மேல்மருவத்தூரில் ஒரு நாத்திகன் பெற்ற அனுபவங்கள் (பாகம்-11)

அம்மாவின் திருவிளையாடல்:

அம்மா, பங்காரு அடிகளை வயப்படுத்திக் கொண்டு அருள்வாக்கு அளிப்பதும், நோயாளிகட்கு மந்தரிப்பு வாயிலாக நோய் நீக்குவதும், வார வழிபாட்டு மன்றங்களை அமைக்குமாறு பணியிடுவதும், குடும்ப நல வேள்விகள், மன்றந்தோறும் வேள்விகள் நடந்த அருள் பாலிப்பதும், சித்தாடல் புரிவதும் இவையெல்லாம் எதற்காக? அம்மாவே ஒருமுறை சொல்லியருளினாள்; “மகனே! இன்று உலகில் ஆன்மிகமும் தெய்வ நம்பிக்கையும், பக்தியும் குறைந்து விட்டன! பழங்காலத்தில் வாழ்ந்த மக்கட்கு இருந்த அளவு கூட இன்றைய மக்கட்குத் தெய்வ நம்பிக்கையும் பக்தியும் இல்லை, ஆன்மிக உணர்வு பெருகவில்லையேல் உலகமே இல்லை மகனே! உலகமே அழிந்து போகும் நிலைக்கு வந்து விடும். அதனைத் தடுக்கத்தான் நான் இங்கே எழுந்தருளியிருக்கின்றேன்” என்று கூறினாள்.

அவன் மனத்தை மாற்றினாள்:

அவன் வேதங்களையும், உபநிடதங்களையும் கற்றுத் தெய்வத்தின் பால் நம்பிக்கை கொண்டவன் அல்லன்; சாத்திரங்களையும் தத்துவ நூல்களையும் கற்று ஆத்திகன் ஆனவன் அல்லன். வாரியார் சொற்பொழிவைக் கேட்டும் இந்த மார்க்கத்துக்கு வந்தவன் அல்லன். இன்னும் சொல்லப் போனால் பிராமணர்கள் மேல் கொண்டிருந்த வெறுப்பின் காரணமாகவே அவன் கடவுளையும், மதங்களையும் நம்ப மறுத்தான். அந்த வெறுப்பும் நாளாவட்டத்தில் அன்னையிடம் பெற்ற அனுபவங்களால் மறைந்தொழிந்தது. அந்த அனுபவங்கள் பின்னர் வரும்.

வாழ்க்கையின் குறிக்கோள்:

எறும்பு முதல் யானை ஈறாக பல்வேறு பிறவிகள் எடுத்து அனுபவம் பெற்ற பிறகே மனிதப் பிறவி வந்து வாய்க்கின்றது. இந்தப் பிறவியிலேயே நம் ஆன்மா பரம்பொருளோடு சென்று அடையுமாறு ஐக்கியமாகி விட வேண்டும். அதனை உணர்ந்து கொண்டு கரையேறுவதற்குத் தான் மேலான இந்த மனிதப் பிறவி வாய்த்திருக்கின்றது. மேலான அறிவும் நமக்கக் கிடைத்திருக்கின்றது. இங்குக் கிடைக்கின் இன்ப – துன்ப அனுபவங்களைக் கொண்டு, “தெய்வம் என்பதோர் சித்தம் உண்டாகி”த் தன்னைப் பரம்பொருளோடு இணைத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இணைவது தான் முக்தி! அதுதான் வீடு பேறு! அதுதான் பேரின்பப் பெருவாழ்வு. மனித வாழ்க்கையின் முடிந்த எல்லை அதுவே! அப்படி மூத்தி அடைந்த பின் ஆன்மாக்கள் மீண்டும் பிறந்து அல்லல் அடைவது இல்லை. ஆகவே அந்த முத்தியடைய வேண்டும் என்பதற்காகத்தான் எல்லா அடியார்களும், ஞானிகளும் பாடுபட்டனர். யோகம், தவம், பூசை, வழிபாடு எல்லாம் அந்த நிலைக்கு வேண்டித்தான்! அதனால்தான் இறைவனை வேண்டுகின்ற காரைக்கால் அம்மையார், “பிறவாமை வேண்டும், பிறக்கின் மறவாமை வேண்டும்” என்றார். பக்குவம் பெற்ற ஆன்மாக்களாக இருந்தால் மீண்டும் பிறவி இருக்காது. பக்குவப்படாத ஆன்மாவாக இருந்தால் மீண்டும் பிறப்பு! மீண்டும் இறப்புத்தான்! அந்த நிலையிலும் “உன்னை மறவாமை” இருந்தால் போதும் என்று கேட்கின்றாரே காரைக்கால் அம்மையார்! காரணம் என்ன? இறைவனை மறக்காமல் இருந்தால் பக்தி பெருகும். அந்தப் பக்தியே முக்திக்கு வழி கோலிவிடும்.

முக்திக்கு எல்லோரும் தயாராக இல்லை:

அம்மாவிடம் வருகின்ற எல்லோருமே பக்குவம் பெற்ற ஆன்மாக்கள் அல்ல. அந்த நேரத்தில் வாட்டுகின்ற பிரச்சனை எதுவோ அது தீர்ந்தால் போதும் என்று நினைப்பவர்கள்! உலகியல் இன்பங்கள் வேண்டும் என்று நினைப்பவர்கள் தாம் அதிகம்! எனக்கு மோட்சம் வேண்டும்; வீடு பேறு வேண்டும்; பிறவாமை வேண்டும்; என்று கேட்பவர்கள் யாரும் தென்படவில்லை. அம்மாவே இதுபற்றி ஒருமுறை கூறினாள்.

“மகனே! என்னிடம் வருபவன் எல்லாம் எனக்குப் பொன் வேண்டும் பொருள் வேண்டும் என்று கேட்கிறான்! பதவி உயர்வு வேண்டும் என்று கேட்கின்றாள்; வந்த நோய் நீக்க வேண்டும் என்று கேட்கின்றான். திருமணம் கூட்டி வைக் கவேண்டும் என்று கேட்கின்றாளே தவிர பிறவி நோய் போக வேண்டும் என்று கேட்கத் தோன்றவில்லையே மகனே!” என்று கேட்டான். மற்றும் ஒருமுறை எனக்கு அது வேண்டும்; இது வேண்டும் என்று கேட்கின்றேனே தவிர தாயே! நீ தான் எனக்கு வேண்டும் என்று எவனும் கேட்கவில்லையே மகனே!” என்றும் குறிப்பிட்டது உண்டு.

ஆக, அம்மாவிடம் உண்மையான பக்தியும் அன்பும் கொண்டவர்கள் மிகமிகச் சொற்பமே! என்ன செய்வது! உலக மாயை வசப்பட்ட எல்லோருக்கும் அந்தப் பக்குவமும் பக்தியும் சுலபத்தில் வந்து விடுமா என்ன? ஆன்மிகத்துறையில் தணியாத தாகம் கொண்டு வளர வேண்டும் என்று நினைப்பவர்கட்கு, மேலே தூக்கிக் கரையேற்ற அம்மா தயாராக இருக்கின்றாள்! அதற்கான ஆர்வம் கொண்டவர்கள் யாரும் இல்லை! அவனையும் உட்படுத்திக் கொண்டுதான் அவன் இதனை எழுதுகின்றாள்!

இவ்வாறு பக்குவம் பெறாத ஆன்மாக்களையும், சிறிது சிறிதாகத் தெய்வப் பணியிலும், தெய்வத் தொண்டிலும் ஈடுபடச் செய்து மெல்ல மெல்லப் பக்குவப்படுத்தி வருகின்றாளே! அதுதான் அம்மாவின் பரம கருணை! மனிதர்களாய் இருந்தால் சோர்வடைந்து – சலிப்பு அடைந்து, சே! இந்த மூட மக்கள் எப்படியாவது கெட்டொழியட்டும் என்று விட்டுவிடுவார்கள்! அம்மா இதுவரை அப்படி விடவில்லை. படிப்படியாகத் தன்னை நாடி வரும் மக்களைப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடுத்தி வருகின்றாள் என்பதனை ஒன்பதாண்டுக் காலமாக அவன் அம்மாவிடம் ஈடுபட்டதால் அறிவான். பக்குவம் இல்லாத இந்த ஆன்மாக்கட்குத் தன்னை உணர்த்தி தன் திருவடிகளைக் காட்டி உய்ய வைக்கின்ற அற்புதம் இங்கு மெல்ல மெல்ல நடைபெற்று வருகின்றது! இந்த வித்தையை அம்மா செய்யும் திறத்தை அழகாக குறிப்பிட்டார். காலம் சென்ற தெ.பொ.மீ! “மானைக்கட்டி மானைப் பிடித்தல்” என்ற வித்தை அது!

“மானைக்காட்டி மானைப் பிடித்தல்”

காட்டில் வாழ்கின்ற வேடர்களிடம் ஒரு பழக்கம் உண்டு. தங்கள் குடிசையின் முற்றத்தில் பெண்மாள் ஒன்றைக் கட்டி வைத்து வளர்க்கும் பழக்கம் உண்டு! அந்தப் பெண்மான் அங்கே வளர்க்கப்படுவதால் அந்தப் பெண்மானைப் பார்த்து அந்த வழியாகச் செல்கின்ற ஆண்மான் அங்கே விளையாட வரும்! அவ்வாறு தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த வேடர்கள் ஆண்மானைப் பிடித்துக் கொள்வார்கள்! அன்றைக்கு அந்த ஆண்மானைக்கொன்று உணவாக்கிக் கொள்வார்கள்.

அந்த வேடர்களைப் போலவே, வீடுபேறு பெறுவதற்கு அருகதை இல்லாத ஆன்மாக்களை ஈர்த்து அவர்களைக் கரையேற்ற வேண்டும் என்று அம்மாவின் கருணை நினைக்கின்றது! இந்த ஆன்மாக்களோ சிற்றறிவு கொண்டவையாக இருக்கின்றன! உலகியல் இன்பங்கட்கே ஏங்கி அழுகின்றன! அல்லல்படுகின்றன! இவற்றுக்கு முதலில் தன்னையும் தன் சக்தியையும் புலப்படுத்தி முதலில் தெய்வம் என்பதோர் சித்தத்தை அளிப்போம், சிறிது பக்தியையும் ஊட்டுவோம் என்று அம்மா நினைப்பான் போல உள்ளது. ஆகவே தன்னை நாடி வருவோர் குறைகளை, பிரச்சினைகளை அவர்களாக எடுத்துக் கூறும்முன்பே தானே சொல்லி, அதற்கான வழிமுறைகளையும் சொல்லி அனுப்புகின்றாள். தீராத நோய்களைத் தீர்ப்பது, முடியாத பிரச்சனைகளை முடித்து வைப்பது, குடும்பத்தில் உள்ள துயரங்களைப் போக்குவது என்பன போன்ற காரியங்களைச் செய்து தன்னிடத்தில் முழுமையான ஈடுபாடு வருமாறு செய்து விடுகின்றாள்.

பக்தியை வளரச் செய்தல்:

அம்மாவிடம் வந்து பயனடைந்தவர்கள் நாளாவட்டத்தில் நாள்தோறும் 108 மந்திரம் படிப்பது, 1008 மந்திரம் படிப்பது, வழிபாட்டு மன்றங்களில் சேர்ந்து தொண்டு புரிவது என்ற நிலைக்கு வந்துவிடுகின்றனா. இந்த வழிபாட்டுப் பழக்கம் வளர, வளர நாள்தோறும் ஆதிபராசக்தியை மறக்காத நிலைக்குக் கொண்டு போய்ச் சேர்க்கின்றது! அடிக்கடி ஆலயத்தொண்டில் ஈடுபட வைக்கின்றது. இப்படிப்பட்ட நிலைமை தொடரத் தொடர அவர்களை அறியாமலேயே முன்னைய ஊழ்வினைக் கொடுமைகள் தணிக்கப்பட்டு வருகின்றன! படிப்படியாக மக்களைப் பக்தி மார்க்கத்தில் ஈடுபடச் செய்யும் அற்புதம் இது! ஆரம்பத்தில் அரை குறையோடு நம்பிக்கொண்டு வந்து அம்மாவால் பயன் பெற்றவர்கள் அடிக்கடி ஆலயத்துக்கு வந்து இந்த மண்ணை மிதிக்கின்றவர்கள் புதிய புதிய அனுபவங்களைப் பெறுகின்றார்கள். இப்படி அம்மாவின் திருவடிகளையே உறுதியாகப் பற்றிக் கொண்டவர்கள் ஆண்டுக்கு ஆண்டு மனவளர்ச்சி பெறுகின்றார்கள்.

பக்திநெறி, தொண்டு நெறி :

இறைவனை அடையவும், அவன் அருளைப் பெறவும் எளிதான வழியாகப் பக்தியைச் சொன்னார்கள் பெரியவர்கள்! அம்மா அதைவிடவும் எளிய வழியாகத் தொண்டு நெறியைக் கூறுகின்றாள். பக்திக்காவது மன வளர்ச்சியும், மனப்பக்குவமும் வேண்டும். தொண்டு செய்வதற்கு அவையும் வேண்டாம், அம்மா யாருக்கு எந்தப் பணியை இடுகின்றாளோ அந்தப் பணியைச் செய்தே அவள் அருளைச் சுலபமாகப் பெறலாம். தியானம் வேண்டாம். தவம் வேண்டாம், யோகம் வேண்டாம், கூச்சடக்கும் துன்பம் எதுவும் வேண்டாம்.

தொண்டு செய்யும் வாய்ப்பும்: அதனால் வரும் பயனும்:

“இந்தப் பணியை நீ செய்!” என்று சிலருக்கு வாய்ப்பளிப்பதும் அதனால் அவர்கட்குச் சில நன்மைகள் உண்டாவதற்கே தவிர, அவர்கட்கு ஏதோ பெரிய தகுதிகள் இருக்கின்றன என்பதற்காக அல்ல! இதனை நன்றாகப் புரிந்து கொள்ளாமல் அறியாமை காரணமாக அலட்சியம் செய்பவர்கள், ஆணவம் காரணமாக அலட்சியம் செய்பவர்கள் செல்வச் செருக்கு, கல்விச் செருக்கு காரணமாக அலட்சியம் செய்பவர்கள் அந்த வாய்ப்பையும் இழந்து விடுகின்றார்கள்.

அன்னை இட்ட பணியும் – அதற்கான பயனும்:

ஆங்கிலமும் தமிழும் கற்ற தமிழ்ப் பேராசிரியர் ஒருவர், ஓய்வு பெற்றவர் அம்மாவின் அருள் நாடி ஆலயம் வந்தார். “மேல் மருவத்தூர் அற்புதம்” என்ற தமிழ் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துத் தருமாறு அம்மா ஆணையிட்டான். அந்த அன்பர் அன்னையின் ஆணையைச் சிரமேற்கொண்டு சிரத்தையுடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு வந்து ஆலயத்தில் உள்ள தொண்டர் ஒருவரிடம் சேர்ப்பித்தார். அந்தப் பணியை முடித்த சில நாட்களில், பணியிலிருந்து ஓய்வு பெற்று வருமானம் எதுவும் இல்லாமல் இருந்த அவருக்கு, நல்ல ஊதியத்தில் வேறு ஒரு பதவிக்குரிய அரசாங்க ஆணை வந்தது. “எல்லாம் அம்மாவின் தயவு” என்று நன்றியோடு தழுதழுத்த குரலில் சொன்னார் அவர்! “மொழி பெயர்ப்பு நூலை ஆலயச் செலவில் வெளியிடலாமா தாயே!” என்று நூலை வாங்கிக் கொண்ட தொண்டர் அம்மாவிடம் கேட்டார். “அந்த நூலை வெளியிட வேண்டாம் மகனே! அந்த மகனுக்கு ஒரு பலன் தரவேண்டும் என்பதற்காக அந்தப் பணியை அவனுக்கு இட்டேன்” என்று சொல்லிவிட்டாள். ஆக சில பயன் தர வேண்டும் என்பது கருதியும் சில பணிகளை அம்மா இடுவது உண்டு. சில தீவினைப் பயன்களிலிருந்து தப்புவிக்கவும் சில பணிகளை அம்மா குறிப்பாக இடுவது உண்டு!

விழாக்கள் எனக்காக அல்ல:

அம்மாவின் ஆலயம் வளர்ச்சி அடையாத நாட்களில் சில விழாக்களை இன்னின்னவாறு பொறுப்பு எடுத்துக் கொண்டு செய்யுங்கள் என்று அம்மா சொல்வது வழக்கம். விழா வருவதற்குப் பல நாட்கள் இன்னும் இருக்கின்றன என்றாலும் முன்னதாகவே அதற்கான ஆயத்தங்களைச் செய்து வைத்து கொள்ளுங்கள் என்பாள். இந்த விழாக்களைப் பற்றியும் அவை எதற்காக என்றும் அம்மா சொன்னதை இன்று நினைத்தாலும் அவள் கருணையை எண்ணும் போது கண்ணீர் வருகின்றது. பக்தர்கள் மிகுதியாக ஆலயத்துக்கு வராத காலம் அது! ஏதோ குறி சொல்லுகின்ற இடம் என்று அறியாமையோடு அலட்சியமாகச் சென்ற காலம் அது!

ஏதோ இந்திரா காந்தி மேல் மருவத்தூர் வரப் போகிறாராமே அவ்வளவு பெரிய கோயிலா அது என்று கேட்டு, அதன் பிறகு வருகின்றார்களே சிலர், அப்படிப்பட்டவர்கள் வராத காலம் அது! பெருந்தலைவர்களும் – நடிகர்களும் வந்தால்தான் அந்த ஆலயத்தின் சக்தி மகத்தானது என்று மக்கள் நினைக்கின்ற காலம் இது! அப்படிப் பட்ட யாரும் வராத காலத்திலே இந்த விழாக்கள் எதற்காக என்று அம்மா சொன்னாள்.

“இந்த விழாக்கள் எல்லாம் எனக்காக அல்ல மகனே! உங்களுக்காக! அதோ அந்தச் சாலை வழியே போகின்றவன் எல்லாம் அங்கே இருந்தபடிப் பார்த்துவிட்டு அப்படியே போகின்றாளே தவிர இந்த மண்ணை மிதிக்க மாட்டேன் என்கின்றான். இந்த மண்ணை அவனாக வந்து மிதித்தால் அதற்காகவாவது சில பலன்களைத் தரலாம் என்று பார்க்கின்றேன். அப்படியும் வர மாட்டேன் என்று போய் விடுகின்றான் மகனே! இந்த விழாக்களை வைத்தால் இங்கே நடக்கின்ற பாட்டு, கூத்து, விளக்கு அலங்காரம் எதையாவது பார்த்து விட்டு இங்கு என்னதான் நடக்கின்றது பார்க்கலாம் என்று வந்து விடுவான், என் மண்ணை மிதித்து விட்டானே என்பதற்காக நானும் அவனுக்கு வேண்டிய பலனைத் தருவேன். அதற்காகத்தான் மகனே இந்த விழாக்கள்!” என்றாள்.

அம்மா இறங்கி வந்து அருள் செய்கின்ற கருணையை விழாக்களின் நோக்கம் பற்றி அம்மா கூறியவற்றை மீண்டும் மீண்டும் நினைத்துப் பார்க்க வேண்டும். குறிப்பிட்ட சில விழா நாட்களில் சில ஆலயங்களில் அருள் சக்தி பொங்கித் ததும்பியபடி இருக்கும். அந்த அருள் சக்தியால் சிலர்க்குச் சில நன்மை விளையும், ஆலயங்களில் நடத்துகின்ற விழாக்கள் வீண் செலவு என்று சொல்லிக்கொண்டு திரிகின்ற தலைவர்கள், தங்கள் கட்சிக்காகவும், மறைந்து போன தலைவர்கட்காகவும் நடத்துகின்ற விழாக்களையும், ஆடம்பரச் செலவுகளையும் கணக்கிட்டுப் பார்த்தால் இந்த ஏழைகள் நிறைந்த நாட்டில் இவ்வளவு செலவு செய்தால் தாங்குமா? என்று நினைக்கத் தோன்றும்!

ஏழைகள் வயிறு குளிர வேண்டும் :

எந்த விழா வந்தாலும் தகுந்த ஆளாகப் பார்த்து உணவுப் பொறுப்பை ஒப்படைப்பது அம்மாவின் வழக்கம்! வரிசையாக நின்று பொறுமையாகச் சென்று திருப்தியோடு சாப்பிடும் வழக்கம் ஏழை மக்கட்கும் பொதுமக்கட்கும் வருவதில்லை. சாப்பிட வருபவர்களைப் பார்த்து முதகம் சுளித்துப் பேசக்கூடாது என்பது நம் நாட்டில் ஊறிய பழக்கம்! விழாவுக்கு வந்தவர்கள் எவரும் பட்டினியாக இருக்கக் கூடாது என்பது அம்மாவின் கட்டளை! யாராலும் திருப்தியாகச் செய்ய முடியாத கடினமான பொறுப்பு இந்த உணவுப் பொறுப்பே ஆகும்!

இப்படி எல்லா விழாக்களிலும் அன்னதானம் ஆடைதானம் வறியவர்க்கு உதவி செய்தல் போன்ற பணிகள் நடைபெற வேண்டும். எல்லாக் கோயில்களிலும் இதுபோல செய்ய வேண்டும் என்பது அம்மாவின் திருவுள்ளம். “கட்சிகளாலும், அரசாங்கத்தாலும் சமுதாயத்தாலும் புறக்கணிக்கப்பட்டு உணவுக்கும் உடைக்கும் வழியின்றித் தவிக்கின்றானே அவனுக்குச் செய்யும் தொண்டுதான் ஆன்மிகத் தொண்டு! முதலில் இங்கிருந்துதான் ஆன்மிகத் தொண்டு ஆரம்பமாக வேண்டும் மகனே!” என்றும் அம்மா சொன்னது உண்டு! பல்வேறு பிரிவுகளில் இயங்குகின்ற மதங்கள், மத நிறுவனங்கள், கட்சி அமைப்புகள் சமுதாய நிலையங்கள், அனைத்தும் அம்மா சொன்னதை நினைவில் இருத்திப் பணி ஆற்றினால் எவ்வளவு புண்ணியம்? பெருஞ் செல்வர்கள், கறுப்புப் பணம் ஏராளமாக வைத்திருப்பவர்கள் இந்த ஏழைகட்கு விளம்பரம் இல்லாமலேயே உதவி செய்யலாம் அல்லவா? நாட்டில் இன்று உருவாகி வருகின்ற நக்சலைட் இளைஞர்கள் உருவாக்காமல் தடுக்கலாம் அல்லவா? ஏன் செய்ய மாட்டேன் என்கின்றார்கள்? மனம் வருவதில்லை.

தொண்டர்கட்கு அம்மா அருளிக் கூறியவை:

கோயிலுக்கு வருகின்ற பலரும் தங்கள் குறைகள் நீங்க வேண்டும் என்று வருபவர்கள். தங்களுக்கு மோட்சம் வேண்டும். பிறவி நோய் போக வேண்டும் என்று கருதி வருபவர்கள் மிக மிகச் சிலரே! பலவேறுபட்ட மனப்போக்குகளை உடைய பொதுமக்களிடம் தொண்டர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்று அவ்வப்போது அம்மா சொல்வது உண்டு.

தொண்டர்கட்கு அம்மா சொன்னது இது:

“வண்டியை ஓட்டும் சாரதியைப் பொறுத்து வண்டி ஓடுகின்றது. ஆலயக் குழுக்களாகிய நீங்கள் சாரதிகள்! உங்கள் உள்ளுணர்வே நான்! குதிரைகள் பக்தர்கள்! சாரதிகள் முரட்டுத் தனமாகக் குதிரைகளிடம் நடந்து கொண்டால் மட்டும் குதிரைகள் ஓடிவிடாது. சில முரண்டு பிடிக்கும் சில உடனே சுறுசுறுப்பாக ஓடும்”

பல்வேறு விதமான பக்தர்களிடம் தொண்டர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதை அம்மா மேற்கண்டவாறு அழகாகக் கூறினாள்.

“செவ்வாடை உடுத்தி கொண்டு என் ஆலயத்தில் தொண்டு செய்வதாலே மட்டும் தங்கட்குத்தான் அதிக பக்தி இருக்கின்றது என்று எவனும் நினைத்துக் கொள்ளக்கூடாது. உங்களைக் காட்டிலும் என்னிடம் அதிகமான பக்திகொண்டு வருபவர்கள் உண்டு.”

“என்னிடம் பக்தியோடு வருபவர்களை அலட்சியம் செய்வது என்னையே அலட்சியம் செய்வது போல ஆகும்.”

“சிறிய குழந்தை ஒன்று இந்த விழாவின் போது ஏதாவது விளக்கம் கேட்டாலும், அலட்சியத்தோடு பதில் சொல்லாமல் பொறுமையோடு விளக்கம் சொல்ல வேண்டும்.”

“தொண்டர்களாகிய உங்கட்கு முலாம் பூசுவதற்காகவும் இந்த விழாக்களை நடத்துகின்றேன்”

“அரசியல் கட்சிகட்கு நீங்கள் செய்யும் தொண்டு உங்களுக்கு உதவாமல் போகலாம். தெய்வத்துக்கு நீங்கள் செய்யும் தொண்டு எதுவும் வீண் போகாது.”

இவையெல்லாம் அம்மா அவ்வப்போது தொண்டர்கட்கு அருளிய அருள்வாக்குகள்.

தொண்டர்கட்கு அளிக்கின்ற பயிற்சி:

ஆன்மிகம் வளர்க்கும் பயிற்சிகளாகச் சில பயிற்சிகளையும் அம்மா கொடுப்பது உண்டு. கூட்டங்களில் பேசிப் பழக்கமே இல்லாதவர்களைப் பிரச்சாரப் பணியில் அமர்த்துவாள்; ஒரு செல்வாக்கும் இல்லாதவர்கட்கு வார வழிபாட்டு மன்றத் தலைமைப் பொறுப்பு அளிப்பான். நமக்குக் காரணம் புரியாது. இந்தப் பயிற்சிகள் பற்றி அம்மா சொன்னாள்.

“மகனே! தொடக்கத்தில் படிக்கும் போது அ,ஆ என்று எழுதித்தான் படிக்க வேண்டும். இந்த அ ஆ எழுத்துக்களின் பயிற்சி எதற்கு என்று அப்போது தெரியாது. ஆனால் அதுதான் பின்னால் படிக்கப் போகும் படிப்புக்கு அடிப்படை! அதுபோகும் படிப்புக்கு அடிப்படை! அதுபோல தொண்டர்களாகிய உங்கட்கு நான் அளிக்கும் பயிற்சியின் அருமை இப்போது உங்கட்குப் புரியாது. பிற்பாடுதான் இவற்றின் அருமை புரியும்” என்று கூறினாள்.

உண்மையோடும், மனத்தூய்மையோடும் தொண்டாற்றும் தொண்டர்கட்குப் பல்வேறு அனுபவங்கள் மூலமாக அம்மா அவர்களை முன்னேற்றுகின்றாள். மனமாற்றம் பெறுமாறும் செய்கின்றான். மனவளர்ச்சி பெறுமாறும் செய்கிறாள். ஆபத்துக்களிலிருந்தும் காப்பாற்றுகின்றாள்.

தொடரும்…

ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 11 (1982)

பக்கம்: 33-39

]]>

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here