108 போற்றித் திருவுருவில் 6வது ஓம் ஓத அரிய பெரும் பொருளே போற்றி ஓம் என்பதாகும்.
ஓதுதல் என்பது வாயால் கூறுதல் என்னும் பொருளை உடையதாகும். வாயால் கூறும் நிலை எப்பொழுது வருகிறது? மனத்தில் ஒரு கருத்தைத் தோற்றுவித்தற்கும் சொற்கள்தான் பயன்படுகின்றன. அந்தச் சொற்கள் ஒரு பொருளைக் குறிக்கின்றன. அந்தப் பொருள் பருப்பொருளாகவோ நுண்பொருளாகவோ குணப் பொருளாகவோ கூட இருக்கலாம். பொருள் குறிக்காத சப்தங்களை நாம்சொல் என்று கூறும் பழக்கம் இல்லை. “எல்லாச் சொல்லும் பொருள் குறித்தனவே” என்பது பழைய தொல்காப்பியங் கூறும் இலக்கணம். இவ்வாறு பொருளைக் குறிக்கும் சொற்களைப் பயன்படுத்தித்தான் நாம் நம்முடைய எண்ணங்களை வெளியிடுகிறோம்.
எந்தப் பொருளையும் நாம் அறிவதற்குரிய பொறிகள் (மெய், வாய், கண், மூக்கு, செவி) தவிர சொற்களைக் கொண்டும் அவற்றை அறிய முற்படுகிறோம். சொற்கள் பொருளைக் குறிக்கின்றன என்பது உண்மைதான் என்றாலும் பொருளை முழுவதுமாக அவை குறிப்பதில்லை. இன்னுங் கூறப்போனால் பொருள்களின், பருப்பொருள் இயல்பை, மட்டும் அவை குறிக்கின்றன. ஆனால் பொருள்களின் முழு இயல்பை, தன்மையை அவை ஓரளவு தான் குறிக்கின்றன. அதனால் தான் தொல்காப்பியனார் பொருளை விளக்குகின்றன என்று கூறாமல் பொருளைக் குறிக்கின்றன என்று அழகாகக் கூறினார். மேலும், ஒரு சில பண்புகளை உணர்ச்சிகளைச் சொற்களால் விளக்கவே முடியாது. காரணம் சொற்களும் அவை குறிக்கும் அர்த்தமும் அறிவுக்கு விருந்தாகின்றன. உள்ளத்தில் தோன்றும் உணர்ச்சிகட்கு வடிவு கொடுக்கச் சொற்கள் ஓரளவுதான் பயன்படும்.
இன்னுங் கூறப்போனால் உணர்ச்சிகளை அல்லாத சாதாரணப் பொருளைக்கூடச் சொற்களால் முழுவதும் விளக்கிவிட முடியாது அதனாலேயே “மனிதன் எண்ணத்தை வெளியிடச் சொற்கள் பொருத்தமில்லாத கருவி” என்ற பொருளில்“Word is an Imperfect Vehicle of thought” என்று மேலை நாட்டுத் திறனாய்வாளர் கூறுகின்றனர். சொற்களின் இந்தக் குறைபாட்டை நன்கு அறிந்து கொண்டால் ஏன் ஒருவர் கருத்தை மற்றொருவர் நன்கு புரிந்துகொள்ள முடியவில்லை. என்பதையும் நாம் அறிய முடியும்.
சாதாரண உலகியல் பற்றிப் பேசும் நமக்குள்ளேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாமற் செய்து விடுகின்றன நாம் பயன்படுத்தும் சொற்கள். அப்படியானால் மிக உயர்ந்த தத்துவத்தைப் பற்றிப் பேசும்போது நாம் கூற நினைத்ததை எடுத்துக்கூறக் கூடிய சொற்கள் இல்லாமல் அவதிப்படுகிறோம். நாம் சொல்வதைக் கேட்பவர்களும் நாம் நினைத்ததைப் புரிந்து கொள்ள முடியாமல் துன்பமடைகின்றனர். இதுதான் சொற்களின் தன்மை. இந்தக் குறைபாடுகள் நிறைந்த சொற்களை வைத்துக் கொண்டு சொல்லுக்கும், சொல் உற்பத்தி செய்யும் கருத்துக்கும், இவை இரண்டும் தோன்றுகின்ற மனத்துக்கும், இவை அனைத்தையுங் கடந்து நிற்கும் கற்பனைக்கும் அப்பாற்பட்டு நிற்கும் பரம்பொருளை எவ்வாறு சொற்களால் குறிப்பிட முடியும்?
எந்த ஒரு நேரத்தில் சொல்லால் கடவுட் பொருளை முழுவதுமாகக் குறித்துவிட்டோமோ அதேநேரத்தில் அப்பொருள் கடந்து நிற்கும் கடவுள் தன்மையை இழந்துவிடும். “சொல்பதங் கடந்த தொல்லோய் போற்றி” என்று நம் முன்னோர் இதனைக் குறித்துச் சென்றனர். “வாக்கு இறந்த பூரணம்” என்றும் “கற்பனை கடந்த சோதி” என்றும் “சொல்லுவது அறியேன் போற்றி” என்றும் கூறிப் போயினர். இவற்றை மனத்துட் கொண்டு பார்க்கும்போது ஒன்று மட்டும் உறுதியாகிறது. படைப்புகளிலேயே நான்தான் மிக உயர்ந்தவன் என்றும், தனக்கு அளிக்கப் பெற்றிருக்கும் நினைவுச் சக்தி, சிந்தனை ஆற்றல், பேசுமத் திறம், மொழியைப் பயன்படுத்தும் ஆற்றல் என்பவற்றால் அந்த உயர்வு உறுதிப் படுத்தப்படுகிறது என்றும் மனிதன் நினைப்பது அவ்வளவு சரியல்ல என்பது புலப்படும். மனிதனுடைய மேலே கூறப்பெற்ற கருவிகள் மற்ற விலங்குகளிடம் இல்லாமல் இருக்கலாம்; ஆனால் இவனிடம் இருக்கும் அவை முழுத்தன்மை பெற்ற கருவிகளல்ல. குறைபாடு உடைய கருவிகளே என்பது நன்கு புலனாகும்.
குறைபாடுகள் நிறைந்த மனிதன் குறைபாடு நிறைந்த தன் மொழியால் குறைவிலா நிறைவாகிய கடவுட் பொருளைக் குறிப்பது என்பது இயலுவதொன்றன்று. இக்கருத்தை தான் “ஓத அரிய பெரும் பொருள் என்று ஆறாவது மந்திரம் கூறுகிறது. ஓதுதல் என்றால் இடைவிடாது கூறுதலைக் குறிக்கும். எத்துணை முறைக் கூறினாலும் அப்பெருமாட்டியை முற்றிலும் கூறினதாக ஆகாது. சேக்கிழார் பெருமான் “உலகெலாம் உணர்ந்து ஓதற்கு அரியவன்” என்று பாடுவதும் இக்கருத்தை வலியுறுத்தவே யாகும்.
சொல் குறைபாடு உடையதாக இருக்கலாம். ஆனால் சொல் பிறப்பிக்கும் ஓசை அல்லது சப்தம் நாதத்தைச் சேர்ந்தது. ஆகலின் இறைவியைச் சொல்லாகவும் இறைவனை சொல்லின் பொருளாகவும் கூறுவது மரபு. காளிதாசன் தன்னுடைய ரகுவம்ஸ்த்தின் கடவுள் வாழ்த்தாக “சொல்லுக்கும் பொருளுமாக உள்ள உமா காந்தனை வணங்குகின்றேன் என்று கூறுகிறான். சொல் உமை, பொருள் காந்தனாகிய இறைவன்.
(தொடரும்)
ஓம் சக்தி!
நன்றி: சக்தி ஒளி விளக்கு -1 சுடர் 11 (1982) பக்கம்: 24-26
]]>