வேலூரில் அன்னையின் பால் பற்றுக் கொண்ட அன்பர் அவர்! அவரும் அவருடைய தம்பியும் வேலூரில் ஒரே வீட்டில் வாழ்கின்றனர்; தம்பியார் மாடியில் வசிக்கின்றார். அன்பர் மாடியின் கீழ்ப்பகுதியில் இருக்கின்றார். இவருடைய தாயார் தம்பியோடு மாடியில் குடியிருக்கின்றார். ஒருநாள் அன்பரின் தாயாருடைய உடல்நிலை மிக மோசமாகி விட்டது. நேரமோ நள்ளிரவு ஆகிவிட்டது. தம்பியாரின் மனைவியார் அன்பரை அழைத்துச் செல்க. அன்பர் இருந்த அறையினைத் தட்டினார், சிறு ஓசை ஏற்பட்டால் கூட விழித்துக் கொள்ளும் அந்த அன்பருடைய மனைவி அன்று நன்றாக உறக்கத்தில் இருந்தார். அன்பருக்கும் நல்ல தூக்கம்! எவ்வளவு எழுப்பியும் விழிக்கவில்லை. வந்து கதவைத் திறக்கவில்லை, நாளைக்கு விடியற்காலை வந்து நிலைமையைச் சொல்வோம் என்று மாடிக்குப் போய்விட்டார். வேலூர் அன்பர் மறுநாள் மருவத்தூர் கோயிலுக்கு வந்து அன்னையை வழிபட வேண்டி மருவத்தூர் புறப்படுவதற்குத் திட்டமிட்டு இருந்தார். எனவே, விடியற்காலையிலேயே வீட்டை விட்டுப் புறப்பட்டு விட்டார். அன்பர் வீட்டை விட்டுப் புறப்பட்டுச் சென்று விட்ட பிறகே தாயாரின் உடல் நிலைபற்றித் தகவல் தெரிவித்து, அன்பரைக் கையோடு அழைத்துச் செல்ல வேண்டி தம்பி வீட்டார் இறங்கிவந்து பார்த்தனர். வீடோ பூட்டிக் கிடந்தது. என்ன செய்வது என்று புரியவில்லை.
அக்கம்பக்கத்தில் விசாரித்தார்கள், மருவத்தூர் போக வேண்டும் என்று இரவு சொல்லிக் கொண்டு இருந்தார். ஒருவேளை மருவத்தூர் தான் போயிருக்க வேண்டும். அங்கே சென்றால் கையோடு அழைத்து வந்து விடலாம் என்று கூறினார்கள். எனவே, மருவத்தூருக்கு ஆளை அனுப்பினர். தாயாரின் உடல் நிலை பற்றிச் சொல்ல வந்த ஆளும், வேலூர் அன்பரும் அன்னையின் கோயிலுக்கு வந்தார்களே தவிர ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொள்ள முடியவில்லை. தகவல் சொல்ல வந்தவர் அன்பரைத் தேடித் தேடிப் பார்த்தார். அன்பரோ சற்று முன்புதான் தரிசனத்தை முடித்துக் கொண்டு வேலூர் கிளம்பிவிட்டார். வீட்டிற்குச் சென்றவுடன் தாயார் காலமாகி விட்டார் என்றும், இரவே அழைத்துக் கொண்டு வருமாறு ஆள் அனுப்பப்பட்டது என்றும், காலையிலும் ஆள் சென்றதாகவும், வீடு பூட்டப்பட்டிருந்தது என்றும் மருவத்தூர் கோயிலுக்கும் ஆள் அனுப்பபட்டார் என்றும் கேள்விப்பட்டார். தாயாரின் மரணத்தையும் துக்கத்தையும் வேலூர் அன்பரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
அன்னையின் கோவிலுக்குத் தானே சென்றோம். பெற்ற தாயாரின் முகத்தைக் கூட பார்க்க முடியாமல் பராசக்தி தடுத்து விட்டாளே என்று நினைத்துக் குமுறினார். அவருக்கு வேலூரில் நல்ல செல்வாக்கு உண்டு! பிரபல டாக்டர்கள் எல்லாம் அவருக்கு பழக்கமானவர்கள்! நல்ல முறையில் தாயாருக்கு மருத்துவ சிகிச்சை அளித்திருக்கலாமே! முடியாமல் போய்விட்டதே என்று ஏங்கி ஏங்கித் தவித்தார்; ஆறுதல் கொள்ள முடியாமல் மனம் புழுங்கினார். அன்னை ஆதிபராசக்தியை நொந்து கொண்டார், இது குறித்து என்ன சமாதானம் தான் சொல்லப் போகிறாள் என்று எண்ணினார். அம்மாவிடம் அருள்வாக்குக் கேட்டே தீருவது என்று உறுதியுடன் நினைத்து இருந்தார். அன்னையிடம் அருள்வாக்குப் பெற்றுக் கேட்க விரும்பி வந்தார். ‘‘மகனே! உன் தாயாரின் உடல் நலம் மிக மோசமாக இருக்கிறது என்ற தகவலை சொல்ல வந்து வீட்டைத் தட்டிய போது உன்னை எழுந்திருக்க விடாமல் உறக்கத்தைக் கொடுத்ததும் நான்தான்!
மறுநாள் காலை வந்து தகவலைச் சொல்லலாம் என்று சென்றவள் மீண்டும் வருவதற்கு முன்பே என் ஆலயத்துக்கு என்னை வரச் செய்ததும் நான்தான்! உன்னைத் தேடி வந்தவனை என் ஆலயத்துக்குள் உன்னைச் சந்திக்க விடாமல் செய்ததும் நான் தான் மகனே!”
என்று அன்னை சொன்னதைக் கேட்டு அந்த வேலூர் அன்பர் திகைத்தார். தெய்வமே இப்படி சதி செய்யலாமா? என்று மனத்துக்குள் நினைத்தார். அன்பர் நிபைப்பதைப் புரிந்துகொண்டு அன்னை மீண்டும் சொல்லத் தொடங்கினார். ‘‘மகனே! உன்னைச் சந்திக்க விடாமலே உன் தாயாரைப் பிரிந்து விட்டேன்; நீ உன் தாயாரைச் சந்தித்து இருந்தால் உன் தாயாருக்கு உன் செல்வாக்கை வைத்து நல்ல முறையில் சிகிச்சை அளித்து இருப்பாய், ஆனால் சாகும் போது நீ உடன் இருந்திருந்தால் உன் தாய் மனநிறைவோடு இறந்திருப்பாள். அப்படி ஆகாமல் உன்னைக் காண முடியாமல் ஏக்கத்தோடு உயிர் விட்டாள். நான் தான் உன்னைத் தடுத்து விட்டேனடா மகனே! ஏன் தெரியுமா? அவள் மனநிறைவோடு உயிர்விட்டிருந்தால் மீதி உள்ள வினையைக் கழிக்க இன்னொரு பிறவி எடுக்க வேண்டி இருக்கும்; உன்னைக் காண முடியாமல் ஏக்கத்தோடு அவள் துன்புற்றால் அந்தத் துன்பத்தை அனுபவித்து விட்ட காரணத்தால் மீண்டும் அவளுக்குப் பிறவி இல்லை. எனவே, அந்த மனத் துன்பத்தைக் கொடுத்து உன் தாயாருக்கு இனிப் பிறவி இல்லாத நிலையை வழங்கி விட்டேன்; உன் தாயார் பற்றி நீ கவலைப்பட வேண்டாம்” என்று சொல்லி முடித்தாள்.
அன்பர் அதன் பிறகு சமாதானம் ஆனார்; மனிதர்களின் கண்ணோட்டத்துக்குத் தீமையாகத் தெரிகின்ற ஒன்று பரம்பொருளின் கண்ணோட்டப்படி நன்மையாகத் தெரிகிறது. வேலூர் அன்பாரின் இந்த நிகழ்ச்சி மேற்கண்ட உண்மையைத்தான் தெரிவிக்கிறது.
ஓம் சக்தி! நன்றி: சக்தி ஒளி
]]>