் நம்பிக்கை. நவராத்திரி நாட்களில் பெண்கள் ஆர்வத்துடன் வீடுகளை அழகுபடுத்துவார்கள். ஒன்பது நாளும் பராசக்தியை விதவிதமாக அலங்கரித்து விரதமிருந்து வழிபாடு செய்வார்கள். பொம்மைக் கொலு வைத்து சிறு குழந்தைகளையும், உறவினர்களையும் அழைத்து மங்கலப் பொருட்களுடன் பொங்கல் ,சுண்டல் அளித்து மகிழ்வார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் ஆறு ருதுக்களின் பருவ காலங்கள் ஆரம்பத்தை நவராத்திரி விழாவாகக் கொண்டாடி வந்தனர். வளர்ந்தும் பெருகியும் வரும் விஞ்ஞான உலகில் காலப்போக்கில் தற்போது வசந்தகால நவராத்திரியும், சாரதா நவராத்திரியுமே பெரும்பான்மையாகக் கொண்டாடப்படுகின்றன. பொதுவாக சக்தி ஆலயங்களில் இவ் விழா விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றது.

சித்தவனத்தில் நவராத்திரி

இன்றைய மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி ஆலயம் தனிச்சிறப்பு பெற்றது. இத் திருத்தலம் 21 சித்தர்கள் அடங்கிய பெருமைக்குரியது. மச்ச புராணத்தில் குறிப்பிடப்படும் சித்த வனம் இதுவே. இங்கு அன்னை ஆதிபராசக்தி சுயம்புவாய் எழுந்தருளி அடிகளாராக உலாவி ஆன்மாக்களைப் பக்குவப்படுத்தி வருவதை உலகமே அறியும்.

மேல்மருவத்தூர் ஆலயத்திலும், புரட்டாதி மாத அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்களும் நவராத்திரி விழாவாகக் கொண்டாடப்படுகிறது. சித்தர்களும், செவ்வாடைத் தொண்டர்களும், பக்தர்களும் இலட்சக் கணக்கில் கலந்து கொள்வார்கள்.

தனிச் சிறப்பு

நவராத்திரிக்கு முதல் நாளன்று அன்னையே அடிகளாரை வயப்படுத்தி அகண்ட விளக்கு ஏற்றி அருள் பொழியும் அற்புத நிகழ்ச்சி எங்கும் காண முடியாத ஒன்று. ஒன்பது நாட்களும் தொடர்ந்து எரியும் இவ்வகண்டத்தில் முக் கூட்டு எண்ணெய் ஊற்றிச் சுடரைக் கண்களில் ஒற்றிக் கொண்டால் இம்மை மறுமைப் பயன்களை அடையலாம்.

வேள்வி மட்டும் அன்றி, ஒன்பது நாட்களும் இலட்சார்ச்சனையும் நடைபெறும். நமது பெயர், நட்சத்திரம் சொல்லி நாமும் இதில் கலந்து கொள்ளலாம். சங்கல்பம் செய்வதன் மூலம் வேள்வி நடத்தி முப்பெரும் தேவியரை வழிபாடு செய்த முழுப்பயனும் பெறலாம். கிரக தோஷங்கள் நீங்கி , மன அமைதியும் ஆரோக்கியமும் பெறலாம். நேரடியாக மருவத்தூர் செல்ல முடியாதவர்கள் உங்கள் ஊர் வாரவழிபாட்டு மன்றத் தொண்டர்களிடம் முறைப்படி பெயரையும், நட்சத்திரத்தையும் பதிவு செய்யலாம். அவர்கள் மருவத்தூர் இலட்சார்ச்சனையில் உங்களுக்கு அர்ச்சனை செய்து, வீடு தேடி வந்து பிரசாதம் தருவார்கள்.

மன்றம் ஆலயத்தில் நவராத்திரி விழாவினையொட்டி நடைபெறும் பூச்சொரிதல் நிகழ்ச்சியில் பெண்களும், இளநீர் அபிடேகத்தில் ஆண்களும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறலாம். நவராத்திரிக்கு கொலு, அன்னதானம், ஆடைதானம், மேடை நிகழ்ச்சிகள் போன்றவை வழக்கமாகக் கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும்.

யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்!

கடந்த முப்பது ஆண்டுகளாக மருவத்தூர் ஆலயத்திற்குச் சென்றும், நவராத்திரி விழாவிற்கு சென்றும், இலட்சார்ச்சனையில் கலந்து பலன் பெற்று மகிழும் இலட்சக்கணக்கான செவ்வாடைத் தொண்டர்களே! பக்தர்களே! “யான் பெற்ற இன்பம் பெறுக! இவ்வையகம்!” என்பதற்கிணங்க, பிறருக்கும் எடுத்துக் கூறி வழிகாட்டுங்கள். அவர்களும் இன்புறட்டும். அதுவே அன்னை ஆதிபராசக்தியின் விருப்பம் ஆணையும் கூட.

                                                      ஓம் சக்தி நன்றி சக்தி ஒளி 1999 ஒக்டோபர் பக்கம் 44 -46.  ]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here